2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குடியரசுத் தேர்தல் பதவிக்கான குதிரையோட்டம்

எம். காசிநாதன்   / 2017 ஜூன் 26 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல், களை கட்டி விட்டது. ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையிலான போட்டியாக, இந்தமுறைத் தேர்தல் மாறியிருக்கிறது.   

இந்தியாவின் முதல் குடியரசு தலைவரான டொக்டர் ராஜேந்திரபிரசாத், பீஹார் மாநிலத்தில் இருந்துதான் தெரிவு செய்யப்பட்டார். இப்போதும் பீஹார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட இருக்கிறார்.

  

நாட்டின் மிக உயர்ந்த, முதல் பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல், இந்தமுறை வித்தியாசமான தேர்தல் களத்தைச் சந்திக்கிறது. எதிரும் புதிருமாகப் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள, ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் மீரா குமாரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.   

அரசியல் சட்டத்தின் தந்தையாக இன்றைக்கும் அழைக்கப்படுபவர் டொக்டர் அம்பேத்கர். அந்தமுறையில் ராம்நாத் கோவிந்தும் மீரா குமாரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் சார்பிலிருந்து, நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு போட்டியிடுகிறார்கள் என்பது இந்தியாவின் சமத்துவத்தை உலக அரங்குக்கு எடுத்துரைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.  

இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிறுத்தியிருக்கும் வேட்பாளர் ராம்நாத் கோவிந்தின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாகி விட்டது. ஆளுநராக இருந்த அவர், இனிக் குடியரசுத் தலைவராக இருக்கப் போகிறார்.   

அதாவது, இதற்கு முன்பு அவர், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார். இப்போது அவர், குடியரசுத் தலைவராக இருந்து ஆளுநர்களை நியமிக்கப் போகிறார். வேட்பாளர் தெரிவில் ஆரம்பம் முதலாகவே, ‘அனைவரும் ஏற்றுக் கொள்ளப்படும் வேட்பாளர் ஒருவர்’, ‘மதச்சார்பற்றவராக இருக்கும் வேட்பாளர் ஒருவர்’, நிறுத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.  

அந்தக் கோரிக்கைக்கு பா.ஜ.க தரப்பிலிருந்து, வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை என்றாலும், ஒரு கட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கம்யூனிஸ்ட் தலைவர் சீத்தாராம் எச்சூரி போன்றவர்களை குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.கவின் வேட்பாளருக்கு ஆதரவு கேட்கும் படலத்தைத் தொடங்கியது.   

குறிப்பாகத் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திடம் கூட, பா.ஜ.கவின் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு கேட்டார்.  

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரைக் குடியரசுத் தலைவராக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சிப்பார் என்று ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்க்கப்பட்டது. 

பா.ஜ.கவுக்குள் அத்வானி, முரளி மனோகர் ஜோசி போன்ற குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் பிரதமரைப் பொறுத்தமட்டில் ஆட்சி அமைத்ததில் இருந்தே, தன் கட்சிக்குத் தாழ்த்தப்பட்ட வாக்குகளைத் திரட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் ‘அம்பேத்கர் புகழ்’, ‘தாழ்த்தப்பட்டோர் நலன்’ இப்படி, அரசியல் செய்து கொண்டிருந்ததை யாரும் மறுக்க முடியாது.  

 பா.ஜ.கவுக்குள் இருக்கும் குடியரசுத் தலைவர் வேட்பாளர்களை, முன்னணிக்குக் கொண்டு வந்து விடக்கூடாது என்ற ஒரு யுக்தி, இதில் இருந்தாலும், பா.ஜ.கவுக்குத் தாழ்த்தப்பட்ட சமுதாயம் மற்றும் முஸ்லிம் சமுதாயம் ஆகியவற்றில் உள்ள எதிர்ப்புகளை வாக்குகளாக மாற்றி விட்டால், அகில இந்திய அளவில் வலுவுள்ள கட்சியாக பா.ஜ.க மாறிவிடும் என்ற நோக்கமே பிரதமர் நரேந்திரமோடியின், ‘தாழ்த்தப்பட்ட நலன் அரசியல்’ மற்றும் ‘முஸ்லிம் பெண்களுக்கான தலாக் அரசியல்’ போன்றவற்றில் எதிரொலிக்கின்றன.   

உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில், முஸ்லிம் பெண்களுக்கு வழங்கப்படும் ‘தலாக்’ முறைக்கு எதிரான, பா.ஜ.கவின் நடவடிக்கைக்கு மிகப்பெரிய ஆதரவு அக்கட்சிக்கு கிடைத்து விட்டது. அந்த ஆதரவை இப்போது நாடுமுழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட வாக்காளர்களிடம் திரட்டும் முக்கிய நோக்கமே ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவராக அறிவித்திருப்பதன் மிக முக்கிய பின்னணி என்றால் மிகையாகாது.   

பா.ஜ.கவுக்கான இந்த இரு வாக்காளர்களையும் திரட்டுவதில் பிரதமர் நரேந்திரமோடி ஓரளவு வெற்றி பெற்று விட்டார் என்றே தெரிகிறது.  

பா.ஜ.கவுக்கு எதிரான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியைப் பொறுத்தவரை இப்போதைக்கு, மதம் சார்ந்த வேட்பாளரையோ, அல்லது “இந்துத்  தத்துவவாதக் கொள்கையையோ மிக உயர்ந்த அளவுக்குத் தூக்கிப் பிடிக்கும் ஒரு வேட்பாளரை நிறுத்த விடாமல், பா.ஜ.கவுக்கு ஒரு நெருக்கடியை கொடுத்து விட்டார்கள் என்பது மட்டுமே உண்மை.   

என்றாலும், குடியரசுத் தலைவர் தேர்தல் வியூகம், என்பதில் தோற்று விட்டார்கள். குறிப்பாகக் காங்கிரஸின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு அந்த அணியிடம் வாக்குகள் இல்லை. முன்னாள் துணைப் பிரதமர் ஜெகசீவன்ராமின் மகளும், மக்களவைத் தலைவராக இருந்தவருமான மீரா குமார், மிகச் சிறந்த தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளர் என்பதில் சந்தேகமில்லை.   

ஆனால், அவரை அறிவித்த விதம், பா.ஜ.க தாழ்த்தப்பட்ட சமுதாய வேட்பாளரை நிறுத்தியதால் நாங்களும் நிறுத்த வேண்டியதாகி விட்டது, என்ற நிலைப்பாட்டைக் காங்கிரஸ் நாட்டு மக்களுக்கு அறிவித்ததுபோல், ஆகிவிட்டது. வலுவான நிலையில் உள்ள பா.ஜ.க தான், விரும்பும் வேட்பாளரை நிறுத்தவே நினைக்கும் என்பதை ஏனோ பழுத்த அனுபவம் உள்ள காங்கிரஸ் கட்சியாலும் உணர முடியவில்லை. அந்தக் கட்சியுடன் இணைந்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் செயல்பட முடிவு செய்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளாலும் எதிர்பார்க்க முடியவில்லை என்பது, வியூக ரீதியாக, ஒரு தோல்வி என்றே கருத வேண்டும்.  

காங்கிரஸ், முதலில் தாழ்த்தப்பட்ட சமுதாய வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும். ஏனென்றால், அக்கட்சி ஆட்சியிலிருக்கும் போதுதான், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கே.ஆர். நாராயணன், முதன் முதலாகக் குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.   
ஆனால், இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, பா.ஜ.கவின் ‘மதவாத முகம்’ உள்ள வேட்பாளரைப் போட்டு விடக்கூடாது என்ற அச்சத்தில் மட்டுமே, காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வியூகம் வகுத்தனவே தவிர, பா.ஜ.கவின் அரசியலைப் புரிந்து கொள்ள மறுத்து விட்டன.   

பாபர் மசூதி வழக்கில் உள்ள, சதிக் குற்றச்சாட்டுகளை பா.ஜ.கவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்ட அத்வானி மீது, மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட அன்றே, குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தனது வியூகத்தை மாற்றியிருக்க வேண்டும்.   

அன்றைக்கே, ‘இனி மதவாத முகம் உள்ள வேட்பாளரை பா.ஜ.க நிறுத்தாது; அதற்குப் பதில் தாழ்த்தப்பட்ட சமுதாய வேட்பாளரை நிறுத்தலாம்’ என்பதை எதிர்பார்த்து, அதற்கு ஏற்றவாறு, தனது குடியரசுத் தலைவர் வியூகத்தை வகுத்துக் கொண்டிருக்க வேண்டும்.   

ஆனால், இந்தக் குடியரசுத் தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸ் கோட்டை விட்டது. பா.ஜ.கவோ உள்ளபடியே, செங்கோட்டையைப் பிடித்து விட்டது.  

எது எப்படியோ, புதிய குடியரசுத் தலைவராக இருப்பவர், இதுவரை இருந்த குடியரசுத் தலைவர்களை விட, வித்தியாசமாகச் செயல்படுவாரா என்ற கேள்விக்கு இன்னும் ஆக்கபூர்வமான பதில் கிடைக்கவில்லை.   

காங்கிரஸ் கட்சி, தெரிவு செய்த டொக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள், அன்று பிரதமராக இருந்த நேருவுடன் முரண்பட்டிருக்கிறார். டொக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களும் முரண்பட்டுக் கருத்துகளைக் கூறியிருக்கிறார். ஆனால், பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்குமான கருத்துப் பரிமாற்றங்கள் மோதலாக வெடிக்கவில்லை. ஆனால், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, காங்கிரஸால் தெரிவு செய்யப்பட்ட பூட்டாசிங், அக்கட்சிக்கே எதிர்த்துச் செயற்பட்டார்.   

‘போஸ்டல்’ மசோதாவைக் கையெழுத்திட முடியாது என்று மறுத்தார். அதேபோல், பிரதமர் வாஜ்பாய் தலைமையில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியின்போது, ‘உத்தர பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல் செய்வதை மறுபரிசீலனை செய்க’ என்று பிரதமருக்கு அறிவுரை செய்தார் குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன்.   

காங்கிரஸ் சார்பில், டொக்டர் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோதுகூட, ‘ஒபீஸ் ஒப் புரொபிட்’ (Office of Profit) மசோதாவைத் திருப்பி அனுப்பினார். ஆனால், தற்போது குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜி, அப்படியெல்லாம் எந்த முடிவையும் எடுத்து, அரசாங்கத்துடன் முரண்பட்டு நிற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆகவே, குடியரசுத் தலைவர் பதவி என்பது, அரிதிலும் அரிதாகப் பிரதமருடன் கருத்து வேறுபாடு கொள்ளும் அதிகாரம் படைத்த பதவியாக மட்டுமே இருக்கிறதே தவிர, மற்ற அனைத்து விவகாரங்களிலும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் முடிவின்படி செயல்பட வேண்டிய கட்டாயத்தில்தான் அந்தப் பதவி இருக்கிறது. அதை நெருக்கடிநிலை, அமுல்படுத்தப்பட்டபோது, அதுபற்றி, கேள்வியே கேட்காமல் அறிவித்த அன்றைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அஹமது, இன்றைக்கும் ஜனநாயகவாதிகளால் விமர்சிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.   

இப்போது பா.ஜ.கவின் சார்பில் வெற்றி பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், ஆளுநராக நியமிக்கப்பட்ட போதே, “நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டேன். இனி குடியரசுத் தலைவர் பதவியின் கண்ணியத்தை காப்பாற்றும் வகையில் செயல்படுவேன்” என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. 

ஆனால், குடியரசுத் தலைவர்தான், முப்படைகளின் சுப்ரீம் கொமாண்டர். ஆகவே, எல்லைப்புறப் பாதுகாப்பை நிலைநிறுத்தப் பாடுபடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.   

பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் எல்லையில் தொல்லை இருக்கும் என்று அவர் கூறியிருப்பது மிகவும் கூர்ந்து கவனிக்கத்தக்கது. ஆனால், அதற்குத் தேவையான அதிகாரம், இந்திய அரசியல் சட்டத்தின்படி பிரதமர் நரேந்திரமோடியிடம்தான் இருக்கிறது என்பதையும் மறுத்திட இயலாது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .