2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொழும்பு வாழ்க்கையும் கொரோனாவும்

Johnsan Bastiampillai   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்  

கொவிட்-19 நோயின் காரணமாக, பெரும் நெருக்கடியை நாடு, எதிர்நோக்கி இருக்கிறது. கொரோனோ வைரஸ் தொற்று, ஒக்டோபர் மாதம் நான்காம் திகதி, கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பித்தாலும் அம் மாவட்டத்தின் நிலையை விட, கொழும்பு மாவட்டத்தின் நிலைமை, அதிலும் கொழும்பு மாநகரத்தின் நிலைமை, மிகவும் மோசமாக இருக்கிறது.   

கொழும்பில் மட்டும், நாளொன்றுக்கு சுமார் 200 புதிய தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்படுகின்றனர். இது, உண்மையான தரவென எவரும் கூறுவதில்லை. ஏனென்றால், மேலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டால், அதிக தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுவர் என்பது, இப்போது தெளிவாகத் தெரிகிறது.  

“கொழும்பில் கொவிட்-19 நோய்,  மிகவும் மோசமாக இருக்கிறது” என்று, கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்கவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹணவும் ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு தெரிவித்திருந்தனர். “கொழும்பில் ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட 991 பி.சி.ஆர் பரிசோதனைகள் மூலம், 249 தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அபாயகரமான நிலைமையையே எடுத்துக் காட்டுகிறது” என்று, ரோஸி சேனநாயக்க கூறியிருந்தார்.   

இதற்கு சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர், கொழும்பு மாநகர சுகாதார மருத்துவ பிரதான அதிகாரியான டொக்டர் ருவன் விஜயமுனி, கொழும்பு நிலைமையைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், “மாநகரில் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்ட 300 பி.சி.ஆர் பரிசோதனைகள் மூலமாக, 19 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுஉள்ளார்கள். இதன் மூலம், மாநகரில் ஐந்து சதவீதமானவர்கள் கொரோனா வைரஸ் காவிகளாகவும் கொவிட்-19 நோயாளர்களாகவும் இருப்பது தெரிய வருகிறது. கொழும்பு நகர சனத்தொகை, சுமார் ஆறு இலட்சம் ஆகும். எனவே, மாநகரில் சுமார் 30,000 நோயாளர்கள் இருப்பதையே இது காட்டுகிறது” என்று டொக்டர் விஜயமுனி கூறியிருந்தார். 

ஆனால், ஆறு இலட்சம் பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனையைச் செய்ய, அரசாங்கத்திடம் வசதி இல்லாமையால், இப்போதைக்குப் பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையையே, கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக, ஆவணங்களிலும் அறிக்கைகளிலும் சுகாதார அமைச்சு, குறிப்பிட்டு வருகிறது.  

இது ஒரு மாயை! இந்த அடிப்படையில் பார்த்தால், பரிசோதனைகளின் எண்ணிக்கையை மேலும் குறைத்து, குறைந்த எண்ணிக்கையானோரே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி மகிழலாம். ஆனால், அது யதார்த்தம் அல்ல. 

“பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், தொற்றாளர்கள்  கூடுதலாகக் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். எனவே, பரிசோதனைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்” எனச் சில வாரங்களுக்கு முன்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  கூறியிருந்தார். அவர், பொறுப்பற்ற ஒருவர் என்பதால், அக்கருத்தை எவரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.  

கொழும்பு சுகாதார மருத்துவ பிரதம அதிகாரி தெரிவித்ததை விட, நிலைமை மிகவும் மோசமாக இருப்பதையே கொழும்பு மாநகர மேயரின் கூற்றுத் தெரிவிக்கிறது. “மேற்கொள்ளப்பட்ட 991 பரிசோதனைகளில், 249 பரிசோதனைகள் ‘பொசிடிவ்’ பெறுபேறுகளைத் தந்துள்ளது” என்று ரோஸி சேனநாயக்க கூறியிருக்கிறார். அந்த அடிப்படையில் பார்த்தால், கொழும்பில் ஐந்து சதவீதமானவர்கள் அல்ல; 25 சதவீதமானோர், அதாவது 150,000 பேர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இருக்க வேண்டும். இது எவரையும் திகைக்க வைக்கும் அதேவேளை, அச்சத்தில் மூழ்கடிக்கும் தகவலாகும்.   

இந்த எண்ணிக்கை, சிலவேளைகளில் இவ்வளவு பெரிதாக இல்லாமல் இருக்கலாம். ஆயினும், இந்த எண்ணிக்கைக்கு அண்மித்ததாக இருக்கலாம். ஒன்று மட்டும் நிச்சயம்! அதாவது, சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வத் தகவல், உண்மையான நிலைமையைப் பிரதிபலிப்பதாக இல்லை.   

நடைமுறையில், கொழும்பு மாநகரமே இலங்கையின் தலைநகரமாக இருக்கிறது. நாட்டின் முக்கிய போக்குவரத்து மய்யமாகவும் மொத்த வியாபார மய்யமாகவும் இம்மாநகரமே திகழ்கின்றது. எனவே, கொழும்பில் இவ்வாறானதொரு ஆபத்தான அனர்த்த நிலைமை இருப்பதானது, நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் பாரிய ஆபத்தாகும்.   

இலங்கையில், கொவிட்-19 நோயின் இரண்டாவது அலை, கம்பஹா மாவட்டத்தில், மினுவங்கொடயிள்ள   ஆடைத் தொழிற்சாலையில் ஆரம்பித்தாலும், அதன் தாக்கத்தால் பேலியகொட மீன் சந்தை பாதிக்கப்பட்டது. அது, கொழும்பு ஊடாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாடெங்கிலும் பரவியது. மலையகத்துக்கும் கொவிட்-19 நோய், கொழும்பு ஊடாகவே பரவியது.   

“இன்று, கொழும்பின் சில பகுதிகளில், நிலைமை கட்டுக்கடங்காததாக உள்ளது” என்று, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன கூறுகிறார். 

“கொழும்பு மாநகரில் வாழும் மக்களில் 60 சதவீதமானோர் ஏழைகள். நாள் கூலிக்கு வேலை செய்பவர்கள்; சிறிய அளவில், சுய தொழில்களில் ஈடுபடுவதையும் தொழிலாகக் கொண்டவர்கள். இவர்கள் மிகவும் குறைந்த வருமானம் பெறுகிறார்கள்” என்று கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்க கூறுகிறார். இந்த ஏழை மக்கள் பெரும்பாலும், சேரிகளிலும் தொடர்மாடி வீட்டுத் திட்டங்களிலுமே வாழ்கின்றனர். ஒரு வீட்டில் பல குடும்பங்கள் வாழ்கின்றன.   

அடுத்தடுத்த வீடுகளில் வாழ்வதால், இவர்களுக்கு இடையிலான உறவும் பிணைப்பும், அவர்களது வீடுகளைப் போலவே நெருக்கமாகவே உள்ளது. அதேவேளை, கல்வியறிவு குறைந்தோரும் இவர்களது சூழலில், அதிகமாக இருக்கிறார்கள். எனவே, இவர்கள் சமூக இடைவெளியைப் பேணுதல், கைகழுவுதல், பிறர் தொட்டதை தொடாதிருத்தல், முகக் கவசம் அணிதல் போன்ற கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான, சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது, மிகவும் கடினமான விடயமாகும்.   

அதாவது, இவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வது கடினமாகும். அதனால், கொரோனா வைரஸ் இலகுவாகப் பரவும் நிலை ஏற்பட்டு, இவர்கள் வாழும்  பிரதேசங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதால், இவர்கள் வாழ்வாதாரத்தையும் இழக்கிறார்கள். அண்மையில், தனிமைப்படுத்தப்பட்ட சில பிரதேச மக்கள், வீதிக்கு இறங்கி உணவுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தியமை தெரிந்ததே.   

வறுமை ஒரு புறம்; போக்குவரத்துத் தடைகள் மறு புறம்; கொரோனா வைரஸ் தொற்றிவிடுமோ என்ற பயம் இன்னொரு புறம். மரணித்தால், கொவிட்-19 நோய் என்று கூறி, எரித்து விடுவார்களோ என, முஸ்லிம்கள் அச்சம் கொண்டு இருக்கிறார்கள். இது போன்ற பல காரணங்களால், ஏனைய நோய்களுக்கும் பலர், மருத்துவமனைகளை நாடாத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக, வீடுகளிலேயே பலர் இறந்து விடுவது தெரிய வந்துள்ளது.  

கொரோனா வைரஸ் பரவும் ஆபத்துப் போலவே, நோய் கட்டுப்பாட்டுக்கான அதிகளவிலான தடைகளும், இந்தப் பிரதேசங்களிலேயே உள்ளன. கொவிட்-19 நோயானது, மனிதனால் மனிதனுக்குப் தொற்றுவதால், மனிதனை ஏனைய மனிதர்களிடமிருந்து விலக்கி வைப்பது மட்டுமே, உலகம் தற்போது வரை அறிந்த, நோய் பரவலைத் தடுக்கும் ஒரே முறையாகும். அதற்காகவே, ஊரடங்குச் சட்டம், தனிமைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்.   

ஆனால், தொடர்மாடி வீட்டுத் திட்டங்கள், சேரிகளில் இந்த நடவடிக்கைகள் மூலம் எதிர்பார்க்கப்படும் பயன்களைப் பெறுவது, மிகவும் கடினமாகும். சனத்தொகை செறிவு, இட நெரிசல், வறுமை, குறைந்த கல்வி அறிவு போன்றவை, ஊரடங்குச் சட்டம், தனிமைப்படுத்தல் ஆகியவற்றை அர்த்தமற்றதாக்கி விடுகின்றன.   

“கொழும்பு மாநகர வாழ் ஏழை மக்களின், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துவிட்டு, மாநகரை இரண்டு, மூன்று வாரங்களுக்கு, முற்றாக மூடி, கடுமையான தடைகளை விதிக்காவிட்டால், தற்போதைய நிலையைக் கட்டுப்படுத்துவது கடினம்” என, கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்க அண்மையில் கூறியிருந்தார். 

இவ்வாறு செய்தால், ஏற்கெனவே கொரோனா வைரஸ் தொற்றியுள்ளவர்கள், நோயின் அறிகுறிகளை வௌிப்படுத்துவார்கள். அல்லது, நோய் தானாகவே குணமடைந்துவிடும். நோயின் அறிகுறிகளை வௌிப்படுத்தியவர்களை, மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லலாம். இரண்டு வாரங்களுக்குப் பின்னர், மாநகரைத் திறந்துவிடும் போது, கொரோனா வைரஸ் காவிகள், மாநகரில் இருக்க மாட்டார்கள்; இதுவே மேயரின் நோக்கமாகும்.   

ஆனால், நகரில் சகல ஏழைகளினதும் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அரசாங்கத்திடம் போதிய பணம் இருக்கிறதா? பணம் இருந்தாலும், 5,000 ரூபாயை ஒரு வாரத்தில் முடித்துக் கொள்ள வழங்கவில்லை எனக் கூறும் விமல் வீரவன்ச போன்ற அமைச்சர்கள் உள்ள அரசாங்கம், அம்மக்களின் பிரச்சினைகளை உணர்ந்துள்ளதா என்பதும் கேள்விக்குறியே. 

அதேவேளை, நெரிசல் மிகுந்த தொடர்மாடி வீட்டுத்திட்டங்களிலும் சேரிகளிலும் வாழும் இந்த மக்கள், குறித்த இரண்டு வாரங்களும் பக்குவமாக இருந்துவிடுவார்களா என்பது, அடுத்த கேள்வியாகும். எனவே, அரசாங்கம் இந்த ஆலோசனையை விரும்பவில்லை.   

கொழும்பில் இயங்கும் துறைமுகம் போன்ற பெரும் தொகையானோர் கடமையாற்றும் வேலைத்தளங்களில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது, கடினம் எனப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கூறுகின்றனர். ஆனால், அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டு, வேறு பிரச்சினைகள் எழும் என்பதால், அது போன்ற நிறுவனங்களை, அரசாங்கத்தால் மூடிவிடவும் முடியாது. எனவே, கொழும்பு மாநகர நிலைமை, மேலும் மோசமடையாவிட்டால், மிகவும் குறைந்த வேகத்திலேயே வழமைக்குத் திரும்பும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .