2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கஷ்ட காலம்

மொஹமட் பாதுஷா   / 2018 மார்ச் 09 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் நிலைமைகள் சந்தோஷப்படும் விதத்தில் இல்லை. கடந்த சில வருடங்களாக, மனதில் இருந்த நிம்மதியும் பாதுகாப்பு உணர்வும் இப்போது இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன.  

 நாட்டிலுள்ள சிறுபான்மை மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் ஒவ்வொரு பொழுதையும் இரவையும் பெரும் அச்சத்துடனேயே கழித்துக் கொண்டிருக்கின்றனர்.   

ஒரு சில வேளைகளில், நாம் மியான்மாரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றோமா என்ற மனச் சஞ்சலம் முஸ்லிம்களுக்கு ஏற்படுவதைத் தடுக்க முடியாதுள்ளது.   

ஒரு மரணத்தில் ஏற்பட்ட, இன முறுகல் நிலை, இன்று பெரும் இனக்கலவரமாகப் பெருகுவதற்கான எல்லா களநிலைவரங்களையும் உண்டுபண்ணியிருக்கின்றது. கண்டி, திகனப் பிரதேசத்தில் தொடங்கிய இனவாத வன்முறைகள் மத்திய மலைநாட்டின் எல்லா முஸ்லிம் ஊர்களிலும் ஊடுருவி, பெரும் சேதங்களை ஏற்படுத்தியிருப்பதுடன், நாட்டில் முஸ்லிம்கள் வாழ்கின்ற ஏனைய பிரதேசங்களிலும் இனவாதத்தின் அடிப்படையில் சீண்டிக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.   

இந்த நாட்டில் உள்ள முக்கால் வாசிக்கும் அதிகமான சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள், இன முறுகலற்ற அமைதியான சூழல் ஒன்றை வேண்டி நிற்பதுடன், கணிசமான சிங்கள மக்களும் இந்த இனவாத ஒடுக்குமுறைகளை வெறுக்கின்றனர்.   


ஆனால், ஒரு சிறுகுழுவினரே, இதைச் செய்வதாக அதிகாரத் தரப்பினர் சொல்கின்றனர். அதாவது, அளுத்கம கலவரம் ஏற்பட்ட வேளையில், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வழங்கிய அதே விளக்கம்தான் இது.  

எனவே, அந்த அரசாங்கத்திடம் கேட்ட கேள்வியை, இன்றைய நல்லாட்சி அரசிடமும் முஸ்லிம்கள் கேட்கின்றனர். சிறுகுழுவினர் என்றால், ஏன் அவர்களைக் கைது செய்ய முடியாமலும் நிலைமையை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமலும் இருக்கின்றது?  

சிறுகுழுவினரைக் கூட இப்போது கட்டுப்படுத்தவில்லையாயின், அது பெரிய குழுவாகி, பிரச்சினை இன்னும் பரவலடைந்ததற்குப் பிறகு, எவ்வாறு கட்டுப்படுத்தப் போகின்றீர்கள்?   

அதுமட்டுமன்றி,எல்லா யுத்த வளங்களையும் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளை முன்னறிந்த புலனாய்வுப் பிரிவினர், இவ்வாறான வன்முறைக்கான திட்டமிடல்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளவில்லையா அல்லது அவர்கள் அறிந்து சொன்னது கணக்கெடுக்கப்படவில்லையா, புலிகளைக் கட்டுப்படுத்திய பாதுகாப்புத் தரப்பினரால், ஏன் சிறுகுழுவைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கின்றது என்ற பல கேள்விகள் தாமாகவே எழுகின்றன.   

இந்தக் கேள்விகளுக்குப் பதில், இந்தச் சிறுகுழுவினருக்குப் பின்னால் இருந்து செயற்படுவோர் என நம்பப்படுகின்ற தரப்பினரின் பலமும் செல்வாக்கும் என்று அனுமானிக்க முடிகின்றது.   

அத்துடன், இலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்தி, இனங்களை மோதவிட்டு, அதில் குளிர்காய நினைக்கின்ற உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் அரசியலும் கட்சிசார் அரசியல் இலாபங்களும் என்று சொல்ல முடியும்.   
சுருங்கக் கூறின், எல்லாவற்றையும் அரசியலாகப் பார்க்கின்ற உலக ஒழுங்கும், உள்நாட்டில் பெருந்தேசியக் கட்சிகளிடையே இருக்கின்ற அதிகாரப் பலப்பரீட்சையும் என்றால் மிகையில்லை.   

நாட்டில் என்ன நடந்தது, இப்போது என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை மூவின மக்கள் மட்டுல்ல இன்று உலகமே அறியும். உள்நாட்டில் ஒரு சில கடும்போக்கு ஊடகங்கள், வழக்கம் போல சில விடயங்களை இருட்டடிப்புச் செய்தாலும்,முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியாது என்பது போல, பெரும்பாலான உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் இலங்கையில் நடப்பதை உலகின் கண்களுக்குப் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.   

கண்டி, திகன பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சிங்கள வாலிபர், முஸ்லிம் இளைஞர்களால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்கப்பட்டிருந்தார். திகனவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பொருள் விநியோக வாகனத்தின் சாரதியாக கடமையாற்றுகின்ற பண்புள்ள, ஒழுக்கமான இந்த இளைஞன், ஓட்டிச் சென்ற வாகனத்தின் பின்பக்கம், முஸ்லிம் இளைஞர்கள் பயணித்த முச்சக்கரவண்டியின் பக்கக் கண்ணாடியை சேதப்படுத்தியுள்ளது.  

 இதையடுத்து, முஸ்லிம் இளைஞர்கள் நட்டஈடு கோரியுள்ளனர். அந்த இளைஞரும் அதைக் கொடுத்திருக்கின்றார். ஆனால், அவரைத் துரத்திச் சென்று, ஓர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்துக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த சிங்கள இளைஞன், சுமார் ஒன்பது நாட்களின் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதுதான் கலவரத்துக்கான உடனடிக் காரணி எனக் கூறப்படுகின்றது.  

இந்த விடயத்தைப் பொறுத்தமட்டில், முஸ்லிம்களின் பக்கத்திலேயே தவறு, ஆரம்பத்தில் இடம்பெற்றிருக்கின்றது. இதற்காகச் சம்பந்தப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மறுபேச்சில்லை.   

அந்தச் சிங்கள இளைஞன், மிகவும் நல்லவன் என்று எல்லோரும் கூறுகின்றனர். முஸ்லிம்களுக்கு உதவி செய்பவர் என்றும் பள்ளிவாசலுக்கு வருபவர்களைக் கூட சிலநேரம் வாகனங்களில் ஏற்றிச் செல்பவர் என்றும் கூறப்படுகின்றது. அத்துடன் மிகப் பெரும் குடும்பப் பொறுப்பையும் அவர் சுமந்திருந்திருந்தார்.   

இவ்வாறான ஒரு நல்ல இளைஞனை, அவர் நட்டஈடு வழங்கிய பிறகும் தாக்கியிருந்தால் அது பெருங்குற்றமாகும். அதுவும், முஸ்லிம் இளைஞர்கள் போதையில் இருந்தார்கள் என்று சொல்லப்படுகின்றது. அப்படியென்றால், அவர்கள் இஸ்லாத்தை சரியாகப் பின்பற்றவில்லை என்பதுடன், அதனால் பெரும் கலகங்களுக்கும் காரணமாகி இருக்கின்றார்கள். எனவே, அவர்களைக் காப்பாற்ற வேண்டிய எந்தத் தேவையும் முஸ்லிம்களுக்கு இல்லை என்பதுதான் உண்மையாகும்.   

உண்மையாகச் சொல்லப் போனால், திகன பிரதேச முஸ்லிம்கள், அந்த இளைஞர்களைக் காப்பாற்ற முயற்சிக்கவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மூன்று காடையர்களைக் காப்பாற்றுவதை விட, ஒரு நற்பண்புள்ள சிங்கள இளைஞனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதையும் அதனூடாகச் சிங்கள மக்களுடனான நல்லுறவைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றே, அப்பகுதி முஸ்லிம்கள் நினைத்தனர். அதன்படி,சிங்கள இளைஞனின் மரணத்துக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள், எந்த அடிப்படையிலோ பொலிஸிடம் ஒப்படைக்கப்பட்டனர்.   

இவ்வாறான ஆயிரமாயிரம் சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடந்திருக்கின்றன. இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உணவகத்தில் இரண்டு இனங்களைச் சேர்ந்தவர்கள் வாய்த்தர்க்கம் புரிவதும், வேறு காரணங்களுக்காக இரு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அடிபிடிப்படுவதும் வழக்கமானதுதான்.   

அதுமட்டுமன்றி, இவ்வாறான விபத்துகளின் பின்னணியில் வாகனங்கள் தீக்கிரையாக்கப்படுவதும், சாரதி அடிவேண்டுவதும் அதுபோல, ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர் இன்னுமோர் இனத்தவரால் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் புதிதல்ல. ஆனால், அப்போதெல்லாம் இல்லாத விதத்தில், இம்முறை, இச்சம்பவம் பூதாகரமாக்கப்பட்டுள்ளது.   

இலங்கையில் உயர் பதவிகளில் இருந்த எத்தனையோ முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அஷ்ரபின் மரணம் கூட பொடுபோக்குத் தனத்தாலேயே இடம்பெற்றிருக்கின்றது.   

இது தவிர, மேஜர் முத்தலிப், வர்த்தகர் சியாம், வசீம் தாஜூதீன் உள்ளடங்கலாக எத்தனையோ பேர் உயிர் பறிக்கப்பட்டார்கள். முஸ்லிம்கள் பள்ளிகளுக்குள் தொழுது கொண்டிருந்த வேளையில் பலியெடுக்கப்பட்டார்கள்.   

தமிழ் அரசியல் தலைவர்களும் ஊடகவியலாளர்களும் பல தரப்பினரால் கொல்லப்பட்டார்கள். ஆனால், இந்த விடயங்களுக்காக இந்தளவுக்கு, ஒரு சமூகத்தின் காடையர்கள், மற்றைய சமூகத்தின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடவில்லை.  

திகன சம்பவத்தில், உயிரிழந்த சிங்கள இளைஞனுக்கு நடந்த அநியாயத்துக்காக முஸ்லிம்கள் மனம் வருந்துகின்றார்கள். அத்துடன் அக்குடும்பத்துக்கு நிதியுதவி செய்துவிட்டு, மேலும் நிதியுதவி செய்வதற்கான ஏற்பாடுகளை, கண்டி முஸ்லிம்கள் மட்டுமல்ல கடல்கடந்து வாழ்வோரும் மேற்கொண்டிருந்த வேளையில்தான், முஸ்லிம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.  

இது முஸ்லிம்களையும் அவர்களது சொத்துகளையும் இலக்காக வைத்து, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. அத்துடன் இது தற்செயலாக நடந்தது என்று யாராலும் நிரூபிக்கவும் முடியாது.   

மரணித்த சிங்கள இளைஞனின் இறுதிக் கிரியைகள் நடைபெற்ற தினம், அப்பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன், ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றுவிடக் கூடாது என்ற அடிப்படையிலும் பாதுகாப்புத் தரப்பினர் வழங்கிய வாக்குறுதிகளை நம்பியும் திகன, தெல்தெனிய முஸ்லிம்கள் தங்களது கடைகளை மூடியதுடன் வீடுகளுக்குள் முடங்கியிருந்தனர்.   

அந்த நேரத்தில் பொல்லுகள், கற்களுடன் வந்த காடையர்கள், ஊர்வலம் என்ற பெயரில், எல்லா முஸ்லிம் கடைகள், வர்த்தக நிலையங்களையும் நொருக்கினர்.  

திகன தொடக்கம் தென்னக்கும்பர வரையான பல கிலோமீற்றர் பாதையின் இருமருங்கிலும் இருந்த முஸ்லிம்களின் சொத்துகளுக்குக் கண்மூடித்தனமாகத் தீ வைத்து நாசமாக்கினர்.  

 இதனால் ஒரு முஸ்லிம் வாலிபன் உயிரிந்தார். இப்பகுதி முஸ்லிம்கள் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் இழந்தனர். இத்தனையும் நடந்தது பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்த வேளையில், இராணுவத்தினர் பார்த்துக் கொண்டிருக்க, இந்த அட்டுழியம் அரங்கேறியதாகப் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.   

இதையடுத்து, கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பல பொலிஸ் இராணுவக் குழுக்கள் அனுப்பப்பட்டன. ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பல சந்திப்புகளை நடத்தி அழுத்தம் கொடுத்தனர். கெஞ்சிக் கேட்டனர் - நாடாளுமன்றத்தில் உரக்கப் பேசினர்.

பௌத்த தேரர்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், அம்பாறையில் தொடங்கிய முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் இந்த நிமிடம் வரைக்கும் அடக்கப்படவில்லை.   
திகன, தெல்தெனிய, தென்னக்கும்புர, கட்டுகஸ்தோட்டை, அக்குறணை, பேராதெனிய, ஹிஸ்ராபுர, பள்ளேகல, அலதெனிய, யஹலதென்ன, மெனிக்கின்ன, இலுக்குவத்த, வத்தேகம, முறுதலாவ, எழுகொட, எல்பிடிய, ஹீப்பிட்டிய, வாரியபொல, உள்ளிட்ட மத்திய மலைநாட்டின் பெருமளவான ஊர்களில், முஸ்லிம்களின் உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. குறைந்தது 25 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளதுடன் 150 இற்கும் அதிகமான வீடுகளும் வர்த்தக நிலையங்களும் இனவாதத் தீயில் கருகியுள்ளன.   

இங்கு, அநேக அசம்பாவிதங்கள் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நாட்களில் நடந்தேறியிருக்கின்றன. ஊரடங்குச் சட்டம் என்றால் வீதிக்கு யாரும் வரக் கூடாது. ஆனால் முஸ்லிம்கள் எல்லாம் வீடுகளுக்குள் முடங்கிய பிறகு, முன்னிரவிலும் பட்டப் பகலிலும் இனவாதக் காடையர்கள், பொல்லுகளுடன் திரிவதாக முஸ்லிம்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் கூறுகின்றனர். அதுமட்டுமன்றி,ஏராளமான காணொளி ஆதாரங்களும் வெளியாகியுள்ளன.   

மரணமடைந்த சிங்கள வாகனச் சாரதியை, முஸ்லிம் இளைஞர்கள் தாக்கியது உண்மைதான். ஆனால், தனிப்பட்ட ஓரிருவருடன் தொடர்புபட்ட விடயம், ஏன் இரு இனங்களுக்கு இடையிலான கலவரத்துக்கு இட்டுச் செல்லக் காரணமாகியது என்பதைத் தேடிப் போனால், பல தகவல்கள் கிடைக்கின்றன.   

மிக முக்கியமாக,அந்தச் சிங்கள இளைஞனின் மரணம் தொடர்பில் சந்தேகம் பரவலாக எழுப்பப்பட்டுள்ளது. அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகின்றமையும், அவர் இறப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னரே குழப்புவதற்கான சில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக, வெளியில் கசிந்த சில ‘வட்சப்’ தகவல்களில் இருந்தும் அனுமானிக்கக் கூடியதாக இருந்தது.   

அத்துடன், முஸ்லிம் வீடுகளை, கடைகளை தாக்கியழித்த பெருமளவானோர் தமது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் என்பது அவர்களது காணொளி உரையாடல்களிலும் தெரிகின்றது. எனவே, இவர்கள் எல்லோரும் மரண வீட்டுக்கு வந்தவர்கள் அல்ல என்பதும், பஸ்களில் அழைத்து வரப்பட்டிருக்கின்றார்கள் என்பதும் இதற்குப் பின்னால் ஒரு திட்டம் தீட்டப்பட்டிருக்கின்றது என்பதும் மெல்ல மெல்லப் புலனாகத் தொடங்கியிருக்கின்றது.   

இதை உணர்ந்து கொண்டோ, அல்லது அழுத்தங்களின் காரணமாகவோ இப்போது பாதுகாப்பு தரப்பினர் வன்முறையாளர்களுக்கு எதிராகச் சட்டத்தைப் பயன்படுத்துவதைக் காணக் கூடியதாக உள்ளது. எவ்வாறிருப்பினும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாலும் முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என்பதையே நேற்றுவரை தொடர்ந்த வன்முறைகள் வெளிப்படுத்துகின்றன. 

கண்முன்னே அணியணியாக வருவோரைக் கைது செய்வதற்குப் படையினர் தயங்குவதன் பின்னாலிருக்கின்ற அரசியலைத்தான் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது.   

ஆயினும்,சாதாரண சிங்கள மக்கள் நல்லவர்கள். வன்முறையாளர்களுக்கு எதிராக அவர்கள் பகிரங்கமாகத் தெரிவிக்கின்ற ஒலி, ஒளிவடிவ கருத்துகள் அதைப் பறைசாற்றுகின்றன. அதேபோல் குறுத்தலாவ, மாவனல்லை, கம்பளை, நாவலப்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் பௌத்த பிக்குகள் சிலரும் சிங்கள மக்களும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக நிற்கின்றமை ஆறுதலளிக்கின்றது. 

இலங்கையில் மட்டுமல்ல, உலகெங்கும் முஸ்லிம்களுக்குச் சோதனைக் காலம்தான். முஸ்லிம்களும் முஸ்லிம் தலைவர்களும் ஒற்றுமைப்பட வேண்டும்.

 தமது பிரதேசங்களில் உள்ள சிங்கள, தமிழ் மக்களுடன் இணைந்து, காடையர்களை முறியடிக்க முயற்சிக்க வேண்டியுள்ளது. 

மிகவும் புத்திசாலித்தனமான விதத்தில் இனவாதத்தை எதிர்கொள்ள வேண்டும். விவேகமான முறையில் இனவாதக் கும்பலைக் கையாள வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .