2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிழக்கு அபிவிருத்தியும் சகவாழ்வும்

Ahilan Kadirgamar   / 2018 ஜூன் 17 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவப்புக் குறிப்புகள்

இப்பத்தியாளரால் இப்பகுதியில் எழுதப்பட்ட பல பத்திகள், போருக்குப் பின்னரான வடக்கில் மீள்கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள தோல்வி தொடர்பாகவும் அதிகரித்துவரும் கடன் பிரச்சினை தொடர்பாகவும் கவனஞ்செலுத்தியுள்ளன. கிழக்குக்கு அவ்வப்போது மேற்கொண்ட விஜயங்களின் போது பெறப்பட்ட விடயங்களைக் கொண்டே, கிழக்குப் பொருளாதாரம் பற்றிய இப்பத்தியாளரின் புரிதல் காணப்படுகிறது. இதுவரை காணப்பட்ட புரிதலின்படி, கிழக்கின் பொருளாதார இயங்கியல், வேறானதாகக் காணப்படுமன்றே தெரிகிறது.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலகங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், பெண்கள் சங்கங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், அறிவியலாளர்கள் ஆகியோருடன் அண்மையில் நான் நேரத்தைச் செலவழித்திருந்த நிலையில், அவர்களிடமிருந்து கிடைக்கும் செய்தி என்னவென்றால், கிழக்கின் பொருளாதாரம் மோசமான நிலையில் காணப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தின் களப்புகளையும் பசுமையான வயல் நிலங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் மீன்பிடிக் கிராமங்களையும் தாண்டி வரும் போது, இவ்வாறான வளம் செழிந்த பிராந்தியம், இவ்வாறான கடுமையான வறுமையை ஏன் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியாமலிருக்கிறது.

கிழக்கு மாகாணத்தின் அரசியல் பொருளாதாரம், அதன் பிரச்சினைக்குரிய வரலாற்றுடன் தொடர்புபடுத்திப் புரிந்துகொள்ளப்பட முடியும். கிழக்கு மாகாணம், பல்வேறுபட்ட குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு உள்ளாகியிருந்தது. அதன் தமிழ் சனத்தொகையானது, அறிவியற்றுறை, நிர்வாகம், அரசியல் ஆகியவற்றில், யாழ்ப்பாணத் தமிழர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருந்தது. கொழும்பில் காணப்பட்ட தொடர்ச்சியான அரசாங்கங்கள், கிழக்கில் தமது அரசியல் தளத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதனால், தமக்கு ஆதாயமான அடிப்படையில் எல்லைகள் பிரிக்கப்பட்டதோடு, இன அடிப்படையிலான பிளவுகளும் ஏற்பட்டன. முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான, தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்முறைகளும், அவற்றுக்குப் பதிலடியாக, அரச ஆதரவுடனான பதில் வன்முறைகளும், ஆழமான இனப் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளதோடு, இன்றுவரை அந்நிலை நீடிக்கிறது. அண்மைக் காலத்தில், போருக்குப் பின்னரான அபிவிருத்திச் செயற்பாடுகளில், கவலைதரக்கூடிய விதமாக, கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

வயல், பால், மீன்

இலங்கையின் அநேகமான கிராமப்புறப் பகுதிகளைப் போல, கிழக்கின் பிரதான துறைகளாகவும் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி ஆகியன காணப்படுகின்றன. நாட்டின் மிகப்பெரிய நெல் உற்பத்திப் பகுதிகளுள் ஒன்றாக, கிழக்கு மாகாணம் காணப்படுகிறது. அம்மாகாணத்தோடு போட்டியிடக்கூடியதாக, வடமத்திய மாகாணமே காணப்படுகிறது. இலங்கையின் பொருளாதார, சமூகத் தரவுகள் - 2017 என்ற அறிக்கையின்படி, 2016ஆம் ஆண்டு இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட 4.4 மில்லியன் மெற்றிக் தொன் நெல்லில் 1.1 மில்லியன் மெற்றிக் தொன், கிழக்கில் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், மிகக்குறைந்தளவு நெல்லையே, கிழக்கில் சேமித்து வைக்க முடியும். எனவே, அறுவடைக்குச் சில மாதங்களின் பின்னர் விற்பதன் மூலம் அதிக பணத்தை, விவசாயிகள் பெற முடியாது. அதேபோல், அதிகரித்த தொழில்வாய்ப்புகளையும் வருமானத்தையும் வழங்குவதற்கு, அங்கு நெல் ஆலைகளும் பெரிதளவில் இல்லை.

பால் உற்பத்தியிலும் அதேபோல், இலங்கையில் உள்ள 945,000 பசுக்களில் 200,000 பசுக்கள், கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்றன. இது, இலங்கையில் உள்ள பசுக்களில் 20 சதவீதத்துக்கும் அதிகமாகும். 

ஆனால், சராசரி தினசரி பால் உற்பத்தி என்று வரும் போது, நாட்டின் 883,000 லீற்றர்களில் வெறுமனே 92,000 லீற்றர்கள்  அதாவது, சுமார் 10 சதவீதம் மாத்திரமே, கிழக்கால் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதைவிட மோசமாக, பால் பதப்படுத்தல் என்று வரும் போது, கிழக்கு மாகாணத்தில் பெருமளவுக்குச் சொல்லக்கூடிய நிலைமை இல்லை. ஏனெனில், கிழக்கில் சேகரிக்கப்படும் பாலில் பெருமளவு, பதப்படுத்தலுக்காக வேறு பிராந்தியங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆகவே, விளைவைக் கூட்டுவதற்கும் பாலை வெவ்வேறான பால் உற்பத்திப் பொருட்களாகப் பதப்படுத்துவதற்குமான முதலீடு, அவசியமாகத் தேவைப்படுகிறது.

மீன்பிடி என்று வரும் போதும், அதே நிலைமை தான் காணப்படுகிறது. நாட்டின் மீன்பிடியில் சுமார் 20 சதவீதம், கிழக்கு மாகாணத்திலிருந்து வருகிறது. ஆனால், மீன்பிடிச் சமூகங்கள் பெருமளவுக்கு முன்னேறியிருக்கவில்லை எனவும், மீன்பிடிக் குடும்பங்களுக்கான வருமானம் குறைந்தளவிலேயே காணப்படுகிறது என்றும், அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இலங்கை முழுவதிலுமுள்ள கிராமப் பகுதிகள், கொள்கை வகுப்பாளர்களால் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கின்றன. ஆனால், ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது கிழக்கின் நிலைமை, மோசமானதாகக் காணப்படுகிறது. இவ்வளவு அதிகமான அரிசி, பால், மீன் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்ற பிராந்தியமொன்று, இவ்வளவுக்கு அதிகமான வறுமையையும் போஷாக்கின்மையையும் கொண்டிருக்கக்கூடாது.

நிலவும் வறுமையும் கடனும்  

வீட்டு வருமானம் மற்றும் செலவுக் கணக்கெடுப்பு -2016இன்படி, கிழக்கு மாகாணத்தின் வறுமை அளவு, 7.3 சதவீதமாகக் காணப்படுவதோடு, வடக்கின் 7.7 சதவீதத்துக்கு அடுத்ததாக, மிக மோசமான வறுமை நிலையைக் கொண்ட மாகாணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் வறுமையின் அளவு, 11.3 சதவீதம், 10 சதவீதம் என, இரட்டை எண்களில் காணப்படுகிறது.

இப்படியான வறுமை நிலைமை, மிகவும் அதிகமாகக் காணப்படுகின்ற போதிலும், சில அதிகாரிகளின் கருத்தின்படி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலுள்ள குடியேற்றப்பட்ட மக்கள் வாழும் சில தொகுதிகளிலும் வேறு சில ஒதுக்குப்புறப் பகுதிகளிலும், வறுமையின் அளவு 45 சதவீதம் வரை காணப்படலாமெனத் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்புக் களப்பின் மேற்குப் பக்கமாக அமைந்தள்ள படுவான்கரைப் பகுதி, 6 பிரதேச செயலகப் பிரிவுகள் உள்ளடங்கியுள்ளதோடு, முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டுப்படுத்தப்பட்டிருந்ததோடு, பாரியளவிலான இடப்பெயர்வுக்கும் மீள்குடியேற்றத்துக்கும் உள்ளாகியிருந்தது. அப்பகுதி, அதிகளவு வறுமையைக் கொண்ட பகுதிகளுள் ஒன்றாகக் காணப்படுகிறது.

பாடசாலை செல்லாத சிறுவர்கள், மந்தபோஷணையுள்ளோரின் அளவு என்பன, பிராந்தியத்தில் மிகவும் அதிகமானவை எனக் கருதப்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் போர் 2007ஆம் ஆண்டில் முடிவடைந்திருந்த நிலையில், படுவான்கரை உள்ளிட்ட பல பகுதிகள், அபிவிருத்தி முயற்சிகளில் மறக்கப்பட்டுவிட்டன. முன்னர் இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமரச் செய்யப்பட்ட சமூகங்களின் சமூக - பொருளாதார நிலைமை உயர்த்துவதற்கான அபிவிருத்தி முன்னெடுப்புகளும் அப்பகுதி மக்களின் நிலைமையையும் தேவையான நடவடிக்கைகள், உடனடியாக எடுக்கப்பட வேண்டியிருக்கின்றன.

கிழக்கு மாகாணத்தில், அதிலும் குறிப்பாக மட்டக்களப்பின் கிராமப்பகுதியில், கடன் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நுண்கடன் திட்டங்களால் மிக அதிகளவு வட்டி வீதங்கள் அறவிடப்படும் நிலையில், மத்திய கிழக்கில் வேலை செய்வதற்காகப் பெண்கள் படையெடுத்தல், கடன்களை மீளச்செலுத்துவதற்காக வீடுகளை விற்றல் ஆகியன இடம்பெறுகின்றன. கிழக்கிலுள்ள பெண்கள் சங்கங்களின் கருத்துப்படி, தற்கொலைகளும் தற்கொலை முயற்சிகளும் அதிகரித்த வண்ணமுள்ளன. வட்டியுடன் கூடிய கடன்களை ஏற்காத முஸ்லிம் சமூகத்திலும் சில குடும்பங்கள், நுண்கடன் திட்டங்களுக்குள் சிக்கியுள்ளன. வறுமையும் கடனும், ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவையாக உள்ளன. மிகவும் வறுமையான மக்கள் வைத்திருக்கும் மிகக்குறைந்தளவையும் இலக்குவைத்து, நுண்கடன் நிறுவனங்கள் சுரண்டுகின்றன.

அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியும் சகவாழ்வும் 

வடக்கு மாகாண சபையைப் போலன்றி, கிழக்கு மாகாண சபை, தமது பகுதியை அபிவிருத்தி செய்வதில், கடந்த தசாப்தத்தில் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால், அவ்வாறான அபிவிருத்திக்கான வளங்கள், மிகக்குறைவாகவே உள்ளன. மேலதிகமாக, கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரிவினை அரசியல் காரணமாக, சமூகங்களுக்கிடையில் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. அரசியல்வாதிகள், தமது குறுகிய அரசியல் தளத்தை முன்னிறுத்துவதால், பிராந்தியத்தின் பரந்த அபிவிருத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

போருக்குப் பின்னரான ஆண்டுகளில், மத்திய வங்கியும் சர்வதேச உதவி வழங்கும் முகவராண்மைகளும், கிழக்கு மாகாணத்தின் கிராமப்பகுதி அபிவிருத்தியைப் புறக்கணித்துள்ளன. உதாரணமாக, இவ்வாண்டுக்கான தேசிய வரவு - செலவுத் திட்டத்தில், வடக்கின் கிராமப்புற அபிவிருத்திக்காகக் கணிசமானளவு நிதி ஒதுக்கீடு காணப்படுகின்ற போதிலும், கிழக்குக்காக, மிகக்குறைந்தளவே ஒதுக்கப்பட்டுள்ளது. 

கிழக்கின் மோசமான பொருளாதார நிலைமையை வைத்துப் பார்க்கும் போது, கிராமங்களைப் புத்துயிரேற்றுவதற்கும், விவசாயம், கால்நடை, மீன்பிடி போன்ற துறைகளை அபிவிருத்தி செய்வதற்கும், அதிகமான வளங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

நலிவடையும் பொருளாதார நிலைமை என்பது, சந்தர்ப்பவாத சக்திகள், இனரீதியான பிளவுகளை ஏற்படுத்துவதற்கும் வழிவகுக்கிறது. அண்மையில், முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள், அம்பாறையில் ஆரம்பித்தே, கண்டிக்குப் பரவியிலிருந்தது. இது, நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகம் மீது, பயணமொன்றை ஏற்படுத்தியுள்ளது. திருகோணமலையிலுள்ள பிரபல இந்துப் பாடசாலையொன்றில், முஸ்லிம் ஆசிரியைகள், அபாயா அணிவதற்குத் தடைசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, நாடு முழுவதிலும் இன-மத நச்சைப் பரப்பியதோடு, முஸ்லிம் - தமிழ் உறவையும் பாதித்திருந்தது.

முஸ்லிம்கள், தமிழர்கள், சிங்களவர்கள் என, மூவினத்தவர்களும் கிட்டத்தட்ட சரிசமமாக வாழுகின்ற ஒரே மாகாணம் என்ற அடிப்படையில், இனங்களுக்கிடையிலான ஒற்றுமை தொடர்பில், கிழக்கு மாகாணத்தை விட முக்கியமான மாகாணம், அரசியல் ரீதியாக இல்லை என்றே கூறலாம். கிழக்கு மாகாணத்தின் இந்த இன, மத, மொழிப் பல்வகைமையே, அப்பகுதிக்கான பலமாகும். அப்பகுதியிலுள்ள படித்த இளைய சமுதாயம், மும்மொழித் திறமை அல்லது இருமொழித் திறமை கொண்டதாகக் காணப்படுகிறது. இதனால், நாட்டின் எப்பகுதியிலும் பணியாற்றும் திறனைக் கொண்டுள்ளது. 

இனங்களுக்கிடையிலான உறவை மீளக்கட்டியெழுப்புவதற்கு, பொருளாதார ரீதியான அபிவிருத்தி மாத்திரமே முன்நிபந்தனையாகாது. ஆனால், சமமான அபிவிருத்தி முன்னெடுப்புகள், சமூக முன்னேற்றங்கள் ஆகியன, சகவாழ்வுக்குப் பங்களிக்கும். பயன்தரக்கூடியதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான அபிவிருத்தியில் கிழக்கு மாகாணம் வெற்றிபெறுமாயின், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும், பன்மைத்துவத்துக்கான ஒரு பாதையாக அது அமையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .