2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கிழக்கின் அரசியலைப் புரிந்து கொள்ளல்

Editorial   / 2019 ஜூலை 25 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இலட்சுமணன்

தமிழர் பிரச்சினையை, சிங்கள தேசத்துக்கு விளக்க முனைவது, பயனற்ற செயலென்று, அமரர் டி. சிவராம், 2004ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஒரு கட்டுரையை வரைந்திருந்தார். 

இப்போதைய வடக்கு, கிழக்குத் தமிழர்களின் அரசியல் நிலைமையைப் பார்த்தால், தமிழ் அரசியல்வாதிகளுக்குக்கூட தமிழர்களுடைய நிலைமையைப் புரிய வைக்க முயல்வது, பயனற்ற செயல் என்று தான் எண்ணத் தேன்றுகிறது. 

‘தேர்தல் திருவிழா’ என்பது எம்மிடையே உள்ள அனைத்துக் கீழ்த்தரமான குணங்களையும் பிரிவினைகளையும் வெளிக்கொணர்வதற்கான களமாக அமைந்துவிடுகிறது. இந்த நச்சுச் சூழலிலிருந்து நாம் விடுபட வேண்டும். 

தனி நபர்களை மறந்து, எம்மனைவரையும் எமது சந்ததிகளையும் பாதிக்கின்ற பிரச்சினைகள் எவை, அநீதிகள் எவை என்பதைச் சரியாக இனங்கண்டு, அவற்றை வெல்வதற்கான ஒருங்கிணைந்த ஒரு தேசியக் கொள்கையின் அடிப்படையில் தேர்தல்களை நாம், புதுமனிதர்களாக எதிர்கொள்ளவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தேர்தலிலும் நமது தாரக மந்திரமாக இருக்கும். இருந்தாலும் நடைபெறுவதெல்லாமோ வேறு விதமாகவே இருந்து விடுகின்றன.

எம்மிடையே அரசியல், சமூக ஒருமைப்பாடு ஏற்படாததாலேயே எம்மைச் சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் இலகுவாகத் தமது விடயங்களுக்காகப் பயன்படுத்தி விடுகின்றன. நாம் இதுபோன்ற உண்மைகளை உணர்ந்து அரசியல் ரீதியாக ஒன்றுபட்டு, எமக்குரிய சொத்தையும் செல்வத்தையும் ஆண்டு அனுபவிக்கின்றவர்களாக மாற்றம் பெறவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் பிரதிபலிப்பாக, வடக்கை விடவும் கிழக்குத்தான் மிக மோசமாகப் பாதிக்கப்படப்போகிறது என்ற பயம், கிழக்குத் தமிழர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இதற்கான மருந்தை மக்கள்தான் கொடுத்தாக வேண்டும்.

வடக்கு, கிழக்கு அரசியல் எதற்கானது; என்ன தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கானது; அரசியலைத் தமிழர்கள் எவ்வாறு முன்னெடுக்கிறார்கள் என்பவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்கத் தெரியாதவர்களாக, புதிதாக அரசியலுக்குள் வருபவர்களும், இளைஞர்களும் இருக்கிறார்கள். இவர்கள் நாட்டையும் பிராந்தியத்தையும் புரட்டிப் போட்டுவிடலாம் என்று நம்பிக்கை கொண்டிருப்பதில் எந்தத் தவறும் இல்லை. அவ்வாறான நம்பிக்கைதான் முதலில் தேவையானது.

ஆண்டாண்டு காலமாக இழுபட்டு வருகின்ற, தமிழர்களின் பூர்வீகத்தனமான பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டுவிடலாம் என்று முனைவதற்குப் பெரும்பான்மைத் தரப்பு என்ற ‘கோரம்’ தேவைப்படுகிறது. இது யாருக்குக் கிடைக்கும் என்பதுதான், தேர்தலுக்கான விஞ்ஞாபனம்.

தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற விஞ்ஞாபனங்களை முன்வைத்துக்கொண்டு, தேர்தலுக்குப் பின்னர், தங்களுக்குப் பிடித்தமான செயற்பாடுகளையே முன்நகர்த்துகின்றன என்பது அரசியல் கட்சிகள் மீதுள்ள பிரதான குற்றச்சாட்டாகும். இம்முறை வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற பரவலான பேச்சு அடிபடத் தொடங்கி இருக்கின்றமை, ஒரு பாதகமான சூழலாகவே இருக்கும்.

தமிழர் அரசியலில் அஹிம்சை ரீதியிலான போராட்ட முன்னெடுப்புகளையடுத்து ஆயுத ரீதியான போராட்டத்துக்கு வித்திட்டவர்கள் முன்னைய அரசியல் தலைவர்களே ஆவார். அப்போது பல ஆயுத இயக்கங்கள் தோன்றின. அவற்றின் அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்புக்குள் இருக்கத்தான் செய்கின்றனர். 

விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், ஆரம்பத்தில் இணைந்த கட்சிகள் பல இப்போதில்லை. அவற்றை மீண்டும் சேர்த்துக் கொள்ளும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பும் இல்லை; மீண்டும் இணைவதற்கு அவர்களிடம் விருப்பமும் இல்லை.

வடக்கின் போக்குக்கும் கிழக்குக்கும் வித்தியாசம் என்று பலரும் எடுத்துரைத்த போதும், இதுவரையில் புரிந்து கொள்ளாதவர்களாக அரசியல் தலைவர்கள் என்று சொல்பவர்கள் நடந்து கொள்வதில்தான் கவலைகள் தொடங்குகின்றன.

ஏதோ ஒரு ஒழுங்கு முறையில், சேர்த்துப் பிடிக்கப்பட்டவர்கள், சேர்க்கப்பட்டவர்கள் பிரிந்து நின்றுகொண்டு, எல்லோருக்கும் இருக்கின்ற அரசியல்வாதி என்கிற பந்தாவுக்காக, மக்களைப் பலிக்கடாவாக்குவது அரசியலில் மிகக் கேவலமானதொரு நிலையாகும்.

தமிழர்களின் அரசியலைப் பொறுத்த வரையில் நிலையில்லாத தன்மையுடன், தனி நபர்களைச் சுற்றியே, மக்களின் அரசியல் கருத்துகள் இன்னும் அமைந்துள்ளதைக் காண்கிறோம். 

வடக்குக்கு அப்பால், கிழக்கைப் பொறுத்தவரையில் யாரை ஒரு மிகப்பெரும் தமிழ் அரசியல் தலைவராக நோக்கலாம் என்ற கேள்விக்குள்ளேயே நாம் இருந்து கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. பதிலும் இல்லை என்றுதான் ஆகிறது.

போர்க்காலத்தில் வெல்ல முடியாத பலவற்றைச் சமாதானக் காலத்தில்தான் அரசாங்கங்கள் செய்து முடித்துக் கொள்கின்றன; அது இலங்கையிலும் நடந்தது. மிக நுட்பமான பிரித்தாளும் தந்திரோபாயங்களின் ஊடாகத் தமிழ் மக்களை அரசியல் ரீதியாகப் பிரிக்கும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

அண்மைக்காலங்களில், முஸ்லிம்களுக்கு எதிராகத் தமிழர்களைச் சிங்களப் பேரினவாதிகள் பயன்படுத்த முனைவதும் அதில் ஒரு வகைதான். கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் எமது சமூகத்தை எந்தளவுக்குப் பிரித்து விடலாம் என்ற அவர்களது முயற்சி, கிழக்கைச் சேர்ந்த மக்களுக்கு ஒரு முக்கிய சவால் ஆகும்.

இதில், மிக முக்கியமான விடயம் என்னவென்றால், தமிழ் மக்களிடையே பிராந்திய வேறுபாடுகள், ஊர் முரண்பாடுகள், சமய, சமூக வேற்றுமைகள் ஆதிக்கம் செலுத்த முனைவதுதான்.

இலங்கையில் தேர்தலுக்கான முன்னெடுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், தமிழர் பிரதேசத்தின் கிழக்கில்தான் தேர்தல் திருவிழாவுக்கான பெரிய களம் அமைக்கப்படுகிறது. கடந்த சில வாரங்கள், அரசியல் கட்சிகளின் அதுவும் புதிய அரசியல் கட்சிகளின் வருகை தரு களமாக கிழக்கு மாறியிருக்கிறது. கிழக்கில் நான்குக்கும் மேற்பட்ட கட்சிகள், மட்டக்களப்பை மய்யமாக வைத்துத் தொடங்கப்பட்டு விட்டன. இது இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்றிருந்தது.

கடந்த வாரத்தில், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம்  சி.வி. விக்னேஸ்வரன் வாரம் முழுவதும் கிழக்கில் தங்கியிருந்து விட்டுச் சென்றார். அதன்போது அவர் பல அரசியல் நகர்வுகளை மேற்கொண்டார். அதில் அவருடைய கட்சிக்கான அலுவலகத்தையும் மட்டக்களப்பில் திறந்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் மக்கள் சந்திப்புகளை மேற்கொண்டு விட்டுச் சென்றிருக்கிறார். அதேபோன்று முன்னாள் வடமாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் வந்து சென்றிருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக அமைச்சர் மனோ கணேசன், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானைச் சந்தித்தது உட்பட அமைச்சு சார்ந்த பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றியிருக்கிறார். 

கிழக்கைப் பொறுத்தவரையில், மட்டக்களப்பு மாவட்டமானது அதிகளவான நாடாளுமன்ற, மாகாண சபைப் பிரதிநிதிகளைப் பெறக்கூடிய பிரதேசமாகும். இப்பிரதேசத்தில், கிழக்குத் தமிழர் ஒன்றியம், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு, கிழக்குத் தமிழர் கூட்டணி, முற்போக்குத் தமிழர் அமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈரோஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனப் பல தமிழ் அமைப்புகள் தேர்தல் களத்தில் இறங்க முனைவது, மிகப் பாரதூரமாக, தமிழர் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பெரும்பான்மைக் கட்சிகளில் முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி போட்டியிட்டதன் பயனாக அமீர் அலி தெரிவானார். அதேபோன்று முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் போட்டியிட்டதால் கிடைத்த வாக்கைச் சாதகமாகப் பயன்படுத்தி தேசியப் பட்டியலில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

தேசியக் கட்சிகளில் தமிழர்கள் தெரிவாக வேண்டும்; அவர்கள் வடக்கு மாகாணம் போன்று அமைச்சர்களாக, அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்ற அதேநேரத்தில், கிழக்கில் ஒருமுனை சார்ந்த பாதகமான நிலைப்பாட்டையே தோற்றுவிக்கிறது. இது ஒரு துரோக நிலை சார்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது. 

அந்தவகையில் தமிழ் மக்களது வாக்குகள் விணாவதாகவே நோக்கப்படுகிறது. பலரும் பல முனைகளிலும் முனைந்து இறுதியில் ஒன்றுமில்லாத நிலையையே தோற்றுவிக்கும் என்ற அச்சம் எல்லோரிடமும் இருக்கின்றது.

உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்ற வேளையில் இருந்த நிலைமையை அநேகம் பேர் மறந்து விடுகிறார்கள். வேட்பாளர்கள், தெரிவு செய்தல், வேட்புமனுத்தாக்கல், அதன்பின்னர் பிரசாரம், வெற்றி, தோல்விகள் ஒவ்வொரு கட்சியினருடைய நிலைகளை வெளிப்படுத்தியிருந்தன. ஆனாலும், அதற்குப் பின்னரும் இவ்வாறான கட்சிகள் தேர்தல்களை இலக்கு வைப்பது கவலைக்கிடம் தான்.

அதேநேரத்தில், தமிழ் மக்களுடைய தேசிய நலன்சார்ந்து அரசியலைச் செய்ய முனைவது பிழையான விடயமல்ல. அதனைத் தேர்தலுக்கானதாகக் கொள்வதால்தான் பல விதமான குழப்பங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. இது வரலாற்றில் அழிக்கமுடியாததொரு கறையாகவும் மாற்றம் பெற்றுவிடும் ஆபத்தும் உண்டு. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X