2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஏன் அரசியல்வாதி ஆகிறார் மைத்திரி?

Gopikrishna Kanagalingam   / 2017 டிசெம்பர் 14 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அரசியல்வாதி என்பவன், அடுத்த தேர்தலைப் பற்றி நினைக்கிறான். நாட்டின் தலைவன் என்பவன், அடுத்த தலைமுறையைப் பற்றி நினைக்கிறான்” என்ற, ஐக்கிய அமெரிக்க எழுத்தாளரான ஜேம்ஸ் ஃபிறீமான் கிளார்க்கின், மிகப்பிரபலமான மேற்கோள் வசனத்தை, பல தடவைகள் வாசித்திருக்கிறோம். அதன் பொருளும், எவ்வளவுக்கு ஆழமானது என்பதையும் நான் பார்த்திருக்கிறோம்.   

வெறுமனே சில்லறைத்தனமான அரசியல் நன்மைகளுக்காக, இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான நடவடிக்கைகள் காரணமாக, நாடே பல பிரிவுகளாகப் பிளவுபட்டு, அந்தப் பிளவுகளை இன்னமும் இணைக்க முடியாமலிருப்பதையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.   

போருக்குப் பின்னரான இலங்கையின் வரலாற்றை எழுதும் போது, “நாட்டின் மிக முக்கியமான ஜனநாயக மாற்றமாக, ஜனவரி 2015 அமைந்தது. மிகப்பெரும் நம்பிக்கையோடு, நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த மக்கள், தனது கட்சியின் தலைவருக்கு எதிராகவே போட்டியிட்ட, பொது எதிரணியின் வேட்பாளருக்கு வாக்களித்தனர். அதைத் தொடர்ந்து, ‘நல்லாட்சி’ அரசாங்கமும் உருவாக்கப்பட்டது” என்ற விடயம், நிச்சயமாகவே இடம்பெறும். வேட்பாளராகவோ, ஜனாதிபதியாகவோ மைத்திரிபால சிறிசேனவை நீங்கள் விரும்புகிறீர்களோ, இல்லையோ, போருக்குப் பின்னரான இலங்கை வரலாற்றில், அவருக்கெனத் தனியான இடமுண்டு என்பதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.   

மறுபக்கமாக, ஜனாதிபதி ஆகும் விருப்பத்தை நீண்டகாலமாகக் கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவும், நாட்டின் நன்மைக்காகவோ அல்லது யதார்த்தத்தை உணர்ந்தோ, மைத்திரிபால சிறிசேனவுக்கான தனது ஆதரவை வழங்கியதோடல்லாமல், ஜனவரி 2015இல் ஏற்பட்ட மாற்றத்தில் முக்கிய பங்கை வகித்திருந்தார். இவர்கள் இணைந்த இந்த ஆட்சி, ஏராளமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.   

எந்த அரசாங்கத்துக்கும், தேனிலவுக் காலமென்ற ஒன்று காணப்படும் நிலையில், 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, தற்போது 2 ஆண்டுகளுக்கும் மேலாகச் சென்றுவிட்ட இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலம், விமர்சனங்களையும் பிளவுகளையும் சந்திக்க ஆரம்பித்திருக்கிறது.   

இரண்டு பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய அரசாங்கம் என்ற அடிப்படையில், கருத்து மோதல்கள் இடம்பெறுவது வழக்கமென்ற போதிலும், பொதுவெளிக்கு அக்கருத்து மோதல்கள் வந்தமையென்பது, கருத்து முரண்பாடுகள் எந்தளவுக்கு முற்றியிருக்கின்றன என்பதைக் காட்டியது. அதுவும், “ஐக்கிய தேசியக் கட்சியை அழிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயல்கிறார். மஹிந்த ராஜபக்‌ஷவையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் அழிக்குமாறு, அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது” என்று, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், அதுவும் இராஜாங்க அமைச்சுப் பதவியை வகிக்கும் சுஜீவ சேனசிங்க தெரிவித்த கருத்து, இதில் முக்கியமானது.   

இம்முரண்பாடுகளைச் சமாளித்துக்கொண்டு, அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயல்கிறார் என்பதைத் தான், எம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் மறுபக்கமாக, அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெளியேறுமாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்றாவது, ஆட்சியில் தொடர வேண்டுமென்ற எண்ணத்தையும் அவர் கொண்டிருப்பதை உணர முடிகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் ஏற்பட்ட போது, அவ்விடயத்தில் பிரதமரில் அதிகபட்ச ஈடுபாடு என்பது, வெறுமனே அரசமைப்புச் சீர்திருத்தம் பற்றிய கவலையால் ஏற்பட்ட ஒன்று அல்ல என்பதை, நாமனைவரும் அறிவோம்.   

இவற்றுக்கிடையில் தான், 2015ஆம் ஆண்டு தேர்தலுக்காகப் பிரிந்த மைத்திரிபால சிறிசேனவையும் மஹிந்த ராஜபக்‌ஷவையும் ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள், அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதில் முன்னேற்றம் ஏற்பட்டு, இரண்டு பிரிவுகளும் “இதோ இணைந்துவிட்டன” என்று, எப்போது செய்தி வருமென, ஏராளமானோர் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், அம்முயற்சி தோல்வியடைந்து விட்டது என அறிவிக்கப்படுகிறது.   

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலை, “மஹிந்த ராஜபக்‌ஷவை வீழ்த்துவது தான், நாட்டின் ஜனநாயகத்துக்கான ஒரே வழி” என எண்ணி, முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியவர்களுக்கு, இம்முயற்சி தோல்வியடைந்துவிட்டது என்ற தகவல், நிம்மதியை வழங்கியிருந்தது தான்.   

ஆனால், ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியாகியிருக்கின்ற தகவல், இது தொடர்பான புதிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மஹிந்த ராஜபக்‌ஷவின் சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷவோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் தொடர்புகொண்டு, இரு பிரிவுகளின் இணைப்புத் தொடர்பாக உரையாடினார் என்பது தான் அச்செய்தி.   

சுஜீவ சேனசிங்கவால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போது, அதை முக்கியமானதாகக் கருதியிருக்காத பலரும், இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து, நாட்டை விட, கட்சிக்கு முன்னுரிமை வழங்கி, ஜனாதிபதி செயற்படுகிறாரோ என்ற கேள்வியை எழுப்ப ஆரம்பித்திருக்கின்றனர். ஜேம்ஸ் ஃபிறீமான் கிளார்க்கின் மொழியில் சொல்வதென்றால், நாட்டின் தலைவர் என்ற நிலையிலிருந்து, அரசியல்வாதி என்ற நிலைக்கு, ஜனாதிபதி சென்றுவிட்டாரோ என்பது தான், கேள்வியாக இருக்கிறது.   

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரை, நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தனது கட்சிக்கான பின்னடைவை ஏற்றுக் கொள்வதற்கு அவர் தயாராக இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தனது தலைமையின் கீழ் தோல்வி கிடைக்குமாயின், தனது தலைமைத்துவத்துக்கும் ஜனாதிபதிப் பதவிக்கும் எதிராக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வரப்படும் என்பதை, அவர் நிச்சயமாக அறிவார்.   

அதனால் தான், மஹிந்த ராஜபக்‌ஷவின் ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் பக்கமாகக் கொஞ்சம் கொஞ்சமாகச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும், கொள்கைக்காகச் செல்லவில்லை என்பதை, நாமனைவரும் அறிவோம். கொள்கை தான் காரணமாக இருந்தால், 2015ஆம் ஆண்டு ஓகஸ்டிலேயே இணைந்திருப்பார்கள். மாறாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் செல்கிறார்கள் என்றால், தேர்தல் தொடர்பான மாற்றங்களால் தான் செல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கொச்சை மொழியில் சொல்வதனால், “தேர்தல் கால டீல்கள் ஆரம்பித்துவிட்டன”.   

இதனால் தானோ என்னவோ, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவிலிருந்தும், கட்சி சம்பந்தமான தகவல்களும் அனுப்பப்பட்டு வருகின்றன. அவர், நாட்டின் ஜனாதிபதி என்ற அடிப்படையில், நாட்டுக்கான அவரது செயற்பாடுகளை முன்னிறுத்துவது தான், ஊடகப் பிரிவின் பணியாக இருக்கிறது. அவரது கட்சிச் செயற்பாடுகளைப் பற்றிய ஊடகத் தகவல்களை அனுப்புவதற்கு, நாட்டு மக்களின் வரிப் பணத்தைச் செலவிடுவதென்பது, இங்கு காணப்படும் பிரச்சினையை எடுத்துக் காட்டுகிறது.   

“இதற்கு முன்னர், மஹிந்த ராஜபக்‌ஷ இதைச் செய்யவில்லையா? மஹிந்த செய்தால் சரி, மைத்திரி செய்தால் பிழையா?” என்ற கேள்வியெழுப்பப்படலாம். நிச்சயமாக, மஹிந்த செய்யும் போது அதை நியாயப்படுத்தியோர், மைத்திரிபால செய்யும் போது மாத்திரம் அதை விமர்சிக்க முடியாது. (உதாரணமாக, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்தோர், மஹிந்த காலத்தில், நாட்டின் சொத்துகளை வெளிநாடுகளுக்கு அடகுவைக்கும் போது மௌனமாக இருந்துவிட்டு, தற்போது மாத்திரம் தேசப்பற்றாளர்களாகக் காட்டிக்கொண்டு, “சொத்துப் போகிறது, சொத்துப் போகிறது” என்று ஓலமிடுவது).   

ஆனால், ஆழமாகப் பார்க்கும் போது, இலங்கையின் அரசியல் கட்டமைப்பில் காணப்படுகின்ற தவறின் காரணமாகவே, இந்நிலை ஏற்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. உலகின் சில நாடுகளில், நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்போர், கட்சித் தலைவர்களாக இருப்பதில்லை. சில நாடுகளில், அரசமைப்பு மூலமாக, அவை தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.   

உதாரணமாக, ஐக்கிய அமெரிக்காவைப் பொறுத்தவரை, நாட்டின் ஜனாதிபதி, கட்சியின் தலைவராக இருப்பதில்லை. கட்சியின் தலைவர்களாக, செனட், பிரதிநிதிகள் சபைகளின் பெரும்பான்மை/சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள் இருப்பதோடு, இரு பிரதான கட்சிகளுக்கும், தேசிய செயற்குழுவுக்கும் தலைவர்கள் இருக்கிறார்கள். எனவே, கட்சி விவகாரத்தில், ஜனாதிபதி நேரடியாகத் தலையிட வேண்டிய தேவை கிடையாது. இது, பல விடயங்களில் பயனைத் தருகிறது.   

இலங்கையிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக, பெயருக்காகவேனும் ஒருவர் இருந்தால், கட்சி விடயங்களுக்காக இவ்வளவு நேரடியான தலையீட்டை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். இதன்மூலமாக, நாட்டின் ஜனநாயகப் போக்குக்கு, ஆரோக்கியமான ஒரு நிலை ஏற்படும்.   

புதிய அரசமைப்புத் தொடர்பாக, பல்வேறான எதிர்பார்ப்புகள் காணப்படுகின்ற நிலையில், நாட்டின் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ இருக்கும் ஒருவர், கட்சியொன்றின் தலைவராகவோ அல்லது நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவோ இருக்க முடியாது என்ற விடயமும் சேர்க்கப்படுமாயின், ஆரோக்கியமான ஜனநாயகக் கலாசாரத்துக்கு வாய்ப்பேற்படக்கூடிய நிலைமை காணப்படுகிறது.   

இல்லாவிடின், தங்களது பெயரைக் காப்பாற்றுவதற்காகவும் தங்களை நியாயப்படுத்திக் கொள்வதற்காகவும், ஜனாதிபதி போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள், அப்பதவியை மலினப்படுத்திக் கொண்டே தான் இருக்கப் போகிறார்கள்.   

இந்த மாற்றங்கள் வருவதற்கு எத்தனை மாதங்கள், ஆண்டுகள், தசாப்தங்கள் செல்லுமெனத் தெரியாத நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகளை இன்னமும் சுமந்துகொண்டிருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது கட்சி அரசியலைத் தாண்டி, நாட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வது பற்றிச் சிந்திப்பதென்பது அவசியமானது. நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டு, அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் போது, மக்களின் வாக்குகள், தானாகவே உங்களைத் தேடி வருவமென்பது, காலங்காலமாக நாங்கள் பார்த்துவந்த உண்மை என்பதை, எவரும் மறந்துவிடக் கூடாது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X