2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கல்வி தந்தைகளின் அலப்பறைகள்

Editorial   / 2020 ஜூலை 09 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் கல்வித் தந்தைகள் உருவெடுக்கத் தொடங்கியுள்ளார்கள்.   

அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி என்பதுபோல, கல்வித் தந்தைகளின் கடைசிப் புகலிடம் நாடாளுமன்ற அரசியல். இன்று இலங்கையின் கல்வித்துறை எதிர்நோக்குகின்ற சவால்கள் பல. தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதும் தனியார் கல்வியை ஊக்குவிப்பதும் அதற்கான தீர்வுகள் அல்ல.   

இலங்கையில் இலவசக் கல்வி, ஆசியாவின் நாடுகள் பலவற்றுக்கும் முன்னரே பல்கலைக்கழகம் வரை விரிவுபடுத்தப்பட்டு விட்டது. அத்துடன், தாய் மொழிக் கல்வியும் சேர, கிராமப்புறத்து நடுத்தர வர்க்கத்தினருக்கும், கீழ் நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு பகுதியினருக்கும், தொழிலாளர் வர்க்கத்தினரில் சிறிய, ஆனால் புறக்கணிக்க இயலாத, ஒரு தொகையினருக்கும் உயர் கல்வி வாய்ப்புகள் கிட்டின. இலங்கையின் பொருளாதார விருத்தி எவ்வளவு குறைபாடானதாக இருந்த போதும், அரசாங்கத் தொழிற்றுறை தொடர்ச்சியாகவே வளர்ந்து கொண்டு வந்தது. எனவே, அவ்வாறான வேலை வாய்ப்புகள் பெருகின. அதேவேளை, கல்வி கற்றோர் தொகையும் பெருகி வந்தது.  

இந்தப் பின்னணியில், உயர் கல்விக்கான போட்டி, மேலும் வலுவடைந்தது. மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற துறைகளில் பல்கலைக்கழக அனுமதியின் எண்ணிக்கை மட்டுப்பட்டு இருந்தது. இது அரசாங்கக் கொள்கையால் என்று இல்லாமல், அவற்றுக்கான தகுதி வாய்ந்த ஆசிரியர் பற்றாக்குறையாலும் பயற்றுவிப்புக்கு அவசியமான ஆய்வுகூட உபகரண வசதிகளின் போதாமையாலும் பொருளாதார நெருக்கடியின் விளைவாகக் கல்வியிலும் உயர்கல்வியிலும் மேலதிக அரசாங்க முதலீடு இல்லாமையாலும் ஏற்பட்ட ஒரு நிலைமை ஆகும்.  

 இந்த நிலைமையில் உயர்கல்விக்கும் குறிப்பிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகளுக்குமான போட்டி தீவிரமானது. அதன் விளைவாகப் பல்கலைக்கழக அனுமதி, ஓர் அரசியல் பிரச்சினையாகி, 1970 அளவில் பேரினவாத அரசியலின் விளைவான தரப்படுத்தலுக்கும் தேசிய இனப் பிரச்சினையின் தீவிரப்படுத்தலுக்கும் இட்டுச் சென்றது.   

நீண்ட காலமாகவே, உயர்கல்வி பற்றியும் நாட்டின் பொருளாதார விருத்தி பற்றியும் திட்டவட்டமான அரசாங்கக் கொள்கை ஒன்று இல்லை என்பதை நாம் விளங்கிக் கொண்டால், உயர்கல்வி இன்று எத்தகைய முட்டுச் சந்தில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளது என விளங்கும். பாடசாலைக் கல்வியைத் தனியார் மயமாக்கும் நோக்கத்துடனும் வசதி படைத்தவர்களின் குழந்தைகள் அயல் நாடுகளில் பட்டப் படிப்பை மேற்கொள்ள வசதியாக ஆங்கிலம் மூலம் தனியார் வழங்கும் விதமாகச் சர்வதேசப் பாடசாலைகள் 1978க்குப் பிறகு நிறுவப்பட்டு வந்து, இன்று, கொஞ்சம் வசதியான நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியினர் கூடத் தங்கள் பிள்ளைகளை அங்கு அனுப்புகின்ற அளவுக்கு அவற்றின் எண்ணிக்கை பெருகிவிட்டன.  

அதன் அடுத்த கட்டமாக, அந்நியப் பல்கலைக்கழகங்களின் ஊடுருவல் தொடங்கியது. இலங்கையின் பல்கலைக்கழகங்களில் படிக்கக் குறைந்த பட்சத் தகுதி பெற்ற மாணவர்களில் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்கிறது. பிறர் வெளிவாரிப் பட்டங்களை நாடுகின்றனர். பல்கலைக்கழகங்கள் அவற்றை ஒழுங்கு முறையாக நடத்துவதாகக் கூற இயலாது. அதைவிட, இவ்வாய்ப்புகள் மாணவர்கள் அதிகம் விரும்புகிற துறைகளில் கிட்டுவது குறைவு. எனவே, உயர்கல்வி பல விதங்களில் வணிக மயமாக்கப்பட்டு ‘சந்தையால்’ வழிநடத்தப்படுகிறது.  

இன்றைய கல்வியும் உயர்கல்வியும் திருப்திகரமானவையல்ல. அவை நாட்டை முன்னேற்றக் கூடிய திறமை கொண்ட பட்டதாரிகளை உருவாக்கத் தவறுகின்றன என்றால் அது பட்டதாரிகளின் தவறு மட்டுமல்ல. கல்விக் கொள்கையும் பொருளாதாரக் கொள்கையும் குழறுபடியானவை. உயர்கல்விக்கான மூலதனத்தைச் சமூகத்துக்கு உள்ளிருந்தே திரட்ட இயலும். சமூகத்திடமிருந்து பெறுகிற கல்வியைச் சமூகப் பயனுடையதாக்க முடியும். தனியார் பல்கலைக்கழகங்கள் இந்த நோக்கங்கட்கு எதிர்மாறான இலக்கையுடையவை. தனியார் கல்வியை ஆதரிக்கிற பலர் பரிந்துரைக்கும் கல்வித்துறைகளும் புதிய நிபுணத்துவமும் எவை? 

உலகமயமாதல், அந்நிய நாடுகளில் வேலை வாய்ப்பு, அந்நிய முதலீட்டின் தேவைகளைச் சந்திப்பதற்கான திறமைகள் போன்று, தேசியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முரணான கருத்துகளையே வலியுறுத்துகின்றனர். தனியார் பல்கலைக்கழகங்களை எதிர்ப்பது அவசியம். ஆனால் அது போதாது. பாடசாலைக் கல்விக்கு ஒரு தேசிய அடிப்படை அவசியம். கல்வித் துறைக்கு ஒரு தெளிவான தூரநோக்கு அவசியம். எனவே, இவ் விவாதம் தனியார் பல்கலைக்கழகத்துடன் நின்றுவிடாது நாட்டின் கல்விக் கொள்கை முழுவதையும் மறுபரிசீலனை செய்து, கடந்த முப்பதாண்டு காலத்தில் ஏற்பட்ட பெருங் சீரழிவிலிருந்து கல்வியை மீட்டெடுப்பது பற்றியதாகவும் இருக்க வேண்டும். 

இதைக் கல்வித் தந்தைகளால் செய்ய இயலாது. தேசிய கல்விமுறையையும் அரசாங்கப் பல்கலைக்கழகங்களையும் செழுமைப்படுத்தி வளமுடையதாக்குவது காசுக்கு பட்டங்களை விற்கும் கல்வித் தந்தைகளால் செய்யக் கூடியதல்ல. அது அவர்கள் நலனுக்கு எதிரானது.   

இது தேர்தல் காலம், ஆதலால், ஒன்லைன் கல்வி, தரமான தனியார் பல்கலைக்கழகங்கள் எனப் பல ‘எருமை மாட்டு’க் கதைகளை, இன்னும் கொஞ்சக் காலத்துக்கு கேட்க நேரும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X