2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

காலத்தின் கட்டாயம்

Editorial   / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இலட்சுமணன்  

தமிழ்த் தேசிய அரசியலில், போர் ஓய்வுக்குப் பின், தமிழர் உரிமை தொடர்பாகவும் அபிவிருத்தி தொடர்பாகவும் பிரதேசம், மாகாணம், இனம் ரீதியாகப் புதிய அரசியல் கட்சிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்தாபிதங்கள், தமிழ் அரசியலிலும் சரி, தமிழ் மக்களிடமும் சரி எத்தகைய எதிர்விளைவுகளை தோற்றுவித்துள்ளன? இவை, தமது மக்களுக்காக முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக அளிக்கப்படும் விளக்கங்கள், இக்கட்சிகளின் யாப்பு, பதிவு என்பன தொடர்பான விவரங்கள், எந்தளவு தூரம் மக்களைச் சென்றடைந்துள்ளன என்பது, இன்றைய  அரசியல் சூழலில், தமிழ் மக்களிடம்  எழுந்துள்ள பிரதான வினாக்களாகும்.

ஏனெனில், தமிழ் அரசியல் கட்சிகள், கடந்த 10 ஆண்டு காலத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உருவாக்கப்பட்ட போதும், அவற்றின் அடித்தளம், பொதுவாகத்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  அங்கத்துவத்துக்குள் இருந்தே  எழுந்துள்ளன.

கொள்கை ரீதியாகவும்  தனிப்பட்ட குரோதங்கள் மூலமும் பிரிந்து சென்றமையும் தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பொதுச் சின்னம், பொது யாப்பு, அவற்றுக்கான ஒப்பாய்வு, கொள்கை வகுப்பு கட்சிகளுக்கிடையிலான அதிகாரப் பகிர்வு பன்முகப்படுத்தப்பட்ட ஜனநாயக ரீதியான கருத்தாளர்கள், உட்கட்சி தந்திரம் இவை அனைத்தும், இல்லாமையே இந்த வெடிப்புகள் ஏற்படப் பிரதான காரணமாகும் எனலாம்.

இந்த வகையில், ஏட்டிக்குப் போட்டியாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் எண்ணிக்கையற்ற பல்வேறு புதிய கட்சிகள் உருவாக்கம் என்பது, வடக்கு அரசியலில் தமிழ்த் தேசிய இனத்தின் வாக்குகளை பிரிப்பதற்கு வாய்ப்புளளது என்று கூறப்பட்டாலும், அங்கு பிரதிநிதிகள் யாவரும் தமிழர்களாகவே இருப்பர்; கொள்கை ரீதியிலும் செயல் ரீதியிலும் சில மாறுபாடுகள் தான் துலங்கும்; ஆயினும், வடபுல அரசியல் சூழலில், தமிழ் மக்களின் நீண்ட நாள் அபிலாசைகளுக்கு, தமிழ் மக்களின் அரசியல் உரிமை தொடர்பான நெடுநாள் பயணத்தின் போக்குக்கும் மாறுபட்ட கொள்கை வகுப்புகள், அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தில், எத்தகைய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது, எந்த அரசியல்வாதிக்கும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இத்தகையதோர் அரசியல் பின்புலத்தில், கிழக்கின் அரசியல் நிலைமைகள் என்பதும் தமிழர் எதிர்ப்பு என்பதும் அதன் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் நிலைகளிலேயே தங்கியுள்ளது.
தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில், அதிகரித்து வரும் தமிழ் அரசியல் கட்சிகளின் தொகையும் மாறுபட்ட கொள்கைகளும் உட்கட்சி மோதல்களும் ஒரு ஸ்திரமற்ற அரசியல் சூழலை தோற்றுவித்துள்ளது. 

மேலெழுந்து வரும் கிழக்கு வாத மோதுகைகள், அரசியல் பேச்சுக்கும் வாய்ச்சவடால்களுக்கும் பிரதேச உணர்ச்சி அரசியலுக்கும் சாத்தியமாகலாம்; கேட்பதற்கும் பேசுவதற்கும் சிலருக்கு அவையாவும் இன்பமாகவும் இருக்கலாம். இனவாதம், மதவாதம் போன்ற பிரச்சினைகள், இந்த மூவின மக்கள் வாழும் சூழலுக்கும் பிரதேசங்களுக்கும் ஆரோக்கியமானது அல்ல! 

ஆயினும், அவர்கள் அவரவர் தமது இனம் சார்ந்த, மொழி சார்ந்த கொள்கை சார்ந்த கருத்துகளை முன்வைப்பதற்கு, ஜனநாயக உரிமை உள்ளது; இந்த ஜனநாயக உரிமை என்பது, அடிப்படை உரிமைகளை மீறவதாக மாறும் சூழல் ஆபத்தானதாகும்.

அரசியல் பிரசார அலைகளிலே, கிழக்கின் அரசியல் தலைவர்களாகத் தங்களைத் தாங்களே அங்கிகரித்துக் கொண்டு, மக்கள் பிரதிநிதிகள் அல்லாத, மக்கள் ஆதரவற்ற, எவ்வித அரசியல் அடித்தளமும் அற்ற, தேர்தல் காலத்துக்கு மட்டும் தன்னை அடையாளப்படுத்தி, பத்திரிகை அறிக்கை விடும் காட்சிகள், குறிப்பாகத் தமது அலுவலகம் எங்கிருக்கிறது என்றோ, இருக்கிற அலுவலகத்துக்குப் பெயர்ப் பலகை கூட அமைக்காத கட்சிகள், தேர்தல் காலங்களில் வாக்குச் சீட்டை நீட்டி, மக்களது வாக்கைச் சிதறடிக்கும் நோக்கத்துடன் செயற்படும் கட்சிகளே அதிகமாக உள்ளன.

 தமது அரசியல் கட்சியின், யாப்பு கொள்கை, அங்கத்தவர் தொகை, எதிர்கால வேலைத்திட்டம் போன்ற எதுவுமே அற்ற கட்சிகள், இவை தொடர்பாக விளக்கும்  காட்சிகளைக் கிழக்கில் அதிகம் காணலாம்.  தமது பிரசார நோக்கமாகத் தனது செயற்பாடுகள், எது, எப்படி, எங்கே என்று கூறாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வாய்க்கு வந்தபடி, ஓர் அரசியல் ஜனநாயகம், அரசியல் தார்மீகமற்ற முறையில் விமர்சிப்பதையே அடிப்படையாக கொண்டதவை. 

இத்தகைய போக்கு, வடக்கில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவரிடமும் தமிழ்க் காங்கிரஸ் தலைவரிடமும் அவர்களது கட்சிகளின் செயலாளரிடமும் மிக அதிகமாகக் காணப்படுகிறது. 

எதற்கெடுத்தாலும், தீவிரமான தனிநபர் விமர்சனம் என்பது, தலைமை வகிப்பவரின் பொருத்தப்பாடின்மையைக் குறிப்பதாகும். உணர்ச்சிவசப்படுவது, ஒருவரைக் கருத்தியல் ரீதியில் தாக்குவதும், தாம் தற்காலிக வெற்றிகளைப் பெற்றுத் தரலாம். ஆனால், நீண்டநாள்களுக்கு நீடித்து நிலைக்க மாட்டா.

அந்தவகையில், தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள், தனிப்பட்ட முறையில் கட்சித் தலைமைகள், தங்கள் தனிப்பட்ட உணர்வுகளை, வாய்க்கு வந்தபடி வயது, அரசியல் முதிர்ச்சி போன்றவற்றைக் கவனியாது, ஒருமையில் விமர்சிக்க முனைவது ஆரோக்கியமானதல்ல.

உண்மையில், ஓர் அரசியல் ஆளுமை உள்ள தலைமை, முடிவுகள் எடுக்க வேண்டிய நேரத்தில், முடிவுகளை எடுக்க வேண்டும்; பேச வேண்டிய நேரத்தில், பேச வேண்டும்; அமைதி காக்க வேண்டிய நேரத்தில், அமைதி காக்க வேண்டும். இல்லையேல், அவருடைய தலைமைத்துவம், தவறானதாகவே மக்களால் கருதப்படும். 

இந்த உளவியலை, தமிழ் அரசியல் கட்சிகளின், குறிப்பாக வடக்கு, கிழக்குக் கட்சிகளின் தலைவர்கள் விளங்கி செயற்பட்டால், அவர்கள் நல்ல தலைமைத்துவத்தைத் தமிழ் மக்களுக்கு வழங்கலாம். அதைவிடுத்து, இருக்கின்ற பானையையும் போட்டு உடைக்கும் செயற்பாடாகவே, இந்த அரசியல் சுயலாப விமர்சனங்கள் அமையும்; இவவாறான நிலைமையையே இங்கு காணலாம்.

இந்தவகையில், வடக்கின் அரசியல் நிலைமைகளில் இருந்து, வேறுபட்ட ஒரு சூழலில், கிழக்கின் அரசியலை தமிழரின் பிரதிநிதித்துவத்தை, அவர்கள் தொடர்ச்சியான கோரிக்கைகளைத் தடுப்பதாக இருந்தால், தம் மக்களை ஓரணியில் வழிநடத்தத் தமிழினம் ஓரணியாக அணிதிரள வேண்டும். 

எனவே, கிழக்கில் தமிழ் மக்கள், நீண்ட காலமாக ஆதரவளிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மய்யப்படுத்தியதாகவே அது அமைந்துள்ளது. அந்த வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள், கிழக்கின் அரசியல் நிலைவரம் குறித்து, அதிக கவனம் செலுத்த வேண்டும்.  

இங்கு, மாற்றுக் கட்சி மோதல், மக்கள் பிரதிநிதித்துவத்தை, வாக்களிக்கும் மக்களை, எதிர்கால அரசியலைத் தமிழர் இருப்பையும் ஏமாற்றம் அடையச் செய்யாமல், அனைவரையும் அரவணைத்து, ஓரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கூட்டமைப்பாகக் கிழக்கில் செயற்பட வேண்டும். 

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனக்கு முன் கிளம்பியுள்ள சவால்களை முறியடிக்க, கிழக்கின் அரசியல் மூலத்துடன், ஜனநாயக ரீதியில் அணுகுவதன் மூலம், தமிழர் தம் இருப்பையும் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்க முடியும்.

இதைக் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஒரு பொது வேலைத் திட்டத்துடன் முன்னெடுக்கும். இளைஞர்களை, கொள்கை ரீதியாகக் குரல் கொடுப்பவர்களை அரவணைத்துக் கொண்டு முன்வருமா?  அல்லது, கிழக்கில் மகத்துவத்தைக் கேள்விக்குறியாக்குமா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிந்திக்குமமா? முன்னுதாரணமாகச் செயற்பட்டு, கிழக்கில் பெருகிவரும் வகைதொகைமற்ற அரசியற் கட்சிகள் வாக்குகளைச் சிதறடிக்க வாய்ப்புகளை வழங்க போகிறதா?

இன்றைய அரசியல் சூழலில், வடக்கு, கிழக்கு அரசியல் சூழலில், பேரம்  பேசும் பலத்துடன், இணக்கப்பாட்டு அரசியல் மூலம், எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு பலமான பாதையைத் தமிழ்த் தரப்புக் கொண்டிருப்பது அவசியமாகும். 

அதன்மூலமே, தமிழரது நீண்ட அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான மாற்று அரசியல் பாதை ஒன்றைத் திறக்க முடியும். எனவே, வடக்கின் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்பவும், கிழக்கின் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்பவுமே தமிழ் தேசிய அரசியல் பயணம் முன்னெடுக்கப்பட வேண்டும். 

இல்லையேல், முடிவுகள் மறுதலையாகிவிடும். இதை தமிழ் அரசியல் தலைமைகள் கவனத்தில் கொள்வது காலத்தின் கட்டாயம். தமிழ் அரசியல் தலைமைகள் சிந்திக்குமா, செய்யப்படுமா?


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .