2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஐ. அமெரிக்காவுக்கு எதிரான துருக்கியின் நகர்வுகள்

Editorial   / 2019 ஜூலை 15 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனகன் முத்துக்குமார்

கடந்த வாரத்தில் மட்டும் சர்வதேச அரசியலில் - குறிப்பாக நேட்டோ விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதான ஒரு நிகழ்வாக, நேட்டோவில் அங்கத்துவம் வகிக்கும் துருக்கி, நேட்டோவின் பொதுவான எதிராளியான ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது ஏற்கெனவே விரிசலாய் இருந்த ஐக்கிய அமெரிக்கா - துருக்கி உறவு நிலையை மேலதிகமாக முன்னெப்போதும் இல்லாத அளவு பாதிப்பை ஏற்புடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துருக்கி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, ரஷ்யாவின் எஸ் -400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை கொள்வனவு செய்வதாக அறிவித்திருந்தது. ஏனெனில், எஸ் 400க்கான ஐக்கிய அமெரிக்க மாற்றீட்டை விற்பனை செய்வதில் அமெரிக்கா தொடர்ச்சியாக பின்னிற்கின்றமையும், தொடர்ச்சியாகவே துருக்கியின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா, குர்திஷ் நாடொன்றை ஈராக்குக்குள் பிரகடனம் செய்ததும், அதன் மூலமாக, துருக்கியின் அரசாங்க எதிர்ப்புக்குழுக்களில் ஒன்றான பி.கே.கே மறைமுகமான ஆதரவை பிராந்தியத்தில் பெறுவதற்கு அந்நிலை வழிவகுத்ததுமே ஆகும்.

எது எவ்வாறாயினும், குறித்த கொள்வனவு ஒப்பந்தம் சுமார் 2 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் மதிப்புடையது என்பதுடன், அத்தொகை, துருக்கியின் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்துக்கான செலவுக்கு அப்பாற்பட்டது என்பது, இக்கொள்வனவு வேறுவிதமான பாதுகாப்பு மற்றும் மூலோபாய விளைவுகளை துருக்கி மற்றும் அதன் வரலாற்று ரீதியான நட்பு நாடுகளுக்கு ஏற்படுத்தும் அதேவேளை, ரஷ்யாவுக்கு தொடர்ச்சியாக ஒரு மூலோபாய அனுகூலத்தை ஏற்படுத்தவல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கொள்வனவு, ஐக்கிய அமெரிக்க எஃப் -35 போர் விமானங்களை வாங்குவதற்கான துருக்கியின் பாரிய ஒப்பந்தத்தை தானாகவே இரத்துசெய்வது மட்டுமன்றி, துருக்கியின் ஜனாதிபதி றிசெப் தயீப் எர்டோவானுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான ஆழமான உறவை உறுதிப்படுத்துகிறது. இது சிரியாவில் இரண்டு நாடுகளும் இணங்கிச் செயற்படுவதற்கு வழிவகுக்கும் என்பது ஒருபுறமிருக்க, இது துருக்கிய ஆயுதப்படைகளுக்கு சிரியாவின் பெரும்பகுதியையும் அவர்களின் பழைய எதிரியான கிரேக்கத்தையும் (ஒரு நேட்டோ உறுப்பினரும் கூட) வெல்லக்கூடிய திறன் கொண்ட ஒரு மேம்பட்ட இராணுவக் கட்டமைப்பை வழங்குகிறது.

தொடர்ச்சியாக, ஐக்கிய அமெரிக்கா தனது வெளிவிவகார கொள்கை முரண்பாட்டை துருக்கிக்கு காட்டிக்கொண்டிருக்கும் இந்நிலையில் - குறிப்பாக, 2016இல் துருக்கிய அரசாங்கத்துக்கு எதிரான சதி முயற்சிக்கு அடிப்படையாய் இருந்த ஃபெத்துல்லா குலனை ஐக்கிய அமெரிக்கா தொடர்ச்சியாக பாதுகாக்கின்றமை, அதுவும் ஜனாதிபதி எர்டோவான் "துருக்கிய ஆட்சி கவிழ்ப்புக்கான சதி முயற்சி மேற்கொண்டவர் உங்கள் நாட்டில் இருக்கிறார், நீங்கள் அவரை அங்கு வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள் " என வெளிப்படையாக கூறியும், ஐக்கிய அமெரிக்கா குறித்த நபரை துருக்கிக்கு நாடுகடத்த மறுகின்றமை; துருக்கியில் மேலோங்கும் அமெரிக்காவுக்கெதிரான கொள்கைகளும் அரசியல் விமர்சனங்களும் - குறிப்பாக பி.கே.கே மற்றும் வை.பி.ஜியை ஐக்கிய அமெரிக்கா தொடர்ச்சியாக ஆதரித்தலுக்கு எதிரான கொள்கைகள்; மூன்றாவதாக, துருக்கியில் அமெரிக்க குடியுரிமை உள்ளவரான போதகர் அன்ரூ பர்சோன் அவர்களுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை; நான்காவதாக, துருக்கி – சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றிருந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலைக்கு சவூதி அரேபியா அளித்த பதில் - மற்றும் குறித்த கொலையை பொறுத்தவரை அமெரிக்கா தனது கண்களை இறுக்கமாக மூடியிருந்த நிலை; ஐந்தாவதாக, ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை எதிர்கொள்வதில் துருக்கியின் ஒரு மாறுபட்ட அணுகுமுறை - குறிப்பாக சிரியாவில் இருந்து வந்த பெருமளவிலான இடம்பெயர்ந்தோரை பாதுகாக்கவும் கவனிக்கவும் போதுமானளவு உதவிகளை பிறநாடுகள் - குறிப்பாக அமெரிக்கா செய்யாமை ஒரு புறம், மறுபுறம், ,குறித்த இடம்பெயர்த்தோருடன் கலந்து வந்திருந்த ஐ எஸ் ஐ எஸ் உறுப்பினர்கள் துருக்கியில் மேற்கொண்ட தாக்குதல்களை சமாளிக்க மேற்கத்தேய நாடுகள் போதுமானளவு உதவ முன்வராமை; ஆறாவதாக, 2015-16இல் இன்கர்லிக் என்ற இடத்தில் உள்ள ஐக்கிய அமெரிக்க விமானநிலையத்தை மூடுவதாக துருக்கி மேற்கொண்ட அச்சுறுத்தல்கள் இரு நாடுகளுக்கும் இடையில் வேறுபாடுகளை கொண்டுவந்திருந்தன.

இந்நிலையிலேயே அமெரிக்கா, எஃப் -35 போர் விமானங்களை விற்பனை செய்வதை தொடர்ச்சியாக தட்டிக்கழித்து வந்திருந்தது என்பதுடன், அதன் அடுத்தகட்ட விடயமாகவே குறித்த எஸ் 400 ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டமை பார்க்கப்பட வேண்டியதாகும்.

இந்நிலை, நேட்டோ மற்றும் துருக்கிக்கு இடையிலான உறவுகளில் ஒரு புதிய - குழப்பகரமான பரிமாணத்தை ஏற்படுத்தப்போகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .