2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கருக்கலைப்பும் மதங்களும் தலையீடும்

Gopikrishna Kanagalingam   / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கும் முயற்சிகளுக்கு, கத்தோலிக்க ஆயர்கள் மன்றம், தனது கண்டனத்தை வெளியிட்டிருக்கிறது. எந்தச் சூழ்நிலையிலும் இதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும் அந்த மன்றம் அறிவித்திருக்கிறது.   

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இரண்டு விடயங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் அதிகரித்திருக்கின்றன: ஒன்று, கருக்கலைப்பின் சட்டபூர்வத்தன்மை, அது சரியானதா என்பது தொடர்பானது. அடுத்தது, பொதுமக்களுக்கான சட்டங்களில், சமய நிறுவனங்கள், எந்தளவுக்குக் கருத்துகளை வெளியிட வேண்டும், எந்தளவுக்குத் தலையிட வேண்டும் என்பது.   

இலங்கையில் தற்போது காணப்படும் சட்டங்களின் அடிப்படையில், கருக்கலைப்பு என்பது, பொதுவாகவே தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. விதிவிலக்காக, கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்படும் சந்தர்ப்பமாக, தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சந்தர்ப்பம் காணப்படுகிறது.   

இந்த நிலைமையை மாற்றுவதற்கான முயற்சிகளைத் தான், அமைச்சரவை மேற்கொண்டு வந்தது. அதன்படி, வன்புணர்வாலும் இரத்த உறவுகளுக்கிடையிலான உறவாலும் ஏற்பட்ட கரு; 16 வயதுக்குட்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட கரு; கருவுக்கு மிகவும் பாரதூரமான பாதிப்பு ஆகிய சந்தர்ப்பங்களில், கருக்கலைப்புக்கு அனுமதி வழங்குவதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டு வந்தன.   

இவற்றுக்குத்தான் எதிர்ப்பை வெளியிட்டுள்ள கத்தோலிக்கப் பேராயர்கள், “எந்தச் சந்தர்ப்பத்திலும், கருக்கலைப்புக்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்” என்று கூறியுள்ளதோடு, கரு உருவாகியமை முதல், மனித வாழ்க்கை ஆரம்பிக்கிறது எனவும் மனித உயிரில் கைவைக்கும் உரிமை, யாருக்குக்கும் கிடையாது எனவும் தெரிவித்திருக்கின்றனர்.   

கருக்கலைப்பு என்பது சர்ச்சைக்குரிய விடயமென்பதில் எந்தவிதச் சந்தேகமும் கிடையாது. வல்லரசு நாடாகவும் உலகில் முன்னேற்றங்களுக்கெல்லாம் முன்னோடி என்றும் கருதப்படும் ஐக்கிய அமெரிக்காவிலும் கூட, கருக்கலைப்பு என்பது, சர்ச்சைக்குரிய விடயமாகவே இதுவரை காணப்படுகிறது. கருக்கலைப்புக்கு எதிரானவர்களென, நாட்டின் ஆளும் கட்சியான குடியரசுக் கட்சியினர் காணப்படுகின்றனர். கருக்கலைப்புக்கு எதிரான நிலைப்பாட்டின் காரணமாக, தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.   

கருக்கலைப்பு என்பது, உயிரைக் கொல்லும் ஒன்று என, சமயங்களில் நம்பிக்கை கொள்வோர், கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நாத்திகர்களுள் ஒருவராகக் கருதப்படும் கிறிஸ்தோபர் ஹிற்சன்ஸ், கருக்கலைப்பு விடயத்தில் குறிப்பிடத்தக்க எதிர்ப்பையும் கொண்டிருந்தார்.   

எனவே, இலங்கை போன்றதொரு நாட்டில், இவ்வாறான விடயமொன்று சர்ச்சைக்குரியதாக இருப்பது ஆச்சரியமளிக்கவில்லை. இலங்கை போன்ற பழைமைவாதக் கொள்கைகளைக் கொண்ட நாட்டில், கருக்கலைப்புத் தொடர்பான கலந்துரையாடல்கள் அதிகரிக்கப்படுவது அவசியமானது.   

கருக்கலைப்புத் தொடர்பான கலந்துரையாடல்களில் பிரதானமான விவாதப் பொருளாக இருப்பது, கருவுக்கு உயிருண்டா, அது ஓர் உயிராகக் கருதப்பட வேண்டுமா என்பதுதான். ஏனெனில், கருக்கலைப்புக்கு எதிரானவர்களின் விவாதம், “கருவுக்கு உயிருண்டு. அது, ஓர் உயிராகக் கருதப்பட வேண்டும். அப்பாவி மனித உயிரைக் கொல்வது தவறானது.கருக்கலைப்பு என்பது, உயிரைக் கொல்வது போன்றது” என்றே செல்கிறது.   

மருத்துவத்திலும் சரி, மெய்யியலிலும் சரி, எந்த நேரத்தில் உயிர் ஆரம்பிக்கிறது என்பதை வரையறுக்காத நிலை காணப்படுகிறது. அந்தளவுக்குச் சிக்கலானது தான் இந்த விடயம்.   
8ஆம் வாரத்தின் முடிவில் தான், கருமுளை, கருவாக மாறுகிறது. 21ஆம் வாரத்தில்தான், அந்தக் கரு, வெளியே பிறந்தால், பிழைக்கக்கூடிய மிக மிகச் சிறிய வாய்ப்புக் காணப்படுகிறது. ஆனால், இந்த வாய்ப்பு மிக மிகக் குறைவானது. மருத்துவத்தில் 30 வாரங்களான கருவைக் கூட, “மனிதர்” என வரையறுப்பதில்லை. 36 வாரக் கருவிலேயே, இந்த வரையறை எடுக்கப்படுகிறது. எனவே, எங்கு இதை வரையறுப்பது என்ற கேள்வி, இன்னமும் புதிராகவே இருக்கிறது.   

ஏனெனில், உயிரை உருவாக்கக்கூடிய எல்லாமே உயிர் என எடுத்துக் கொண்டால், உலகில் காணப்படும் காபன் அணுக்கள் எல்லாமே, உயிர்கள்தான். அப்படியாயின், நாம் தினந்தோறும் பயன்படுத்தும் எரிபொருள் என்பது, உயிருள்ள ஒன்று ஆகும்.   

எனவேதான், எது உயிர், எது உயிரன்று என்பதில், வரையறுக்க முடியாத நிலை காணப்படுகிறது. ஐக்கிய நாடுகளின், 1948ஆம் ஆண்டின் மனித உரிமைகளுக்கான பிரபஞ்ச பிரகடனத்தின்படி, மனித உரிமைகள், பிறப்பு முதலே ஆரம்பிக்கின்றன. அந்தப் பிரகடனத்தில், கரு பற்றிய கருத்தாடலே இடம்பெற்றிருக்கவில்லை. அதனால் தான் பெரும்பாலான செயற்பாட்டாளர்கள், பிறப்பு என்பதையே, உயிருக்கான அடையாளமாகக் கொள்கின்றனர்.   

உயிருக்கான வரையறை எவ்வாறிருப்பினும், கருவுற்றிருக்கும் பெண்ணொருத்திக்கு - அல்லது எந்தப் பெண்ணுக்கும் - தனது உடல் மீது முழுமையான அதிகாரம் காணப்படுகிறது என்பது, நவீன கால உலகில் ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்றாக இருக்கிறது. 

கருவைச் சுமந்திருக்கும் பெண் தான், அதைப் பிரசவிக்கும் வலியை அனுபவிக்கப் போகிறாள்; அதன் பின்னர், அந்தக் குழந்தையை வளர்ப்பதில், முக்கியமான பங்கை, அவள் தான் வகிக்கப் போகிறாள். எனவே தான், பெண்களின் உடல் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் உரிமைகளை, பெண்களிடமே விட்டுவிட வேண்டும் என்பது, பொதுவான, நியாயமான பார்வையாக இருக்கிறது.   

எனவே தான், கருக்கலைப்பு விடயத்தில், முடிவை எடுக்கக்கூடிய பொறுப்பை, பெண்களிடம் விட்டுவிடுவது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. பெண் விரும்பினால், என்ன காரணத்துக்காகவும் அந்தக் கருவைக் கலைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என, முன்னேற்றமடைந்த நாடுகளின் சட்டங்கள் குறிப்பிடுகின்றன.  

சரி, அந்தச் சட்டங்கள் அவ்வாறிருப்பது ஒரு பக்கமாக இருக்க, இந்த விடயத்தில் சிறிதளவு தயக்கங்களைக் கொண்ட, ஆனால் புரிதல் அறிவு கொண்டோர், சில சந்தர்ப்பங்களில் கருக்கலைப்பு இடம்பெற வேண்டுமென ஏற்றுக் கொள்கின்றனர். தாயின் உயிருக்கு, அந்தக் கருவால் ஆபத்து ஏற்படுமெனத் தெரியும் போது; அந்தக் கருவுக்கு, குணப்படுத்த முடியாத பாரிய நோயின் அறிகுறி காணப்பட்டால்; வன்புணர்வுகளின் போது கருவுற்றிருந்தால் போன்றன, அவ்வாறான சில சந்தர்ப்பங்களாகும். ஆனால், “எந்தச் சூழ்நிலையிலும் கருக்கலைப்புக்கு அனுமதிக்கப் போவதில்லை” என்பது, எவ்வாறான மோசமான கருத்தியல் என்பதை உரத்துச் சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.   

பிறக்காத, அநேகமாக இதுவரை உயிராக அங்கிகரிக்கப்படாத கருவுக்காக, வளர்ந்த தாயின் உயிர் போனாலும் பரவாயில்லை என்பது, எந்தளவுக்கு ஏற்றுக் கொள்ளத்தக்கது? யாரோ ஒருவரால் வன்புணரப்பட்ட பெண், தன்னை வன்புணர்ந்தவனின் கருவைச் சுமக்க வேண்டுமென்பது, எந்தளவுக்கு நியாயமானது? குணப்படுத்த முடியாத, பாரிய குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைக்குப் பிரசவம் வழங்கி, அந்தப் பிள்ளையையும் அந்தக் குடும்பத்தையும் வலியில் சிக்க விடுவதென்பது எந்தளவுக்குச் சரியானது?   

இதனால் தான், இவ்வாறு கருக்கலைப்புக்கு எதிராக இருப்பவர்களை (pro-life செயற்பாட்டாளர்கள்), பெண்களுக்கு எதிரானவர்கள் (anti-woman) என, மாபெரும் நகைச்சுவையாளரும் சிந்தனையாளருமான ஜோர்ஜ் கார்லின் வர்ணித்தார்.   
கருக்கலைப்புப் பற்றிய வாதங்கள் இவ்வாறிருந்தால், நாட்டின் சட்டங்கள் தொடர்பாக, மத நிறுவனங்கள், எந்தளவுக்குக் கருத்துகளை வெளியிட வேண்டுமென்பது, காணப்படும் அடுத்த பிரச்சினையாகும். இதுவும், சிக்கலான ஒரு விடயமாகும். மனித நாகரிகமடைதலில், மதங்களின் -பிரதானமான, நிறுவனமயப்படுத்தப்படாத மதங்களின் - பங்கு, குறிப்பிடத்தக்க அளவில் காணப்பட்டிருக்கிறது என்பது உண்மையானதாகும். 

ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல், மனித உரிமைகளிலும் அதியுச்ச நாகரிகமடைதலிலும் மனித இனம் முன்னேற்றமடைந்த பின்னர், பல்லின சமுதாயங்களும் தேசங்களும் உருவாக்கப்பட்ட பின்னர், சட்டவாக்கத்துக்கும் மதங்களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.   

இலங்கையின் அரசமைப்புத் தொடர்பாக, பௌத்த மதபீடங்களின் தலையீட்டுக்கான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டமைக்கும், இந்த இடைவெளியைப் பேண வேண்டிய தேவை இருந்தமையே காரணமாக இருந்தது. ஏனெனில், மதங்களைப் பொறுத்தவரை, அவர்கள் சார்ந்த சமுதாயமும் அவர்களைப் பின்பற்றுகின்ற மக்களின் நலன்களுமே முக்கியமானவை. இலங்கையில் பௌத்தத்தைப் பொறுத்தவரை, பல்லின, பல்-மத தேசம்/தேசங்கள் உருவாகுவதை விட, பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கும் நாடொன்று இருப்பதே அவசியமானது. ஆனால், இலங்கை எனும் முழுநாட்டுக்கும், அது பொருத்தமானதா என்பது, சந்தேகத்துக்குரியது தான்.   

அதைப் போன்று தான், கருக்கலைப்புப் பற்றிய கத்தோலிக்கத் திருச்சபையின் நிலைப்பாடும் போக்கும் கருதப்பட வேண்டும். திருமணம் முடிக்காத ஆண்களை, தமது பெரும்பான்மையாகக் கொண்டுள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் நிர்வாகம், அவர்கள் அனுபவிக்காத, அவர்களில் நேரடியாகத் தாக்கம் செலுத்தாத, அவர்களின் ஆணைக்குள் வராத விடயங்களைப் பற்றிய கருத்துகளையும் நிலைப்பாட்டையும், அரசாங்கத்துக்கான நேரடியான அழுத்தமாக முன்வைக்கும் போது, அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. ஏனைய பாப்பரசர்களுடன் ஒப்பிடும் போது, முன்னேற்றகரமான கொள்கைகளைக் கொண்டவர் எனப் பாராட்டப்படும் பாப்பரசர் பிரான்ஸிஸ் தலைமையிலான தற்போதைய கத்தோலிக்கத் திருச்சபையிலும், இன்னமும் காணப்படும் வெறுப்பும், இதே வகையில் தான் அடங்குகிறது.    

ஆரோக்கியமான தேசமொன்றில், மதம் சாராத அமைப்புகளும் மதம் சார் அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து, நாட்டில் காணப்படும் சட்டவாக்கத்துக்குள், அல்லது உறுதிப்படுத்தப்பட்ட உண்மையான விடயங்கள் தொடர்பில் பணிகளை மேற்கொள்வது தான் சிறப்பானதாக அமையும். உதாரணமாக, காலநிலை மாற்றமென்பது, விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்தப்பட்ட, உண்மையான பிரச்சினையாகும். இது, பூமியிலுள்ள அனைவரையும் பாதித்துக் கொண்டிருக்கிறது, எதிர்காலத்தில் இன்னமும் அதிகமாகப் பாதிக்குமென்பது, உறுதியானது. இந்த விடயத்தில், காலநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராடிவரும் அமைப்புகளோடு, பாப்பரசர் பிரான்ஸிஸ் செயற்படுகின்றமை, வரவேற்கத்தக்க ஒன்று. அவரது கருத்துகளும் நிலைப்பாடும், இவ்விடயத்தில் முக்கியமான குரலாகக் காணப்படுகின்றன.   

ஆகவே, கருக்கலைப்புப் போன்ற சிக்கலான விடயங்களில் கலந்துரையாடல்கள் தேவைப்பட்டாலும், மத நம்பிக்கை, கலாசாரம் என்ற அடிப்படையிலான கலந்துரையாடல்களை விட, உண்மைகளைப் பகிர்ந்துகொள்ளும், விஞ்ஞானமும் மெய்யியலும் சார்ந்த கலந்துரையாடல்களே அவசியமென்பது, வலியுறுத்தப்பட வேண்டியிருக்கிறது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X