2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஐரோப்பா: தேசியவாதங்களின் மோதல்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2017 ஜூலை 27 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசியவாதம், வரலாற்றின் வலிய சக்தியாக வளர்ந்து வந்துள்ளது.   
அதன் வேறுபட்ட வடிவங்கள், வேறுபட்ட வியாக்கியானங்கள், ஜனநாயகம் முதல் சர்வாதிகாரம் வரையான பல்வேறுபட்ட ஆட்சிகளை வரலாறெங்கிலும் உருவாக்கியிருக்கின்றன.  

 கடந்த இரு தசாப்த கால உலக அரசியலின் திசைவழியை, திறந்த பொருளாதாரமும் கட்டற்ற சந்தையும் நிதி மூலதனத்தின் முதன்மையான நிலையும் தேசியவாதத்தைப் பின்தள்ளி, அதைக் காலாவதியாக்கிவிட்டன என்று சொல்லப்பட்டது.   

ஆனால், தேசியவாதம் அனைத்தையும் பின்தள்ளி, இப்போது முன்னிலைக்கு வந்துள்ளது. கொதிநிலையில் உள்ள ஐரோப்பாவின் தற்போதைய நிலைமைகள், தேசியவாதங்களுக்கிடையிலான மோதலைத் தவிர்க்கவியலாதவை ஆக்குகின்றன.   

இன்று ஐரோப்பிய ஒன்றியம், அதன் இருப்புக்கும் நீண்டகால நிலைப்புக்குமான போராட்டத்தில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் உருவானபோது, அது நாடுகளின் இனத்துவ அடையாளங்களைக் கடந்து, ஐரோப்பியர் என்ற அடையாளத்தை அனைவரும் பெற்றுக் கொள்வதன் ஊடு, பலமான உலக சக்தியாகத் தன்னை நிலைநிறுத்தும் நோக்கங்களைக் கொண்டிருந்தது.   

ஆனால், இன்று அது உருவாகி, கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளை நெருங்கும் நிலையில், ஒரு கூட்டாக இருப்பதே கேள்விக்குறியாகி உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றம், 2008ஆம் ஆண்டு தொடங்கிய உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவிலாலானது.  

 ‘பிரிக்ஸிட்’ தேர்தலின் பயன்களில் ஒன்று, ஆங்கிலத் தேசியவாதத்தையும் ஸ்கொட்டிஸ் தேசியவாதத்தையும் மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு வந்ததாகும்.   

அண்மைய, உலகப் பொருளாதார நெருக்கடி பாரிய தாக்கங்களை ஐரோப்பிய சமூகங்களில் ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் வெளியான ‘ஹான்ஸ் போக்லேர்’ அறக்கட்டளையின் (Hans Bockler Foundation) ஆய்வு அறிக்கையானது, கடந்த ஒரு தசாப்தத்தில், ஐரோப்பாவின் உழைக்கும் மக்கள், அதிகளவில் வறுமைக்குள் தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது.   

கடந்த பத்து ஆண்டுகளில், 18 ஐரோப்பிய நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, தொழிலாளர்கள், நாட்டில் சராசரி வருமானத்தில் 60 சதவிகிதத்துக்கும் குறைவாகவே ஊதியம் பெறுகிறார்கள். உழைக்கும் ஏழைகளின் விகிதம், ஸ்பெயினில் 13.2 சதவீதமாகவும் கிரேக்கத்தில் 13.4 சதவீதமாகவும் ருமேனியாவில் 18.6 சதவீதமாகவும் உள்ளது.   

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான உந்துவிசையான ஜேர்மனியில், பத்தாண்டுகளுக்கு முன்னர், 4.8 சதவீதமாக இருந்த உழைக்கும் ஏழைகளின் எண்ணிக்கை, இப்போது இருமடங்காகி 9.6 சதவீதமாக உள்ளது.   

இந்த அறிக்கையானது, ஐரோப்பா பகுதியில் நெருக்கடிக்கு முன்னதாகவே, பெரும்பாலான நாடுகளில் வறுமை அதிகரிக்கத் தொடங்கியதாகத் தெரிவிக்கிறது. இருப்பினும் நெருக்கடியை அடுத்து, பல நாடுகளில் நிலைமை மிக மோசமடைந்தது. குறிப்பாக சமூகநல வெட்டுகள், வேலையிழப்புகள், சிக்கன நடவடிக்கைகள், உழைக்கும் மக்களுக்கெதிரான பாரிய தாக்குதலாகத் திகழ்ந்தன.  

இன்றைய ஐரோப்பியத் தொழில் நிலைமைகளை அவ்வாய்வின் அறிக்கை படம்பிடித்துக் காட்டுகிறது. சமூக நலத்திட்டங்கள், மருத்துவ வசதிகளுடன் உள்ளடங்கிய நிரந்தர வேலை என்கிற காலம் முழுமையாக மறைந்து, நிச்சயமற்ற, தற்காலிகமான, குறைந்த ஊதியத்துடனான, பகுதிநேர வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.  

 அவை, எதுவித சமூகநல உதவிகளையோ, தொழில் உத்தரவாதங்களையோ கொண்டிராதவை. ஆனால், இவ்வாறு பகுதிநேர வேலையைப் பெறுபவர், முழுநேரத் தொழிலைப் பெறுபவராகப் புள்ளிவிபரங்களினால் கருதப்படுகிறார். இவ்வாறுதான் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் ஏமாற்றுகின்றன என்பதை, இவ்வாய்வு சான்றாதாரங்களுடன் நிறுவுகிறது.   

அதேபோல, நெருக்கடியைத் தொடர்ந்த வேலையிழப்புகளும் சமூகநல வெட்டுகளும் சலுகைகள் எதுவுமற்ற, நிரந்தரமற்ற குறைந்த ஊதியத்துக்கு தொழிலாளர்கள் உடன்படக் கட்டாயப்படுத்தியது.  

 அரசாங்கங்கள் மக்களைக் காக்கத் தவறிய நிலையானது ‘எந்தவொரு வேலை’க்கும் தயாராகத் தொழிலாளர்களை மாற்றக்கூடிய கையறு நிலைக்குத் தள்ளியிருப்பதாகவும் இதை அரசாங்கங்கள், நிதிமூலதனத்துடன் இணைந்து சாத்தியமாக்கியிருப்பதையும் இவ்வாய்வு சுட்டிக்காட்டுகிறது.   

இவ்விடத்தில் இன்னோர் அம்சத்தையும் நோக்கல் தகும். இவ்வாறான நெருக்கடி நிலையானது, தவிர்க்கவியலாமல் ஐரோப்பிய நாடுகளில் தேசியவாதத்தை உயிர்ப்பித்திருக்கிறது.   

ஐரோப்பியத் தேசியவாதம், வலுவான சக்தியாகத் திகழ்ந்த ஒருகாலம் இருந்தது. இப்போது மீண்டும், மெதுமெதுவாக அதை நோக்கிய நகர்வுகள் நிகழ்கின்றன.   

ஐரோப்பாவின் கடந்த காலம், தேசியவாதத்தின் முக்கிய தன்மைகளை வெளிப்படுத்தியது என்றால் மிகையாகாது. மத அடையாளத்தை விட, வலுவான ஒரு சக்தியாக முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், தேசியவாதம் இருந்து வந்துள்ளது.   

அங்கெல்லாம், தேசியவாதத்தின் வலிமைக்கு முன் பணிந்து போய்த் தேசியவாதிகளாகவும் சோஷலிசவாதிகளாகவும் தோற்றம் காட்டுகிறவர்கள் இருந்து வந்துள்ளார்கள்.  

 அதேவேளை, சோஷலிசம் என்ற பேரில் மக்களைக் கவரவும் தேசிய வாதத்தை ஒரு வெறியாக வளர்த்துப் பெருமுதலாளித்துவத்துக்குப் பணியாற்றியவர்களும் இருந்து வந்துள்ளனர். இவ்வாறான போலியான சோஷலிசம், பாஸிசவாதிகளால் பயன்படுத்தப் பட்டுள்ளது.  

 அது மட்டுமன்றி, சமூக ஜனநாயகவாதிகள் என்று தம்மைச் சொல்லிக் கொண்ட பல அரசியல் அமைப்புகள், தமது நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் தேசபக்தியின் பேரால் பிற தேசங்களையும் தமது நாட்டினுள் உள்ள தேசிய இனங்களையும், சமூகப்பிரிவுகளையும் ஒடுக்கும்போது, அந்த ஒடுக்கு முறைக்கு உடந்தையாகி நிற்கவும் நேர்ந்துள்ளது.   

பிரித்தானிய தொழிற்கட்சி முதலாக, ஐரோப்பியச் சமூக ஜனநாயக ‘இடதுசாரி’க் கட்சிகளும் கொலனிய யுகத்தில் இவ்வாறே நடந்து கொண்டன. இதனாலேயே அவற்றைச் ‘சமூக பாஸிசவாதிகள்’ என லெனின் குறிப்பிட நேர்ந்தது.   

சமூக ஜனநாயகவாதிகள் மட்டுமன்றிச் சந்தர்ப்பவாத அரசியலில் இறங்குகிற கம்யூனிஸ்ட்டுகளும் தங்களை மாக்சியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளுகிற பிற இடதுசாரிகளும் அந்த விதமாகவே நடந்து கொள்ள நேரும் என்பதைப் பல ஐரோப்பிய நாடுகளில் நடந்த சம்பவங்கள் உணர்த்தியுள்ளன.  

ஐரோப்பாவில் தேசியவாதம், பல்வேறு தேவைகளுக்காகப் பயன்பட்டுள்ளது. இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன்பிருந்தே பல ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமைகளில் விடுதலைப் போராட்டங்கள் நடை பெற்றன.  

 1945 இல் உலக பாஸிசம் தோற்கடிக்கப்பட்ட சூழலில், கிழக்கு, தெற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் சோஷலிச ஆட்சிகள் தோற்றம் பெற்றன. அவ்வாறு மார்ஷல் டிட்டோவின் தலைமையில் உருவாக்கப்பட்டதே யூகோஸ்லாவிய சமஷ்டிக் குடியரசாகும்.   

அதேபோன்று, அல்பேனியாவில் அன்வர் ஹோஜா தலைமையில் சோஷலிச ஆட்சி மலர்ந்தது. இத்தகைய சோஷலிச நாடுகள், ஐரோப்பிய ,அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளுக்கு பெரும் சவாலாகவும் எதிர் நிலையாகவும் அமைந்தன.   

எனவே, இச்சோஷலிச நாடுகளை உடைப்பதற்கும் சிதைப்பதற்கும் மேற்குலகு, சதா முயன்று வந்துள்ளது. அதைச் சக்தி மிக்க மக்கள் தலைவைர்களாக விளங்கிய டிட்டோ, அன்வர் ஹோஜா போன்றோர் உயிருடனும் அதிகாரத்திலும் இருக்கும் வரை, அமெரிக்காவாலும் ஐரோப்பிய ஓன்றியத்தாலும் சாத்தியமாக்க முடியவில்லை.  

 இருப்பினும், அந்நாடுகளில் இன, மத முரண்பாடுகளை வளர்ப்பதற்கும் பகை நிலைக்குத் தள்ளுவதிலும் ஊடுருவி, வேலைகளைச் செய்தும் வந்தன. அவையே காலப்போக்கில் போர்களாகின.   

ஐரோப்பிய ஓன்றியம், நாடுகளை ஒன்றுபடுத்தியது என்று சொல்கிற காரணத்தின் பின்னால், சொல்லாமல் விடப்பட்ட காரணங்களும் உள்ளன. உலகப்போரின் பின், பிரிக்கப்பட்ட சில நாடுகள் ஒன்றிணைவதை, அமெரிக்கா தடுத்து வந்துள்ளது.   

இன்றுவரை, மீண்டும் கொரியா ஒரு நாடாக இணைவதற்குத் தடையாக உள்ளது, அமெரிக்காதான். அதேநேரம், சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்குச் சரிந்ததன் பின்னணியில், கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிஸ அரசுகள் சரிந்த கையுடன், போரால் பிரிந்த ஜேர்மனியை ஒன்றிணைப்பதை ஆதரித்தது.   

யூகோஸ்லாவியாவின் விடயத்தில், அந்த நாடு ‘ஸ்லாவ்’ தேசிய இனங்கள் பலவற்றின் ஒன்றிணைவால் உருவான நாடு என்பதும், அங்கே எவ்விதமான தேசிய இன ஒடுக்கலும் இருந்ததில்லை என்பதும் பலருக்கு நினைவுக்கு வருவதில்லை.   

அங்கே இருந்த, தேசிய இனங்களிடையே போட்டி இருந்தது. இடையிடை பகைமையான உணர்வுகளும் இருந்தன. ஆனால், அது மோதல்களுக்கோ பிரிவினைக்கோ 1990 கள் வரை இட்டுச் செல்லவில்லை.  

 பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. மிகமோசமான பொருளாதார நெருக்கடி இருந்து வந்த 1980களில் பிரிவினைக்கான இயக்கங்கள் உருப்பெறவில்லை.   

உண்மையில், 1945 முதலாக, சோவியத் ஒன்றியத்துடன் முரண்பட்டு நின்ற அணிசேரா நாடான யூகோஸ்லாவியாவின் ஒற்றுமையை, அமெரிக்கா அப்போது விரும்பியது. அன்று ஒரு வலுவான யூகோஸ்லாவியாவால் அமெரிக்காவுக்கு பயன் இருந்தது. சோவியத் ஒன்றியம் 1980களின் இடைப்பகுதியிலிருந்து பலவீனப்படத் தொடங்கிவிட்டது. அதற்குப் பின்னர் யூகோஸ்லாவியாவால் பயனிருக்கவில்லை.   

1990களில் சோவியத் ஒன்றியத்தினதும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளினதும் சோஷலிச வீழ்ச்சியைத் தொடர்ந்து, யூகோஸ்லாவியாவும் அல்பேனியாவும் தத்தமது சோஷலிச ஆட்சிகளை இழந்தன.   

இதில், அந்த நாடுகளின் பிற்போக்குவாத சக்திகளுடன் அமெரிக்க, ஜரோப்பிய ஓன்றிய சக்திகள் கைகோர்த்துச் செயற்பட்டன. அதன் காரணமாக பல்லினத் தேசியங்களைக் கொண்டிருந்த யூகோஸ்லாவிய சமஷ்டிக் குடியரசு, நான்கு துண்டுகளாகித் தனித்தனி நாடுகளாகியது.   

சேர்பியாவின் பெருந்தேசிய இன வெறி கொண்ட, மிலேச்சத்தனமாக இன, மத ஒடுக்குமுறையானது, சோஷலிசத்தின் கீழ் ஏற்பட்ட ஐக்கியத்தையும் நாட்டின் இறைமையையும் பாழாக்கிக் கொண்டது. சோஷலிசம் 
செயற்பட்ட மண்ணிலே இனவெறி இரத்த ஆறு ஓடியது.   

இன்று, யூகோஸ்லாவியா என்ற நாடு உடைக்கப் பட்டு ஏழு தனித்தனி நாடுகளாக்கப்பட்டு விட்டது. இது அமெரிக்காவினதும் ஜரோப்பிய ஓன்றியத்தினதும் தேவைக்கு உகந்ததாக அவர்களாலேயே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. இதற்கு, தேசியவாதம் மிகவும் பயனுள்ளதாகியது.   

இப்போது மீளுகின்ற தேசியவாதம் வெவ்வேறு வகைகளில் செயற்படுகிறது. அதில் முதன்மையானது வெள்ளை நிறவெறியும் குடியேற்றவாசிகள், அகதிகள் மீதான காழ்ப்புணர்வும் வன்மமுமாகும்.  

 இவை, வேறுவகையான சமூக நெருக்கடிக்குள் ஐரோப்பிய நாடுகளைத் தள்ளுகின்றன. அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் ஜேர்மனியர், பிரான்ஸியர், பிரித்தானியர், இத்தாலியர், ஸ்பானியர் என்ற வெவ்வேறு இனத்துவ மையப்பட்ட தேசியவாதங்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ளுகின்றன. இந்நாடுகளின் சீரடையாத, பொருளாதார நிலைவரங்கள் எதிரெதிராக இத்தேசியவாதங்களை நிறுத்துகின்றன.   

தேசியவாத முகமூடி உழைக்கும் மக்களைத் திசைதிருப்பும் உத்தியாக, கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பாவில் அரங்கேறியுள்ளது. இதன் அண்மைய உதாரணம் பிரான்ஸ்.   

கடந்தவாரம், பிரெஞ்சு நாடாளுமன்றம், பிரெஞ்சுத் தொழிற்சட்டத்தைத் திருத்துவதற்கான அனுமதியை, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கு அளித்தது. இதன் விளைவால், தொழிலாளர் விரோத, முதலாளித்துவ நலன் பேணும் வகையில் திருத்தங்கள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.   

ஆனால், இன்று எழுச்சிபெற்றுள்ள பிரெஞ்சுத் தேசியவாதமும் சிறுபான்மையினங்களுக்கு எதிரான இனவெறியும் இத்திருத்தங்கள் மீது தொழிலாளர் கவனம் பெறாமல் பார்த்துக் கொள்கின்றன.   

அனைத்து உழைப்பாளர்களுக்கும் நிகழும் கொடுமைகள் மறைக்கப்பட்டு வெள்ளை உழைப்பாளர்கள் எதிர் குடியேறிய உழைப்பாளிகள் என்பது முன்னிறுத்தப்படுகிறது.   

நாட்டின் சொந்தக்காரர்களான வெள்ளை உழைப்பாளிகளின் தொழில்களை குடியேற்றவாசிகளும் அகதிகளும் குறைந்த ஊதியத்துக்கு உடன்படுவதன் மூலம், கொள்ளையடிக்கிறார்கள் என்ற கருத்துருவாக்கம், வெள்ளை நிறவெறி, மையத் தேசியவாதத்துடன் பிரதான இடத்தைப் பெறுகிறது. இந்நாடுகளில் இனவாதம், தேசியவாதத்தின் பிரதான கூறாக வளர்ச்சியடைகின்றது.  

இன உணர்வு பற்றி யாருமே அதிகம் கூச்சப்படுவதில்லை. சில சமயம் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய விடயமாகவே இன உணர்வு இருந்துள்ளது. என்னளவில், இன உணர்வு என்பது ஆழ்ந்த நோக்கில் அர்த்தமற்ற ஒன்று. ஆயினும், சமுதாயத்தில் இனவேறுபாடுகள் உள்ளபோது, அந்தந்த வேறுபாடுகள் வாழ்வின் வெவ்வேறு துறைகளைப் பாதிக்கும்போது, அந்த உணர்வைப் பெரும்பாலானோரால் தவிர்க்க முடிவதில்லை.  

 இன உணர்வு என்பது, ஒரு மனிதனது தன்னடையாளங்களில் ஒன்றாகச் செயல்படுகிறது. அது மொழி, மதம், பண்பாடு போன்ற பல்வேறு வகையில் வெளிப்படும்.  

மனிதர் மத்தியில் இன உணர்வுகள் வேறுபடும் அளவுகளில் இருக்கலாம். தன் இனத்தின் நலனை மற்ற இனங்களின் நலன்களுக்கு முரணானதாகக் காணவும் காட்டவும் முனையும் போதும், தன் இனத்தின் இயல்புகளை இன்னோர் இனத்தினதும் மேலான ஒன்றாகக் காட்ட முனையும் போதும், இன உணர்வு இனவாதமாகிறது. இது, மற்ற இனங்கள் பற்றிய இழிவான மதிப்பீடு, கலாசார வேறுபாடுகளை, ஏற்றத்தாழ்வுகளாகத் தரம் பிரித்தல், பிரச்சினைகளை இனமொன்றின் கண்ணோட்டத்தில் மட்டுமே தனிமைப்படுத்திக் காண முனைதல் போன்று, தன்னை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது.   

இன உணர்வு இனவாதமாகும்போது முரண்பாடுகள் பகைமைத் தன்மை பூண ஆரம்பிக்கின்றன. பகைமை உணர்வுகள் வளர்ந்து சகிப்புத் தன்மையின் எல்லை மீறப்படும்போது, இனவாதம் இன வெறியாகிறது.  

ஒரு சமுதாயம் முன்னேறிய ‘நாகரிக’ சமுதாயம் என்பதால், அங்கே இனவாதமும் இனவெறியும் இல்லை என்றாகாது. ஐக்கிய அமெரிக்காவில் நீக்கிரோக்களுக்கு எதிரான இன வெறி, தென்னாபிரிக்க வெள்ளை இனவெறி, ஹிட்லரின் ஜேர்மனியில் ஆரிய இனவெறி, ஜாரிஸ ரஷ்யாவில் பேரினவாதம் இவையெல்லாம் பின்தங்கிய சமுதாயங்களுக்கு உரியவையல்ல;  இனவாதமும் இனவெறியும் தொற்று நோய்களைப் போல் பரவுகின்றன. ஓர் இனத்தின் இனவாதமும் இனவெறியும் மற்ற இனங்களிடையே இனவாதத்தையும் இனவெறியையும் தூண்டி வளர்த்து, அதன் மூலம் தம்மையும் வளர்த்துக் கொள்கின்றன.  

இன்று ஐரோப்பாவில், தொழிலாளர்கள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இதைத் திசைதிருப்பும் உத்தியாக தேசியவாதம் நாடுகள் சார்ந்து, இன அடையாளத்துடனும் நிறவெறியுடனும் சேர்த்து உற்பத்தி செய்யப்படுகிறது.   

இவை, உழைக்கும் மக்களை, வரன்முறையற்றுச் சுரண்டும் கருவிகளன்றி வேறல்ல. தேசியவாதம் பற்றி நாம் கவனமாக இருப்பதற்கு இன்றைய ஐரோப்பிய நிலைவரம் நல்லதொரு பாடமாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .