2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கட்சிகளின் வியூகங்களும் தேர்தல் ஆணைக்குழுவின் கணக்கும்

எம். காசிநாதன்   / 2017 டிசெம்பர் 18 , மு.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாக்கிய ‘ஓகி’ புயலால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களைக் காணவில்லை என்ற குற்றச்சாட்டு இன்னும் நீடிக்கிறது. வழக்கத்துக்கு மாறாக, மாவட்டத்தில் ஆளுநரின் ஆய்வு தொடருகிறது. 

வட மாநிலக் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற தமிழக இன்ஸ்பெக்டர், ராஜஸ்தான் மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.   

பல முனைகளிலும் பரபரப்பான சூழலில், டிசெம்பர் 21 ஆம் திகதி, வாக்குப் பதிவைச் சந்திக்கும் ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத் தேர்தல், அனல் பறக்கும் விறுவிறுப்பான களத்தை எட்டியிருக்கிறது.  

இடைத்தேர்தல் வெற்றி என்பது, பொதுவாக ஆளுங்கட்சிக்கு உரிய வெற்றி. 1980களில் 
எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போதும், பிறகு தி.மு.க ஆட்சி நடைபெற்ற போதும், சில இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சி தோற்று, எதிர்க்கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.

மருங்காபுரி இடைத்தேர்தல் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். 
ஆனால், 1991க்குப் பிறகு, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலகட்டத்திலோ, கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலகட்டத்திலோ, இடைத் தேர்தல் வெற்றி ஆளுங்கட்சிக்கே சொந்தம் என்ற முத்திரை பதிக்கப்பட்டு விட்டது. 

அ.தி.மு.க ஆட்சி காலத்தில் ‘கும்மிடிப்பூண்டி  பாணி’ என்றால், தி.மு.க ஆட்சி காலத்தில், ‘திருமங்கலம் பாணி’ என்று இடைத்தேர்தலுக்கு என்று பண விநியோக கைங்கரியங்களைப் பார்த்திருப்பது, தமிழ்நாடு இடைத் தேர்தல்கள் என்பதில் ஆச்சரியமில்லை.  

இதுபோன்ற, இடைத்தேர்தல்களில் ஒன்றாக நடக்கும் ஆர்.கே நகர் இடைத் தேர்தலில், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களின் பிரசாரம் இல்லாத காரணத்தால், ‘ஸ்டாலின் எதிர்ப்பு’ பிரசாரத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க முன்வைத்துள்ளது.   

“சென்னை மாநகர மேயராக ஸ்டாலின் இருந்தபோது, இந்தத் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை” என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்தில் ஒளிந்திருக்கும் வியூகம், ஒன்றே ஒன்றுதான். அ.தி.மு.க வாக்குகள், தி.மு.க எதிர்ப்பு அல்லது ஸ்டாலின் எதிர்ப்பு என்ற அடிப்படையில், தனது தலைமையிலான 
அ.தி.மு.கவுக்கு வர வேண்டும் என்பதுதான் அந்த வியூகம்.   

தப்பித் தவறி அ.தி.மு.க வாக்குகள் சிதறி டி.டி.வி தினகரன் அணிக்குப் போய் விட்டால், அ.தி.மு.கவின் இரட்டை இலைக்குரிய பலம், ஆர்.கே நகர் சட்டமன்றத் தொகுதியில் குறைந்து விடும். அது, தி.மு.கவுக்குச் சாதகமாக அமைந்துவிடும் என்று கருதுகிறார்.  

‘ஸ்டாலின் எதிர்ப்பு’ என்ற வியூகத்தை ஏன் முன் வைக்கிறார் என்றால், இப்போதுள்ள தலைமை, ஜெயலலிதா போன்ற வலிமையான தலைமை இல்லை.

அதேபோன்று, அத்தனை தரப்பும், 2011 சட்டமன்றத் தேர்தலில் இருந்து ஆதரித்த,
 அ.தி.மு.கவும் இப்போது இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் அ.தி.மு.கவின் சொந்த வாக்கு வங்கி, அதாவது இரட்டை இலைக்குரிய வாக்கு, சிந்தாமல் சிதறாமல் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனனுக்குக் கிடைக்க வேண்டும். அப்படிக் கிடைக்காவிட்டால், ஆளுங்கட்சி வேட்பாளர் தோல்வியைத் தழுவும் நிலை வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள். 

அதனால்தான், எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தைத் தொடங்கிய நாளில் இருந்து, ஸ்டாலின் எதிர்ப்பை, உயரப் பிடித்துக் கொண்டு தொகுதிக்குள் பிரசாரம் செய்து வருகிறார்.  

இந்த வியூகத்தை உணர்ந்துள்ள தி.மு.க தலைமை, “எடப்பாடி பழனிசாமி, 
ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் மூன்று பேரும், ஜெயலலிதாவின் மரணத்தில் பல மர்மங்களை மறைத்து விட்டார்கள்” என்ற குற்றச்சாட்டைச் சுமத்தி வருகிறது. 

காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் அமைப்பு உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து மு.க. ஸ்டாலின் பேசிய முதல் பிரசாரக் கூட்டத்தில், “ஜெயலலிதா மரணத்தின் மர்மங்களை மறைத்தது இந்த மூவரும்தான்” என்று குற்றஞ்சாட்டி, இரட்டை இலையை நம்பியிருக்கும் பெண்கள் வாக்கு, அ.தி.மு.கவுக்கு அடியோடு சென்று விடக்கூடாது; அதைத் தினகரனும் பிரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

அ.தி.மு.கவின் வாக்குகளை தினகரன் பிரிக்க வேண்டும் என்பதுதான், தி.மு.க பிரசாரத்தின் முக்கிய நோக்கம். அது மட்டுமின்றி, ஜெயலலிதா மரணத்தின் மீது சந்தேகம் உள்ள வாக்காளர்கள், எடப்பாடி அணி, தினகரன் அணி இரண்டுக்குமே வாக்குகளைப் போடாமல் கைவிட வேண்டும் என்பதும் இதன் மறைமுக நிகழ்ச்சிநிரல் ஆகும் என்பதில் சந்தேகமில்லை. 

ஆனால், சிறுபான்மை சமுதாய வாக்காளர்கள் மட்டத்தில், ‘பா.ஜ.க.வால் தினகரன் பழிவாங்கப்படுகிறார்’ என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது. அது, தி.மு.கவுக்கு ஆபத்தாக முடியும் என்பதால், அதற்கான வியூகத்தை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க இருக்கிறது. 

குறிப்பாக, தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், டி.டி.வி தினகரன் போன்று செல்வாக்கானவர் அல்ல. கட்சித் தலைவராக இருந்தவர் தினகரன் என்ற சாதகமான அம்சம் சிறுபான்மையின வாக்காளர்களைத் தினகரன் பக்கம் சாய வைக்கும் தர்மசங்கடம், தி.மு.கவுக்கு இருக்கிறது என்பதே இப்போதுள்ள நிலைமை.  

இந்த இரு வியூகங்களுக்குள் மாட்டிக் கொண்டிருப்பது, சுயேட்சையாகக் களமிறங்கியிருக்கும் டி.டி.வி தினகரன்தான். அ.தி.மு.க வாக்குகளில் கணிசமான வாக்குகளைப் பிரிக்க முடியவில்லை என்றால், இத்துடன் அவரது அரசியல் எதிர்காலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் என்பதால், அவரது தாக்குதல் எடப்பாடி அணி மீதுதான் இருக்கிறது.  

 இதன்மூலம், அ.தி.மு.க வாக்காளர்கள் மத்தியில், ‘எதிர்காலத்தில் அ.தி.மு.கவை தினகரனால்தான் வழி நடத்த முடியும்’ என்ற தோற்றத்தை உருவாக்க முயன்று வருகிறார். அந்த முயற்சி, ஆர்.கே நகர் வேட்பாளர்கள் மத்தியில் வெற்றி பெற்றால், அ.தி.மு.க வாக்குகளில் கணிசமான வாக்குகளை தினகரன் வாங்கிவிட முடியும்.   

தினகரன் முந்துவதாக ஒரு கருத்துக்கணிப்பு இதற்காகவே வெளியிடப்பட்டது. ஆனால், அந்தக் கருத்துக்கணிப்புக்கும் ‘லயோலா கல்லூரி’க்கும் தொடர்பில்லை என்று இப்போது மறுப்பு வெளிவந்துள்ளதால், தினகரன் முந்துகிறார் என்று வந்த கருத்துக்கணிப்பின்  மீதான நம்பகத்தன்மை குறைந்து விட்டது.  

 இந்நிலையில், தனது சின்னமான ‘பிரஷர் குக்கரை’ தொகுதி முழுக்கப் பெண்களிடம் பிரபல்யப்படுத்தி வருகிறார் டி.டி.வி தினகரன்.   

இந்த மூவர் தவிர, களத்தில் வேறு யாரும் பலமாக இல்லை. பாரதிய ஜனதா கட்சி சார்பில் கரு நாகராஜன் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால், அவருக்காகப் பிரசாரம் செய்வோரின் தாக்குதல் எல்லாம் தினகரன் மீதுதான் இருக்கிறது.  

 ஆளுங்கட்சியினர் பணம் கொடுக்கிறார்கள் என்று, மற்ற வேட்பாளர்கள் கூறி வரும் நிலையில், தினகரன் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயல்கிறார் என்று, பா.ஜ.க தரப்பில் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

 குறிப்பாக, “50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெறுவார்” என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌ ந்தரராஜனின் பேட்டி, சமூக வலைத்தளங்களில்  பவனிவருகிறது.   

இந்தச் சூழ்நிலையில், பா.ஜ.க வாக்காளர்களே, அந்தக் கட்சி வேட்பாளருக்கு மட்டுமே வாக்களிப்பார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.கவும் மத்தியில் உள்ள பா.ஜ.கவும் நெருங்கிய கூட்டணி வைத்திருப்பதால், பா.ஜ.க வாக்காளர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர், ஜெயிக்கின்ற வேட்பாளர் என்று கருதி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.கவின் வேட்பாளர் மதுசூதனனுக்கே வாக்களித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.   

கட்சிகளின் வியூகம் இப்படியிருக்க, ஆர்.கே நகரைப் பொறுத்தமட்டில், சக்கர வியூகத்தில் மாட்டித் தவிப்பது தேர்தல் ஆணைக்குழுதான்.  890 மில்லியன் ரூபாயை வாக்காளர்களுக்கு விநியோகிக்க முற்பட்டார்கள் என்று கூறி, ஜனநாயக ரீதியில் சுதந்திரமான தேர்தல் நடக்காது என்று தேர்தல் ஆணைக்குழு வாக்குப் பதிவுக்கு மூன்று தினங்களுக்கு முன்பு, சென்ற முறை அறிவிக்கப்பட்ட ஆர்.கே நகர் இடைத் தேர்தலை, இரத்துச் செய்திருந்தது தேர்தல் ஆணைக்குழு.   

அதன் தொடர்ச்சியாக ‘இரட்டை இலை’ பெற, பேரம் பேசினார் என்று கூறி 
டி.டி.வி தினகரனை, டெல்லி பொலிஸார் கைது செய்தனர். 890 மில்லியன் ரூபாய் விவகாரம் இன்னும் நிலுவையில் இருக்க, இரட்டை இலை பேர விவகாரத்தில் தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, வருகின்ற டிசெம்பர் 21 ஆம் திகதி, டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.   

வேட்பாளராக இருக்கும் தினகரன், வாக்குப்பதிவு அன்று, டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவு, தினகரனுக்கு இடியப்பச் சிக்கலை ஏற்படுத்தப் போகிறது என்பது ஒரு புறமிருக்க, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கட்சிகளின் வியூகத்தைத் தமிழகத்தில் சமாளிக்க முடியாமல், தேர்தல் ஆணைக்குழு தவிக்கிறது.   

இதன் விளைவு, “தெருவுக்குத் தெரு கமெராக்கள் வையுங்கள்” என்று நீதிமன்றத்துக்கு தி.மு.க போன்ற அரசியல் கட்சிகள் போயிருக்கிறன.

 சுதந்திரமான, நேர்மையான தேர்தல் என்பது தமிழகத்தில் நடைபெறும் இடைத் தேர்தல்களில் மருந்துக்குக் கூட காண முடியவில்லை என்பது ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது.  

கட்சிகளின் கணக்கோ பணம் பற்றியதும் வெற்றி பெறுவதிலும் மட்டுமே இருக்கிறது. ஆளுங்கட்சி, இடைத்தேர்தல் பாணி மூலம் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறது.   
எப்படிச் சுதந்திரமாகத் தேர்தலை நடத்துவது, பண விநியோகத்தை எப்படித் தடுப்பது என்பதில் திணறி நிற்கிறது தேர்தல் ஆணைக்குழு  என்பதே, தற்போது ஆர்.கே நகர் இடைத் தேர்தல் நிலைவரம்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .