2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

காணிகள் விடுவிப்பும் இராணுவ நிகழ்ச்சி நிரலும்

கே. சஞ்சயன்   / 2018 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்காக, சில இராணுவ முகாம்களை மூடுவதற்கும், சில இராணுவ முகாம்களின் பருமனைக் குறைப்பதற்கும், இராணுவத் தளபதி எடுத்துள்ள நடவடிக்கை முட்டாள்த் தனமானது என்று விமர்சித்திருக்கிறார் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.  

முன்னர் சரத் பொன்சேகாவின் தீவிர விசுவாசியாக இருந்தவர், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, அதனால், மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தால் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டவர்.   
வெளிநாட்டுக்குத் தப்பியோடி, தலைமறைவாக இருந்துவிட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அடுத்த நாளே, அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து இறங்கியிருந்தார். அந்தளவுக்கு, இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகம்.  ஆனால், லெப்.ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், இவர்களுக்கிடையிலான உறவுகள் நன்றாக இல்லை.  

ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டு விடயத்தில், இருவரும் முரண்பட்டுக் கொண்டனர். வேறு பல சந்தர்ப்பங்களிலும், முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டு வந்தனர். இராணுவத்துக்குள் சரத் பொன்சேகா தலையீடு செய்கிறார். தனக்குத் தெரியாமல் அதிகாரிகளுடன் பேசுகிறார், இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் பற்றிப் பேசுகிறார் என்று, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், இராணுவத் தளபதி முறையீடு செய்திருந்தார் என்றொரு தகவலும் வெளியானது.  

இப்போது அந்த மோதல், இராணுவத் தளபதியின் முடிவை முட்டாள்த்தனமானது என்று சரத் பொன்சேகா விமர்சிக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது.  இந்த விமர்சனம், ஓர் இராணுவ ரீதியான கண்ணோட்டத்துக்கும் அப்பாற்பட்ட ஒன்றாகவே தெரிகிறது.  

இராணுவத் தளபதி, அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிந்து செயற்படுகிறார் என்ற தொனியில் தான், சரத் பொன்சேகாவின் கருத்துகள் அமைந்திருக்கின்றன. ஒருவகையில் அது, உண்மையானதும் கூட.  
தற்போதைய அரசாங்கம், நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு - முற்றிலுமாக இசைந்து செயற்படாவிடினும், சில குறிப்பிட்ட விடயங்களில், அவ்வாறு நடந்து கொள்ள முனைகிறது.  அவ்வாறான நல்லிணக்கச் செயற்பாடுகளுடன், இராணுவத்தை இணைந்து செயற்பட வைப்பதில், தற்போதைய இராணுவத் தளபதி அதிகளவு ஈடுபாடு காட்டி வருகிறார். அரசாங்கத்தின் அந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைக்கிறார்.  

பொதுவாக, பெரும்பாலான இராணுவத் தளபதிகள், அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைப்பவர்களாகத் தான் இருந்து வந்திருக்கிறார்கள். அவ்வாறு ஒத்துழைக்க மறுத்தவர்கள், அந்த அரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.  உதாரணத்துக்குச் சொல்லப்போனால், சரத் பொன்சேகாவுக்கும் கூட அதே நிலை, 2005இல் ஏற்பட்டது.   

சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகும் தகுதியில் இருந்தபோது, அவர் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துழைக்கமாட்டார் என்பதாலேயே, ஜெனரல் சாந்த கோட்டேகொடவுக்குப் பதவி நீடிப்பு வழங்கி, இவரைக் கழற்றிவிட, சந்திரிகா அரசாங்கம் தயாராக இருந்தது.  

அந்தச் சமயத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தான், ஓய்வுபெறும் நிலையில் இருந்த சரத் பொன்சேகாவுக்கு இராணுவத் தளபதியாகும் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தது.  

அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்காத புகழ்பெற்ற இராணுவத் தளபதிகள் பலரால், இராணுவத் தளபதியாகும் வாய்ப்பைப் பெற முடியாமல் போனது வரலாறு. மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, மேஜர் ஜெனரல் லக்கி அல்கம போன்றவர்கள் அதற்கு உதாரணம்.  சரத் பொன்சேகாவை விடவும், போர்த் திறமையை வெளிப்படுத்தியவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா. ஆனால், அவரையும் கூட அரசியல் நிகழ்ச்சி நிரல் தான் ஓரம் கட்டியது. அதனால், பெரும்பாலான தளபதிகள், அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைத்தே வந்துள்ளனர். எனினும், அதற்கு ஒத்துழைக்காத சில சம்பவங்கள் நடந்ததையும் மறந்து விட முடியாது.  

ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், தாம் யாழ்ப்பாணத்தில் கட்டளை அதிகாரியாக இருந்த போது, உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் சில இடங்களை விட்டு விலகுமாறு, அரசாங்கம் அழுத்தம் கொடுத்தது என்றும் ஆனால், அதற்குத் தாம் மறுத்து விட்டதாகவும் சரத் பொன்சேகா கூறியிருக்கிறார். அது உண்மை.   

2002ஆம் ஆண்டு, போர்நிறுத்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவத் தளபதிகள் மட்டக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பிராந்திய மட்டத்திலான அந்தக் கூட்டங்களில், பாதுகாப்பு நெருக்கடிகளைக் குறைப்பது பற்றி ஆராயப்பட்டன.  

அதன் தொடர்ச்சியாகத் தான், உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகள் சிலவற்றை விடுவிக்க வேண்டும் என்று, விடுதலைப் புலிகள் வலியுறுத்தினர். அதனை அப்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் ஏற்றுக்கொண்டது. ஆனால், யாழ். குடாநாட்டுக்கான தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா அதற்கு இணங்கவில்லை.   

சரத் பொன்சேகாவின் அந்த இறுக்கமான நிலைப்பாடு தான், பிராந்திய மட்டத்திலான பாதுகாப்புக் கூட்டங்கள் தடைப்பட்டுப் போகவும், அரசாங்கத்தின் இராணுவ நிகழ்ச்சி நிரல் மீது, விடுதலைப் புலிகள் சந்தேகம் கொள்ளவும் காரணமாகியது.  

அதுபோன்று, நாகர்கோவில் பகுதி முன்னரங்க நிலையிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதுபற்றி “நந்திக்கடலுக்கான பாதை“ நூலில், மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன குறிப்பிட்டிருக்கிறார். அவர் அப்போது, நாகர்கோவிலுக்குப் பொறுப்பான 55 ஆவது டிவிசனின் ஒரு பிரிகேட்டுக்குப் பொறுப்பாக இருந்தார்.   

நாகர்கோவில் முன்னரங்க நிலையில் ஒரு பகுதியில், இராணுவம் அமைத்திருந்த புதிய பாதுகாப்பு நிலையை விலக்குமாறு, கண்காணிப்புக் குழு மூலம் புலிகள் கோரினர். அரசாங்கமும் அதற்குத் தயாராகவே இருந்தது. ஆனால், அப்போது கேணல் நிலையில் இருந்த கமல் குணரத்ன அதனை நிராகரித்து விட்டார்.  இதுவும் இருதரப்பு முரண்பாடுகள் வலுப்பதற்குக் காரணமாக இருந்தது.  

இப்போதும் கூட, அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் சிலர் இருக்கின்றனர். தற்போதைய அரசாங்கம், நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலணியை உருவாக்கிய போது. அதில் இராணுவ அதிகாரிகளுக்கும் இடமளிக்க வேண்டும் என்று முரண்டு பிடித்து, வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீரவுடன் வாக்குவாதம் செய்திருந்தார் யாழ்ப்பாணத்தில், 52ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சாஜி கால்லகே.  

உடனடியாக அவர் இராணுவத் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டு, முக்கிய பொறுப்புகள் அளிக்கப்படாமல் வைத்திருக்கப்படுகிறார். இந்த மாத இறுதியுடன் அவர், ஓய்வுபெறவும் போகிறார்.  

விதிவிலக்காகச் சில அதிகாரிகள் இருந்திருந்தாலும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துழைப்பது என்பது, இராணுவத் தளபதிகளின் பொதுவான இயல்பாகத் தான் இருந்து வந்திருக்கிறது.  

1989ஆம் ஆண்டு, இந்தியப்படைகளுக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு, பிரேமதாச அரசாங்கம் ஆயுதங்களை வழங்க முடிவு செய்தது. அந்த ஆயுதங்களைப் புலிகளிடம் கொண்டு போய் சேர்த்ததும் இராணுவ அதிகாரிகள் தான். அந்த ஆயுதங்கள், தமக்கு எதிராகவும் திரும்பும் என்று, பல இராணுவ அதிகாரிகள் சந்தேகம் கொண்டிருந்தனர். ஆனாலும். அவர்கள் அப்போது பிரேமதாச அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலை எதிர்க்கவில்லை. அதனை மௌனமாக அங்கிகரித்திருந்தனர்.  

அப்போதிருந்த சூழலும் இப்போதுள்ள சூழலும் ஒன்றல்ல. சரத் பொன்சேகாவும் கமல் குணரத்னவும், அரசாங்கத்துடன் முரண்டுபிடித்த காலம், போர் நிறுத்த காலம். இது போர் முடிந்த காலம்.  
பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்காக, இராணுவ முகாம்களை சுருக்குதல் முட்டாள்த்தனமானது என்று, போர் முடிந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் சரத் பொன்சேகா கூறுகிறார்.  போர் முடிந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னரும், அவரது போர்க்கால மனோநிலை மாறவில்லை என்பதைத் தான் இது காட்டுகிறது.  

வடக்கில் இன்னமும் 16,115 ஏக்கர் காணிகளும், கிழக்கில், 3,185 ஏக்கர் காணிகளும், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளன என்பதை, இராணுவத் தளபதி உறுதி செய்திருக்கிறார்.  

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் காணிகளில் 2,621 ஏக்கர் காணிகள் தனியாருக்குச் சொந்தமானவை. இந்தக் காணிகளை விடுவிப்பதற்குத் தான், முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இதனை, சரத் பொன்சேகா கடுமையாக எதிர்த்திருக்கிறார்.  

இராணுவம் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது முக்கியமானது தான். சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு முன்னுரிமை என்பது, ஒரு தலைப்பட்சமானது. அது யாருக்காக பாதுகாப்பு என்பதைக் கவனத்தில் கொள்ளாமல் கண்மூடித்தனமான பாதுகாப்புக் கொள்கையை வெளிப்படுத்துகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை, வெற்றி கொண்ட தளபதியாக சரத் பொன்சேகா இருந்தாலும், அவர் போருக்கு மாத்திரமே ஒத்துழைக்கக் கூடிய தளபதியாக இருந்தார் என்பது, இதன் மூலம் நிரூபணமாகிறது.  

2002 இல், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் முரண்பட்டதை மாத்திரம் வைத்துக் கொண்டு, இந்த முடிவுக்கு வர முடியாது. போர் முடிந்த பின்னர், மஹிந்த ராஜபக்‌ஷவும் கூட, இராணுவத் தளபதி பதவியில் இருந்து அவரை நீக்கி, கூட்டுப் படைகளின் தளபதியாக நியமித்தார். மஹிந்த அரசாங்கத்தின், அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அவர் ஒத்துழைக்கமாட்டார் என்பதால் தான், அந்த முடிவு எடுக்கப்பட்டது. அதனால் தான், அவர் மஹிந்த அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொண்டு வெளியேறவும் நேரிட்டது.  

அதேபோன்றதொரு முடிவைத் தான், தற்போதைய இராணுவத் தளபதியும் எடுக்க வேண்டும் என்று, சரத் பொன்சேகா ஆசைப்படுகிறார். அரசியல்வாதிகளுக்கு, இராணுவத்தை நிலைப்படுத்தும் விடயங்களில் போதிய அறிவில்லை என்று சாடும் அவரால், போர்க்காலத்திலும், சமாதான காலத்திலும் எவ்வாறு வேறுபட்ட அணுகுமுறையுடன் செயற்படுவது என்று, சரியாகப் புரிந்து கொள்ள முடியாதிருப்பது ஆச்சரியம்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X