2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

குறுக்கே நிற்கும் ‘பூசாரி’கள்

கே. சஞ்சயன்   / 2018 ஜூலை 01 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடவுள் வரம் கொடுத்தாலும், பூசாரி இடம் கொடுப்பாரா என்பதுதான், இப்போதைய தமிழ் அரசியல் பரப்பில் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.   

அண்மையில், யாழ்ப்பாணத்தில் நடந்த ‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் வெளியீட்டு விழா, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவுகளில், இருந்துவந்த விரிசலைக் குறைத்திருப்பதாக, பரவலான கருத்தொன்று நிலவுகிறது.  

விக்னேஸ்வரனைக் காட்டமாக விமர்சித்து வந்த, தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும், அந்த நிகழ்வுக்கு வந்திருந்தார்கள்.  

இது, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், அவர் சார்ந்த கட்சிக்கும் இடையில், அண்மைக் காலங்களாக நீடித்து வந்த முரண்பாடுகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் முதல் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.  

இந்த இடத்தில், முதலமைச்சரின் கட்சி எது, என்ற கேள்வியும் இருக்கிறது. ஏனென்றால், இந்த நிகழ்வில் உரையாற்றிய, முதலமைச்சர் விக்னேஸ்வரன், தன்னைக் கட்சியில் இருந்து வெளியேற்ற சிலர் முனைகிறார்கள் என்ற குற்றச்சாட்டைக் கூறியிருந்தார்.  

ஆனால், தான் எந்தக் கட்சி என்பதைக் கூறவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்சி அல்ல; அது ஓர் அமைப்பு.   

அதேவேளை, ஆரம்பத்தில் தன்னைப் பொதுவேட்பாளர் என்று கூறி, அரசியலுக்கு வந்த முதலமைச்சர், பின்னர் ஆயுதக் குழுக்களை ஏற்க முடியாது என்றும், தமிழரசுக் கட்சியின் சார்பிலேயே, தான் தெரிவு செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார். சில காலங்களுக்கு முன்னர், தான் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரல்ல என்றும், ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.  

 ஆனாலும், ஒட்டுமொத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், முன்னிறுத்தப்பட்ட ஒருவராகவே, அவர் பொதுப்பார்வைக்குத் தென்படுகிறார்.  

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், குறிப்பாகத் தமிழரசுக் கட்சியுடன், தீவிரமான முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன், தனிக்கட்சி, தனிக் கூட்டணி அமைப்பது பற்றிய ஊகங்களை, ஊக்குவிக்கும் அறிக்கைகளை வெளியிடுகின்ற அளவுக்கும் கூடச் சென்றிருந்தார்.  

ஆனால் இப்போது, அவரது நிலையிலும், அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலையிலும், மாற்றங்கள் தென்படுகின்றன.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துக் கொண்டு வெளியே செல்வது அல்லது கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்படும் சூழலை ஏற்படுத்திக் கொள்வது, தமிழ்த் தேசிய அரசியலில் ஏற்படுத்தக் கூடிய பாதகமான தாக்கங்களை, முதலமைச்சர் விக்னேஸ்வரனும் உணரத் தொடங்கியிருக்கிறார்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், தமிழரசுக் கட்சியினரைத் தவிர, மற்ற இரு பங்காளிக் கட்சிகளும் விக்னேஸ்வரனின் வெளியேற்றத்தை விரும்பவில்லை. தமிழரசுக் கட்சியில் ஒரு பகுதியினரும் கூட, விக்னேஸ்வரனை வெளியேற்றுவதால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை, வலுவாக உணர்கிறார்கள்.  

ஆனாலும், விக்னேஸ்வரனுக்கும், தமிழரசுக் கட்சியில் உள்ள சிலருக்கும் இடையில் தோன்றியிருக்கின்ற கசப்புணர்வுகள், முரண்பாடுகள் தான், இரண்டு தரப்பினருக்கும் இடையில், பாரியதோர் இடைவெளியைத் தோற்றுவித்துள்ளது.  இந்த விவகாரத்தில், கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், இன்னமும் ஒருபக்க நிலைப்பாட்டை எடுக்காமல் இருப்பது, கூட்டமைப்புக்குச் சாதகமான விடயமாகும்.  

பிரச்சினைகள் ஏற்படுகின்ற தருணங்களில், அதனைப் பக்குவமாகத் தீர்த்து வைக்கின்ற ஆற்றல் 
இரா.சம்பந்தனுக்கு இருக்கிறது. அதை அவர் அவ்வப்போது பயன்படுத்தியும் வந்திருக்கிறார். ‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் வெளியீட்டு விழாவையும் அவர் அவ்வாறு தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.  

தற்போதைய அரசியல் சூழலில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் இன்னோர் அணி, வட மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாத்திரம் ஆபத்தானது அல்ல. எல்லாத் தரப்புகளுக்கும் ஆபத்தானது.  சுருங்கச் சொல்வதானால், ஒட்டுமொத்தத் தமிழ்த் தேசிய அரசியலுக்கும், இது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதே, பொதுவான கருத்தாக உள்ளது.  

இரண்டுபட்டு நின்று மோதும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது பலத்தை இழக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.  

ஆனால், முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் போட்டியிடக் கூடிய மாற்று அணி, கூட்டமைப்பு இழக்கக் கூடிய வாக்குகளையும் வகிபாகத்தையும் முற்றுமுழுதாகக் கைப்பற்றும் திறனைக் கொண்டதாக இருக்குமா என்ற பலமான சந்தேகம் உள்ளது. இதுதான் இரண்டு தரப்புகளுக்கும் உள்ள பிரதானமான பிரச்சினையாகும்.  

முதலமைச்சர் விக்னேஸ்வரனை வெளியே எடுத்து, தம்மைப் பலப்படுத்திக்கொள்ள, சில தரப்புகள் முனைகின்றன என்பது இரகசியமான விடயமல்ல. அதற்கு இடமளிக்க முற்படும் போது, தமிழ் மக்களின் ஒருமித்த பலம், சிதைக்கப்படும் வாய்ப்புகளே அதிகம் என்பதையும் சிந்திக்க வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார்.  

அதைவிட, கூட்டமைப்பில் இருந்து பெற்றுக்கொண்ட மக்கள் ஆதரவை விட, அதிகமான ஆதரவைப் பெறமுடியாது போனால், அது தனது பெயருக்கு ஏற்படக்கூடிய கறையாகவும் முதலமைச்சர் பார்க்கிறார் போலத் தெரிகிறது.  

இந்தநிலையில், அக முரண்பாடுகளைக் களைந்து கொண்டு, புறஅரசியல் எதிராளிகளை எதிர்க்கின்ற முடிவுக்கு இரண்டு தரப்புகளும் வருவது பற்றி முடிவெடுக்காவிடினும், அதைப் பற்றி யோசிப்பதாகத் தெரிகிறது.

இத்தகையதொரு சூழலுக்கு, இரண்டு தரப்புகளுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் களமாகவே, யாழ்ப்பாணத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழா அமைந்திருக்கிறது. ஆனாலும், இந்த அகமுரண்பாடுகள் களையப்படுவதை, ஒற்றுமையான சூழல் உருவாக்கப்படுவதை விரும்பாத தரப்புகள் பல இருப்பதும் உண்மை.

அரசியலில் உள்ள தரப்புகள் மாத்திரமன்றி, ஊடகங்களில் பலவும் கூட, அத்தகையதொரு நிலைப்பாட்டை எடுத்திருப்பது ஆச்சரியம்.  

இன்னமும் அகமுரண்பாடுகளைத் தூண்டி விடும் கருத்துகளுக்கு, சில ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து வருவதையும் காணமுடிகிறது.  

யாழ்ப்பாண நிகழ்வுக்கு அடுத்தடுத்த நாட்களில், சில தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள், அரசியல் ரீதியான ஒற்றுமை ஏற்படுவதை, அவை விரும்பவில்லை என்பதை எடுத்துக் காட்டுவதாக இருந்தன.  

ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியத்தையும் தமிழரின் ஒற்றுமையையும் வலியுறுத்திக் கொண்டு, அந்த ஒற்றுமையைக் குலைக்கின்ற செயலில் பல ஊடகங்கள் ஈடுபடுவது, அவற்றுக்கு அபத்தமான உள்நோக்கம் இருப்பதையே உணர்த்துகிறது.

தற்போதைய அரசியல் சூழலில், தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகள் பிளவுபட்டு நின்று மோதுவதால், ஏற்படக் கூடிய பாதிப்புகள், தமிழ்த் தேசியத்துக்கு விரோதமான தரப்புகள் பலம்பெறக் கூடிய சாத்தியங்கள் ஏற்படுத்தும். இதைப் பற்றிய எந்தக் கவலையுமின்றி, ஊடகங்கள் பல பொறுப்பற்றுச் செயற்பட முனைவதாக, ஒரு பார்வை உள்ளது.  

ஊடகங்களின் பொறுப்பு என்பது, ஒரு செய்தியை பிரித்து மேய்வது மாத்திரம் அல்ல; சண்டையை மூட்டி விடுவதும் அல்ல; பொதுநோக்கு நிலையில் இருந்து, தாம் சார்ந்த மக்களின் நலன்களை உறுதிப்படுத்துவதும் தான்.

ஆனால், தற்போதைய தமிழ்த் தேசிய அரசியல் சூழலில், ஏதோ ஒரு பக்கம் சார்ந்து நின்று, முரண்பாடுகளை மூட்டி விடுவதில் தான், ஊடகங்கள் பலவும் அக்கறை காட்டுகின்றன. இதனால், தமிழ் மக்கள் அடையக் கூடிய ஆபத்துகளைப் பற்றிய எந்தக் கரிசனையும் அவற்றிடம் இல்லை.  

அதுபோல, தமிழரசுக் கட்சியில் இன்னமும் ஒரு தரப்பினர், முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையில் இல்லை, என்பதை மறுப்பதற்கில்லை. தமிழரசுக் கட்சியின் அதிகாரபூர்வ இணையத்தளம் கூட, முதலமைச்சரைக் கடுமையாக விமர்சித்து, இரண்டு கட்டுரைகளை அண்மையில் வெளியிட்டது.  

நூல் வெளியீட்டு விழா நடந்த நாளிலும், அதற்குப் பின்னரும் வெளியான இந்தக் கட்டுரைகள், முதலமைச்சர் விக்னேஸ்வரனைத் தூர விலக்கி வைக்க வேண்டும் என்பதை, வலியுறுத்துபவையாக இருந்தன. எனவே, முதலமைச்சர் விக்னேஸ்வரனை மீண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் மனோநிலை, தமிழரசுக் கட்சிக்குள் வந்து விட்டது என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.  

அவருக்கு எதிரான மனோநிலை இருந்தாலும், அரசியல் சூழ்நிலைகள், தவிர்க்க முடியாமல் அவரை மீண்டும் வேட்பாளராக முன்னிறுத்தும் முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தலாம்.  

ஆனாலும், அக முரண்பாடுகளைக் கடந்து, ஓரணியாகத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு, தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகள் மாத்திரம் தடையாக இருக்கின்றன என்று மாத்திரம் கருதக்கூடாது.

தேவையற்ற கருத்துகள், வலிந்து பெறப்பட்ட, திரிபுபடுத்தப்பட்ட செய்திகள், கோள் மூட்டி விடும் அறிக்கைகளின் ஊடாக, தமிழ்த் தேசியப் போர்வையில் செயற்படும் ஊடகங்களும் கூட, ஒற்றுமையைக் குலைக்க முனைகின்றன. கடவுள் வரம் கொடுக்கிறாரோ இல்லையோ, அதற்கு இடம் கொடுத்து விடக் கூடாது என்பதில், பூசாரிகள் உறுதியாக இருக்கிறார்கள் என்றே தெரிகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .