2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஏற்றத்தாழ்வும் அரசியல் நெருக்கடியும்

Ahilan Kadirgamar   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவப்புக் குறிப்புகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் காரணமாக ஏற்பட்ட விளைவுகள், அரசியல் நெருக்கடியாகத் தொடர்ந்த வண்ணமுள்ளன. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, நம்பிக்கையில்லாப் பிரேரணை, அதன் தோல்வி, ஆகியன, ஆட்சியமைப்பதற்குக் கடினமாக உணரும் அரசாங்கமொன்றின், சமீபத்திய வெளிப்பாடுகளாகும்.

அரசியல் சக்திகளின் மாற்றங்களுக்கும் அரசாங்கத்துக்குள் மாறி மாறிக் குறை சொல்லலுக்கும் நடுவில், இவ்வாண்டு பெப்ரவரியில், அரசாங்கத்துக்கு எதிரான வாக்குகள் அளிக்கப்பட்டமைக்குக் காரணமாக அமைந்த பொருளாதாரப் பிரச்சினைகள் அடையாளங்காணப்படுகின்றன.

வடக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான, மேலே காணப்பட்டதைப் போன்ற, நடப்பு ஆட்சியாளர்களுக்கு எதிரான வாக்கு, தமிழ்ப் பகுதிகளைப் பாதித்துள்ளது. அத்தோடு, பல தசாப்தங்களாக இடம்பெற்ற போரின் போதும், போருக்குப் பின்னரான ஆண்டுகளின் போதும், தமிழ் அரசியலால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த நாளாந்த பொருளாதாரப் பிரச்சினைகளை, முக்கியப்படுத்தவும் வழிசெய்துள்ளது.

தெற்கிலும் வடக்கிலும் காணப்படுகின்ற அரசியல் கலந்துரையாடல்கள், மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ளல் தொடர்பாகத் திரும்பியுள்ள போதிலும், இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான அடிப்படையான காரணங்கள் என்பது தொடர்பில், மிகக்குறைந்தளவு தெளிவே காணப்படுகிறது.

அபிவிருத்தி முன்னெடுப்புகளை வழங்குவதில் அரசின் தோல்வி தான், பொருளாதார ஏமாற்றத்தைப் பொதுமக்கள் கொண்டிருக்கக் காரணமா? மானியங்களைக் குறைத்தமையா? அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்குப் போதிய நடவடிக்கை எடுக்காமையா? இல்லையெனில், நீண்ட வரட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் புறக்கணித்தமையா?

இவையெல்லாமே, தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்தின என இப்பத்தியாளர் கருதுகின்ற போதிலும், மக்களின் சமூக, பொருளாதாரத் திருப்தியின்மை அதிகரிப்பதற்குப் பங்களிப்புச் செய்யும், பொருளாதாரத்தின் கட்டமைப்புப் பிரச்சினைகள் தொடர்பாகக் கவனஞ்செலுத்த விரும்புகிறார். அவ்வாறான கட்டமைப்பு மாற்றங்களும் கூட, வேறுபட்ட அளவில் காணப்படுகின்றன: கொழும்புக்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இடையிலான, ஏற்றத்தாழ்வான அபிவிருத்தி; நகர - கிராமியப் பிளவு; சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவுகளின் சமூக வெளியேற்றம்.

இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளிலும், ஏன், பொருளாதார விவாதங்களிலும் பெருமளவுக்குப் புறக்கணிக்கப்படும் ஏற்றத்தாழ்வு தொடர்பாக, இப்பத்தி ஆராய்கிறது.

பரந்தறிவான நுண்ணறிவு

செல்வ, வருமான ஏற்றத்தாழ்வுகள் குறித்த கேள்விகள், அண்மைய ஆண்டுகளில் உலகம் முழுவதிலும், அதிகளவு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. முதலாளித்துவ அபிவிருத்தியின் சமூக, பொருளாதார ஆய்வுகள், நீண்டகாலமாகவே ஏற்றத்தாழ்வுக்கான கொள்கைகளை முன்மொழிந்துள்ள போதிலும், ஏற்றத்தாழ்வு தொடர்பான தற்போதைய கால ஆர்வங்கள், பரந்தறிவான பல ஆய்வுகளின் ஆதாரங்கள் மூலம் ஏற்பட்டுள்ளன. அவ்வாறான ஆய்வுகள், நாடுகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகள் குறித்தும், நாடுகளுக்குள்ளே காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் ஆராய்ந்துள்ளன.

தோமஸ் பிக்கெட்டியின் “இருபத்து ஓராம் நூற்றாண்டில் மூலதனம்” என்ற, 2013ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூல் மூலமாக, ஏற்றத்தாழ்வு தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு, மிகப்பெரிய பலத்தை வழங்கியது. கைத்தொழில் முதலாளித்துவம், இரண்டரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் உலகை மாற்றிய போது ஏற்பட்ட ஏற்றத்தாழ்வை விட, மேற்கில் தற்போது காணப்படும் செல்வ ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது என, ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்துக்கான தரவுகளைக் கொண்டு, பிக்கெட்டியின் ஆராய்ச்சி வெளிப்படுத்தியது.

பிக்கெட்டியின் சமீபத்திய ஆராய்ச்சிப் பத்திரிகை, கடந்தாண்டு ஜூலையில் வெளியானதோடு, எமக்கு நெருக்கமான ஒரு நாட்டைப் பற்றியதாக அது அமைந்தது. லூகாஸ் சான்செலுடன் இணைந்து வெளியிடப்பட்ட அவ்வாராய்ச்சிக் கட்டுரை, “இந்திய வருமான ஏற்றத்தாழ்வு, 1922 - 2914: பிரித்தானிய ஆட்சியிலிருந்து கோடீஸ்வர ஆட்சிக்கு?” எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்தியாவில் காணப்படும் மிக அதிகமான வருமான ஏற்றத்தாழ்வு பற்றி, தரவுகளைப் பயன்படுத்தி ஆராயப்பட்டிருந்தது. தரவு காணப்படும் 1922ஆம் ஆண்டிலிருந்து பார்க்கும் போது, இந்தியாவின் வருமான ஏற்றத்தாழ்வு, இப்போது உயர்நிலையில் உள்ளது என அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

முதலாளித்துவ அபிவிருத்தியின் ஆரம்பக் காலங்களில் மாத்திரமே, ஏற்றத்தாழ்வு உயர்கிறது எனவும், தொடர்ந்து வரும் காலங்களில் அது குறைவடைகிறது எனவும், சைமன் குஸ்னெட்ஸ் வழங்கிய கொள்கை தொடர்பாக விமர்சனங்கள், பிக்கெட்டியின் முக்கியமான கருத்துகளாக அமைந்துள்ளன. பல தலைமுறை பொருளாதார நிபுணர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இக்கொள்கையை, பிக்கெட்டி, முழுமையாகத் தோற்கடிக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், மேற்குலக நாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் குறைவடைந்தமைக்கு, முதலாளித்துவத்தின் செயற்பாடுகள் காரணமன்று எனவும், இரண்டு உலகப் போர்கள் காரணமாக ஏற்பட்ட அழிவுகளாலேயே, செல்வம் அழிவடைந்து, ஏற்றத்தாழ்வுகள் குறைவடைந்தன எனவும், பிக்கெட்டி, சிறப்பாக நிறுவினார். இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர், ஏற்றத்தாழ்வுகள் குறைவடைந்திருக்கலாம் என்ற போதிலும், 1970களின் பின்னர், மக்கள் நலன்புரி அரசியிலிருந்து விலகி, பிற்போக்கான வரி அமுலாக்கல் காரணமாக ஏற்பட்ட விநியோகத் தட்டுப்பாடுகள், தொழிலாளர் இயக்கங்கள் மீதான தாக்குதல்கள் ஆகியன காரணமாக, கைத்தொழில் காலத்துக்கு முன்னரான காலங்களுக்கு ஒப்பிடத்தக்க செல்வ ஏற்றத்தாழ்வுகள், சடுதியாக அதிகரித்துள்ளன.

பிற்போக்குப் பொருளாதாரம்

2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகோள பொருளாதார நெருக்கடி காரணமாக, பழைமைவாதப் பொருளாதார நிபுணர்கள் அதிர்ச்சியடைந்தாலும் கூட, அவற்றை முன்கூட்டியே வெளிக்காட்டியிருக்கவில்லை அல்லது நடந்ததன் பின்பு ஆராய்ந்திருக்கவில்லை. பெருந்திரள் பொருளாதார நிபுணர்களுக்குள் உள்ளடங்குகின்ற பிக்கெட்டி போன்றவர்களினதும், நெருக்கடிகளுக்கு முன்னரிருந்தே புறக்கணிக்கப்பட்ட இடதுசாரி பொருளதார நிபுணர்களினதும் பரந்தறிவிலான ஆய்வுகள் ஆகியன, ஏற்றத்தாழ்வுகள் தொடக்கம் பொருளாதார மாற்றுகளுக்கான தேடல் வரையிலான ஆய்வுகள் என, ஆராய்ச்சிகளுக்கான புதிய வழிகளைத் திறந்துள்ளன.

ஆனால் இலங்கையில், ஆராய்ச்சி அமைப்புகள், பொருளாதார அறிஞர்கள் உட்பட பொருளாதார அமைப்புகள், மேற்கத்தேயக் கல்வியாலும் சர்வதேச முகவராண்மைகளாலும் பல தசாப்தங்களாக வெளிப்படுத்தப்படும் பழைமைவாத பொருளாதாரக் கொள்கைகளை அறிவுறுத்துகின்றனர். இலங்கையின் போருக்குப் பின்னைய ஆண்டுகளில், தாராளமய பொருளாதாரக் கொள்கைகளுக்கான மாற்றீட்டை வழங்குவதில் தோல்வி கிடைத்தமைக்கு, இவ்வாறான கொலனித்துவ மனப்பாங்கு தான் காரணமாக அமைந்துள்ளது.

இலங்கையின் நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகள், 1977ஆம் ஆண்டிலிருந்தும், போருக்குப் பின்னர் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் துரிதப்படுத்தப்பட்டும், ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்த வண்ணமுள்ளன. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையின் வீட்டு வருமான ஏற்றத்தாழ்வு, கடந்த தசாப்தத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. ஏற்றத்தாழ்வுகளை அளவிடப் பயன்படும் ஜினி குறியீடு, 0.45க்கும் 0.49க்கும் இடையில் காணப்படுகிறது. 2016ஆம் ஆண்டின் குடும்ப வருமான மற்றும் செலவுக் கருத்துக்கணிப்பு, இலங்கையின் மொத்த குடும்ப வருமானப் பகிர்வு தொடர்பாக, கவலைப்படத்தக்க தகவல்களைத் தருகிறது.

இலங்கையின் செல்வந்த 10 சதவீதத்தினர், 35.4 சதவீதமான வருமானத்தைப் பெறுகின்ற அதேநேரத்தில், வறிய 10 சதவீதத்தினர், வெறுமனே 1.6 சதவீதத்தையே பெறுகின்றனர். மேலும், செல்வந்த 20 சதவீதத்தினர், மொத்த வீட்டு வருமானத்தின் அரைவாசிக்கும் மேற்பட்ட (50.8 சதவீதம்) வருமானத்தைப் பெறுகின்றனர். 

அதேபோன்று, வறிய 50 சதவீதத்தினர், மொத்த வருமானத்தின் வெறுமனே 20.8 சதவீதமானவற்றையே பகிர்கின்றனர். நாட்டுச் சனத்தொகையின் 50 சதவீதத்தினர், மொத்த வீட்டு வருமானத்தில் ஐந்திலொரு பங்கையே பெறும் போது, அவர்கள் இழப்பதற்கு எதுவுமில்லை.

இதில் முக்கியமாக, பிரதானமாக கிராமிய மக்களை உள்ளடக்கிய இச்சனத்தொகையே, கொலனித்துவத்துக்குப் பின்னரான இலங்கையின் தேர்தல் முடிவுகளை மாற்றி, நடப்பு அரசாங்கங்களை வீட்டுக்கு அனுப்பிய பிரிவாக உள்ளது.

அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு உட்பட பொருளாதார அபிவிருத்தியின் வலிகளுக்குள்ளால் நாம் செல்ல வேண்டும் எனவும், ஏற்றத்தாழ்வு பின்னர் இல்லாது போகுமெனவும், நவதாராளவாதிகள் முன்வைக்கும் வாதமும், தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.

“ஏற்றத்தாழ்வுடனான வளர்ச்சி: இலங்கையில் நவதாராளவாதச் சீர்திருத்தங்கள்” என்ற தலைப்பில், 2013ஆம் ஆண்டில் பி. ஸ்கந்தகுமாரின் ஆராய்ச்சிக் கட்டுரை, 1973ஆம் ஆண்டில் காணப்பட்ட ஜினி குறியீடான 0.35 என்பது, 1977ஆம் ஆண்டில் திறந்த பொருளாதாரக் கொள்கைகள் அமுல்படுத்தப்பட்ட பின்னர், 0.45 என்ற அளவுக்கு மேலேயே காணப்பட்டது எனக் காட்டுகிறது. தாராளவாதமான சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அபிவிருத்தியை, அரசு ஆதரவளிக்கும் போது, ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும் என்பது தான், இங்கு வெளிப்படையானது.

அரசியல் பாதிப்புகள்

பொருளாதாரப் பிரச்சினைகளால், இலகுவாக எதிர்வுகூறப்படத்தக்க விளைவுகள் ஏற்படுவதில்லை. மாறாக, அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள் உட்படக் காணப்படும் நிலைமைகள் தொடர்பாக, பல வெவ்வேறான சக்திகள் இயங்கும் போது, அரசியல் மாற்றங்களும் நெருக்கடிகளும், தொடர்ந்து கால அடிப்படையில் ஏற்படுவன ஆகும். மேலும், அவ்வாறான நெருக்கடிகள், அழிவை ஏற்படுத்தத்தக்க ஆட்சியாளர்களைக் கொண்டு வரலாம், இல்லாவிடின் முற்போக்கான மாற்று ஏற்பாடுகளைத் தேட வழிவகுக்கலாம்.

தற்போதைய நிலையில், உலகின் ஏனைய பகுதிகளைப் போலவே, அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகளும் அவை தொடர்பான பொருளாதாரப் பிரச்சினைகளும் காரணமாக, நம்பிக்கை தரக்கூடிய முற்போக்கான மாற்று ஏற்பாடுகள் இல்லாத நிலையில், வலதுசாரி மற்றும் தேசியவாத அரசியல் சக்திகளுக்கான அதிக சந்தர்ப்பம் உள்ளது. கடந்த மாதம் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல்கள், அவ்வாறான சக்திகள், இன, சமய அடிப்படையில் சமூகங்களை எவ்வாறு துருவப்படுத்துகின்றன என்பதைக் காட்டின.

இலங்கையிலுள்ள எமது அரசியலில் இந்த வலதுசாரி, தேசியவாதத் திருப்பத்தை நாம் சவாலுக்குட்படுத்தும் அதே நேரத்தில், திறந்த பொருளாதாரத்தினதும், அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள் உட்பட அதன் விளைவுகள் தொடர்பாக, விமர்சனரீதியான ஆராய்வாமோ? அண்மைக்கால சர்வதேச ஆராய்ச்சிகளோடு, இலங்கையின் வரலாற்று ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாகவும் நாம் ஆராய வேண்டுமா?

இலங்கையிலுள்ள எந்தவொரு முற்போக்கு அரசியலுக்கும், சமத்துவத்துக்கான திட்டமொன்றைக் கொண்டிருத்தல் முக்கியமானது என, இப்பத்தியாளர் வாதிடுகிறார். அவ்வாறான முற்போக்குச் சக்திகள், வர்க்க ரீதியான ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கின்ற நவதாராளவாத சக்திகளையும், இனம், சமயம் அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்த எதிர்பார்க்கின்ற தேசியவாத சக்திகளையும் கட்டுப்படுத்த வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .