2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிழக்கு ஆளுநர் நியமனம்: கசப்பும் வெறுப்பும்

முகம்மது தம்பி மரைக்கார்   / 2019 ஜனவரி 08 , மு.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் நெருக்கடியில், ஜனாதிபதியின் இரண்டாம் கட்ட ஆட்டம் பற்றிக் கடந்த வார பத்தியில் எழுதியிருந்தோம். மாகாணங்களுக்கான புதிய ஆளுநர் நியமனங்கள், இரண்டாம் கட்ட ஆட்டத்தை, இன்னும் சூடேற்றி இருக்கின்றன.   

அரசமைப்பின் கோடுகளைத் தாண்டாமல், புதிய வியூகங்களை வகுத்துக் கொண்டு, மைத்திரி ஆடத் தொடங்கியிருக்கும் இரண்டாம் கட்டம், எதிராளிகளுக்குக் கொஞ்சம் கிலேசத்தை ஏற்படுத்தி இருப்பதையும் காண முடிகிறது.  

மாகாணங்களுக்கான ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உரியது. மாகாண ஆளுநர்கள், ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதிகளாவர். ஜனாதிபதிக்கு அரசமைப்பு வழங்கியிருக்கும் மேற்படி அதிகாரத்தைக் கையில் எடுத்து, மைத்திரி சுழற்றியுள்ளார்.   

அந்தவகையில், கடந்த வாரம் ஐந்து மாகாணங்களுக்கான ஆளுநர்களை ஜனாதிபதி மைத்திரி நியமித்திருந்தார். அவர்களில் இருவர் முஸ்லிம்கள்; மூவர் சிங்களவர்கள்.  

முஸ்லிம்களில் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாணத்துக்கும் ஆசாத் சாலி, மேல் மாகாணத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் நியமனம் வழங்கப்பட்ட வெள்ளிக்கிழமையன்று காலை, ஆசாத் சாலியுடன் பேசியபோது, கிழக்கு மாகாணத்துக்கான ஆளுநராகவே தான் நியமிக்கப்படவுள்ளதாகக் கூறினார். ஆனால், மாலை வழங்கப்பட்ட நியமனத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தது.  

ஆளுநர் நியமனங்கள் எப்போதும் ஜனாதிபதி, அவர் சார்ந்த கட்சியின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில்தான் அமையும் என்பதற்கு, கடந்த காலம் உதாரணமாக உள்ளது. அரசியல் கட்சி சார்ந்தவர்கள் மட்டுமன்றி, படைகளில் சேவையாற்றியவர்களும் மாகாண ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருந்தமையை மறந்து விட முடியாது.  

இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரி வழங்கியுள்ள மாகாண ஆளுநர் நியமனங்கள் குறித்து, பல்வேறு விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றமையை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக, முஸ்லிம் ஆளுநர்கள் தொடர்பில் வெளியிடப்படும் விமர்சனங்கள் மிகக் கடுமையானவையாக உள்ளன.  

மாகாணங்களுக்கான ஆளுநர்களை, மைத்திரி நியமித்து வருகின்றமை, அவரின் இரண்டாம் கட்ட ஆட்டத்துக்குரிய வியூகமாகவே கூறப்படுகிறது. மாகாணங்களைத் தனது ‘பிடி’க்குள் கொண்டுவந்து, அங்கு தமது அரசியல் எதிராளிகளுக்கு ‘குடைச்சல்’ கொடுப்பதுதான், மேற்படி ஆளுநர் நியமனத்தின் நோக்கம் என்பதைப் புரிந்து கொள்வது அத்துணை சிரமமல்ல.  

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர், ஒரே தருணத்தில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டமை அரசியலரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வரை, வரலாற்றில் முஸ்லிம்கள் இருவர் மட்டுமே ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். 1988ஆம் ஆண்டு, தென் மாகாண ஆளுநராக பாக்கீர் மாக்காரும், 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை மேல் மாகாண ஆளுநராக அலவி மௌலானாவும் நியமிக்கப்பட்டிருந்தனர். அதாவது, 30 ஆண்டுகளில் முஸ்லிம் சமூகத்திலிருந்து இருவர் மட்டுமே ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.  

இலங்கையின் உத்தியோகபூர்வ அரச நடைமுறையின்படி, பதவி வழியிலான முன்னுரிமை வரிசையில் (protocol) மாகாண ஆளுநர்கள் எட்டாவது இடத்தில் உள்ளனர். பதவி வரிசையின் முதலில் ஜனாதிபதியும் இரண்டாவதாகப் பிரதமரும், மூன்றாவதாக சபாநாயகரும், நான்காவது இடத்தில் பிரதம நீதியரசரும், ஐந்தாவது இடத்தில் முன்னாள் ஜனாதிபதிகளும், ஆறாவது இடத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், ஏழாவது இடத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் உள்ளனர்.  
மேற்படி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18ஆவது இடத்தில் உள்ளனர் என்பதை வைத்தே, ஆளுநர் பதவியின் பெறுமானமும், அதிகாரமும் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அமெரிக்காவில், பதவி முன்னுரிமை வரிசையில், மாநில ஆளுநர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அங்கு முதலிடத்தில் ஜனாதிபதியும் இரண்டாவது இடத்தில் உப ஜனாதிபதியும் உள்ளனர்.  

ஆளுநரின் இணக்கமின்றி, மாகாண சபை நிர்வாகத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதென்பது முடியாத காரியமாகும்.   

இவ்வாறான அந்தஸ்தும், அதிகாரங்களும் கொண்ட ஆளுநர் பதவிகளுக்கு, தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தனது ஆட்களை ஜனாதிபதி நியமித்திருப்பது, எதிர் முகாம்களிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு அஜீரணத்தை ஏற்படுத்தியுள்ளதை, அவர்களின் எதிர்வினைகள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.  

அதிலும் குறிப்பாக, கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் வெளிப்படையாகவே, தமது வெறுப்பைக் கொட்டித் தீர்ப்பதை அவதானிக்க முடிகிறது. கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளமைதான் இந்த வெறுப்புக்கு முதன்மைக் காரணமாகும்.  

தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களாக, ஹிஸ்புல்லாவுக்கு முன்னர், தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த எவரும் நியமிக்கப்படவில்லை. வடக்கு,  கிழக்கு இணைந்திருந்த போது நியமிக்கப்பட்டிருந்த ஆறு ஆளுநர்களும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.   

அந்தவகையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நியமிக்கப்பட்ட முதலாவது தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்த ஆளுநர் என்கிற அடையாளம், ஹிஸ்புல்லாவுக்குக் கிடைத்துள்ளது.  

இன்னொருபுறம், கிழக்கின் முதல் முஸ்லிம் ஆளுநர் என்கிற வரலாற்றுப் பதிவையும் ஹிஸ்புல்லா தனதாக்கியுள்ளார்.   

நேர்மையாகச் சிந்தித்தால், தமிழ் பேசும் மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டிய தருணமிது. தமிழர்களும் முஸ்லிம்களும் சேர்ந்து கொண்டாட வேண்டிய ஹிஸ்புல்லாவின் ஆளுநர் நியமனத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சில தமிழர் தரப்புகள் வெறுப்புடன் பார்க்கின்றனர்.   

சமூக வலைத்தளங்களில், கிழக்கு ஆளுநர் நியமனம் தொடர்பில் தமிழர் தரப்பிலிருந்து சிலர், இன வெறுப்புக் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்மையையும் அவதானிக்க முடிகிறது.  

நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின்போது, ஜனாதிபதிக்கு எதிராக நின்று செயற்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ‘காய்’ வெட்டுவதற்காகவே, கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லாவை, ஜனாதிபதி நியமித்திருக்கின்றார் என்கிற பேச்சும் பரவலாக உள்ளது.  

 “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பழிதீர்க்கும் நடவடிக்கையாகவே, கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தைப் பார்க்க முடிகிறது” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் கூறியுள்ளமை, இதற்கு உதாரணமாக உள்ளது.  

கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியுற்ற ஹிஸ்புல்லாவுக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஊடாகத் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் கூடவே அமைச்சுப் பதவியையும் ஜனாதிபதி வழங்கியமையை வைத்தே, ஹிஸ்புல்லாவை ஜனாதிபதி எந்தளவுக்கு நம்பியுள்ளார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.   

அந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாகத்தான் ஆளுநர் நியமனத்தையும் பார்க்க முடிகிறது. ஆனாலும், ஹிஸ்புல்லா அல்லாமல் வேறு ஒருவரை, கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி நியமித்திருந்தாலும், அவரும் ஜனாதிபதியின் விருப்பு வெறுப்புக்கு அமைவாகவன்றி, வேறு வழியில் நடந்து கொள்ளப் போவதில்லை என்பதையும் புரிந்து கொள்தல் அவசியமாகும்.  

கடற்படைத் தளபதியாகப் பதவி வகித்த ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டபோது, அதற்கு எதிராகப் போராடாதவர்கள், ஹிஸ்புல்லாவின் நியமனத்தில் கொதித்தெழுவதைப் பார்க்கையில் ஆச்சரியமாக உள்ளது.  

ஹிஸ்புல்லாவின் கடந்த காலச் செயற்பாடுகள், தமிழர்களுக்கு எதிராக இருந்ததாகவும் ஆளுநர் பதவிக்கு வந்துள்ள ஹிஸ்புல்லா, தமிழர்களுக்கு அநீதியிழைப்பார் என்றும், தமிழர் தரப்பைச் சேர்ந்தவர்கள் பேசுவதையும் எழுதுவதையும் காணக் கிடைக்கின்றன.   

பொதுவான பதவிகளை வகிக்கின்றவர் இனம் சார்ந்து செயற்படுவதை, ஒருபோதும் அனுமதிக்கவோ, ஆதரிக்கவோ முடியாது. அவ்வாறு செயற்படுவது எந்த வகையிலும் நியாயமல்ல. ஆனால், தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான கசப்பும் வெறுப்பும் இனரீதியான செயற்பாடுகளை உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறது என்பதை மறைத்து விடமுடியாது.  

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் காணிகளைத் தமிழர்கள் கையகப்படுத்தி இருப்பதும், கிழக்கில் தமது இருப்பிடங்களை விட்டும் வெளியேறிய தமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் கையகப்படுத்தி உள்ளமையும் கசப்பான உண்மைகளாகும்.  

 இவற்றைச் செய்வதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல்வாதிகள் ஆதரவாக இருந்துள்ளனர். ஓட்டமாவடியில், தமிழர்களின் கோவிலுக்குச் சொந்தமான காணியைக் கையகப்படுத்தி, அதில் சந்தைக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்குத் தான் உதவியதாக, ஹிஸ்புல்லா கூறும் வீடியோ பதிவொன்று, சில காலங்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. இதை வைத்துக் கொண்டுதான், ஹிஸ்புல்லாவுக்கு எதிரான பிரசாரத்தை, தமிழர் தரப்பு ஆக்ரோசமாக மேற்கொண்டு வருகிறது.  

ஓட்டமாவடியில் தமிழர்களுக்குச் சொந்தமான கோவில் காணியைக் கையகப்படுத்தி, அதில் சந்தைக் கட்டடத்தை நிர்மாணித்தமை தொடர்பில், எந்தவிதமான நியாயங்களையும் கற்பிப்பதற்கு இந்தப் பதிவு முயற்சிக்கவில்லை. அது தொடர்பாக, ஹிஸ்புல்லாவிடம் பேசுவது பொருத்தமாக அமையும் என்று நம்புகிறோம். அதற்காக அவருடன் தொலைபேசி வழியாக தொடர்புகொள்வதற்கு எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. ஆனால், நிச்சயமாக அவருடன் இது தொடர்பில் பேசுவதற்கு தொடர்ந்தும் முயற்சிப்போம். அது கைகூடினால், அதனை இந்தப் பத்தியில் பதிவு செய்வோம்.   

எவ்வாறாயினும், பகைமைகளை மனதில் சுமந்து கொண்டு, இன ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது என்பதை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராகத் துப்பாக்கிகளை நீட்டிய புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பிள்ளையானை, கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக முஸ்லிம்கள் அங்கிகரிக்கவில்லையா? விடுதலைப் புலிகளைக் கொன்றொழித்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை, ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் ஆதரிக்கவில்லையா? அதுபோல், பழசுகளையும் பகைமைகளையும் மறந்து விட்டு, ஹிஸ்புல்லாவைத் தமிழர் தரப்பு, ஓர் ஆளுநராக ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது? என்கிற கேள்வியும் உள்ளது.  

மறுபுறம், ‘ஹிஸ்புல்லா இனரீதியாகச் செயற்படுகின்றவர்’ என்று, தமிழர் தரப்பில் முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளை, துடைத்தெறிவதற்கான சந்தர்ப்பமாக, ஆளுநர் பதவிக் காலத்தை ஹிஸ்புல்லா பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.  

அதேவேளை, முஸ்லிம்களின் உரிமைகளுக்காகப் போராடும் ‘ரொபின் ஹுட்’ ஆகவும், தமிழர்களின் உரிமைகளைப் பறித்தெடுத்து அவற்றை முஸ்லிம்களுக்கு வழங்கும் தலைவனாகவும் ஹிஸ்புல்லாவை தமிழர் சமூகம் நினைத்துக் கொள்வது அபத்தமாகும்.   

கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்ட பின்னர், முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருந்தார். அதில், ‘அபிவிருத்தி அரசியலில் இன்றிருக்கும் வடக்கு, கிழக்கு, மலையக சிறுபான்மை வலதுசாரி அரசியல்வாதிகள் எல்லோரை விடவும், ஹிஸ்புல்லா வல்லவராவார். ஆனால், அவர் ஓர் உரிமைப் போராளியல்ல’ என்று குறிப்பிட்டிருந்தார். ஏறக்குறைய அதுதான் உண்மையாகும்.   

மறுபுறம், ஹிஸ்புல்லாவுக்கு எதிரான அரசியல் பிரசாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பமும் உள்ளது. கிழக்கு மாகாணசபை இப்போது கலைக்கப்பட்டிருந்தாலும் கூட, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வசமுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஆளுநர் தலையீடு செய்வதற்கும், தனது அதிகாரங்களினூடாக ஆளுநர் ‘குடைச்சல்’ கொடுப்பதற்கும் நிறையவே சாத்தியங்கள் உள்ளன.  

அப்படி நடந்தால், கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து, ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான அரசியல் சமரில் இறங்கவும் கூடும்.  

ஆனால், இப்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் கை கோர்ப்பதென்பது, அரசியல் ரீதியாக, முஸ்ஸிம் காங்கிரஸுக்குச் சாதகமாக இருக்கப் போவதில்லை என்பதையும் குறித்து வைத்துக் கொள்தல் அவசியமாகும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .