2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஓமானின் கணிக்கப்பட்ட வெளியுறவு நகர்வுகள்

Editorial   / 2019 ஜூலை 22 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனகன் முத்துக்குமார்

வரலாற்று சான்றுகளின் அடிப்படையில், ஐக்கிய அமெரிக்கா எப்போதுமே ஒவ்வொரு பிராந்தியங்களிலும் ஒரு மூலோபாய நட்பு நாட்டை கொண்டுள்ளது என்பதைக் அவதானிக்க முடியும். ஓமான் சந்தேகத்துக்கு இடமின்றி பாரசீக வளைகுடாவில் ஈரானுக்கு மிக நெருக்கமான தெற்கு அண்டை நாடு என்பதுடன், ஈரானுடன் பொதுவான கலாசார மற்றும் மத வேர்களைக் கொண்டுள்ளது. ஆனால் ஐ. அமெரிக்காவுக்கும் ஓமானுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பின் விளைவுகள் ஈரானின் தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஐ. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைப் பொம்பியோ ஓமானுக்கும், சுல்தான் கபூஸ் அமெரிக்காவுக்கும் அண்மையில் விஜயம் மேற்கொண்டதன் பின்னர் உருவாகியுள்ள கேள்வி: ஓமான் அமெரிக்காவுடன் இவ்வாறாக நெருக்கமான ஒரு அரசியல் தொடர்பை ஒரு குறுகிய காலத்தில் நிலைநிறுத்த என்ன காரணம் என்பதேயாகும்.

அரேபிய தீபகற்பத்தில் ஓமான் புவியியல் ரீதியான தனிமைப்பட்டே உள்ளது. ஓமானுக்கு அதன் மேற்கு பிராந்தியத்தில் ஒரு எல்லை மட்டுமே உள்ளது என்பதுடன், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் யேமன் ஆகிய மூன்று நாடுகளும் அண்டை நாடுகளாகும். மறுபுறம், இந்த நாட்டின் அப்பாஸிட் மத பெரும்பான்மை இஸ்லாமிய உலகில் அதன் மத தனிமைக்கு வழிவகுத்துள்ளதுடன், வஹாபிசம் இந்த மதத்தை பின்பற்றுபவர்களுடன் ஆரம்பத்தில் இருந்தே பல தடவைகள் மோதலில் ஈடுபட்டு இருந்தமை, மற்றும் இரு மதத்தை சேர்ந்த தலைவர்களும் மற்றைய மதத்துக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கின்றமை இஸ்லாமிய உலகில் ஓமானை தனிக்கச் செய்துவிட்டது.

பொருளாதாரத் துறையில் ஓமான் ஒப்பீட்டளவில் பலவீனமாக உள்ளது. அது எண்ணெய் மற்றும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்ய வெளி உலகத்தை சார்ந்துள்ளது. இருப்பினும், ஐ. அமெரிக்காவுடனான ஓமானிய நடவடிக்கைகள் அதிகம் இல்லை என்பதுடன் அதில் பெரும்பாலானவை இராணுவ ஆயுதத் துறையில் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டின் மக்கள்தொகை அமைப்பு, குறிப்பாக சுமார் ஐந்து சதவீதம் ஷியா முஸ்லிம்கள், அதிக செல்வாக்கும் செல்வமும் கொண்டவர்கள். மற்றைய குழு, ஈரானில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு ஓமானுக்கு பயணம் செய்த பலூசிஸ் இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதுடன், அவர்கள், ஓமனி அரசாங்கம் ஈரானுடன் நெருக்கமான தொடர்புகளை மேற்கொள்ளாது இருக்க காரணமானவர்கள்.

ஓமானில் உள்ள சுன்னி இனத்தவர்கள் தாங்கள் இந்த நாட்டின் குடிமக்களில் பெரும்பான்மையானவர்கள் என்று கூறுவதை கவனத்தில் எடுத்தல் அவசியமானது. இந்நிலையை அடிப்படையாக கொண்டே, ஓமான் ஒரு பிராந்திய ஒத்துழைப்பு கட்டமைப்பில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் முக்கியமானது என்று ஓமான் கருதுகிறது, வெளி பிரச்சினைகளுக்கு மேலதிகமாக, அரபு ஆக்கிரமிப்பைத் தடுக்க, சவுதி அரேபியா தனது அண்டை நாடுகளுக்கு இராணுவம் அனுப்பப்பட்ட வரலாற்றை ஓமனி நன்கு அறிவர், எனவே பிராந்தியத்தில் சமநிலை சக்தி சவுதி அரேபியாவுக்கு மகிழ்ச்சியாக இருக்காது என்பதை அறிந்துள்ள ஓமான், அதன் 2020 மற்றும் 2040 வாய்ப்புகளில் எண்ணெய் மற்றும் பொருளாதார பல்வகைப்படுத்தலைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முயற்சிப்பதுடன், பிராந்தியத்தில் எந்தவிதமான மோதல்களையும் அம்மோதல்களில் தமது பாங்கையும் தவிர்க்கிறது. இதன் மூலம், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகள் மற்றும் மனிதவளத்தின் வருகைக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இருக்கின்றது என்பதை ஓமான் வெளிநாடுகளுக்கு காட்ட முற்படுகின்றது. வெளிவிவகார ரீதியில் சவுதியுடன் பகைக்காத ஓமான், சவுதி மற்றும் கட்டார் விரோதங்களை நீக்குவதில் நடுநிலை வகிப்பதும், கட்டாருடன் இணைந்து செயல்படுவதும், இராணுவ ரீதியாக சவுதியிடமிருந்து தன்னை நீண்டகாலத்துக்கு பாதுகாப்பதை மனதில் நிலைநிறுத்தியே ஆகும்.

இந்நிலை ஒருபக்கம் இருக்க, மறுபுறம் ஈரான் – ஓமான்- ஐ.அமெரிக்க உறவுகள் அண்மைக்கால அரசியல் அடிப்படையில் வேறுபட்ட தாக்கங்களை கொண்டுள்ளமை கவனிக்கவேண்டிய ஒன்றாகும். 2010 இல் ஓமான் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கையை ஈரானுடன் கையெழுத்திட்டமை ஓமானின் முதலாவது பாதுகாப்புக்கான வெளிவிவகார கொள்கை நகர்வாகும். எது எவ்வாறாயினும், மறுபுறம், ஓமான் ஐ. அமெரிக்காவின் இராணுவ பங்குதாரருக்கு அதன் துறைமுகங்கள் மற்றும் தளங்களை வழங்கியுள்ளது. மேலும், ஓமான் பிராந்திய நாடுகளுக்கு ஈரானின் அச்சுறுத்தலுக்கு எதிராக பாதுகாப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஐ. அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளது. இவ்விரண்டு நிகழ்வுகளும், மிகவும் மாறுபட்ட, ஆனால் ஓமானுக்கு மிகவும் வேண்டிய அரசியல் நகர்வுகளாகும். மறுபுறம், ஓமானின் பார்வையில், ஐ. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இராணுவ மோதல் உருவாதல் ஓமானுக்கு மிகப்பெரிய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார ஆபத்தை உண்டுபண்ணும். அந்நிலை, ஓமானை நடுநிலையாளராக செயல்பட அனுமதிக்காது. இந்த ஆபத்தை குறைக்க, ஓமான் அரசாங்கம், ஈரானுக்கும் = மேற்கு நாடுகளுக்கும் இடையிலான பாலமாக செயல்படுகின்றது. அதனால்தான் ஓமான் இராச்சியம், சவுதி அரேபியா மற்றும் ஒத்துழைப்பு கவுன்சிலின் சில நாடுகளைப் போலல்லாமல், பிராந்தியத்தில் ஈரான் தனது நிலையை விரிவாக வேண்டும் என ஆதரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலை, எதிர்காலத்தில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் தோல்வியுறும் போதிலும், கட்டார் உட்பட லெபனான், ஈராக் மற்றும் சிரியாவுடன் கூட்டணியை உருவாக்கும் ஓமானிய நோக்கம் சாத்தியமடையும் என்பதுடன், இக்கூட்டணிக்கு மாறாக, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் , எகிப்து, சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகியவை மறுபுறம் நிற்கும் நிலையில், அம்மாறுதலான நிலைப்பாட்டில் தன்னை தக்கவைக்க ஐ. அமெரிக்கா என்ற ஒரு பாரிய வல்லரசுடன் நேரடியாக தொடர்புகளை பேணுதல் அவசியம் என்பதை ஓமான் உணர்ந்ததன் நிகழ்ச்சிநிரலே அண்மைய ஓமானிய - அமெரிக்காவின், மேற்கூறிய நட்பு நகர்வுகளாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X