2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிழக்குத் தமிழ் மக்களுக்கு அநீதிகள்

Editorial   / 2019 ஏப்ரல் 04 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இலட்சுமணன் 

அரசியல் அநாதைகளாகவே வாழ்ந்து, காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள், அநீதி இழைக்கப்படும் சமூகமாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றார்கள்.   

இது ஒன்றும் மூடி மறைக்கப்பட வேண்டிய விடயமல்ல. அநீதி இழைக்கப்படுகிறது என்று, தமிழர் தமக்குத் தாமே உணர்ந்துகொண்டு செயற்பட்டாலே தவிர, யாரும் ‘ஐயோ பாவம்’ என்று உதவவரப் போவதில்லை. இந்நிலைமை, தமிழர்கள் மத்தியில் அரசியல் சாணக்கியம் இன்மையால் ஏற்பட்டதாகும். அதிலும் இங்கு, அதிகளவில் பாதிக்கப்படுவது கிழக்குத் தமிழர்கள் ஆகும்.   

இப்போதைய நிலையில், உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் இலங்கைத் தமிழர் இருப்பார்கள்; அது பெருமைதான். விடுதலைப் புலிகளின் தலைவர், ஆரம்ப காலகட்டத்தில், வெளிநாடுகளுக்குப் போராளிகள் செல்வதற்கு அனுமதிகளை வழங்குவதில்லை. ஒரு நிலைக்கு அப்பால், வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்வதற்கான அனுமதியை அவரே வழங்கினார். இது தமிழர் போராட்டம், சர்வதேச மயப்படுவதற்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குப் பிரதான பொருளாதார பலத்தையும் ஏற்படுத்தி இருந்தது.   

கிழக்கு வாழ் தமிழர்களைப் பொறுத்தவரையில், மாகாணசபை ஊடாக, செயற்படுத்தப்படும் செயற்திட்டங்கள் தொடர்பாக, கட்சித் தலைமைகள் கடந்த காலங்களில் அக்கறை காட்டியதில்லை. காரணம் புதியதொரு தீர்வுத் திட்டத்தை நோக்கிய வேலைத்திட்டங்களையே முன்னெடுத்துச் செல்லுவதில், கட்சித்தலைமைகள் கவனத்தைக் குவித்திருந்தன. அது மட்டுமின்றி, பல தலைமைகள், மாகாண சபை முறைமைகளை ஏற்றுக் கொள்ளவுமில்லை. உதாரணமாக, கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட வேளை, அத்தேர்தலில் போட்டியிடாமல் பலர் ஒதுங்கிக் கொண்டார்கள். ஆனால், தமது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் நிலையில் தான், இரண்டாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டார்கள்.   

இது இவ்வாறிருக்க, மத்திய அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும் மாகாணசபையில் அமைச்சர்களாகவும் தெரிவு செய்யப்படும் ஏனைய சமூகங்களின் பிரதிநிதிகள், சுகாதாரத்துறை, உள்ளூராட்சி, நகரஅபிவிருத்தி, நீர்ப்பாசனம், காணிகள் போன்ற துறைகளில் அமைச்சுப் பதவிகளைப் பெற்று, புதிய நியமனங்களையும் பதவி உயர்வுகளையும் தமது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கி, இது போன்ற இன்னும் பல வேலைகளைக் கன கச்சிதமாக, நிறைவேற்றிக் கொள்கின்றார்கள்.    

மத்திய அரசாங்கத்தின் உடந்தையுடன், கடந்த காலங்களில் சில அமைச்சர்கள்,  கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு மோசமான முறையில் துரோகம் விளைவித்தது வரலாறாகும். இதற்கு மற்றைய சமூகங்கள் காரணமல்ல; தமிழர்களே காரணமாகும்.   

கிழக்கு மாகாண சபையைப் பொறுத்தவரையில், மத்திய அரசாங்கத்திடமிருந்து தமிழர்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்படுவதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும். அதற்கு முன்னர், மாகாண சபையை அதிகாரம் உள்ளதாக மாற்றுவதற்குச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவும் வேண்டும்.   மாகாண சபையைக் கொண்டு செல்வதற்குக்கூட, பூரண தெளிவில்லாத நிலையில் செயற்படும் அரசியல்வாதிகளால் நியதிச்சட்டங்கள், உபவிதிகள் உருவாக்குவதில் முழுமையாக ஈடுபட முடியுமா என்பதை முதலில் கேட்டுக்கொள்ளலாம்.   

கடந்த காலத்தில் யுத்தம் நடைபெற்ற வேளை, தமிழர் தவிர்ந்த, ஏனைய தரப்பினர் அடைந்து கொண்ட வரப்பிரசாதங்கள், சலுகைகளை அளவிட்டு, அதன் அடிப்படையில் தமிழர்களுக்கு வழங்கப்படுவதற்கு, ஆவன செய்தல் வேண்டும்.   அதற்குக் கடைப்பிடிக்க வேண்டியது, விகிதாசாரங்களா? திறமைகளா என்பதனைத் தீர்மானித்து, அது தொடர்பான விடயங்கள், வறுமைசார் முன்னோக்கிய நிதி ஓதுக்கீடு, மாகாண ஆளனி தொடர்பான மீள்பரிசீலனை, மத்திய அரசாங்கத்தால் கபளீகரம் செய்யப்படுகின்ற வரிஅறவீடு, வழங்கப்பட்ட அதிகாரத்தை அமுல்படுத்துதல் போன்ற வேலைத்திட்டங்கள் வரிசைப்படுத்தப்படுதல் வேண்டும்.   

இவ்வாறான முக்கிய விடயங்கள் தொடர்பில் அக்கறை செலுத்தாமல், புதிய தீர்வுத் திட்டம் தொடர்பாக எவ்வாறு பேசமுடியும் என்பது இப்போதைய அலசலாகும்.   கிழக்கு மாகாணத்தின் அரசியல் அதிகாரத்தை, தமிழர்கள் பலவீனமாகப் பயன்படுத்தியதன் விளைவே, மத்தியிலும், மாகாணத்திலும் பல வேலைதிட்டங்களைச் செயற்படுத்த முடியாமைக்குரிய காரணங்களாகும். இவற்றை அடையாளம் கண்டுகொள்வது முக்கியமானது.   

அதற்கு முதலில், ‘மாகாண சபையில் இருந்து கொண்டு, அங்குள்ள அதிகாரத்தைச் சரியாகப் பயன்படுத்தி, அடைந்து கொள்ள முடிந்தவற்றைப் பெற்றுக் கொண்டு, கிழக்கின் அபிவிருத்தியில் பங்காற்ற வேண்டும். அதன்பின்னர், ஏனைய விடயங்களைப் பார்த்துக் கொள்ளலாம்’ என்பது, கிழக்கின் அபிவிருத்தி மற்றும் தமிழர்களின் இருப்புக் குறித்துச் சிந்திக்கும் அரசியல்வாதிகள் சிலரது கருத்தாக இருக்கிறது.   

மத்திய அரசாங்கத்தால் எவ்வாறான அதிகாரங்கள் பகிரப்பட்டிருந்தாலும், அவ்வாறான அதிகாரப் பகிர்வுகள், ஜனநாயக ரீதியில் அமைந்திருக்க வேண்டும். மாகாண சபைகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டு, அவற்றுக்கான உறுப்பினர்கள், முதலமைச்சர் தெரிவுசெய்யப்படுவதுடன், மாகாண அமைச்சுகளும் செயற்பட வேண்டும்.   

மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படாவிட்டால், அங்கு ஜனநாயக ஆட்சி இருக்காது என்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் அண்மைய நாடாளுமன்றக் கருத்தாகும். இருந்தாலும், பொதுவில் வடக்கையும் கிழக்கையும் பார்க்கின்ற தன்மையை விடுத்து, கிழக்கை விசேடமாக அவதானிக்கின்ற நிலைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதே கிழக்குத் தமிழ் மக்களது அவாவாகும்.   

அரசியல் ரீதியாகத் தமிழ் அரசியல் தலைவர்கள், கிழக்கு வாழ் தமிழ் மககளுக்கு இழைக்கின்ற அநீதிகளுக்கு மத்தியில் தான், மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள், ஓர் இனத்துக்கான அமைச்சர்களா, அல்லது அனைத்து இனங்களுக்குமான அமைச்சர்களா எனத் தங்களை நிரூபிக்க வேண்டும் என்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.  

மத்திய அரசாங்கம், அமைச்சர் ஒருவரை நியமித்து, அவ்அமைச்சுக்கான நிதி ஓதுக்கீடுகளை வழங்கி, அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கும் படி, பணிக்கின்றது என வைத்துக்கொள்வோம். இந்நிலைமையில், தமிழர்கள் வாழுகின்ற பிரதேசத்தைக் கைவிட்டு, அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, அமைச்சருக்குரிய நிதியெனக் கூறி, வந்ததே கடந்த கால வரலாறாகும்.   

இதனால், தமிழ் மக்கள் ஏனைய சகோதர இனத்தவர்களை, விரோதிகளாகப் பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அவ்வாறான கருத்துகள் முன்வைக்கப்படுகின்ற போது, ஒரு சிலவற்றைக் கண்துடைப்புக்கு காட்டிவிடுவதும் உண்டு. இது மிகப் பெரிய அநீதியாகப் பார்க்கப்பட வேண்டும்.   

30 வருடங்களாக, யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து, உற்றார், உறவினர்களைப் பறிகொடுத்து, பொருளாதாரத்தில் வறுமையின் பிடியில் வாடி, கடன் தொல்லைகளால் தற்கொலை புரிகின்ற அளவுக்கு நிலைமை மாறியதற்குக் காரணம், மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட, ஒரு சில அமைச்சர்களின் தவறான செயற்பாடுகளே ஆகும் என்ற குறைபாடும் தமிழர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றது.   

அமைச்சர்கள் என்பது, அரசாங்கத்தின் கொள்கைகளை அமுல்படுத்தும் போது, வறுமையின் அடிப்படையில், கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டு இன்னமும் கண்டுகொள்ளப்படாதிருக்கும் பிரதேசங்களுக்கு, அதிக நிதியை ஒதுக்கிச் செயற்படுகின்ற வகையிலான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதே, கிழக்குத் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளால் ஏற்பட்ட காயங்களை ஆற்றும் மருந்தாகும்.   

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், தரமான வீதிகளும் நகரங்களும் அமைந்திருக்கின்ற பிரதேசமானது, கிழக்கின் 25 சதவீதமான பகுதியென்பதும், ஏனைய பிரதேசங்கள் மிகவும் பின்தங்கிய, வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்கள் வாழும் பிரதேசம் என்பதும் அரசியல் தலைமைகளின் சிந்தனைகளில் இருப்பது, இதற்குத் தீர்வாகும்.   

வறுமை, கிராமசேவையாளர் பிரிவு, சனத்தொகை, விகிதாசாரம், போரின் பாதிப்புகள், இழப்புகளின் தாக்கம் போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு, நிதி ஓதுக்கீடு செய்யப்பட வேண்டும். மலை போல் பொருளாதாரங்கள் குவிந்து கிடக்கின்ற பிரதேசங்களுக்கு, 90 சதவீதமும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாழ்வாதாரமின்றி வாடுகின்ற பிரதேசத்துக்கு 10சதவீத நிதி ஓதுக்கீடும் ஓதுக்குவதால் என்ன அபிவிருத்தி ஏற்பட்டு விடப்போகின்றது.    

மத்தியில் ஒரு முடிவுகளை எடுத்துக் கொண்டு, மாவட்டத்திலுள்ள பிரதேச, மாவட்ட அபிவிருத்திக் குழுவில் அனுமதி பெறப்படாமல் நிதி ஓதுக்கீடு செய்வது, எல்லா திட்டங்களுக்கும் பொருத்தமற்றது என்பதே தமிழர்களின் நிலைப்பாடு.   

அரசாங்கத்தால் நியமிக்கப்படுகின்ற அமைச்சர்களுக்குரிய நிதி என்பது, வெளிநாடுகளில் இருந்து கடனாகவும் மக்களின் வரிப்பணத்திலிருந்தும் பெறப்படுபவை. இந்நிதி ஒரு பொதுவான நிதியாகும்.   
இவ்வாறான அநீதிகள், 2018ஆம் ஆண்டுடன் முடிவடைந்ததாக இருக்க வேண்டும். 2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் பின்னர், கிழக்குத் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியானதாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புக் கிளம்பியிருக்கிறது. 

‘வெளிப்பூச்சு எல்லாம் வெள்ளை; உள்ளே எல்லாம் மோசம்’ என்பது போன்றுதான், நாம் இருப்போமென்றால் அரசியலில் மாத்திரமல்ல, எந்த ஒன்றுக்கும் அது பிழையானதாகத்தான் இருக்கும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .