2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: ஐரோப்பிய மனநிலை

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2019 ஜூன் 06 , மு.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவது மிகவும் கடினம். இதனாலேயே தேர்தல்கள் ஓரளவேனும் முக்கியத்துவம் பெறுகின்றன.   

தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் மக்கள் மனநிலையை வெளிப்படுத்தும் தன்மையுடையன. அது முழுமையானதல்ல; இருந்தாலும் தேர்தல்களில் மக்களின் தெரிவுகள், சில பெறுமதியான செய்திகளைச் சொல்லவல்லவை.   

அதேவேளை, தேர்தல்கள் நீதியாகவும் நியாயமாகவும் நடப்பது என்பது, இதற்கான முன்நிபந்தனை. அவ்வாறில்லாத தேர்தல் முடிவுகள், மக்கள் மனோநிலையைப் பிரதிபலிக்க மாட்டாதவை.  

அண்மையில் நடந்து முடிந்த, ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல், ஐரோப்பியர்கள் தங்களது பிராந்தியமான ஐரோப்பாவினுடையதும் உலகத்தினுடையதும் அரசியல் எதிர்காலத்தை, எவ்வாறு நோக்குகின்றார்கள் என்பதைக் குறிகாட்டுவதாய் அமைந்துள்ளது.   

இந்திய நாடாளுமன்றத்துக்கு அடுத்தபடியாக, உலகில் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றமானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கியமான அலகாகும். உறுப்பு நாடுகளில் இருந்து, மக்களால் நேரடியாக, ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் தெரிவாகிறார்கள்.   

அவ்வகையில், ஐரோப்பியர்கள், தங்களது ஐரோப்பிய அடையாளம் சார் சிக்கல்கள், கொள்கைகள், அரசியல் சார்ந்தே, தமது தெரிவுகளை மேற்கொள்கிறார்கள். இவை, உள்நாட்டு அரசியல் தெரிவுகளில் இருந்து, வேறுபட்டவையாகவே இருந்து வந்திருக்கின்றன.   

ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்களிப்போரின் எண்ணிக்கை, தொடர்ச்சியாகக் குறைந்து வந்திருக்கிறது. 1979ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது தேர்தலில், வாக்களித்தோர் 62 சதவீதமாக இருந்த அதேவேளை, இவ்வெண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, கடந்த முறை (2014) 42சதவீதமாக இருந்தது. ஆனால் இம்முறை, 52 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர். இது பாரியதொரு மாற்றமாகும். இதனால், இம்முறை தேர்தல் முடிவுகள், கவனம் பெறுகின்றன.   

பாரம்பரிய கட்சிகளினதும் கூட்டிணைவினதும் தோல்வி  

1979ஆம் ஆண்டு முதல், ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இத்தேர்தல்களில் இரண்டு கூட்டணிகள் மாறிமாறி ஆட்சிக்கு வந்துள்ளன. ஒருகூட்டணி, தன்னை மத்திய வலதுசாரி என்றும் மற்றையது தன்னை, மத்திய இடதுசாரி என்றும் அழைத்து வந்துள்ளன.   

தாராண்மைவாத ஜனநாயகத்தின் அடிப்படையில் வலதுசாரி, இடதுசாரி என இரண்டு கூட்டணிக்குள் பெரும்பான்மையான கட்சிகள் அடங்கி விட்டன. இதன் அடிப்படையிலேயே தான், நாடுவாரியாகத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களும் அவர்தம் கட்சிகளும் இயங்கி வந்தன.  

தீவிர வலதுசாரி, இடதுசாரிக் கட்சிகளுக்கு அமோக ஆதரவு, இதுவரை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இருந்ததில்லை. ஆனால், இம்முறை நிலைவரம் வேறுமாதிரி இருக்கிறது.   

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் முதன்முதலாக, மத்திய வலது, மத்திய இடது ஆகிய இரண்டு கூட்டணிகளும் தங்களுடைய பெரும்பான்மையை இழந்துள்ளன. இது புதிது. பாரம்பரியமாக, நாடாளுமன்றக் கட்சிகள் மீது மக்கள் தொடர்ச்சியாக வெறுப்படைந்து வருகிறார்கள். அதன் இன்னொரு வெளிப்பாடாக, இத்தேர்தல் முடிவுகளை நோக்கலாம்.  

மேற்கு ஐரோப்பாவெங்கும் சமூக ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தித் தோற்றம் பெற்ற கட்சிகள், கெடுபிடிப் போருக்குப் பிந்திய காலத்தில், பல நாடுகளில் ஆட்சியைப் பிடித்தன. ஆனால், முதலாளித்துவத்துடன் இணைந்த அக்கட்சிகளின் பயணம், மக்கள் எதிர்பார்த்த அடிப்படைச் சமூக நலன்களை வழங்காமல், சிக்கன நடவடிக்கைகளுக்குள் சரணடைந்தன.  

இதேபோலவே, பழைமைவாதக் கட்சிகளும் நவதாரளவாதத்தின் சேவகனாகி, பல்தேசியக் கம்பனிகளுக்கு கம்பளம் விரித்து, மக்களை நட்டாற்றில் விட்டன. இன்று, இந்தக் கட்சிகளின் மீதான மக்களின் கோபம் அதிகளவில் உள்ளது. இதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.   

பழைமைவாத, சமூக ஜனநாயகக் கட்சிகள் கூட்டாகப் பெற்ற வாக்கு சதவீதம், ஜேர்மனியில் 43 சதவீதமாகவும் பிரித்தானியாவில் 23 சதவீதமாகவும் பிரான்ஸில் 15 சதவீதமாகவும் சரிவடைந்துள்ளன. கிட்டத்தட்ட பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய வாக்காளர்கள், பாரம்பரிய கட்சிகளைப் புறக்கணித்து, புதிய கட்சிகளுக்கு வாக்களித்துள்ளனர். இது பாரியதொரு மாற்றமாகும். இந்த மாற்றம் எழுப்புகின்ற கேள்வி யாதெனில், ஐரோப்பியர்களின் புதிய தெரிவாக அமைந்த கட்சிகள் எவை என்பதேயாகும்.   

வாக்குகள் இரண்டு பெரும் முகாம்களாகப் பிரிந்துள்ளன. ஒன்று, மத்திய வலதுசாரிகளின் வாக்கு வங்கியையும் மிதக்கும் வாக்காளர்களின் வாக்கு வங்கியையும் அதிதீவிர வலதுசாரிக் கட்சிகள் பெற்றுள்ளன.   

அதேவேளை, மத்திய இடதுசாரிகளின் வாக்கு வங்கியைச் சுற்றுச்சூழலை மய்யப்படுத்தும் பசுமைக் கட்சிகள் பெற்றுள்ளன. இந்த மாற்றம், ஐரோப்பிய நாடாளுமன்றுக்குப் புதியது. இது ஏற்படுத்தும் விளைவுகளைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.   

தீவிர வலதுசாரி அரசியலின் எழுச்சி  

அதிதீவிர வலதுசாரிகளின் தேர்தல் வெற்றிகள், முக்கியமாக மூன்று நாடுகளில் இருந்து வந்துள்ளன. முதலாவது, பிரான்ஸ்; இரண்டாவது, இத்தாலி; மூன்றாவது, பிரித்தானியா. இவை மூன்றும் தனித்தனியே நோக்கத் தக்கன.  

பிரான்ஸில் தீவிர வலதுசாரிக் கட்சியான மரின் லூயி பென் தலைமையேற்கும் தேசியப் பேரணிக் கட்சி, முதலிடத்தைப் பெற்றுள்ளது. பிரான்ஸில் நடைபெற்றுவரும் ‘மஞ்சள் சட்டை’க்காரரின் போராட்டங்கள், சமூக அதிருப்தியின்மையின் விளைவுகளை, லூயி பென் தனக்கு ஆதரவாகப் பயன்படுத்தினார். சீரழிந்து போயுள்ள அரசியல் நிறுவனத்தின் மீதான கோபத்தை, ‘அமைப்புக்கு எதிரான வெளியாளாகத்’ தன்னைக் காட்டிக் கொள்வதோடு, மக்களை அவர் கவர்ந்தார். (இதே முறையையே ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்திலும் கையாண்டார்)    

பிரான்ஸின் பாரம்பரிய இரண்டு கட்சிகளான சோசலிசக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகியன (இவையே, இரண்டாம் உலகப்போரின் பின்னர், மாறிமாறி பிரான்ஸின் ஆட்சியைப் பிடித்தன) மொத்தமாக வெறும் 14சதவீதமான வாக்குகளையே பெற்றுக் கொண்டுள்ளன. இதுவும் தீவிர வலதுசாரிச் செல்வாக்கு பிரான்ஸில் அதிகரிப்பதைக் காட்டி நிற்கிறது.   

அதேவேளை லூயி பென், பல்வேறு நெருக்கடிகளுக்குப் புலம்பெயர்ந்தோர் குடியேற்றவாசிகள் மீது குற்றஞ்சுமத்தினார். இது, அவருக்குக் கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது. இது, அதிகரித்துவரும் குடியேற்றவாசிகளுக்கு எதிரான மனோநிலையைக் காட்டுகிறது.   

பிரான்ஸை விட, மிகுந்த வேகத்துடன் இத்தாலியில் அதிதீவிர வலதுசாரிகள் வெற்றி பெற்றுள்ளனர். துணைப் பிரதமர் மட்டியோ சல்வீனியின் லீக் கட்சி, 35 சதவீதமான வாக்குகளைப் பெற்று, முதலிடத்தில் உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கு இத்தாலியில், பிரிவினைவாத  குடியேற்றவாசிகளுக்கு எதிரான கட்சியாகத் தோற்றம் பெற்ற லீக் கட்சி, இன்று இத்தாலியின் பிரதானமான கட்சியாகவும் அரசாங்கத்தை இயக்கும் இயந்திரமாகவும் மாறியுள்ளது. இந்த மாற்றம், ஐந்து ஆண்டுகளுக்குள் நிகழ்ந்துள்ளது.   

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், தனது தீவிர குடியேற்றவாசிகளுக்கு எதிரான பிரசாரத்தை முன்னிறுத்தி, தேர்தல் பரப்புரை செய்யக் கரையோர இத்தாலிக்குச் சென்ற சல்வீனி மீது, முட்டைகளும் தக்காளிகளும் வீசப்பட்டன. இன்று அங்கு சல்வீனியின் லீக் கட்சி, கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. இது கடந்த நான்காண்டு காலத்தில், இத்தாலியில் நடந்துள்ள மாற்றத்தை விளக்கப் போதுமானது.   

பிரித்தானியாவில் பிரெக்ஸிட்க்காகப் பிரசாரம் செய்து, அதில் வெற்றி கண்ட நைஜல் பராஜ், அதைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து ஒதுங்கினார். ஆனால், பிரெக்ஸிட் முடிவின்றித் தொடர்வதையடுத்து, புதிதாகப் பிரெக்ஸிட் கட்சியைத் தொடங்கி, இம்முறை தேர்தலில் போட்டியிட்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.   

அவரது பிரெக்ஸிட் கட்சி, 32 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளது. இவ்வாண்டு தொடக்கத்தில், உருவாகியிராத ஒரு கட்சியாகவும் பிரித்தானியாவை, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றுவது என்பதைத் தவிர்ந்த கொள்கைகள் எதுவுமற்ற, அதிதீவிர வலதுசாரிக் கட்சியாகவும் உள்ள பராஜின் கட்சி, இவ்வாறாகப் பாரிய வெற்றியைப் பெற்று, முதலிடத்தைப் பிடித்திருப்பது, பிரித்தானியாவில் வேகமாக வளர்ந்துவரும் தீவிர வலதுசாரித்துவ மனோநிலையைப் பிரதிபலிக்கிறது எனலாம். கடந்த இருநூறு ஆண்டுகளில் கண்டிராத தோல்வியை, பிரித்தானியாவின் பழைமைவாதக் கட்சி, இத்தேர்தலில் சந்தித்துள்ளது.   

சுற்றுச்சூழல் அக்கறையும் மாற்றரசியலும்   

இதற்கு மறுபுறமாக, ஜேர்மனியில் இரண்டாம் இடத்தையும் பிரான்ஸில் மூன்றாம் இடத்தையும் பிரித்தானியாவில் ஆளும் பழைமைவாதக் கட்சியைப் பின்தள்ளியதாகவும் பசுமைக் கட்சிகள் இடங்களைப் பிடித்துள்ளன. பசுமைக் கட்சிகளின் எழுச்சி, ஐரோப்பாவெங்கும் அதிகரித்துவரும் சுற்றுச்சூழல் அக்கறையைச் சுட்டிக்காட்டி நிற்கின்றது.   

குறிப்பாக, ஜேர்மனியில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அஞ்சலா மேக்கலின் ஆளும் கட்சிக்கு அடுத்த நிலைக்கு, பசுமைக் கட்சி வந்துள்ளமை ஆச்சரியமானது. (இக்கட்சி, 20 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளது) பசுமைக் கட்சிகளின் பிரதான வாக்காளர்களாக, இளந்தலைமுறையினரே  இருக்கிறார்கள்.   

அதேவேளை, முற்போக்கான சமூகப் பொருளாதார தொலைநோக்கு, குடியேற்றவாசிகளுக்கு ஆதரவான கொள்கை நிலைப்பாடுகள் என்பனவும் பசுமைக் கட்சிகளின் வெற்றிக்குப் பங்காற்றியுள்ளன.   

ஒருபுறம், தீவிர வலதுசாரிகள் குடியேற்றவாசிகளுக்கு எதிரான மனோநிலைக் கட்டியெழுப்புகின்ற போது, அதை எதிர்த்த நிறுவனமயப்படுத்தலுக்கு எதிரான மாற்றரசியலை, இடதுசாரிக் கட்சிகள் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால், இந்நாடுகளில் எல்லாம், ஒன்றில், இடதுசாரிக் கட்சிகள் சீரழிந்தன அல்லது வலுவில்லாது உள்ளன. இதனால், மாற்றரசியலை வேண்டுவோரின் விருப்புக்குரிய தெரிவாக, பசுமைக் கட்சிகள் மாறியுள்ளன.   

ஒருபுறம், ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டினதும் உள்நாட்டு அரசியலும் மறுபுறம், அந்தந்த நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுமென, இரண்டுக்கும் நடுவே, பல்வேறு கேள்விகளுடன் ஐரோப்பிய ஒன்றியம், தனது எதிர்காலம் குறித்த கேள்விகளுடன் முன்செல்கின்றது.   
அதில் பிரதானமானது, பிரெக்ஸிட் எவ்வாறு நிகழும் என்பதாகும்? ஐரோப்பிய மனநிலை, மூன்று விடயங்களை முன்தள்ளுகிறது.   

முதலாவது, குடியேற்றவாசிகளுக்கு எதிரான எண்ணம்.   

இரண்டாவது, நிகழ் அரசியலில், அதிவலதுசாரிகளின் மனோநிலை.  

மூன்றாவது, சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை.  

சீரழிந்து போயுள்ள முதலாளித்துவ ஜனநாயகம், இவ்வகையான தெரிவுகளையே ஐரோப்பியர்களுக்கு விட்டுவைத்துள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X