2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டக்களம் பலம்பெற வேண்டும்

புருஜோத்தமன் தங்கமயில்   / 2018 மார்ச் 22 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியப் போராட்டத்தின் இன்றைய ஒற்றைக் குறியீடாக, ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளே’ எழுந்து நிற்கின்றார்கள்.   

முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைகளைத் தமது தோளில் சுமந்து கொண்டு முன்வந்தவர்கள் அவர்கள். 

தனது பிள்ளையையும் பேரப்பிள்ளைகளையும் ஒருங்கே தேடுகின்ற ஆச்சிமாரையும் தன்னுடைய கணவனையும் மகனையும் தேடுகின்ற தாய்மாரையும் தன்னுடைய தந்தையையும் அண்ணனையும் தேடுகின்ற மகள்மாரையும் ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்’ என்கிற அடையாளத்துக்குள் நாளாந்தம் காண்கிறோம்.   

 பல தாய்மார் தமது பிள்ளைகளின் நிலை என்னவென்று அறியாமலேயே மரணித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நெஞ்சுரத்தோடு போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.  

கிளிநொச்சியில் ஆரம்பித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டம், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மருதங்கேணி என்று அனைத்துப் பகுதிகளிலும் ஓராண்டைத் தாண்டி நீள்கிறது.   

அரசியல் கட்சிகளும் செயற்பாட்டு இயக்கங்களும் அரசசார்பற்ற நிறுவனங்களும் ஏன் ஊடகங்களும் கூட, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை முன்னிறுத்திக் கொண்டே, தமது செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டி ஏற்பட்டிருக்கின்றது.   

அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய சமூகமொன்று, சந்தித்து நிற்கின்ற அனைத்து அச்சுறுத்தல்களையும் தமிழ்ச் சமூகம் எதிர்கொண்டு விட்டது. அதிலும், முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னர், மீளெழுச்சி தொடர்பில் சிந்திப்பதற்கான வெளிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, குற்றுயிராகக் கிடந்த தமிழ்த் தேசியப் போராட்டத்தை நீதிக் கோரிக்கைகளின் சார்பில் மீட்டெடுத்துத் தந்தவர்கள் அவர்கள்.  
ஆனால், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டங்களை முன்னிறுத்திக் கொண்டு, ஒருங்கிணைந்தாலும் அரசியல் கட்சிகளும் செயற்பாட்டு இயக்கங்களும் ஊடகங்களும் உண்மையிலேயே அவர்களில் போராட்டத்தைப் போதியளவில் வலுப்படுத்தியிருக்கின்றனவா என்கிற கேள்வி எழுகிறது.  
 வடக்கு- கிழக்கில் மாத்திரமல்ல, கொழும்பிலும் நீதிக் கோரிக்கைகள் சார்ந்த போராட்டங்கள் என்றால், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவுகளே செல்ல வேண்டியிருக்கின்றது.    

ஆனால், அந்தப் போராட்டங்களில் பங்களிப்பது தொடர்பில் அரசியல் கட்சிகளினதும் தலைவர்களின் உண்மையான அர்ப்பணிப்பு என்பது, ஊடகக் கவனம் பெறுவதைத் தாண்டிய அர்ப்பணிப்பு சார்ந்ததா என்கிற சந்தேகம் இங்குண்டு.  

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்த தொடர் போராட்டம், 365 நாட்களை தாண்டிய நிலையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த செயற்பாட்டாளர் ஒருவர், இந்தப் பத்தியாளரிடம் கீழ்க்கண்டவாறு கூறினார்.  

“...கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலரும் வருகை தந்தார்கள். ஒரு சிலர் சில மணி நேரங்களுக்கு முன்னரேயே வந்து இருந்து போராட்டக்காரர்களின் உணர்வுகளோடு பங்களித்தார்கள். இன்னும் சில அரசியல்வாதிகளோ முக்கிய தருணத்தில் மாத்திரம் வந்திருந்தார்கள்.

அதில், முக்கிய அரசியல்வாதியொருவர், கவனயீர்ப்புப் போராட்டத்தின் இறுதித் தருணத்தில் ஊடகங்கள் எல்லாமும் கூடிய பின்னர், வந்து ஊடகங்கள் படம் பிடிக்கும் இடத்தை கவனமாகத் தேடி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையெல்லாம் விலக்கிக் கொண்டு முன்வந்து நின்றார். அதைப் பார்க்கும் போது, பெரும் எரிச்சல் ஏற்பட்டது. கொள்கை அரசியலை முன்னிறுத்துவதாகக் கூறிக் கொள்பவர்கள், போராடும் மக்களைப் பின்தள்ளி, தான் கவனம்பெற வேண்டும் என்று சிந்திப்பதை எவ்வாறு கொள்வது...” என்றார்.  

இவ்வாறான அரசியல்வாதிகள் குறித்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மாத்திரமல்ல; செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் கூட அறிந்தே வைத்திருக்கின்றார்கள்.   

ஆனால், அந்த அரசியல்வாதிகளின் சிறுபிள்ளைத்தனங்களுக்கு கவனம் கொடுத்து, உண்மையான பிரச்சினையைத் திசைதிருப்பிவிட வேண்டாம் என்பதற்காக பலரும் ஒதுங்கிப் போக வேண்டி வந்திருக்கின்றது.  

 எனினும், இவ்வாறான நிலையைத் தொடர்ந்தும் அனுமதிப்பது என்பது, உண்மையான உணர்ச்சியாளர்களையும் கூட விலகியோட வைத்துவிடும்.  

இன்னொரு கட்டத்தில் நோக்கினால், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டத்தை நோக்கி, சாதாரண தமிழ் மக்களையே குறிப்பிட்டளவு அழைத்து வர முடியவில்லை.   

தமிழ் மக்களில் பெரும்பான்மையினருக்கு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டங்களுக்கும் தமக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்கிற உணர்நிலை மெல்ல மெல்ல தோற்றுவிக்கப்பட்டுவிட்டது.   

தொடர் போராட்டக் கூடாரங்களையும் அங்கு உடல், உயிர் இழைத்துப் போராடும் உறவுகளையும் பொருட்டாகக் கருதுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.   

நாளாந்த ஜீவனோபாயம் என்பதே பெரும் தலையிடியாக இருக்கின்ற போது, இவ்வாறான போராட்டக்களங்களை நோக்கிய நகர்தல் என்பது இலகுவானதல்ல, என்கிற சாமானிய தமிழ்க் குரலும் கேட்கப்படக் கூடியதுதான்.   

ஆனால், அந்தப் போராட்டங்களில் ஒலிப்பதுவும் இந்தச் சாமானிய தமிழ்க் குரல்களில் ஒரு பகுதிதான் என்பதுவும் அது மெல்ல மெல்லத் தனித்து விடப்படுகின்றதோ என்பதுமே இப்போதுள்ள பெரும் அச்சம்.  

தமிழ்த் தேசியப் போராட்டங்களை அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் வழிநடத்தியிருந்தாலும் அதைத் தலையாய கடமையாக ஏற்று நடந்தவர்கள் தமிழ் மக்கள். அதிலும் குறிப்பாக அதிகார அரசியல்- பொருளாதார மேல்நிலையில் இல்லாத சாதாரண தமிழ் மக்கள்.   

இன்றைக்கும் தமிழ்த் தேசியத்தின் காவலர்களாக அந்த மக்களே இருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் களத்துக்கு வருவதற்கான நடைமுறைச் சிக்கல்கள் பெருமளவு இருக்கும் போது, அந்த இடத்தைச் சிக்கல்களின் அளவு குறைந்தவர்கள் நிரப்பியிருக்க வேண்டும்; வழிப்படுத்தியிருக்க வேண்டும்;  முன்கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறான சூழலொன்று கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழ்ச் சூழலில் ஏற்படவேயில்லை என்பதுதான் வேதனையானது.  

தேர்தல் அரசியல் அடிபிடிக்குள்ளும் மேடிமைத்தனம் சார் இழுபறிகளுக்குள்ளும் யாழ்ப்பாணம் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்ற நிலையில், அர்ப்பணிப்பான போராட்டங்களை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்துவது சார்ந்தும் நீதிக் கோரிக்கைகளுக்கான அழுத்தங்களை வலுப்படுத்துவது சார்ந்தும் சிந்திப்பதற்கும் இயங்குவதற்குமான சூழல் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது.  

 யாழ்ப்பாணத்தைப் பிரதானப்படுத்தி நிகழ்ந்து கொண்டிருக்கின்ற அரசியல் என்பது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடாக மாறிவிடாது பார்த்துக் கொள்ள வேண்டிய தேவை உண்டு. அது, வார்த்தையளவிலான தமிழ்த் தேசியம் என்கிற நிலைகளைக் கடந்து, தமிழ் மக்களின் ஒவ்வொரு அடையாள அதிகார வரம்பையும் காப்பாற்றுவதில் அக்கறை செலுத்த வேண்டும்.   

அதுதான், தமிழர் தாயகம் என்கிற பெரும் அடையாளத்தைத் தக்க வைக்க உதவும். மாறாக, யாழ்ப்பாணத்துக்குள் மாத்திரம் முனைப்புப்பெற்று மூழ்குதல் என்பது மக்கள் மத்தியில் அதிருப்தியையே உண்டு பண்ணும்.  

தமிழ்த் தேசியப் போராட்டக் களத்தில் அனைத்து வகையான போராட்டங்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளே முன்னிற்கிறார்கள். அவர்களைத் தாண்டி போராட்டங்களில் பங்களிப்பவர்களின் எண்ணிக்கையென்பது நூறுகளுக்குள் அடங்கிவிடும்.   

இப்போதெல்லாம், தேர்தல் கூட்டங்கள், நூல் வெளியீட்டு விழாக்களுக்குக் கூடும் கூட்டத்தை விட, நீதிக்கோரிக்கைகளுக்கான போராட்டங்களுக்கு கூடும் கூட்டத்தின் அளவு பெரும்பாலான தருணங்களில் குறைவாகவே இருக்கின்றது. இவ்வாறான தன்மை நீடிக்கும் போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் நீதி கோரிய பயணம் கணக்கெடுக்கப்படால் போகும் சூழல் உருவாகும்.  

அரசியல் அதிகாரத்துக்கானதும் நீதிக் கோரிக்கைகளுக்குமான போராட்டங்களையே வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்ற தமிழ் மக்களின் போராட்ட சூழல் என்பது, ஓர் அளவில் மட்டுறுத்தப்பட்டு, அதன் வலுவை இழந்து வருகின்றதோ என்று தோன்றுகின்றது.   

அப்படிப்பட்ட நிலையில், போராட்ட வடிவமாக எழுந்து நிற்கின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டங்களை பலப்படுத்த வேண்டியதும் எங்களின் முன்னாலுள்ள முக்கிய விடயமாகும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .