2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கடந்த காலத்துக்குச் செல்வதா? கற்களைக் கடந்து பயணிப்பதா?

Johnsan Bastiampillai   / 2021 ஜனவரி 17 , பி.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

தை பிறந்துவிட்டது; வழி பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் எதையும் காணவில்லை. அண்மைய நிகழ்வுகளும் அதற்கான எதிர்வினைகளும் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் அசைவியக்கம் குறித்த பல வினாக்களை எழுப்புகிறது. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் அரங்கேறிய காட்சிகள், உணர்ச்சிப் பிரவாகத்துக்கு அப்பாற்பட்டு, நீண்டகால நோக்கில், பொதுத்தளத்தில் ஒருங்கிணைந்து உரிமைகளுக்குப் போராட, நாம் திராணியற்றவர்கள் என்பதை, இன்னொருமுறை காட்டி நின்றது. 

நினைவுகள் கற்களில் அல்ல; அவை மனங்களில் ஆழப் பதிந்துள்ளன. அகற்றப்பட்ட ஒரு கல்லோ, கட்டடமோ மனங்களில் ஆழப்பதிந்துள்ள நினைவுகளை அகற்றிவிடாது. உணர்ச்சிகர தமிழ்த் தேசிய அரசியல், எமக்கு எதைப் பரிசளித்துள்ளது என்பதை, ஈழத் தமிழரது கடந்த அரைநூற்றாண்டுகால அரசியல், எமக்குக் காட்டி நிற்கிறது.

யாழ். பல்கலைக்கழக இடிப்பானது, தமிழ் மக்களின் நேசசக்திகள் யார் என்பதை, இன்னொரு முறை சுட்டிக்காட்டி நின்றது. நிகழ்த்தப்பட்ட வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்து, வெளியான அறிக்கைகளில் இரண்டு அறிக்கைகள் முக்கியமானவை. 

முதலாவது, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை; அது மிகுந்த கவனத்துடனும் கரிசனையுடனும் தோழமை நோக்கத்துடனும் எழுதப்பட்ட அறிக்கையாகும். இந்த அறிக்கை, இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை, யாரும் பறிக்க முடியாது என்ற வலுவான செய்தியைத் தாங்கி நிற்கின்றது. சிங்களத்திலும் தமிழிலும் வெளியான இவ்வறிக்கை, இனத்துவ அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, நியாயத்தைத் துணிந்து பேசியுள்ளது. 

இரண்டாவது அறிக்கை, யாழ். முஸ்லிம் இளைஞர் கழகத்தினுடையது. அது, இடித்தழிப்பை வன்மையாகக் கண்டிப்பதோடு, ஹர்த்தாலுக்குப் பூரண ஆதரவு என்றும் தெரிவித்தது. இந்த அறிக்கை, முக்கியமான ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டுகிறது. ‘இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்கள் என்ற வகையில், தமிழ், முஸ்லிம் மக்கள், குறிப்பாக வடக்கு, கிழக்கில் இணைந்து வாழ வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள், ‘தமிழ் பேசும் மக்களாக’ ஒன்றித்து வாழ்வதே, இரு சமூகங்களுக்கும் பாதுகாப்பாக அமையும். அந்தவகையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களாக, அனைத்து வழிகளிலும் ஒன்றிணைய முயற்சிப்போம். இப்போதைய தருணத்தில், சிறுபான்மையினர் தொடர்ச்சியான நெருக்கடிக்கு உள்ளாகும் நிலையில், இந்த அழைப்பு முக்கியமானது. 

சிங்கள சமூகத்தில் இருந்தும், முஸ்லிம் சமூகத்தில் இருந்தும், தூபி இடிப்புச் செயலுக்கு எதிரானதும் வலுவானதுமான குரல்கள் பதிவாகியுள்ளன. அவை, திறந்த மனதுடன் இவ்விடயத்தை அணுகுகின்றன. அவை, இனத்துவ அடையாளங்களைக் கடந்து, நியாயம், அநியாயம் குறித்துப் பேசுகின்றன. இந்த நட்புச் சக்திகளை, நாம் அரவணைக்க வேண்டும். தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம், ஏனைய சமூகங்களைப் பகைப்பதால்  விளையக்கூடியதல்ல.

நாட்டின் அரசியலை ஜனநாயகப்படுத்தி, அதிகாரப் பரவலாக்கத்தை வலியுறுத்தும் ஒரு புதிய ஜனநாயக இயக்கத்துக்கான தேவை அதிகரித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகாலப் போரினின்றும் அதன் முடிவின் பின்னரான ஒரு தசாப்த காலத்திலிருந்தும், நாம் கற்க வேண்டிய பாடங்களில்  முக்கியமானது, ஜனநாயகம் தொடர்பானது ஆகும். அது இல்லாமல், எந்தத் தேசிய இனத்துக்கும் நன்மை இல்லை. அதைத்தக்க வைப்பதற்கான போராட்டம், பரந்த தளத்தில் திறந்த மனதுடன் நடந்தாக வேண்டும். 

இந்த இணைவும் ஒருங்கிணைந்த போராட்டமும் ஏன் சாத்தியமாகவில்லை என்பதை சுயவிமர்சன நோக்கில் தமிழர்கள் சிந்தித்தாக வேண்டும். தேசியவாதத்தின் குறுகலான பார்வைகள், இந்த இணைவுக்குத் தடையாக இருந்துள்ளன; இன்னமும் இருக்கின்றன.

 குறுகிய தமிழ்த் தேசியவாதம், தன்னை நிலைநிறுத்துவதற்காகப் பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி வந்துள்ளது. இன, மொழி உணர்வுகளை வெறித்தனமான உணர்ச்சிகளாக விருத்தி செய்வது, அவற்றுள் அடிப்படையான ஓர் உபாயமாக அமைந்தது எனலாம்.

இன்னொன்று தனக்கும், தன்னால் எதிரியாகக் கொள்ளப்படும் சமூகத்துக்கும் இடையிலான வேறுபாடுகளை மிகைப்படுத்துவதுடன், பொதுவான பண்புகளைக் குறைத்துக் கூறுவது அல்லது மறுப்பதாகும்.  

இது நமது தமிழ்த் தேசியவாதத்தின் நடத்தைக் கோளாறு மட்டுமல்ல, ஒவ்வொரு குறுகிய தேசியவாதத்தின் உள்ளும், இவ்வாறான போக்குகளைக் காணலாம். இப் போக்குக்கள் மக்களைத் தனித் தனிச் சமூகங்களாகப் பிரிப்பதுடன், பகைமையை மூட்டிவிடுகிற காரணிகளாகவும் விருத்தி பெறுகின்றன. 

சமூகங்களிடையே நட்புணர்வு போன்றதே, பகை யுணர்வும் ஆகும். ஒன்றின் நட்புணர்வு, மற்றையதன் நட்புணர்வால் ஊட்டம் பெறுவது போல, ஒன்றின் பகையுணர்வு, மற்றையதன் பகையுணர்வுக்கு ஊட்டமளிக்கிறது. அதன் விளைவாக, ஒன்றுபடக் கூடிய வாய்ப்பை, அதிகளவில் கொண்ட சமூகங்கள், பிரிந்தும் பிளவுபட்டும் நிற்கின்றன. ஈற்றில் நன்மை அடைவோர், எந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்களும் அல்லர். 

தமிழருடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, அவர்களுடைய ஒற்றுமையையும் சொந்த ஆற்றலையும் நம்பியிருக்குமாறு அவர்களுடைய தேசியவாதத் தலைமைகள், தமிழரை என்றுமே ஊக்குவிக்கவில்லை. இது, பொன்னம்பலம், இராமநாதன் காலம் தொட்டு, நாம் கண்ட உண்மை. 

அதற்குக் காரணங்கள் உள்ளன. ஏனெனில், மக்கள் தமக்காகப் பேசத் தொடங்கிவிட்டால், கேட்கக்கூடாத கேள்விகளைக் கேட்கத் தொடங்கிவிடுவார்கள். அதன் பிறகு, மக்களுடைய பிரச்சினைகள் எவை என வரையறுக்கும் அதிகாரம், அரசியல் தலைமைகளுக்கு இருக்காது. 

அதுவுமல்லாமல், அந்த மேலாதிக்கத்தின் ஒவ்வோர் அம்சமும் கேள்விக்கும் எதிர்ப்புக்கும் உட்படத் தொடங்கிவிடும். பிறகு யார், எங்கே இருப்பது என்பதற்குக் கட்டுப்பாடே இல்லாமல், அரசியலின் முகமே மாறிவிடலாம். எனவே, அந்த ஆபத்து நிகழாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. அதற்கு, உணர்ச்சிகர தமிழ்த் தேசிய முழக்கங்கள் பயனளிக்கின்றன. இந்தத் திசையிலேயே, நினைவிட இடிப்பைத் தொடர்ந்த அரசியல் அரங்கேறியது. 

இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையை சிங்களவர்-தமிழர் பிரச்சினையாகவே நோக்குகின்ற போக்கு இன்னமும் தொடர்கிறது. அமெரிக்காவையும் மேற்குலகையும் ராஜபக்‌ஷவுக்கு (அதாவது சிங்களவர்களுக்கு) எதிராகப் பயன்படுத்தலாம் என்ற கனவு ஒரு புறமும், இந்தியக் குறுக்கீட்டைப் பற்றிய மூட நம்பிக்கைகள் இன்னொரு புறமும்  அவர்களது இறுதிப் பற்றுக்கோடுகளாக உள்ளன. இந்தத் திசையிலிருந்து தமிழ்த் தேசியத்தை முற்போக்கான திசையை நோக்கி எவ்வாறு நகர்த்துவது என்பதே சவால். 

அதன் முதற்படியாக அமைவது, இலங்கை அரசு, சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு மட்டுமன்றி, இன வேறுபாடின்றி, அனைத்து உழைக்கும் மக்களுக்கும் பகையான ஒடுக்குமுறை அரசாங்கம் என்பதை உணர்ந்தால், நாட்டின் பிரதான பிரச்சினையான தேசிய இனப் பிரச்சினையின் தீர்வை, நாட்டின் ஜனநாயகம், மக்களின் சமூகப் பொருளாதார உரிமைகள், வர்க்க ஒடுக்கல் ஆகியவற்றின் தீர்வுகளுடன் இணைத்துக் கருதும் தேவை விளங்கும். 

 தமிழ் மக்கள், தமது தேசிய இன உரிமைகளை வென்றெடுக்கத் தனித்துப் போராடுவதை விட, இனஅடிப்படையில் ஒடுக்கப்படும் முஸ்லிம், மலையகத் தமிழ்த் தேசிய இனமக்களுடனும் ஒடுக்கலுக்கு உட்படும் பெரும்பான்மை இன உழைக்கும் மக்களுடனும் இணைந்து போராடும் தேவை விளங்கும். 

யா. பல்கலைக்கழகத்தில் நடந்தேறிய வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய நிகழ்வு, ஏனைய சமூகங்களின் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து, நாம் பணியாற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இதை இறுகப் பற்றி, முன்செல்லப் போகிறோமா, குறுந்தேசியச் சகதிக்குள் விழுந்துவிடப் போகிறோமா?

தமிழ் மக்களின் விடுதலை, தமிழரைப் பிற சமூகங்களில் இருந்தும் விலக்கி வைக்கும் போக்குகளில் இருந்தும் விடுபட வேண்டும். அற்பத்தனமான சிந்தனைகள், ஒரு திசைக்கு மட்டும் வரையறுக்கக் கூடியவையல்ல. அவை வேறு திசைகளிலும் இயங்கி, சமூகத்தின் உள் முரண்பாடுகளையும் கூர்மையடையச் செய்ய இயலும்; செய்தும் உள்ளன. 

தமிழ் மக்கள் எதிர்ப்பது, பேரினவாத ஆதிக்கச் சிந்தனையையும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் புறமொதுக்கலையுமே என்றால், அவர்களது செயற்பாடுகள் அந்த ஆதிக்கச் சிந்தனைகளையும் புறமொதுக்கல்களையும் மறுக்கும் நோக்கைக் கொண்டவையாகவும் இந்த நாட்டில் நமது உரிமைகளை வலியுறுத்துவதுமாகவே அமைய வேண்டும்.   

மக்கள் மீதான ஓடுக்குமுறைகள், பொதுப் பண்புகளை உடையன. அவை, ஒன்றை ஒன்று ஆதரிப்பன. எனவே, விடுதலைக்கான போராட்டங்கள், ஒன்றை ஒன்று ஆதரிப்பது அவசியம். அதற்கு முன், அவை தமது பொதுப் பண்புகளை அடையாளம் காண்பதும், காணத் தடையாக நிற்கும் மயக்கங்களை முறியடிப்பதும் அவசியம்.

எம்முன்னே இரண்டு தெரிவுகள் உண்டு. ஒன்றில், உடைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தின் கற்களை வைத்துக் கொண்டு, உணர்ச்சிவசப்பட்டு காலச் சக்கரத்தில் பின்னோக்கி, 1950களின் அரசியலில் இருந்து தொடங்குவதா? அல்லது, கற்களைக் கடந்து எதிர்காலம் குறித்த தூரநோக்கத்தோடும் திறந்த மனதோடும் செயலாற்றுவதா?

இலங்கையின் அரசியல் தொடர்ச்சியாக மாறிவருகிறது. அது, பெரும்பான்மையினரின் கவனக் கலைப்பானாக உள்ளது. கடந்த காலங்களில், சடலங்களின் அரசியல் நடந்தேறியது. இப்போது கற்களின் அரசியல் நடக்கிறது.  
  
   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .