2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காலம் கடந்த ஞானம் அவசியமில்லை

Editorial   / 2019 ஜனவரி 17 , மு.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -க. அகரன்

கருத்துகளைத் தௌிவாக வெளிப்படுத்துவதில் ஏற்பட்டு வரும் முரண்பாடான நிலைமைகளுக்குத் தொடர்பாடல் சீரின்மையே (communication error) காரணமாக அமைகின்றது. இவ்வாறான பிரச்சினைகளுக்குப் பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள் போன்றவை நடத்தப்பட்டு தீர்வுகள் காண்பது தொடர்பான தெளிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும்  வழங்கப்படுவது வழக்கம்.

எனினும், இளைஞர், யுவதிகளுக்கும் அரச திணைக்கள உத்தியோகத்தர் மற்றும் அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படும் இத்தகைய தௌிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும் அரசியல் தளத்தில் இருப்போருக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி, அரசியல் களத்தில் அண்மைய நாள்களில் நடந்தேறிய சம்பவங்கள், எமக்கு நிறையவே கற்பித்துத் தந்துள்ளன.

மத்திய அரசாங்கத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான முரண்பாடுகளே  பிரதானமான காரணமாக இருந்துள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், இரு தலைமைகளுக்கும் ஏற்பட்ட கருத்து நிலைப்பாட்டுத் தெளிவுறுத்தல்களில், தொடர்பாடல் சீரின்மையே காரணமாக அமைந்துள்ளது.

தொடர்பாடல்களில் ஏற்படும் முரண்பாடான நிலைமைகள், நாடொன்றில் அரசியல் பிறழ்வை ஏற்படுத்தும் நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதற்கு, மேற்சொன்ன சம்பவம் மிகச் சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும்.  இந்தநிலையில், தற்போதும் மத்திய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள அரசல் புரசலான கருத்து முரண் நிலைப்பாடுகள், ஆட்சி நீடிப்புக்கான சாத்தியப்பாடுகளாக உள்ளனவா என்பது சந்தேகமே.

இச்சூழலில், தமிழர் தரப்பு அரசியல் களம் என்றும்போல் சூடானதாகவே உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான விமர்சனங்கள் நிறைந்துள்ள நிலையில், கடந்த ஆட்சிக் குழப்பத்தில், கூட்டமைப்பின் செல்வாக்கு, சற்று உயர்வடைந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. 

ஐக்கிய தேசியக் கட்சியின் ‘எடுபிடி’யாகவும் அரசாங்கத்தின் இயக்க சக்தியாகவும் கூட்டமைப்பு இருக்கிறது என்றவாறான விமர்சனங்கள் தென்னிலங்கை அரசியல்வாதிகளிடம் காணப்பட்டாலும் கூட, தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்த அபிவிருத்தியுடன் கூடிய உரிமைக்கான குரலைத் தாம் பலப்படுத்தி உள்ளதாக, கூட்டமைப்பு வெளிப்படுத்தி வருகின்றது. 

சுமந்திரன் மீதான விமர்சனங்களும் வெறுப்புணர்வுகளும் கடந்த காலங்களில் இருந்ததைப் போலல்லாது, சற்றுத் தணிந்துள்ளமையையும் காணமுடிகிறது. இந்நிலையில், மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வரும் தொடர்பாடல் செயற்பாடுகளே இதற்குக் காரணம் எனலாம்.

வெறுமனே, தமது கூட்டுக்குள் இருப்பவர்களுக்கு இடையில் பரஸ்பரம் கலந்துரையாடல்களை நடத்துவதில்லை என்கின்ற கருத்துகள் மேவிக்காணப்பட்டிருந்ததுடன் இதன் காரணமாகக் கூட்டமைப்பின் கூட்டில் இருந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் வெளியேறக் காரணமாக இருந்துள்ளது. இதன் தாக்கத்தைப் பின்னர் வந்த நாள்களில் அவ்விரு கட்சிகளும் சந்தித்திருந்தன.

இந்நிலையில், கூட்டமைப்புக்குள் உள்வீட்டு முரண்பாடுகள் இன்று காணப்பட்டாலும் கூட, அதைப் பெரிதாக்கி வெளியிடும் நிலைக்கு எவரும் செல்வதாகத் தெரியவில்லை. எனினும், அவர்களுக்குள் முரண்பாடுகள் இல்லை என்பதல்ல; அங்கு தெளிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதே அர்த்தமாகக் கொள்ளப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில், அரசமைப்பின் உருவாக்கம் என்பது, எந்தத் தளத்தில் உள்ளது என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. பௌத்த சங்கத்தின் மகாநாயக்கர்களைச்  சந்தித்து ஆசிபெறச் செல்லும் அரசியல்வாதிகளிடம், அவர்கள் கேட்கும் முக்கிய கேள்வியாக, அரசமைப்பு தொடர்பான விவகாரமே உள்ளது. 

இவ்விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அதிகளவான பிம்பங்களை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளையே மகாநாயக்கர்களுக்கு முன்வைக்கின்றனர்.

சுதந்திரதினத்துக்கு முன்னர் அரசமைப்பு வரும் என்பதான கருத்தை ஏற்க முடியாது எனவும் அது சாத்தியமற்ற விடயமெனவும் தெரிவிக்கும் அமைச்சர்கள், அது பெரியளவிலான செயன்முறைகளைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சூழலிலேயே, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கனகராயன்குளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், “இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்பட இருப்பதாக மூன்று வருடங்களாகக் கூறப்படுகிறது. கிணற்றில் போட்ட கல்லுப்போல, அதன்நிலை இருக்கப்போகின்றதே தவிர, நாடாளுமன்றத்தில் அது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளபோவதுமில்லை; சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படப் போவதுமில்லை; அமைச்சரவை அதற்கு அங்கிகாரம் வழங்கப்போவதும் இல்லை; ஜனாதிபதி கையெழுத்து இடப்போவதுமில்லை” எனக் கூறியிருக்கின்றார்.

இவ்வாறான கருத்துகளை வெறுமனே கருத்திலெடுக்காது சென்றுவிடவும் முடியாது. மத்திய அரசாங்கத்தில் அமைச்சர்களை நியமிப்பதிலேயே பிரதமரின் முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள மறுத்த ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சி முன்வைக்கப்போகும் அரசமைப்பை, எடுத்த மாத்திரத்தில் ஏற்றுக்கொள்வாரா என்பது, விடை தெரியாத புதிராகவே உள்ளது. 

இக்காலச்சூழலிலேயே வடமாகாண ஆளுநரின் கருத்தையும் உற்று நோக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. அதாவது, தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டிய தேவை உள்ளதென்பதான கருத்தாகும்.

இக்கருத்துகள் பல தரப்பாலும் தமிழ்த் தலைமைகளுக்குப் போதுமான தடவைகள் சொல்லப்பட்டாலும்கூட, அதன் சாத்தியத் தன்மைகள் இல்லாத நிலையே உள்ளது. சாதாரணமாக முன்னாள் வடமாகாண முதலமைச்சரால் உருவாக்கப்பட்ட புதிய கட்சிக்குள், எந்தெந்தக் கட்சிகளை உள்வாங்குவது என்ற குழப்பமே இன்னும் தீராத நிலையில், அவர் தனது கட்சியைத் தேவையேற்படின் கலைத்துவிடுவதாகக் கூடத் தெரிவித்திருந்தார்.

எனவே, தமிழ் அரசியல்வாதிகளின்  ஒன்றுமை, எந்தளவுக்கு முக்கியமானதாகப் பல்வேறு தரப்பாலும் பார்க்கப்படுகிறது என்பதற்கான ஒரு விளக்கமாகக் கூட, வட மாகாண ஆளுநரின் கருத்தைப் பார்க்கலாம். 

ஏனெனில், வடமாகாண ஆளுநர் அரசியல் தளத்தில் இருந்து வந்தவரோ, அரசியல் கட்சியொன்றின் பின்புலத்தில் இருந்து வந்தவரோ அல்ல. பலரும் அறியப்படாத, திரைமறைவில் இருந்து, அரசியல் களத்தில் ஓர் இயக்க சக்தியாகவே இருந்துள்ளார்.  ஆனாலும், இந்த நாட்டின் அதி உயர் பீடங்கள், ஒரு விடயத்தை முன் நகர்த்துவதில், அதிலும் தமிழர் தரப்பின் விடயத்தை முன்நகர்த்துவதில் எதிர்கொள்ளும் சிக்கல் நிலைக்கு, எது தடையாக அமைந்துள்ளது என்பதையே சூட்சுமமாகக் கூறிருக்கின்றார்.

இதற்குமப்பால் தமிழர் தரப்பு, தமக்குள்ளான கருத்து முரண்பாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு, தமிழ் மக்களுக்குச் சாத்திமான அரசியல் நகர்வை நோக்கிப் பயணிக்கவேண்டும் என்ற ஆளுநரின் ஆழமான கருத்தைச் சிரத்தில் ஏற்றி செயற்படும் பட்சத்திலேயே, தமிழ் மக்களுக்கான தீர்வு சாத்தியமாகும். 

தமிழ் அரசியல்வாதிகளுக்கு இடையில்  ஏற்பட்டுள்ள கருத்து மோதல் வலுக்கக் காரணமாகியிருக்கும் தொடர்பாடல் பிரச்சினை என்பதை மூன்றாம் தரப்பை வைத்துப் பேசுவது, உசிதமான  விடயமாக இருக்காது. 

எனவே, தமக்குள்ளான சில விட்டுக்கொடுப்புகளும் மனம் விட்டு பேசுதல்களும் காலத்தின் தேவையாகவுள்ளது என்பதை உணரத் தலைப்படாத பட்சத்தில், ஒருவரையொருவர் விமர்சித்தே, எவ்வகையான நகர்வுகளையும் இல்லாமற் செய்யப்பட்டு விடும் என்பது உண்மை.

இந்நிலையிலேயே அடுத்து வரப்போகும் பாதீட்டுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதான நிலைப்பாட்டைக் கூட்டமைப்பில் இல்லாத கட்சிகள் முன்வைத்து வரும் நிலையில், கூட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பாகச் செய்யப்பட்டுள்ள உடன்பாடுகளுக்காக, ஆதரவை அளிக்கவேண்டும் என்கின்ற கூற்றை முன்வைத்துள்ளது. 

எனவே, பாதீட்டுத் திட்டத்தின் பின்னரான காலத்தில், மீண்டும் தமிழ் அரசியல்வாதிகளுக்குள் ஏற்படப்போகும் உச்ச அரசியல் முரண்பாடானது, கருத்து முரண்பாட்டுப் போரொன்றைத் தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கும். தமிழ் மக்கள், தமது அரசியல் தளம் தொடர்பான வெறுமையை உணர்வார்கள். அவ்வேளையில், தமிழ் அரசியல் தளத்தில் தேசியக்கட்சிகளின் ஆதிக்கம் வலுப்பெறும். 

இதனையே, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது உரையொன்றின் போது சுட்டிக்காட்டியிருந்தார். எனவே, தமது கூட்டுக்கிடையில் இது தொடர்பான தெளிவுறுத்தல்களை வழங்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்பதையும் உணரத்தலைப்பட வேண்டும். ஏனெனில், தமிழ் மக்கள் தமது அரசியல் போக்கு தொடர்பான தீர்க்கமான நிலைப்பாட்டை எடுத்து வருவதை, அண்மைய நாள்களில் காணக்கூடிதாக உள்ளது. 

எதிர்வரும் தேர்தல் ஒன்றில், தமிழ் அரசியல் தளம், தேசியக் கட்சிகளை நம்பிச் செல்லும் நிலை ஏற்படும் போது, தமிழ் மக்களின் ஒற்றுமை சார்ந்த அரசியல் செயற்பாடுகள் தேவை என்பதைத் தமிழ் தலைமைகள் உணரும். எனினும், அது காலம் கடந்த ஞானமாகவே முடியும் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆக, தமிழ் மக்களின் எதிர்கால அரசியல், நன்னெறியை முன்னெடுக்கும் நோக்கோடு சிறந்த தொடர்பாடல் முறைமையொன்று தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலும் அரசியல்வாதிகளுக்கு இடையிலும் உருவாக்கப்பட வேண்டும். அதுவே காலத்தின் தேவையும் கூட!

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X