2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஒருங்கிணைந்த மண்ணில் ஒன்றிணைந்த வாழ்வு

காரை துர்க்கா   / 2019 ஜூன் 04 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்று தைப்பொங்கல் திருநாள். கவிதாவின் வீட்டுக்கு, அவளின் நண்பர்களான அன்வரும் மேரியும் தமது பெற்றோருடன் வந்திருந்தனர்.   

தோழர்களைக் கண்ட கவிதா, வீட்டு வாசல் வரை ஓடி வந்து, அவர்களை அன்புடன் வரவேற்றாள். “வணக்கம்! வாருங்கள் வாருங்கள்” எனக் கவிதா நண்பர்களை வரவேற்றாள். மேரியும் அன்வரும் பொங்கல் வாழ்த்துகளைக் கூறி, அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.  

இது நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான, தமிழ்ப் பாட நூலில், ‘பண்டிகைகள்’ என்ற தலையங்கத்தின் கீழ், உரையாடல் வடிவில் அமைந்த பாடப்பரப்பு ஆகும். 

எம் உயிரிலும் மேலான தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட நாம், எவ்வாறு ஒற்றுமையாகவும் ஒன்று கூடியும் அன்புடன் எண்ணங்களையும் உணவுகளையும் உணர்வுகளையும் பரிமாறிக் கூடிக்குலாவி வாழ வேண்டும் என்பதை, மிகவும் அழகாக இந்தப் பாடம் சொல்லித் தருகின்றது.  

கடந்த காலங்களில், நாங்களும் எம்மண்ணில், இது போலவே அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்தோம். இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் தமிழ், முஸ்லிம் உறவு உயர்வாக, உன்னதமாக, உண்மையாக இருந்தது. இனம், மதம் கடந்து, எம் தாய்மொழி தமிழ் தாய்மொழியால், கட்டுண்டு கிடந்தோம்.  

‘தமிழ்’ என்ற மூன்றெழுத்து, மதங்கள் கடந்து, மனிதங்களைத் தன்னுடன் ஒன்றாகப் பிணைத்து வைத்திருந்தது. அன்பழகனும் அன்ரனும் அப்துல்லாவும் பாடசாலையில் மகிழ்ச்சியாகப் படித்தார்கள்; மனம் விட்டுப் பழகினார்கள்; மண்ணின் பண்பாளர்களாக உயர்ந்தார்கள்; வாழ்ந்தார்கள்; மடிந்தார்கள். அவர்கள் மடிந்த பின்பும் அவர்கள் நாமங்கள் வாழ்ந்தன.  

இந்நிலையில், சுதந்திரத்துக்கு பின்னர் வேகமாக உருப்பெற்ற தமிழ், சிங்கள இன முரண்பாட்டில், முஸ்லிம் மக்கள், தமிழர் பக்கத்திலேயே இருந்தார்கள். பல முஸ்லிம் இளைஞர்கள், தமிழ் ஆயுத அமைப்புகளில் போராளிகளாகப் போராடினார்கள். ஆனாலும், முஸ்லிம் மக்கள், தமிழ் மக்கள் பக்கம் சாய்ந்து விடக் கூடாது என்பதில், பேரினவாதம் மிகக் கவனமாக இருந்தது.  

ஏனெனில், இதன் மூலம், நியாயபூர்வமானதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான தமிழ் மக்களின் கோரிக்கைகள், மேலும் வலுவடைந்து விடும் என, அவர்கள் உள்ளூரக் கருதினார்கள்; அச்சமடைந்தார்கள். ஆதலால், தமிழ் - முஸ்லிம் உறவுக்கு உலை வைத்தார்கள். ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற உயர்ந்த பண்புடன் வாழ்ந்தவர்களை, ‘தமிழ் மக்கள்’, ‘முஸ்லிம் மக்கள்’ என இரண்டாகப் பிளந்தார்கள்.   

இதனால் இலங்கையில் தமிழ், சிங்கள இன முரண்பாடு, பேரினவாதிகளின் சூழ்ச்சியால், தமிழ், முஸ்லிம் முரண்பாடாகப் பிறிதோர் உப-கிளை பரப்பியது; வியாபித்தது; வேகம் கொ(க)ண்டது. அதாவது, பேரினவாதம் விரித்த வலையில், சிறுபான்மை இனங்கள் சிக்கிக் கொண்டன; சிதறின.  

இதற்காகப் பேரினவாதம் பல திட்டங்களைத் தீட்டியது. அவை வெற்றியும் கண்டன. முஸ்லிம் மக்களது பாதுகாப்புக்கு என, ஊர்காவல் படைகள் ஆரம்பிக்கப்பட்டன. காலப்போக்கில் அதற்கும் தமிழ் ஆயுத அமைப்புகளுக்கும் இடையில், முரண்பாடுகள் தோன்றின.  

இதையே பேரினவாதம் எதிர்பார்த்தது. அதுபோல நடந்தது. இதன் பெறுபேறாகத் தமிழ், முஸ்லிம் மக்களது உயிர்கள் பலி எடுக்கப்பட்டன. இரு இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுகள் துடைத்தெறியப்பட்டு, தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டன.  

இதற்கிடையே, சற்றுச் சரிந்த உறவுகள், சரிப்பட்டு வரவோ, மீண்டும் தமிழ், முஸ்லிம் உறவுகள் வலுப்படவோ, பலப்படவோ பேரினவாதம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்பதை, இங்கு அரசியல் செய்யும் எத்தனை பேர், தெரிந்து வைத்துள்ளனர் என்பதும் கேள்விக்குறியே.   

எப்போதும் தமிழ், முஸ்லிம் உறவைக் கடுமையான கொதி நிலையில் பேணவே பேரினவாதம் விரும்புகின்றது. அதன் மூலமே, அது அரசியலில் தனக்கான சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்; முடிகின்றது.  

இன்று இன ரீதியான பாடசாலைகள், இன நல்லிணக்கத்துக்கு வலுச் சேர்க்க மாட்டாது என்ற உரையாடல்கள், பரவலாக இடம்பெற்று வருகின்றன. உண்மையில் சிங்களம், தமிழ் மாணவர்கள், ஒன்றாகக் கல்வி கற்க, மொழி தடையாக இருக்கலாம். (சில வேளைகளில் விதிவிலக்காக, ஆங்கிலம் பொது மொழியாக அமையலாம்)  

ஆனால் இனம், மதம் வேறுபடுத்தினாலும் தமிழ், முஸ்லிம் மாணவர்கள், தாய் மொழியாம் தமிழ் மொழியில் ஒன்று சேர்ந்து, கல்வி கற்கலாம்; கற்றுத் தேறலாம்; உயர்வு காணலாம்.  ஆனாலும், கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் உறவுக்குத் தடைக் கற்களாக இனரீதியான கல்வி வலயம், இனரீதியான பிரதேச செயலகம், இனரீதியான வைத்தியசாலை என்பன காணப்படுகின்றன.  

மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகையில், 74 சதவீதம் தமிழ் மக்களாகவும் 23 சதவீதம் முஸ்லிம் மக்களாகவும் உள்ளனர். அதாவது, மாவட்டச் சனத்தொகையில் சராசரியாக 97 சதவீதம் தமிழ் பேசும் மக்கள் ஆவர். இந்நிலையில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு எனத் தனியான கல்வி வலயம் உருவாக்கப்பட்டு உள்ளது.  காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய பிரதேசப் பாடசாலைகளை இணைத்து, தரைத் தொடர்பற்ற முறையில், இக்கல்வி வலயம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது, ‘மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம்’ என அழைக்கப்படுகின்றது. இதன் மூலம், குறித்த கல்வி வலயத்தை நோக்கிய மனிதவளம், பௌதீகவள ஒதுக்கீடுகளைத் தமது அரசியல் செல்வாக்கால் அதிகரித்த அளவில் மேற்கொள்ள வாய்ப்புகள் நிறையவே உள்ளன.   

அம்பாறை மாவட்டத்தில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை தமிழ் மக்களுக்கானதாகவும் கல்முனை தெற்கு ஆதார வைத்தியசாலை முஸ்லிம் மக்களுக்கானதாகவும் உள்ளது. அத்துடன் இது, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை என்றே அழைக்கப்படுகின்றது.  

அடுத்து, கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகம், கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகம் என இரண்டு இனங்களுக்கும் இரு பிரதேச செயலகங்கள் கல்முனையில் உள்ளன. மேலும், தமிழ்ப் பிரதேச செயலகத்தைத் தனியான பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த, சகோதர இன அரசியல்வாதிகள் சிலர், கடும் எதிர்ப்புகளைக் காட்டி வருவதையும் காணலாம்.   

எந்தவொரு செயற்பாட்டுக்கும் நன்மைகள், தீமைகள் என இரண்டும் கட்டாயம் இருந்தே தீரும். அவ்வகையில், இவை உருவாக்கப்பட்டமையால் ஏற்பட்ட நன்மைகளைக் காட்டிலும், அவை தமிழ், முஸ்லிம் உறவுகளை எப்போதும் விலக்கி விலத்தி வைத்திருக்கவே பயன்படுகின்றன.  

ஏனெனில், ஓர் அரச அலுவலகத்துக்கு, ‘கொழும்பு’ சிறப்புக் கரிசனை காட்டினால், இரு இனங்களும் தங்களுக்குள் முரண்படும். அதாவது, ஆறாத புண்ணாக எப்போதும் இருக்கும். இது இரண்டு இனங்களினது உறவுகளுக்குத் தீராத வியாதியாக இருக்கும்.  

அடுத்து, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவர்களாக மூன்று முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் 23சதவீதம் அளவில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு, மூன்று இணைத் தலைவர்கள் இருக்க, மாவட்டத்தில் 74சதவீதம் அளவில் வாழும் தமிழர்கள் சார்பில், ஒருவர் கூட இல்லை.  

நல்லிணக்க ஆட்சியில், அரசாங்கத்தின் தலைவருக்கும் பிரதமருக்கும் சுமூகமான உறவு இல்லை என்பது, ஊர் அறிந்த விடயம். இருவரும் இரு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். இருவருக்கும் தங்கள் கட்சிகளை மாவட்டத்தில் வளர்க்க ஆள்கள் தேவை. இந்நிலையில், உள்ளூர் அரசியல் பிரமுகர்களுக்கு, தங்களை நிலைப்படுத்த, இணைத் தலைமை போன்ற முக்கிய பதவிகள் வேண்டும்.  

இவ்வாறான சூழ்நிலையில், மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களது உணர்வுகள், தேவைகள், விருப்பங்கள் முற்றிலும் ஒதுக்கப்படுகின்றன. இதனை, இவ்வாறாக இணைத் தலைமை நியமனங்களை வழங்கியவர்களும் உணரவில்லை; இணைத் தலைமைப் பதவிகளை அலங்கரிப்பவர்களும் உணரவில்லை. இவ்வாறாகத் தமிழ், முஸ்லிம் உறவுகள் வலுவடையப் பல தடைக்கற்கள் திட்டமிட்டு இடப்படுகின்றன.  

“வடக்கு, கிழக்கை இணைத்தால் இரத்த ஆறு ஓடும்” எனக் கூறியவர்களை, அரச இயந்திரம் கண்டிக்கவில்லை; ஏன், கண்டு கொள்ளவே இல்லை; கண்டுகொள்ளவும் மாட்டாது. ஏனெனில், வடக்கு, கிழக்கு இணைந்த தாயகம் என்பது, தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகளில் பிரதானமானது. ஆகவே, யாரெல்லாம் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கின்றார்களோ, அவர்கள் எல்லாம், கொழும்பு அரசியல் மய்யத்தால் அரவணைக்கப்படுவார்கள். அரசியலில் இதுவெல்லாம் சகஐம்.  

இந்நிலையில், சிறுபான்மை இனங்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே தினமும் நாங்கள் சித்திரவதைப்படுகின்றோம்; அச்சத்துடன் வாழ்கின்றோம்; எம் நிலங்களை இழக்கின்றோம்; எம் மொழியை மறக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்; மத உரிமைகளை இழக்கின்றோம். மொத்தத்தில் கூனிக்குறுகி நடைப்பிணங்களாக வாழ்கின்றோம்.  

ஆகவே, இணைந்த வடக்கு, கிழக்கு மண்ணில், முஸ்லிம் மக்களது அபிலாஷைகளையும் நிறைவு செய்யக் கூடிய வகையில், தீர்வு காணத் தமிழ் மக்கள் தயாராக உள்ளனர். ஆகவே, மொழியால் இணைவோம்; தமிழ் மொழியைப் பேசி, மகிழ்வுடன் வாழ்வோம்; வாழலாம்; வாழ வேண்டும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .