2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குடாநாட்டில்; மயானங்கள் மாயமான்கள்

Editorial   / 2017 ஜூன் 27 , பி.ப. 01:08 - 1     - {{hitsCtrl.values.hits}}

- பஸ்தியாம்பிள்ளை ஜோண்சன்  

இராமாயணத்தில் மாயமான் தோன்றியிருக்காவிட்டால், இராவணன், சீதையைக் கவர்ந்து சென்றிருக்க முடியாது. இராம - இராவண யுத்தம் நிகழ்ந்து, இலங்காபுரியின் அழிவும் நிகழ்ந்திருக்காது. இதற்கெல்லாம் காரணமானது மாயமானே!

அதேபோல், யாழ்ப்பாணக் குடாநாட்டில் மக்கள் குடியிருப்புகளுக்குள் இருக்கும் மயானங்களும் மாயமான்களாகவே அழிவுகளுக்கு கால்கோள் இடுபவையாகக் காணப்படுகின்றன.  

சம்பந்தப்பட்ட கிராம மக்கள் மத்தியில் அமைதியின்மையையும் கொந்தளிப்பு நிலையையும் இத்தகைய மயானங்கள் உருவாக்கி விட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட கிராமங்களின் மக்கள் மத்தியில் பரஸ்பர சமூக ஒற்றுமை மறைந்துபோய் விட்டுள்ளது; பொருளாதார அபிவிருத்தி பாதிக்கப்பட்டுள்ளது; கல்வியில் உயர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது; எதிலும் தன்னிறைவு காண முடியாத மந்தநிலை உருவாகியுள்ளது.  
மயானங்கள் மக்கள் மத்தியில் காணப்படுகின்றன எனும்போது, மக்கள்தான் மயானங்கள் மத்தியில் குடியிருப்புகளை உருவாக்கினார்கள். அதற்கான காரணம் வலுவானது. காலத்தின் தேவையாகவும்கூட இருந்தது. காலமாற்றத்துக்கு ஏற்ப கடமையாற்ற வேண்டியது சமூகப்பொறுப்பு உள்ளோரின் கடமையாகும். 

யுத்தம் காரணமான மக்களின் இடம்பெயர்வு, குடித்தொகைப் பெருக்கம், நகரமயமாக்கம் போன்ற காரணங்களால் குடிசைகள், வீடுகளின் எண்ணிக்கை குடாநாட்டுக்குள் அதிகரித்தன. குடாநாட்டின் பாரம்பரிய கிராமங்களின் புறங்களில் இருந்த, வயல்நிலங்கள், வெளிகள், தோப்புகளில் இந்த மக்கள் தமது குடியிருப்புகளை அமைத்துக்கொண்டார்கள்.   

அக்காலங்களில் பொறுப்பில் இருந்த அரசியல்வாதிகள், முடிவெடுக்கும் தகுதியுடைய அரச அதிகாரிகள், மனிதாபிமான அடிப்படையில் அந்தக் காணிகளை அவர்களுக்கே உரித்தாக்கி, சட்டபூர்வமானதாக காணி உறுதிகளையும் வழங்கியிருந்தார்கள்.   

ஆனால், அந்த மக்களின் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருந்த மயானங்களை அப்புறப்படுத்தி குடியிருக்கும் மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் வாழத்தக்க வகையிலும், ஏற்கெனவே இந்த மயானங்களைப் பயன்படுத்திவரும் மக்களுக்கு வசதிவாய்ப்பானதாகவும் வேறொரு மயானத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பிலிருந்து அதிகாரத்திலிருந்தோர் தவறிவிட்டிருந்தார்கள்; தூரநோக்கத்துடன் செயற்பட மறந்துவிட்டார்கள். இப்போது பொறுப்பிலுள்ளவர்களும் இந்தக் கைங்கரியத்தையே தொடருகின்றார்கள்.   

அண்மையில், புத்தூரில் இந்த மயானப் பிரச்சினையால் பொலிஸார் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளும் நிலைக்கு முரண்பாடுகளும் குரோதங்களும் சென்றுள்ளன. இலட்சக்கணக்கான பெறுமதிவாய்ந்த வாழைமரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன;மயானத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர்கள் இடித்து நொருக்கப்பட்டன.

மக்கள் மத்தியில் பதற்றமும் இயல்புவாழ்க்கையும் பாதிக்கப்பட்டு மக்கள் பொலிஸ் நிலையம், நீதிமன்ற வாசற்படிகளில் ஏறிஇறங்க வேண்டிய நிலைமைகள் ஏற்பட்டன. இத்தனைக்கும் காரணம் அந்த ஊரின் மத்தியில் இருந்த மயானம்தான்.   

ஊரின் மத்தியில் காணப்படும் மயானங்களினால், அந்த மக்களின் சுகாதாரம், ஆரோக்கியம், நம்பிக்கைகள் சிதைக்கப்படுவதுடன் உளவியல் ரீதியான பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பிணங்களை எரிக்கும் புகையும் தூசும் மக்களின் வீடுகளுக்குள்ளும் குடிநீர் கிணறுகளுக்குள்ளும் மாணவர்கள் கற்கும் பாடப்புத்தகங்களின் மீதும், உணவருந்தும் உணவுக்கோப்பைகளுக்குள்ளும் வந்து படிகின்றன.   

பொதுவாக, பிரச்சினைக்குரியதாகக் கருதப்படும் எந்த மயானங்களை எடுத்துக்கொண்டாலும் அங்கு பெரும்தொகையானோர் கூலித்தொழிலாளிகளாகவே காணப்படுகின்றார்கள். விவசாயம், மீன்பிடி, நிர்மாணம் போன்ற துறைகளில் தொழிலாளர்களாகப் பணிபுரிகின்றனர். 

உரும்பிராய் வடக்கு, சரஸ்வதி சனசமூக நிலையத்தின் முன்னாள் தலைவர்  விஜிதன், தங்களுடைய நெருக்கடிகள் குறித்துச் சொல்லும்போது,
“இந்த மயானத்தைச் சுற்றி, 200 குடும்பங்களுக்கு மேல் இருக்கிறார்கள். எங்களுடைய தொழில் விவசாய கூலித்தொழில். காணிகள் எல்லாம் உறுதி முடிக்கப்பட்டவைதான்.

 

பிரச்சினைகளை முகம்கொடுக்க வேண்டிய தேவை, இப்போது எங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்த மயானம், மயானக்கிணறு, மயான உடமைகள் எல்லாம் பிரதேச சபையால் அங்கிகரிக்கப்பட்டவைதான். மயானத்தில் கட்டுமானப்பணி தொடங்கும்போது, கட்டடப்பணியை நிறுத்துமாறும் இதற்குரிய மாற்றமாக கோப்பாய் மயானத்தைப் பயன்படுத்துமாறும் நாங்கள் சொன்னனாங்கள். நாங்கள் கோப்பாயைப் பயன்படுத்த ரெடி! எங்களுக்குத் தூரம்; அவைக்குக் கிட்ட. பொதுவாக எல்லோரும் சேர்ந்து, கோப்பாயை நோக்கிப் போவோம். மயானங்களின் நிலப்பரப்பு வெளியாகும். 

குடியிருப்பும் அபிவிருத்தி காணும்; இந்த மயானத்துக்கு 100 மீற்றர் தூரத்தில்தான் ‘நேசரி’ இருக்கிறது; இங்கே ஒரு தகனம் நடந்தால் அங்கே வகுப்பு நடத்த ஏலாது. விளையாட்டு மைதானம், கோவில் எல்லாம் இதற்குள்தான் இருக்கின்றன. அருகில் ஒரு பூப்புனித நீராட்டு விழா நடந்தது. சவம் எரித்தால் அயலில் உள்ளவர்கள் நன்மையான காரியங்களைச் செய்யஏலாது. இது எப்படி என்று சொன்னால், பிரதேச சபைகளில், மாகாண சபைகளில், மயான அபிவிருத்தி சபைகளில் இருக்கும் ஆக்கள் இதில் பாதிக்கப்படுவதில்லை. பாதிக்கப்படுவது நாங்கள்தான்.அவையின்ற கணேசா சனசமூகம் சார்ந்தது; எங்கட சரஸ்வதி சனசமூக நிலையம் சார்ந்தது. இன்றைய தலைமுறை, அடுத்த தலைமுறை இதில வாழவேண்டும்” என்றார்.    

புன்னாலைக்கட்டுவன் கிராமசேவையாளர் பிரிவிலுள்ள திடப்புலம் கிராமத்தின் உள்ள மயானத்தை அகற்ற வேண்டும் என்பதும் குடிவந்த மக்களின் கோரிக்கை. திடப்புலம் கிராமத்தில் 180 குடும்பங்களுக்கு மேல் வாழுகின்றன.   

“நாங்கள இந்த மயானத்தைப் பயன்படுத்தாமல் வேறொரு மயானத்தையே பயன்படுத்துகின்றோம். எமது அயற்கிராமத்தில் உள்ளவர்களாலேயே இந்த மயானம் பயன்படுத்தப்படுகிறது. மயானத்தை அகற்றுமாறு பலதடவைகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வலிகாமம் தெற்கு பிரதேசசபை, இதற்குத் தீர்வாக பத்தடி உயமான மதிலை அமைத்துக் கொடுப்பதற்கு முன்வந்தது. ஆனால், ஊர் மக்கள் மயானத்தையே அப்புறப்படுத்தித் தருமாறு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றார்கள்” என்கிறார் திடற்புலம் வௌ்ளிநிலா சனசமூக நிலையத்தின் தலைவர்.   

வடபகுதியில் குடியிருப்புப் பகுதிகளில் அமைந்திருக்கும் மயானங்கள் இடமாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பொதுநல அமைப்புகள், மனித உரிமை சட்டத்தரணிகளினால் பரந்தளவிலான செயற்பாடுகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. குறிப்பாக, சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு, சமூக நீதிக்கும் சமத்துவத்துக்குமான வெகுஜன அமைப்பு, புதிய ஜனநாயக மாக்ஸ்சீய லெனினிசக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, சட்டத்தரணி சோ. தேவராஜன், சட்டத்தரணி பார்த்தீபன், சட்டத்தரணி ச. ஜேசுநேசன், சட்டத்தரணி ரங்கன் போன்றவர்களும் அமைப்புகளாகவும் தனிநபர்களாகவும் அந்த மக்களுக்காகப் போராடி வருகின்றார்கள்.    

புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையத்தின் தலைவர் குமார், இப்படிக் கூறுகின்றார். “வாழ்வியல் உரிமைகளை நிலைநிறுத்த முயன்றால் அடாவடித்தனம் புரிகின்றார்கள்.

குடும்பங்கள் பெருகும்போது மக்கள் எங்கு குடியேறுவார்கள்? சட்டங்களும் ஒழுங்குகளும் நிரந்தரமானவையல்ல; மக்களின் நலன்களுக்கு ஏற்ப, அவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டே வந்துள்ளன. இந்தக் கலைமதி கிராம மக்கள், புதிய கிராமியக் கட்டமைப்பை தமக்குள் ஒற்றுமையுடனும் முன்முயற்சியுடனும் உருவாக்கி வருகின்றார்கள்.

கிராமத்துக்கான பாதை முதற்கொண்டு, அரச கட்டமைப்புகளின் திட்டமிடலின்றி, மக்களின் நல்வாழ்வுக்கு அவசியமான பொதுநிறுவனங்களையும் மக்களின் ஒன்றுபட்ட செயற்பாட்டின் மூலம், உருவாக்கி வருகின்றோம். எமது சக்திக்கும் வளத்துக்கும் ஏற்ப வளர்ச்சி கண்டுவரும்,புதிய கிராமியக் கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கான தடையாகவே இந்த மயானம் குறித்த பிரச்சினை எம்மால் முன்வைக்கப்படுகின்றது.   

அரைகுறையாக எரிந்த உடற்பாகங்கள், எலும்புகள் நாய்களினால் இழுத்துவரப்பட்டு, வீடுகளின் முற்றங்களில் விடப்படுகின்றன. இதனால் சுகாதாரக்கேடும் சூழல்மாசடைவும் உளவியல் ரீதியான தாக்கங்களும் ஏற்படுகின்றன. பிரேதப்புகையை மயானங்களுக்கு அருகில் வாழும் குழந்தைகள், கற்பிணிகள், நோயாளிகள் சுவாசிக்க வேண்டிய சூழல் உருவாகிறது.   

மக்களின் குடியிருப்புகளிலிருந்து தூரமாக உள்ள மயானங்களைப் பயன்படுத்தவதுகூட, இன்றைய போக்குவரத்து வசதிகள் சிறப்பாக உள்ள நிலைமையில் சாத்தியமானதாகவே இருக்கிறது. பண்டைய வழக்கம் என்ற பழைமை வாதச் சிந்தனை கொண்ட சிலரினாலேயே இது முடிவின்றித் தூண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது” என்கிறார்.    

இத்தகைய மயானப்பிரச்சினைகள் உரும்பிராய் வடக்கு, ஈவினை வடக்கு - திடற்புலம், புத்தூர் மேற்கு - கிந்துசிட்டி, திருநெல்வேலி - பாற்பண்ணை, மல்லாகம் போன்ற இடங்களில் நிலவுகின்றன.   

பொறுப்பு, அதிகாரம் வாய்த்த தமிழ் அரசியல்வாதிகள், முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட தமிழ் அதிகாரிகள் ஆகியோரில் பெரும்பாலானவர்கள் உயர்சாதியினராகக் காணப்படுவதால்தான், தாம் பாதிக்கப்படுகின்றோம் என்ற ஆதங்கமும் மனவேதனையும் இந்தக் குடியிருப்புகளின் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. 

பிரச்சினைகளுக்கு மத்தியில் நின்றுகொண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது; பிரச்சினைகளிலிருந்து வெளியில்வந்து நின்று, சிந்தித்தால் தீர்வுகள் பல இருக்கும்.   


You May Also Like

  Comments - 1

  • ப.ஜெயக்கொடி Thursday, 29 June 2017 06:52 AM

    மயானம் சுகாதாரத்துக்கும், நல்ல உளவியல் வாழ்வுக்கும் பாதகமானது.மக்களற்ற பிரதேசமே பொருத்தமானது.மக்கள் வாழும் நிலங்களில் இருந்து அகற்றல் அவசியம் என்பது சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கே தெரியும்.மயானத்தை சூழவுள்ள மக்கள் பிரதேச சபை மீது வழக்கு தொடரணும்.இது நல்ல வழிமுறை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X