2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குழப்பங்களைத் தந்துள்ள ட்ரம்ப்பின் ஐ.நா உரை

Editorial   / 2017 செப்டெம்பர் 25 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜனகன் முத்துக்குமார்

எந்தவோர் இடர்பாடுகள் மத்தியிலும், ஐக்கிய நாடுகளின் இருப்பானது, பாதுகாக்கப்படவேண்டியது அவசியமானதாகும். நாஸிஸமும் ஏகாதிபத்திய ஜப்பானும் தோல்வியடைந்த பின்னர், 1945இல் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையின் கீழ் நிறுவப்பட்ட ஐ.நா, உலகளாவிய ஒழுங்கின் மையத் தூணாக உள்ளது. 1930களில் அமைந்திருந்த சர்வதேச தேசங்களின் ஒன்றியத்துடன் ஒப்பிடும் போது, கடந்த 60 ஆண்டுகளாக, சமாதானம், சர்வதேச பாதுகாப்பு, மனித உரிமைகள் ஆகியவை சிறப்பாகப் பேணப்படவேண்டும் என்ற குறிக்கோளே, ஐ.நாவின் இருப்புக்கு அவசியமான காரணங்களாக அமைந்துள்ளன.

உலகளாவியரீதியில், அனைத்து தேசிய அரசுகளின் பிரதிநிதிகளும், நெருக்கடிகளையும் பொதுவான சவால்களையும் சந்திக்கும், அச்சவால்களை எதிர்கொள்ள முயல்வதற்கான தளமாகவே, ஐ.நா விளங்குகின்றது.

ஐ.நா பொதுச் சபை அமர்வில், ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முதலாவது உரையானது, மிகவும் அச்சுறுத்தலாகவே அமைந்திருந்தது. ஈரான், வடகொரியா ஆகியன மீதான அவரது கருத்துகள், கசப்பான விரோதத்தன்மையில் இருந்து மட்டுமன்றி, சர்வதேச பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவும் அமைந்திருந்தன. முழுமையாகவே இராஜதந்திர நகர்வுகளுக்கு வழிவிடாது, போர்ச்சூழ்நிலைக்கு, ஐ.அமெரிக்காவை மட்டுமன்றி மேற்கத்தேய நாடுகள் அனைத்தையும் தள்ளிவிடுவதாகவே, அவரது உரை அமைந்திருந்தது. வடகொரியாவுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு சபையால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம்,சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளை மீறியமைக்கு எதிராக மேற்கொண்ட, ஒன்றுபட்ட நடவடிக்கையாகும்.

இதே போன்ற நிலை, ஈரானுக்கு எதிரான ஐ.அமெரிக்காவின் கொள்கைக்கு, பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்புரிமை உள்ள பிற நாடுகளாலும் ஜேர்மனாலும் உடன்பாடு வழங்கப்படும் என கருதப்பட முடியாதவொன்றாகும். ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பாராயின் அது, ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி தொடர்பான உடன்படிக்கையை, எதேச்சையாக மீறும் செயலாக அமைவதுடன், அந்நிலையில் ஐ.அமெரிக்கா தனிமைப்படுத்தப்படுமே அன்றி, ஏனைய நாடுகளின் உதவியைப் பெற இயலாமல் போகும் என்பதே, இப்போதைய நிலைப்பாடாகும். பாதுகாப்புச் சபையின் ஏனைய நாடுகள், ஈரானுடன் ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கை வலுவாகப் பேணப்பட வேண்டும் என்னும் கொள்கையில் இருக்கும் இந்நிலையில், ஈரானுக்கு எதிரான ஜனாதிபதி ட்ரம்ப்பின் உரையானது, ஐ.அமெரிக்காவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அவரின், “அமெரிக்காவை முன்னிலைப்படுத்தும்” நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதியாகவே, குறித்த உரை அமைந்திருந்த போதிலும், அவ்வுரையானது வலுவான, இறையாண்மைமிக்கை சுயாதீனமான நாடுகள் மீது, எந்த அமெரிக்க தேசியவாத சித்தாந்தத்தையும் பூசிவிடுவதாக அமைய முடியாது.

ஒபாமா நிர்வாகம் கையெழுத்திட்ட உடன்பாட்டிலிருந்து ஐ.அமெரிக்கா வெளியேறக்கூடாது என்று, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா, சீனா ஆகிய உடன்படிக்கையில் கையொப்பமிட்ட மற்றைய நாடுகள் உறுதிபடத் தெரிவித்துள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது. ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன், “ஐ.அமெரிக்கா, குறித்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறக்கூடாது என்பதை, நாம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றோம்” எனக் கூறியிருந்தார்.

சவூதி அரேபியா, இஸ்‌ரேல் ஆகிய நாடுகள், ஜனாதிபதி ட்ரம்ப்பின் உரையை, மறுபுறத்தே வரவேற்றிருந்தன. சவூதி வெளிவிவகார அமைச்சர் அடேல் அல்-ஜுபீர், ஈரான், குறித்த உடன்படிக்கையில் தங்கியிருப்பதாக சவூதி நம்பவில்லை எனவும், “சர்வதேச சமூகம் எவ்வாறாயினும் ஈரான் மீது தடைகளைக் கொண்டிருக்கவேண்டும் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று தெரிவித்திருந்தார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனும், ஜேர்மனிய சான்செலர் அங்கெலா மேர்க்கலும், வெளியேறக்கூடாது என்ற நிலைப்பாட்டைக் குறிப்பிட்டிருந்தனர். வடகொரியா, அணுவாயுதப் பயன்பாட்டைத் தவிர்த்து, சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தைக்கு வரும் பட்சத்தில், ஈரானுடன் சர்வதேச சமூகம் மேற்கொண்ட ஒப்பந்தமானது, முன்மாதிரியானதோர் ஒப்பந்த வரைவாக அமையும் எனவும், அவ்வொப்பந்த அடிப்படையிலேயே சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ளமுடியும் எனவும் மேர்க்கெல் முன்மொழிந்திருந்தமை, அவரது ஈரான் ஒப்பந்தம் தொடர்பான ஈடுபாட்டைக் காட்டுவதாகவே அமைவதாக அவதானிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப்பின் உரை, எவ்வாறான தாக்கங்களை, சர்வதேச அரசியலில் மேலதிகமாக ஏற்படுத்தப்போகின்றது என்பது, இன்னுமே புலப்படாத ஒன்றாக - ஆனால் குழப்பம் மிக்கதாகவே - அமையப்போகின்றமை, சர்வதேச பாதுகாப்பை எவ்வாறான ஒரு மறுதளத்துக்கு இட்டுச்செல்லும் என்பதே, இப்போதைய சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் பிரதான கேள்வியாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X