2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.க மறுசீரமைப்பு தேர்தல் வெற்றிக்கு உதவாது

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2018 மே 02 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கமும் ஆளும் கட்சியிலுள்ள இரண்டு பங்காளிக் கட்சிகளும், கடந்த சில வாரங்களாகக் குறிப்பாக, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெற்ற பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல், நாட்டு மக்களை முற்றாக மறந்து விட்டன போலும். அவற்றுக்குள்ளே தோன்றியுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவே, அவற்றுக்கு நேரம் போதாது போல்தான் தெரிகிறது.  

அவ்வாறு இருக்க, அரசாங்கத்தினதும் அவ்விரண்டு கட்சிகளினதும் தலைவர்கள், எவ்வாறு மக்களைப் பற்றிச் சிந்திக்கப் போகிறார்கள்?  

நீண்ட காலமாக, அரசாங்கத்துக்குள் நிலவி வந்த முரண்பாடுகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அடுத்து, மோதலாக மாறி, பிளவாகவும் மாறி வருகிறது. அரசாங்கத்திலிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களான 16 எம்.பிக்கள், தேர்தல் தோல்வியை அடுத்து, அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்லத் தயாராக இருக்கி‌றார்கள்.   

அவர்கள் விரைவில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் சேர்ந்து கொள்வார்கள் என்றே நம்பப்படுகிறது.  

அதேவேளை தேர்தலின் போது, ஆளும் கட்சிகளை விட, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு கூடுதல் ஆதரவை மக்கள் வழங்கினர். இதனால் அரசாங்கத்துக்கு, தம்மை விட்டுப் பிரியும் மக்களைக் கவர, ஏதாவது செய்ய வேண்டிய பெரும் நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.   

இவற்றுக்குப் பரிகாரமாகவே அரசாங்கம், அமைச்சரவையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. ஆனால், இந்த விடயத்தில் ஆளும் கட்சியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே, பூரண உடன்பாடு ஏற்பட்டிருக்கவில்லை எனத் தெரியவருகிறது.    

உதாரணமாக, மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் ஈடுபட்ட அர்ஜூன் அலோசியஸிடம், நிதி உதவி பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, தமது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்த ரவி கருணாநாயக்கவை, மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ​ஐ.தே.க தலைமை கருதுகிறது. ஜனாதிபதி அதை எதிர்த்ததாகக் கூறப்படுகிறது.  

அதேவேளை, ஆளும் ஸ்ரீ ல.சு.கவிலிருந்து 16 பேர் விலகி, மஹிந்தவுடன் இணைந்து கொள்ளத் தயாராக இருக்கும் நிலையில், ஜனாதிபதி தமது கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.   

அவர், கடந்த வாரமும் சில தேர்தல் தொகுதிகளுக்குப் புதிய அமைப்பாளர்களை நியமித்தார். ஆனால், ஸ்ரீ ல.சு.கவை ஒரு பலமான சக்தியாகக் கட்டி எழுப்ப முடியுமா என்பது, பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.  

​ஐ.தே.கவுக்குள் ஏற்பட்டு இருக்கும் பிரச்சினை, இதை விடப் பாரதூரமானதாகவே தெரிகிறது. அக்கட்சியின், சில மூத்த உறுப்பினர்கள், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அப்பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்க ஆகியோர் இவர்களுள் அடங்குகிறார்கள்.   

நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்னவும் கட்சித் தலைவர், தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறார். ஒன்றிணைந்த எதிரணி, பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருமுன்னரே, தாம் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைச் சமர்ப்பிக்கப் போவதாக, ரங்கே பண்டார கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவடைந்த உடன், நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது, ​ஐ.தே.க தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம், இந்த எதிர்ப்புகளைப் பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், “விரைவில் கட்சியில் கூட்டுத் தலைமை உருவாக்கப்படும்” எனத் தெரிவித்தார்.   

பின்னர், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் கபீர் ஹாஷிம் இராஜினாமா செய்தார். கட்சியை மறுசீரமைப்பதற்கு வசதியாகவே, தாம் பதவி துறப்பதாக அப்போது அவர் கூறினார்.   

அத்தோடு, கட்சித் தவிசாளராக இருந்த அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் தமது கட்சிப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தார். இதையடுத்துத்தான் ​ஐ.தே.க செயற்குழு, இடதுசாரிக் கட்சிகளைப் போல், ​ஐ.தே.கவுக்கும் அரசியல் குழுவொன்றை நியமித்து. இந்த அரசியல் குழுவே, கட்சி மறுசீரமைப்புக்கான ஆலோசனைகளை முன்வைத்தது. கட்சியின் தலைவராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவை, மாற்றத் தேவையில்லை என, அக் குழு தீர்மானித்தது.  

முன்னர், கட்சியின் செயலாளராக இருந்த கபீர் ஹாஷிம், கடந்த வாரம், கட்சியின் தவிசாளராக அரசியல் குழுவால் பிரேரிக்கப்பட்டார். பிரதித் தலைவராக இருந்த சஜித் பிரேமதாஸ, அதே பதவிக்குப் பிரேரிக்கப்பட்டார். உதவித் தலைவராக இருந்த ரவி கருணாநாயக்கவும் மாற்றப்படவில்லை. பொதுச் செயலாளராக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமும் பொருளாளராகப் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவும் பிரேரிக்கப்பட்டனர்.   

மேலும், அமைச்சர் நவின் திஸாநாயக்க கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பிரதிப் பொதுச் செயலாளராகவும் பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தொழிற்சங்கச் செயலாளராகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தொடர்பாடல் மற்றும் பிரச்சாரச் செயலாளராகவும் பிரேரிக்கப்பட்டனர். அவ்வனைத்துப் பதவிகளும் பின்னர், கட்சியின் செயற்குழுவால் ஊர்ஜிதம் செய்யப்பட்டன.   

கட்சித் தலைமை தாமாகச் சிந்தித்து, கட்சியை மறுசீரமைக்க முன்வரவில்லை. கட்சித் தலைமைக்கு எதிராகச் சிலர் சவால் விடுக்க ஆரம்பித்தமையே, கட்சியை மறுசீரமைக்கும் நிலைக்கு, கட்சித் தலைமை தள்ளப்பட்டது.  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கட்சி அடைந்த பின்னடைவே, எல்லாவற்றுக்கும் மூல காரணமாக அமைந்தது. 

பல ஆண்டுகளுக்குப் பின்னர், கட்சி பதவிக்கு வந்து, மூன்று வருடங்களில் நடாத்தப்பட்ட உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், தமது வாக்கு வங்கியில் மூன்றில் ஒரு பகுதியை இழக்க நேர்ந்தால், அது சாதாரண பின்னடைவாகக் கருத முடியாது. எனவே கட்சிக்குள் இருந்து, கட்சித் தலைமைக்கு நெருக்குவாரங்கள் ஏற்பட்டமை ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல.  பதினேழு ஆண்டுகள் பதவியில் இருந்த ​ஐ.தே.கவுக்கு, 1994ஆம் ஆண்டு தோல்வியடைந்ததில் இருந்து, இதுவரை நிலையான அரசாங்கமொன்றை உருவாக்க முடியவில்லை.  

 2001ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், ​ஐ.தே.க மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய போதிலும், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக, அவர், 2004ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஏழாம் திகதி, ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தைக் கலைத்து விட்டார்.   

இம்முறையும் பதவிக்கு வந்து, மூன்றாண்டுகளில், கட்சி பாரிய பின்னடைவைச் சந்திக்க நேர்ந்துள்ளது. அதேவேளை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலோ அல்லது பொதுத் தேர்தலிலோ கட்சிப் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்புகளும் மிகக் குறைவாகவே தென்படுகின்றன.  

 இந்த நிலையிலேயே, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தோல்வியோடு, கட்சிக்குள் இருந்து, தலைமைக்கு எதிராகக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.  

ரணில் விக்கரமசிங்கவின் தலைமைக்கு எதிராக, ​ஐ.தே.கவின் பல தலைவர்கள் 2001ஆம் ஆண்டிலிருந்தே அடிக்கடி கிளர்ச்சிகளை நடாத்தி வருகிறார்கள். அவர்கள் அனைவரும், கட்சியின் தேர்தல் தோல்விகளைக் காரணம் காட்டியே, தலைமைக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தினார்கள்.  2001ஆம் ஆண்டு கரு ஜயசூரியவைத் தலைவராக நியமிக்க வேண்டும் என, கட்சியின் சிலர் கூறி வந்தனர். அதே ஆண்டு ஜூலை மாதம் விக்கிரமசிங்க, நோர்வேக்கு விஜயம் செய்திருந்த வேளை, சிலர் கட்சித் தலைமை பதவியிலிருந்து அவரை நீக்க முற்பட்டனர். ஆனால், அந்த முயற்சி தோற்றது.   

மீண்டும் 2010ஆம் ஆண்டளவில், ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைக்கு எதிராக, சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான குழுவொன்று கிளர்ந்தெழுந்தது. அப்போதும், ​ஐ.தே.க தொடர்ச்சியாகப் பெற்றுவரும் தேர்தல் தோல்விகளையே ‘ரணில் விரோதிகள்’, அவருக்கு எதிரான குற்றச்சாட்டாக முன்வைத்தனர்.   

அந்தப் பிணக்கு 2014ஆம் ஆண்டு இறுதி வரை நீடித்தது. அக்காலத்திலும் தமக்கு எதிரானவர்களைச் சமாளிப்பதற்காக விக்கிரமசிங்க, தலைமைத்துவக் குழுவொன்றை நியமித்தார். ஆனால், சஜித் பிரேமதாஸவின் ஆதரவாளர்களான சிலர், இந்தக் குழுவை ஏற்றுக் கொள்ளவில்லை.   

2014ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலை உரிய காலத்துக்கு, இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே அறிவித்தார்.  

எனவே, ​ஐ.தே.க, தேர்தலுக்கு அவசரமாகத் தயாராக வேண்டியதாயிற்று. இந்த நிலையில், ரணிலுக்கு சஜித் விட்டுக் கொடுத்தார். பின்னர், ​ஐ.தே.க உதவியுடன் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டார். அத்தோடு, ​ஐ.தே.கவின் உட்கட்சிப் பூசல் மறைந்துவிட்டது. அடுத்து, 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் ​ஐ.தே.க வெற்றிபெற்றது.  

ஆனால், தமக்கு ஆதரவாகக் கிடைத்த மக்கள் அபிப்பிராயத்தை, மூன்று வருடங்களாவது வைத்திருக்க ​
ஐ.தே.கவால் முடியாமல் போய்விட்டது. இதற்கு, கட்சித் தலைவர்தான் காரணம் எனச் சிலர் கூறினாலும், கட்சித் தலைவர் மட்டும் எவ்வாறு தோல்விக்குக் காரணமாகினார், என்பதை எவரும் கூறுவதில்லை.   

கடந்த மூன்றாண்டுகளில், ​ஐ.தே.க தலைவர் எடுத்த முடிவுகளில் எதையும் அக்கட்சியில் எவரும் எதிர்க்கவில்லை. சகல முடிவுகளையும் கட்சி உறுப்பினர்கள் அனைவருமே ஏற்றுக் கொண்டனர்;  அங்கிகரித்தனர். அவ்வாறு இருக்க, தேர்தல் தோல்விக்கு, கட்சியின் தலைவர் மட்டும் ஏன் பொறுப்புக் கூற வேண்டும்?   

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தோல்விக்கு, ஊழல் விடயத்தில் அரசாங்கம் நடந்து கொண்ட விதம் முக்கிய காரணம் எனப் பலர் கூறுகின்றனர். 2015ஆம் ஆண்டு, ஐ.தே.கவுக்கு வாக்களித்துவிட்டு, 2018ஆம் ஆண்டு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, அக்கட்சியை விட்டுப் பிரிந்த 15 இலட்சம் வாக்காளர்களும் மஹிந்தவின் பொதுஜன பெரமுனவுக்கு  வாக்களிக்கவில்லை.  

 பொதுஜன பெரமுனவின் வாக்குகள், 2015ஆண்டு பொதுத் தேர்தலில், அக்கட்சி பெற்ற வாக்குகளை விட, இரண்டு இலட்சத்தாலேயே இம்முறை அதிகரித்து இருந்தன. எனவே, அன்று ​ஐ.தே.கவுக்கு வாக்களித்தவர்கள், பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்கவில்லை என்பது தெளிவாகிறது.   

2015 ஆம் ஆண்டு மைத்திரிக்காக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு  வாக்களித்தவர்கள் ஓரிரு லட்சம் என்றே ஊகிக்க முடிகிறது. ஆனால், மைத்திரி தலைமையிலான ஸ்ரீ ல.சு.கவும் 
ஐ.ம.சு.முவும் 15 இலட்சம் வாக்குகளை இம்முறை பெற்றுள்ளன.   

அதாவது, அன்று ​ஐ.தே.கவுக்கு வாக்களித்து, இம்முறை அக்கட்சியை நிராகரித்தவர்கள், மைத்திரியின் பக்கமே சென்றுள்ளனர். அதாவது, அன்று ​ஐ.தே.கவுக்கு வாக்களித்த ஊழலுக்கு எதிரானவர்கள், ஊழலுக்கு எதிராகக் கருத்து வெளியிட்டு வந்த மைத்திரியின் தலைமையிலான இரண்டு கட்சிகளுக்கும் தான் வாக்களித்துள்ளனர்.   

​ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம், முன்னைய அரசாங்கத்தின் தலைவர்களுக்கு எதிரான, ஊழல் குற்றச்சாட்டுகள் விடயத்தில், கவனக் குறைவாக நடந்து கொண்டமையும் மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்டவர்களுக்குச் சாதகமான முறையில், ​ஐ.தே.க செயற்பட்டமையும் இதற்குக் காரணமாகும் எனக் கருத முடிகிறது. இதற்குக் கட்சித் தலைமையை மட்டுமே, காரணம் எனக் கூற முடியாது.   

பொதுவாக, ​ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், பகிரங்கமாகவே பிணைமுறி ஊழல் பேர்வழிகளைப் பாதுகாக்க முற்பட்டனர். முன்னைய அரசாங்கத்தின் தலைவர்களுக்கு எதிராக, ஐ.தே.க உறுப்பினர்கள் எந்தவொரு நிறுவனத்துக்கும் முறைப்பாடுகள் செய்ததில்லை.  மக்கள் விடுதலை முன்னணியினரும் ஹெல உறுமயவும் சிவில் சமூக அமைப்புகளுமே இந்த முறைப்பாடுகளைச் செய்திருந்தன.   

அரசாங்கம் பொருளாதார ரீதியிலும் நாட்டுக்கு எதையும் செய்யவில்லை. ஐந்து வருடங்களில், பத்து இலட்சம் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதாகத் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியையும் ​ஐ.தே.க மறந்துவிட்டது. இந்த விடயத்தில், எந்தவோர் அமைச்சரும் அக்கறை கொள்ளவில்லை.

அவ்வாறிருக்க, கட்சித் தலைமை மட்டும்தான், தேர்தல் தோல்விக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதில் நியாயம் இல்லை. பொதுவாகக் கட்சியிடமோ, கட்சித் தலைமையிடமோ அல்லது இரண்டாம் நிலையிலான ஏனைய தலைவர்களிடமோ தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட எந்தவோர் அபிவிருத்தித் திட்டமும் இல்லை.  

 கட்சியின் மறுசீரமைப்பு என்ற பெயரில், கட்சிப் பதவிகளில் மாற்றங்களைச் செய்தாலும், அவ்வாறானதொரு செயற்திட்டம், தானாக உருவாகப் போவதுமில்லை. கட்சி அவ்வாறானதொரு திட்டத்தை வகுத்துச் செயற்படுத்திக் காட்டும் வரை, மக்களை வென்றெடுக்கவும் முடியாது.  அது ஒரு கூட்டுப் பொறுப்பாகும். பதவி மாற்றங்கள், தலைமை எதிர்நோக்கும் எதிர்ப்புகளைச் சமாளிக்கவே உதவும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .