2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கஜேந்திரகுமாரா? சுமந்திரனா?: தமிழ்த் தேசியமும் குழாயடிச் சண்டைகளும்

Editorial   / 2020 மே 25 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2001இல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட போது அதற்கு முன்னர் ஒன்றோடொன்று முரண்பட்டுக்கொண்டிருந்த தமிழ்க் கட்சிகள் சில, ஒரு பொதுத்தளத்தின் கீழ், தமிழ்த் தேசிய இலக்கைக் குறித்து ஒன்றுபட்டன

2010இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் வேட்பாளராக ம.ஆ.சுமந்திரனின் அரசியல் பிரவேசத்தோடு இந்த குழுநிலை முரண்பாடு தமிழ்த் தேசிய அரசியற்பரப்பில் பெருவிருட்சமாக வளர்ச்சியடையத் தொடங்கியிருந்தது

ஆயுதப் போராட்டம் கூட tribalism என்பதற்கு விதிவிலக்கல்ல. ஒரே நோக்கத்துக்காக ஆயுதம் ஏந்தியவர்கள் கூட, இந்தக் குழுநிலை மனப்பான்மையினால் ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டதற்கு வரலாறு சாட்சி சொல்லும்

இன்றைய பரந்துபட்ட சமூக வாழ்க்கை முறையை அடைந்து கொள்வதற்கு முன்னதாக, சிறு குழுக்களாக மனிதன் வாழ்ந்துவந்தான். இந்தக் குழுக்களிடையே மிக நெருக்கமான ஒற்றுமையிருந்தது. தம் குழு ஒற்றுமையையும் விசுவாசத்தையும் ஏனைய அனைத்தையும் விட உயர்வானதாகவும், மதிப்பானதாகவும் அந்தக் குழு உறுப்பினர்கள் கருதினார்கள். இதன் மறுபக்கம், தமது குழு அங்கத்தவர்கள் அல்லாதவர்களுடன் அத்தகைய ஒற்றுமையும் மதிப்பும் இருக்கவில்லை. மேலும், தம் குழு அங்கத்தவர்கள் அல்லாத சிலருடன், எதிர்ப்பும் வைரியமும், போட்டியும் வெறுப்பும், துவேசமும் கூட ஏற்பட்டது. இத்தகைய 'குழுக்களாக' இயங்கும் மனப்பான்மையைச் சிலர் tribalism என்று விளிக்கிறார்கள். தாம் சார்ந்தோர் மீது அதீத விசுவாசமும், கண்மூடித்தனமான பற்றும், தாம் வைரிகளாகப் போட்டியாளர்களாக, எதிரிகளாகக் கருதுபவர்கள் மீது அதீத வெறுப்பும், கண்மூடித்தனமான துவேசமும் உண்டாவதற்கு இந்த tribalism வழிவகுத்துவிடுகிறது. தம்முடைய இருப்புக்கும் நலனுக்கும் நிலைப்புக்கும் மற்றைய தரப்பை முரணானவர்களாகவும் போட்டியாளராகவும் கருதுவதனால் இந்த எதிர்ப்பு மனப்பான்மை உருவாகிறது எனலாம்.

இலங்கையின் தமிழ் அரசியல் வரலாற்றில் tribalism ஒன்றும் புதுமையானதொன்றல்ல. சுதந்திர இலங்கையின் தமிழ் அரசியலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸிலிருந்து சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் தலைமையில் ஒரு குழு பிரிந்து, இலங்கை தமிழரசுக் கட்சி என்று தமிழிலும், “ஃபெடரல் பார்ட்டி” (சமஷ்டிக் கட்சி) என்று ஆங்கிலத்திலும் அறியப்பட்ட கட்சியை ஸ்தாபித்தது. தமிழர்களிடையே இது கட்சி அரசியலுக்கு மட்டுமல்லாத, கட்சி சார்ந்த குழுநிலை மனப்பான்மைக்கும் வித்திட்டது. ஆயுதப் போராட்டம் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஒரே நோக்கத்துக்காக ஆயுதம் ஏந்தியவர்கள் கூட, இந்தக் குழுநிலை மனப்பான்மையினால் ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டதற்கு வரலாறு சாட்சி சொல்லும். சிந்தித்துப் பார்த்தால், தமிழ்த் தேசியத்தின் மிகப் பெரும் பலவீனங்களுள் ஒன்றாக இந்தக் குழுநிலை மனப்பான்மையை அடையாளப்படுத்தலாம். ஏன் இது பலவீனமாகிறது என்று பார்க்கும் போது, தமிழ்த் தேசியம் எனும் தாம் முன்வைக்கும் இலட்சியைத்தைத் தாண்டி, குழுநிலை மனப்பான்மை என்பது, குழு சார்ந்த நலன்களை முக்கியத்துவப்படுத்திவிடுகிறது. ஆகவே சிந்தனையும் உழைப்பும், போராட்டமும் எல்லாம் தமது இலட்சியத்துக்காக அல்லாது குழு சார்ந்த நலன்களுக்காகவே அதிகமாகச் செலவுசெய்யப்படும் நிலையை ஏற்படுத்திவிடுகிறது. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களிடையேயான பகையும் போட்டியும் கொண்ட வரலாற்றை நாம் ஆராய்ந்து பார்க்கும் போது இந்த நிலை எமக்கு மேலும் தௌிவாகப் புலப்படும். குழுநிலை மனப்பான்மை தமது நடவடிக்கைகளுக்கு ஆயிரம் நியாய தர்மங்களை உரைக்கும். இது யதார்த்தம். அந்தந்தக் குழு சார்ந்தவர்களுக்கும் வேறு சிலருக்கும் அந்தக் காரண காரியங்கள் நியாயமாகவும், மற்றைய சிலருக்கு அந்தக் காரண காரியங்கள் அபத்தமானதாகவும் தோன்றும். ஆனால் இந்தக் குழுச்சண்டைகளால் சர்வ நிச்சயமாகப் பாதிக்கப்பட்டதும், பின்னடைவு கண்டதும் அனைவரதும் பொது இலட்சியம்தான்.

2009-துடன் ஆயுதப் போராட்டம் என்பது முடிவுக்குக் கொண்டவரப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களின் பின்னர், தமிழ்த் தேசிய அரசியல் தமக்கான மாற்றுப் பாதையைத் தீர்மானிக்க வேண்டிய சந்தியில் நின்றிருந்தகாலம். 2001இல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட போது அதற்கு முன்னர் ஒன்றோடொன்று முரண்பட்டுக்கொண்டிருந்த தமிழ்க் கட்சிகள் சில, ஒரு பொதுத்தளத்தின் கீழ், தமிழ்த் தேசிய இலக்கைக் குறித்து ஒன்றுபட்டன. இது மிகச்சிரமமான ஒற்றுமையாகவே இருந்தது. ஏனென்றால் தொழில்நுட்ப ரீதியில் இன்னமும் அவை தனித்த கட்சிகளாகவே கட்டமைந்திருந்தன. அவற்றுக்கிடையேயான போட்டியும், வைரியமும் ஒரு பனிப்போராகத் தொடரவே செய்தன. ஆனால், எளிதில் முறியக்கூடிய ஒற்றுமையாக அது இருந்தாலும் கூட, அது தமிழ்த் தேசிய அரசியலுக்கு வலுச்சேர்ப்பதாகவே இருந்தது. 2009இன் பின்னர், 2010 பொதுத் தேர்தலின் போது இந்த ஒற்றுமையும் சிதைந்தது. அந்தப் பிரிவுக்கான காரண காரியங்கள் ஒருபுறம் இருக்க, அந்தப் பிரிவின் விளைவை நாம் பார்த்தால், அது தமிழ்த் தேசிய அரசியற்பரப்பில் மிகச்சொற்ப காலமாக அடங்கிப்போயிருந்த குழுநிலைப் பிரிவை, மீண்டும் தோற்றுவித்திருந்தது. குறிப்பாக 2010இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் வேட்பாளராக ம.ஆ.சுமந்திரனின் அரசியல் பிரவேசத்தோடு இந்த குழுநிலை முரண்பாடு தமிழ்த் தேசிய அரசியற்பரப்பில் பெருவிருட்சமாக வளர்ச்சியடையத் தொடங்கியிருந்தது. இன்று தமிழ்த் தேசிய அரசியலின் பொதுவௌி வாதப்பிரதிவாதங்களின் தலைப்பாக கஜேந்திரகுமாரும் சுமந்திரனும் மாறியிருக்கிறார்கள்.

கஜேந்திரகுமாரும் சுமந்திரனும் கொழும்பில் வாழ்ந்தவர்கள், வளர்ந்தவர்கள். இருவரும் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றவர்கள். இருவரும் சட்டம் பயின்றவர்கள், சட்டத்தரணிகள். கஜேந்திரகுமாரின் தந்தையாரான குமார் பொன்னம்பலத்தின் படுகொலையானது, இருபதுகளின் இறுதியில் இளைஞனாக இருந்த கஜேந்திரகுமாரைத் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் கொண்டு வந்தது. ஒரு 'மாமனிதரின்' வாரிசாக அவர் அரசியலுக்குள் நுழைகிறார். அதுவரைகாலமும் தமிழ்த் தேசிய பரப்பிலோ, அரசியலிலோ கஜேந்திரகுமார் இயங்கியதற்கான சான்றுகள் இல்லை. ஓர் இளைஞனாக தமிழ்த் தேசிய அரசியலில் அவருடைய பயணம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவே தொடங்கியது. சுமந்திரனைப் பொறுத்தவரையில், அவர் முழுநேரச் சிவில் சட்டத்தரணியாகவே இயங்கியவர். பல்வேறுபட்ட வணிக வழக்குகளிலும், பொதுநலன் வழக்குகளிலும், மனித உரிமை மீறல் வழக்குகளிலும் ஆஜராகிய பெருமையைக் கொண்டிருந்தவர். அவரது அரசியல் பிரவேசத்துக்கு முன்னதாக தமிழரசுக்கட்சி சார்ந்ததுமான வழக்குகளிலும், தமிழர் சார்ந்த சில மனித உரிமை மீறல் வழக்குகளிலும் அவர் ஆஜராகியிருந்தார். தனது நாற்பதுகளின் இறுதியில், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் இவர் நுழைகிறார். இவரும் நாடாளுமன்ற உறுப்பினராகவே தனது அரசியல் வாழ்வைத் தொடங்கியவர். 2010இல் தேசியப் பட்டியல் ஊடாக அவர் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு முன்னர் தமிழ்த் தேசிய பரப்பில் நேரடியாக அவர் இயங்கியதற்கான எந்தப் பதிவுகளுமில்லை. இருவரிடையே குறிப்பிடத்தக்க பல ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் இருந்தாலும், இருவரும் தாம் கொண்ட நம்பிக்கையில் உறுதியாகவே இருக்கிறார்கள். இன்று இந்த இருவரும் தமிழ்த் தேசிய அரசியலின் குழாயடிச் சண்டையின் பெயர்க்காரணங்களாகி இருக்கிறார்கள்.

தம்மைத் தீவிர தமிழ்த் தேசியவாதிகளாகக் கருதிக் கொள்வோர் கஜேந்திரகுமார் தரப்பாகவும், தம்மை மிதவாதிகளாகக் கருதிக் கொள்வோர் சுமந்திரன் தரப்பாகவும் வடித்துக்கொண்டு தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் குழாயடிச் சண்டை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இன்று தமிழ்த் தேசிய அரசியலின் மிகப்பெரிய வாதப்பிரதிவாதமாக சுமந்திரன் 'துரோகியா?' கஜேந்திரகுமார் 'சந்தர்ப்பவாதியா?' என்ற வகையிலான தமிழ்த் தேசியத்துக்கு எந்த வகையிலும் நன்மை பயக்காத வாதப்-பிரதிவாதங்கள் உருவாகியிருப்பது தமிழ்த் தேசியத்தின் துயரம் என்றுதான் சொல்லப்பட வேண்டும்.

தனிப்பட்ட ரீதியில் இருவரும் தாம் கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருப்பவர்கள். தான் 'ஆயுதப் போராட்டத்தை' ஒரு போதும் ஆதரித்ததில்லை, ஆதரிக்கப்போவதுமில்லை என்பதை சுமந்திரன் பலமுறை மீள மீள உரைத்திருக்கிறார். அந்தத் திடம் தமிழ்த் தேசிய அரசியலில் பலரிடம் கிடையாது. விடுதலைப் புலிகளை அடியோடு வெறுத்த, கொன்று குவித்த, விடுதலைப் புலிகளால் கொன்று குவிக்கப்பட்ட மாற்று இயக்கங்களைச் சார்ந்தோர் “ஜனநாயக நீரோட்டத்தில்” கலந்து தேர்தல் வெற்றிக்காக விடுதலைப் புலிகளின் பெயர்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் காலகட்டத்தில், வாக்குக்காகக் கூட தனது நம்பிக்கையை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று நிற்பது சமகால மய்யவோட்ட அரசியலில் காண்பதற்கரியதொன்று, பாராட்டுக்குரியது. மறுபுறத்தில் தனது தந்தை உறுதியாக நம்பிய, அதற்காக தனது உயிரையும் தியாகம் செய்த தமிழ்த் தேசிய கொள்கையை தான் ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்று விடாப்பிடியாக நிற்கும் கஜேந்திரகுமாரின் அரசியலும் மெச்சத்தக்கதே. ஒரு தரமேனும் கூட தேர்தலில் தமிழ் மக்கள் தனக்கு வெற்றியைப் பரிசளிக்காவிட்டாலும், தமிழ்த் தேசியத்தின் சிம்மக் குரலாக ஒலித்தவர் குமார் பொன்னம்பலம். அதற்காக அவர் தனது தொழில், நண்பர்கள், செல்வாக்கு, உயிர் என்று இழந்தவைதான் அதிகம். ஒரு கணமேனும் குமார் பொன்னம்பலம் தான் விரும்பியிருந்தால் இலங்கையின் எந்தவோர் உயர்பதவியையும் பெற்றுக்கொண்டிருக்க முடியும். அவர் பதவிக்காக அரசியல் செய்தவர் அல்ல. கஜேந்திரகுமார் மானசீகமாக தனது தந்தையின் வெற்றிடத்தை நிரப்ப விளைகிறார். 10 வருடங்களாக எந்தப் பதவியுமில்லாமல், பதவியை உடனே அடைந்துகொள்வதற்கான குறுக்குவழிகளைக் கையாளாமல், தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி புதிய கட்சியொன்றை ஸ்தாபித்து வளர்த்து வருவதென்பது பாராட்டுக்குரியது. அந்த அர்ப்பணிப்பு மெச்சப்பட வேண்டியது.

தமிழ்த் தேசியம் தொடர்பாக இந்த இருவரிடையேயும் தத்துவார்த்த வேறுபாடுகள் இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. சுமந்திரன் மென்வலு அரசியலை முன் நிறுத்துகிறார். இணக்கப்பாட்டு வழிமுறைகள் மூலம், விட்டுக்கொடுப்புகள் மூலம், கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மக்களின் அபிலாசைகள் அடையப்பட முடியும் என்று நம்புவதாகவே அவருடைய கருத்துகள் சுட்டி நிற்கின்றன. கஜேந்திரகுமாரைப் பொறுத்தவரையில் அவர் விட்டுக்கொடுப்புகள் என்பது தமிழ்த் தேசியத்தின் அடிப்படைகளைச் சிதைக்காததாக இருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். தமிழ் தேசியத்தின் அடிப்படைகள் தொடர்பில் எந்த விட்டுக்கொடுப்புகளுக்கும் அவர் தயாரில்லை. மாறாக தமிழ்த் தேசியம் மேலும், மேலும் உறுதியடையும் போது, அதனால் அதன் இலட்சியங்களை அடைந்துகொள்ள முடியும் என்று நம்புகிறார். தமிழ்த் தேசியத்தை நீர்த்துப் போகச் செய்தல், காலவோட்டத்தில் அதனை இல்லாது செய்துவிடும் என்பது அவரது அச்சமாக இருக்கிறது. இந்தத் தத்துவார்த்த வாதப்-பிரதிவாதம் தமிழ்த் தேசியத்துக்கு அவசிமானது. 2009இற்குப் பின்னரான தமிழ்த் தேசியத்தின் பரிணாம வளர்ச்சியில் இந்த வாதப்-பிரதிவாதங்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் இன்றியமையாததுமாகும். தமிழ் அரசியல் பரப்பில் இத்தகைய வாதப்-பிரதிவாதங்கள் நடைபெறுவது ஆரோக்கியமானது என்பதோடு அது ஊக்குவிக்கப்படவும் வேண்டும். ஆனால், இங்கு தத்துவார்த்தமான, கொள்கை சார்ந்த வாதப்பிரதிவாதங்களுக்குப் பதிலாகத் தனிநபர் தாக்குதல்களே குழாயடிச்சண்டைகளாக நடந்து வருகின்றன. இது ஒரு பீடையாக தமிழ் மக்களைப் பீடித்துள்ளது.

தமிழ்த் தேசியத்தைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, கஜேந்திரகுமார், சுமந்திரன் என்று இரு தனிநபர்களைப் பற்றியதாக வாதம் அமைகிறது. இந்த அசிங்கமான தனிநபர் தாக்குதலுக்குள் தமிழ்த் தேசியம் தொலைந்துவிடுகிறது. அரசியல் எந்தவொரு காலத்திலும் எல்லோரும் ஒரே சித்தாந்தத்துடனோ, கருத்துடனோ, உடன்படப்போவதில்லை. அது யதார்த்தம். மாற்றுக்கருத்துத்தான் ஜனநாயகத்தின் அடிப்படை என்பார்கள் சிலர். மாற்றுக்கருத்துத்தான் அறிவின் அடிப்படை என்பார்கள் சிலர். இரண்டுமே உண்மை. மாற்றுக்கருத்து உள்ளவரைதான் வளர்ச்சிக்கான, மேம்பாட்டுக்கான, முன்னேற்றத்துக்கான, பரிணாமத்துக்கான கதவுகள் திறந்திருக்கும். அது இல்லாவிட்டால், நாம் ஓரிடத்தில் தேங்கிவிடுவோம். மாற்றுக்கருத்து பெறுமதி வாய்ந்தது. ஆனால், தனிநபர் தாக்குதல்கள் என்பது அர்த்தமற்றது. அதனால் எந்த நற்பயனும் இல்லை. கஜேந்திரகுமாரை இகழ்வதாலோ, சுமந்திரனைக் கேவலப்படுத்துவதாலோ, தமிழினத்துக்கும், தமிழ்த் தேசிய அரசியலுக்கும் எந்த நன்மையும் விளையப்போவதில்லை. ஆகவே, இந்த தனிநபர் வாதப்-பிரதிவாதங்களைக் கடந்து, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் காத்திரமான விவாதங்கள் இடம்பெறவேண்டியதற்கான வெற்றிடம் இருக்கிறது. அதை ஆக்கபூர்வமான வகையில் நிரப்புவது என்பது தமிழ்த் தேசியத்தின் இருப்புக்கும், மேம்பாட்டுக்கும், நிலைப்புக்கும் அவசியமானது. மாறாக, இந்தக் குழாயடிச் சண்டைகளால் தமிழ்த் தேசம் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .