2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ.அமெரிக்காவின் சிறிசேன தான் ட்ரம்ப்

Gopikrishna Kanagalingam   / 2019 ஜனவரி 03 , மு.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்தாண்டின் நவம்பர் மாதத்தின் இறுதிப் பகுதியில், இப்பத்தியாளரால், “இலங்கையின் ட்ரம்ப் தான் சிறிசேன” என்ற தலைப்பில் பத்தியொன்று பிரசுரிக்கப்பட்டது. இருவருக்குமிடையிலான ஒற்றுமைகள் குறித்தும் அதிகாரவய ஆட்சி குறித்தும், அதில் அலசப்பட்டது. ஆனால், அப்பத்தி பிரசுரிக்கப்பட்டுச் சில வாரங்கள் ஆகியுள்ள நிலையில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேலுமதிகமான குழப்பங்களை ஏற்படுத்தி, குழப்பங்களை விளைவிக்கும் தலைவர்களில் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறார்.   

இச்சூழ்நிலையில், “ஐக்கிய அமெரிக்காவின் சிறிசேன தான் ட்ரம்ப்” என்று இப்போது சொல்லக்கூடியதாக இருக்கிறது. ஏனெனில், ஐ.அமெரிக்க அரசியல், அந்தளவுக்குச் சூடுபிடித்திருக்கிறது. இலங்கைக் குழப்பங்களைப் போலவே, ஐ.அமெரிக்க அரசியலின் குழப்பங்களில் ஏராளமானவை, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட வெறுப்பு - விருப்புகளின் அடிப்படையிலேயே ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், ஓரளவுக்கு நிம்மதி தரும் விதமாக, அந்நாட்டில் பிரதமர் பதவியென்று ஒன்றில்லை. எனவே, இலங்கையைப் போன்ற முரண்பாடுகள் அங்கில்லை.   

என்றாலும் கூட, ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர், 2018ஆம் ஆண்டின் ஆரம்பம், அதிகளவு குழப்பங்களுடன் இருந்ததாக ஞாபகமில்லை. ஆனால், 2019ஆம் ஆண்டின் ஆரம்பம், மிகுந்த குழப்பங்களுடன் தான் ஆரம்பித்திருக்கிறது. ஐ.அமெரிக்காவின் அரசாங்க முடக்கம் தொடர்கிறது; முக்கிய பதவிகளில் நிரந்தரமாக எவரும் இல்லை; பொருளாதாரத்தில் வீழ்ச்சி நிலை ஏற்படும் ஆபத்து என்று, இந்தக் குழப்பங்கள் தொடர்கின்றன.   

இதில், முக்கியமான விடயம் என்னவென்றால், ஐ.அமெரிக்காவில் குழப்பம் நடந்தால் என்னவென்று, ஏனைய நாடுகள் இருக்க முடியாத நிலை இருக்கிறது. உலகப் பொருளாதாரத்திலும் அரசியலிலும், தவிர்த்துவிட்டுச் செல்லமுடியாத நாடாக ஐ.அமெரிக்கா இருக்க, அந்நாட்டில் ஏற்படுகின்ற ஸ்திரமற்ற நிலைமைகள், ஏனைய நாடுகளையும் பாதிக்கின்ற சூழ்நிலை இருக்கிறது.   

உதாரணமாக, ஐ.அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து வந்த காரணத்தால், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் பணப்பெறுமதிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நாடுகளின் பணப்பெறுமதி வீழ்ச்சி, அந்நாடுகளின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்திருந்தன.   

ஆனால் மறுபக்கமாக, ஐ.அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால், இந்நாடுகளுக்கு அனுகூலமாக அமையுமென்று எதிர்பார்த்துவிடக் கூடாது. இதற்கு முன்னர், 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி, ஐ.அமெரிக்காவில் இரண்டாம் நிலைக் கடன் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடியின் விளைவாகவே ஏற்பட்டது. இந்தப் பாதிப்பிலிருந்து முழுமையாக இன்னமும் வெளிவந்துவிட்டோமா என்பது கூடத் தெரிந்திருக்காத அளவுக்கு, அதன் பாதிப்பு மோசமாக இருந்தது.   
எனவே தான், ஐ.அமெரிக்க அரசியல் தொடர்பாகவும் அதன் பொருளாதாரம் தொடர்பாகவும், அதிகளவு கவனத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது.   

இலங்கையின் ஜனாதிபதி சிறிசேனவைப் போன்று, ஐ.அமெரிக்காவின் ஜனாதிபதி ட்ரம்ப்பும், தனது எண்ணங்களுக்கு முரணானவர்களோடு இணைந்து செயற்படுவதில் பிரச்சினையைக் கொண்டிருக்கிறார். நாட்டுக்குத் தேவையான நேரங்களில், தனிப்பட்ட விருப்பு - வெறுப்புகளை ஓரங்கட்டுகின்ற தன்மை, இருவரிடத்திலும் இல்லாத நிலைமையைத் தான் காணக்கூடியதாக இருக்கிறது.   

ஜனாதிபதி சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான பிரச்சினைகளை, எத்தனை விதங்களில், எத்தனை கதைகளைக் கொண்டு ஜனாதிபதி சிறிசேன கூறினாலும், அடிப்படையான பிரச்சினையாக, இருவருக்குமிடையிலான தனிப்பட்ட ஆளுமைப் பிரச்சினை தான் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் ரணில், ஓரளவுக்கு ஆளுமை மிக்க, இராஜதந்திரம் மிக்க அரசியல்வாதி என்ற அடிப்படையில், ஜனாதிபதி சிறிசேனவுடனான தனிப்பட்ட விருப்பு - வெறுப்புகளை, பகிரங்கமான மேடைகளில் வெளிப்படுத்தி, தன்னைச் சிறுமைப்படுத்தாமல் தவிர்க்கிறார். ஆனால் ஜனாதிபதி சிறிசேனவோ, இந்த விடயத்தில் கத்துக்குட்டியாகவே இருக்கிறார். பலமான ஆளுமைமிக்க தலைவர்களின் கீழ், முக்கியமான அதிகாரவயத் தலைவரான மஹிந்த ராஜபக்‌ஷவின் கீழ், பணியாற்றியதாலோ என்னவோ, பிரதமராகப் பதவி வகிக்காமல், அமைச்சர் பதவியிலிருந்து ஜனாதிபதியாகப் பதவியேற்ற அனுபவமின்மை, ஜனாதிபதி சிறிசேனவில் புலப்படுகிறது.   

மறுபக்கமாக, எந்தவித அரசியல் அனுபவமின்றி, நாட்டின் ஜனாதிபதியாக நேரடியாகத் தெரிவுசெய்யப்பட்ட ட்ரம்ப்பிலும், இந்த அனுபவமின்மை வெளிப்படுகிறது. தனது எதிர்த்தரப்பினருடன் பண்பாடற்ற முறையில் மோதிக்கொள்வது ஒரு வகை. அதன் நன்மை - தீமைகள் இருக்கின்றன. அவை தனியாகப் பார்க்க வேண்டியன. ஆனால், தனது தரப்பில் இருப்பவர்களுடனேயே மோதிக்கொள்வது அவ்வாறாகத் தான். சட்டமா அதிபராக இருந்த ஜெப் செஷன்ஸ், பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஜிம் மற்றிஸ் ஆகியோரை, அவர்கள் பதவியிலிருக்கும் போதே, ஜனாதிபதி ட்ரம்ப், பகிரங்கமாக விமர்சித்திருந்தார். இத்தனைக்கும், எவ்விதக் கேள்வியும் இல்லாமல், அவர்களைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான அதிகாரத்தை, ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டிருக்கிறார். ஆகவே, அவர்களை உடனடியாகவே நீக்கியிருக்க முடியும். அவ்வாறில்லாமல், பகிரங்க விமர்சனங்கள் தொடர்ந்தன. அதிலும், செஷன்ஸ் மீதான விமர்சனங்கள், ஆண்டுக்கணக்காகத் தொடர்ந்தன.   

இறுதியாக, கடந்தாண்டின் இறுதிப் பகுதியில், செஷன்ஸ், மற்றிஸ் ஆகியோர் நீக்கப்பட்டனர். இதில் மற்றிஸ், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததோடு, புதியவர் ஒருவரைத் தேடி, செனட் மூலமாக அவரை உறுதிப்படுத்துவதற்கான காலத்தை ஜனாதிபதிக்கு வழங்குவதற்காக, பெப்ரவரி மாதத்தின் இறுதிப் பகுதிவரை, தொடர்ந்தும் பதவியிலிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், சிரியாவிலிருந்து ஐ.அமெரிக்கப் படைகளை விலக்குவது குறித்தும், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப்பின் நடவடிக்கைகளை விமர்சித்ததைத் தொடர்ந்தும், டிசெம்பர் மாத இறுதியுடன், அவரை நீக்கும் முடிவை, ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்திருந்தார். இவ்வாறு, தன்னை விமர்சிப்பவர்கள், மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் என, அனைவரையும் நீக்கும் செயற்பாட்டில் ஜனாதிபதி ட்ரம்ப் ஈடுபடுவது, அந்நாட்டுக்கு ஆரோக்கியமாக அமையாது.   

ஜனாதிபதிகள் ட்ரம்ப், சிறிசேன போன்றோரை, உத்வேகத்தின் (impulse) அடிப்படையில் செயற்படும் அரசியல்வாதிகள் என்று பொதுவாகக் கூறுவர். அதாவது, தங்களுக்குச் சரியென்று நினைப்பதை, தங்களது ஆலோசகர்கள், ஏனைய நிபுணர்கள் ஆகியோர் எதிர்த்தாலும், இவர்கள் செய்தே தீருவர். உத்வேகத்துடன் செயற்படுவது, சில நேரங்களில் அவசியமானது. ஆனால், அநேகமான நேரங்களில், மெய்மையின் (fact) அடிப்படையில் செயற்படுவது தான், நாடொன்றின் தலைவருக்கு அவசியமானது.   

பதவி விலகிச் சென்ற பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மற்றிஸ், முன்னைய ஜனாதிபதி பராக் ஒபாமாவால், கொள்கை ரீதியான வேறுபாடுகளின் அடிப்படையில், பாதுகாப்புப் படைத் தலைமைப் பொறுப்பொன்றிலிருந்து நீக்கப்பட்டார் என்பதை, அவருக்குப் பதவியை வழங்கி, அவரை விரும்புவதாக உலகெங்கும் சொல்லிக்கொண்டிருந்து விட்டு, அவர் பதவி விலகிச் செல்லும் போது முன்வைத்த விமர்சனத்தைத் தொடர்ந்து ஞாபகப்படுத்துவது என்பது, உத்வேகத்தின் அடிப்படையிலான சிறுபிள்ளைத்தனம்.   

அதேபோல் தான், “மஹிந்த ராஜபக்‌ஷ, என்னைக் கொல்ல முயன்றார்” என்று, ஆண்டுக்கணக்காகச் சொல்லிவிட்டு, பின்னர் அதே மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்ததோடு மாத்திரமல்லாமல், அவரது இந்த மாற்றம் தொடர்பில் கேள்வியெழுப்பப்படும் போது, கொலை அச்சுறுத்தல் என்று சொன்னமை, “வெறுமனே அரசியல் பேச்சு” என்று சொல்லிவிட்டுச் சிரிப்பதும், அதே பிரச்சினை தான்.   

இவ்வாறு, ஜனாதிபதி ட்ரம்ப்பின் செயற்பாடுகள், ஐ.அமெரிக்காவின் அரசியல் எதிர்காலம் தொடர்பான கேள்விகள் எழுந்திருக்கின்றன. அதிலும், ஐ.அமெரிக்க காங்கிரஸின் ஓர் அவையான பிரதிநிதிகள் சபையை ஜனநாயகக் கட்சிகள் இப்போது கைப்பற்றியுள்ள நிலையில், கிட்டத்தட்ட இலங்கையின் நிலை தான் அங்கு ஏற்பட்டிருக்கிறது: ஜனாதிபதி, ஒரு கட்சியைச் சேர்ந்தவர்; நாடாளுமன்றம் (அல்லது அதன் ஓர் அவை), இன்னொரு கட்சியிடம். இந்த நிலைமையை, ஜனாதிபதி சிறிசேன விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஐ.அமெரிக்காவைப் பொறுத்தவரை, அந்நாட்டின் பிரதிநிதிகள் சபையின் அதிகாரங்கள், இலங்கை நாடாளுமன்றத்தை விட அதிகமானவை அல்லது தெளிவாக வரையறுக்கப்பட்டவை. எனவே, ஜனாதிபதி ட்ரம்ப்புக்கான கஷ்ட காலமும் ஆரம்பித்திருக்கிறது என்று கருதப்படுகிறது.   

தனக்கான நெருக்கடிகள் ஆரம்பித்த போது, இலங்கை ஜனாதிபதி சிறிசேன, மிகக் குழப்பகரமான விடயங்களைச் செய்து, நாட்டை நெருக்கடிக்குள் தள்ளினார். ஜனாதிபதி ட்ரம்ப்புக்கான நெருக்கடிக் காலம் ஆரம்பிக்கவிருக்கிறது. ஐ.அமெரிக்காவின் சிறிசேனவாக அவர் மாறுவாரா?     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X