2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

காலநிலைக் குற்றவாளிகள்: யாரை நோக்கி பாயும் தோட்டா?

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2019 ஜூலை 14 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றம் புரிபவர்கள் மீது எப்போதும் குற்றஞ் சாட்டப்படுவதில்லை. குற்றஞ் சாட்டப்படும் எல்லோரும் குற்றம் புரிந்தவர்களுமல்லர். ஆனால், உலகம் என்றுமே நியாயத்தின் படி நடந்ததில்லை. நீதியும் அப்படியே. இன்று உலகம் எதிர்நோக்கும் காலநிலை மாற்றங்களுக்கான பழியும் யார் மீதோ சுமத்தப்படுகிறது. வளர்ச்சியடைந்த நாடுகள் செய்கிற காரியங்களுக்கான பழி வளர்ந்துவரும் நாடுகளின் மீது விழுகிறது. குற்றவாளிகளே குற்றவாளிகளைக் குற்றஞ்சாட்டிவிட்டு தமது கைகளைக் கழுவி புனிதர்களாகிறார்கள்.   

காலநிலை மாற்றத்தின் கோர விளைவுகளை முன்னெப்போதையும் விட இப்போது நாம் நன்கு உணர்கிறோம். இலங்கை போன்றதொரு சிறிய நாட்டில் ஒரே காலப்பகுதியில் வடக்கில் வரட்சியையும் தெற்கில் வெள்ளப்பெருக்கையும் கடந்த சில ஆண்டுகளாக நாம் அனுபவித்துள்ளோம். பருவமழை பொய்ப்பது வாடிக்கையாகிவிட்டது. இவை காலநிலை மாற்றம் என்பது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் காட்டி நிற்கும் குறிகாட்டிகள். இதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்ற கேள்வி, பதில்களின்றித் தொக்கி நிற்கிறது. உலகம் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் போதும் இலாபவெறியும் பேராசையும் இதைத் தடுப்பதற்கான வழிகளைத் தடுக்கின்றன. இதுதான் இன்றைய யதார்த்தம். இதன் மீதான பழியை யார் மீது போடுவது?   

புவி வெப்பமடைந்து வருகிறது. இதைத் தடுப்பதற்கான வழிவகைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த மூன்று தசாப்தங்களாக அறிவியலாளர்களும் ஆர்வலர்களும் தொடர்ச்சியாகக் கோரி வருகிறார்கள். அது செவிடன் காதில் ஊதிய சங்காய் பயனற்றுப் போய்க் கொண்டிருக்கிறது. சூழலுக்கும் புவிக்கும் மிகப்பெரிய மாசுக்களைச் செய்பவர்கள் மற்றவர்கள் மீது பழியைப் போட்டுவிட்டு அப்பால் நகர்கிறார்கள். எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை அரசியல்வாதிகளும் செல்வந்தர்களும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.   

ஐ.நா. அறிக்கை: வர்க்க வேறுபாட்டின் விளைவுகள்   

வறுமை மற்றும் மனிதஉரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்டன் ‘காலநிலை நிறவெறிச் சூழ்நிலை’ (Climate Apartheid Scenario) என்ற சொற்பிரயோகத்துடன் காலநிலை மாற்றத்தின் விளைவுகளின் கோரத்தன்மையை குறித்துரைக்கும் அறிக்கையொன்றைக் கடந்தவாரம் வெளியிட்டார். இந்த அறிக்கை சில முக்கியமான விடயங்களைக் கோடிட்டுக் காட்டுகிறது. அவற்றை பின்வருமாறு சுருக்கலாம்:   

1. காலநிலை மாற்றமானது வறுமையில் தவிக்கின்ற மக்களுக்கு அதிர்ச்சியளிக்கத்தக்க கோரமான விளைவுகளை ஏற்படுத்த வல்லது. காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள சிறந்த செயல் முறையை நாம் எட்டினாலும் கூட மில்லியன் கணக்கான மக்கள் உணவின்மையாலும் நோய்களாலும் பாதிக்கப்படுவார்கள். இது கட்டாய இடப்பெயர்வையும் உணவுக்கான போர்களையும் நீர் பற்றாக்குறையும் ஏற்படுத்த வல்லது.   

2. இதை சரியாகச் சொல்வதானால் காலநிலை மாற்றமானது கடந்த 50 ஆண்டுகளில் மனித குலம் முன்னேற்றம் கண்ட அபிவிருத்தி, உலகளாவிய சுகாதாரம், வறுமை ஒழிப்பு ஆகியவற்றை இன்னும் 50 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தும் வல்லமை படைத்தது.   

3. காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மனித உரிமைகள் என்ற ஒன்றை பொருத்தமற்றவையாக மாற்றும். காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் மனித உரிமைகளை மதிப்பதற்கான அடிப்படையாகும். கடந்த காலத்தில் காலநிலை மாற்றம் என்பது மனித உரிமை செல்நெறியின் பகுதியாக கருதப்படவில்லை. ஆனால், இன்று காலநிலை மாற்றம் என்பது மனித உரிமையின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கிவிடும் என்பதே உண்மை.   

4. தற்போதைய நிலை தொடருமாயின் உலகப் பொருளாதாரம் என்பது காலநிலை மாற்றத்தால் தொடர்ச்சியாக பாரிய நெருக்கடிகளை சந்திப்பதோடு பல்லாயிரக்கணக்கான மக்களை தொடர்ந்து வறுமைக்குள் தள்ளிய வண்ணமே இருக்கும்.   

5. காலநிலை மாற்றத்தை எதிர் கொண்டு அதற்கான தீர்வுகளை நோக்கி நகர்வதற்கு உலகப் பொருளாதார செயல்முறை மீதான அடிப்படையான மாற்றம் அவசியமாகிறது. நிதி மூலதனத்தை மய்யப்படுத்திய உலகப் பொருளாதார கட்டமைப்பு மாற்றம் பெறாமல் காலநிலை மாற்றத்துக்கு நின்று நிலைக்கக்கூடிய நீண்டகால நோக்குடைய தீர்வொன்றைக் காண இயலாது.   

6. சுவட்டு எரிபொருள்களின் இருந்து பொருளாதார நல்வாழ்வை வேறு பிரிக்காமல் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது குறித்துப் பேசிப் பயனில்லை. இன்று நலமான தரமான வாழ்வு என்பது மிகை நுகர்வாலும் அதிகளவிலான சக்தி பாவனையாலுமே சாத்தியமாகி உள்ளது. இவை இரண்டும்; சுவட்டு எரிபொருள்களினால் கட்டமைக்கப்பட்டவை.   

7. இன்று அரசாங்கங்கள், மனித உரிமை அமைப்புக்கள், ஆர்வலர்கள் யாவரும் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த கடந்த சில தசாப்தங்களாக தவறியுள்ளனர். இதை முதற்கண் எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்குப் பொறுப்புக் கூறவேண்டும். இதனாலேயே அரசாங்கங்களின் வெட்டிப்பேச்சுகளும் தூரநோக்கற்ற திட்டங்களும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது குறித்த தவறான திசைவழியை காட்டியுள்ளன.   

பிலிப் அஸ்ட்டனின் அறிக்கை வெளிப்படையாகவே அரசாங்கங்களையும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும் குற்றஞ்சாட்டுகிறது. அதேவேளை மனித உரிமைகள் என்ற கருத்துருவின் இருப்பே காலநிலை மாற்றத்தை மனிதகுலம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதிலேயே தங்கியிருக்கிறது என்ற வாதத்தை முன்வைக்கிறது. இது கவனிப்புக்குரியது.   

இதேவேளை இந்த அறிக்கை முன்வைக்கின்ற இன்னொரு முக்கியமான வாதத்தையும் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அது அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘காலநிலை நிறவெறிச் சூழ்நிலை’ பற்றியது. அறிக்கையானது உலகில் உள்ள சிலருக்கு சிறப்புச் சலுகைகளை அளிக்கக்கூடிய வண்ணம் காலநிலை மாற்றத்தின் தீர்வுகள் வடிவமைக்கப்படுவதன் ஆபத்துக்களை சுட்டுகிறது.   

தப்பிக்கும் செல்வந்தர்களும் தவிக்கும் ஏழைகளும்   

சமூகத்தில் செல்வம் படைத்த மனிதர்கள் தங்கள் பொருளாதார வலிமை மூலம் காலநிலை மாற்றத்தின் விளைவுகளில் இருந்து தப்பிவிடுகிறார்கள். இது எல்லோருக்கும் சாத்தியமானது அல்ல. செல்வம், காலநிலை மாற்றத்தின் விளைவுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான மூலமாக உள்ளது. செல்வம் படைத்தவர்கள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளில் இருந்து தப்பித்துக் கொள்ள கூடிய வகையிலேயே காலநிலை மாற்றம் குறித்த செயற்பாடுகள் அரங்கேறுகின்றன.   

சமூக பாதுகாப்பையும் அடிப்படை சேவைகளையும் தனியார்மயப்படுத்துவதன் மூலம் காலநிலை மாற்றத்தின் விளைவுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழி சாதாரண மக்களிடம் இருந்து பிடுங்கி எடுக்கப்படுகிறது. காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை தனியார் மயப்படுத்தலானது சாதாரண மக்களை வறுமையில் தள்ளும் செயலாகவே இருக்கிறது. இதை உலக வங்கி போன்ற அமைப்புகள் தங்களது திட்டமிடலின் ஊடாக செயற்படுத்தி செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாகவும் வறியோரை மேலும் வறியோராகவும் மாற்றும் வகையில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.   

இது காலநிலை மாற்றத்தில் குற்றவாளிகளாக கருதப்பட வேண்டியவர்கள் யார் என்ற அடிப்படையான கேள்வியை எழுப்புகிறது. கோடிக்கணக்கான டாலர்கள் காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை எட்டும் நோக்குடன் தனியார் நிறுவனங்களின் கைகளுக்கு சர்வதேச நிறுவனங்களினால் வழங்கப்படுகின்றன. இவை காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகள் என்பதன் பெயரால் சாதாரண மக்களிடம் இருக்கின்ற நிலம், நீர் போன்ற அடிப்படையான உரிமைகளை பறிப்பதை நோக்காகக் கொண்டுள்ளன என்பதையும் இங்கு நோக்க வேண்டும்.   

காலநிலை மாற்றம் குறித்து அவதானம் செலுத்தா விட்டால் அது ஏற்படுத்தும் பொருளாதார பாதிப்புகள் எவ்வாறு சாதாரண மக்களை பாதிக்கிறது என்பதை மேற்சொன்ன ஐ.நாவின் அறிக்கை புள்ளிவிவரங்களுடன் எடுத்துக் காட்டுகிறது. உலக தொழிற்துறையில் 40 வீதமான வேலைவாய்ப்புகள் நின்று நிலைக்கக் கூடியதும் சுகாதாரமானதுமான சூழலிலேயே தங்கியுள்ளன. இவை இரண்டையும் காலநிலை மாற்றம் இல்லாமல் செய்துவிடும். சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் கணிப்பின்படி காலநிலை மாற்றத்தின் விளைவால் 1.2 பில்லியன் தொழில்கள் இழக்கப்படும். இதில் வேலையிழப்பவர்கள் செல்வந்தர்கள் அல்ல. சாதாரண மக்களின் தொழில்களே இதன்மூலம் இழக்கப்படும்.   

இதுதொடர்பில் மிக அண்மையில் வெளிவந்த நூல் ஒன்றையும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும். காபன் அசமத்துவம்:காலநிலை மாற்றத்தில் செல்வந்தர்களின் பங்கு (Carbon Inequality: The role of rich in climate change) என்ற தலைப்பில் அமைந்த புத்தகம் செல்வந்தர்களிடம் குவியும் செல்வமும் அவர்களது சொகுசான வாழ்க்கையும், அரசியல் செல்வாக்கும் எவ்வாறு அவர்களை உலகின் மிக மோசமான சூழலை மாசுபடுத்துபவர்களாக மாற்றி இருக்கிறது என்பதை ஆராய்கிறது. அதேவேளை, அவர்களது அதிகாரபலமும் பணபலமும் காலநிலை மாற்றத்திற்கு காரணமாக இருப்பது சாதாரண மக்களின் பொறுப்பற்ற செயல்களே என்ற ஒரு பொதுப்புத்தி மனநிலையை உருவாக்குவதற்கு எவ்வாறு உதவியுள்ளது என்பதையும் இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.   

காலநிலை மாற்றத்துக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் யார்? அதைத் தடுப்பதற்கான தீர்வுகளை நோக்கி நாம் நகராமல் இருப்பதற்குக் காரணமாய் இருப்பவர்கள் யார்? ஆகிய கேள்விகளை நாம் ஒவ்வொருவரும் கேட்டாக வேண்டும். நமக்காக இல்லையென்றாலும், நமது பிள்ளைகளுக்காக, நமது பேரக்குழந்தைகளின் எதிர்காலத்துக்காக இவை கட்டாயம் கேட்டப்பட வேண்டும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X