2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கூட்டமைப்பும் பேரம் பேசலும் சாணக்கியமும்

என்.கே. அஷோக்பரன்   / 2019 ஜூலை 15 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீண்டும் ஒருமுறை, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காப்பாற்றி இருக்கிறது.   

இது தொடர்பில், பரவலாகப் பிரதானமான இருவேறுபட்ட கருத்துகள், தமிழ் மக்களிடையே நிலவுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.   

முதலாவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னிலை தவறி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சிக்கும் கருத்து, தமிழ்த்தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்ட தமிழ் மக்களிடமிருந்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தொடர்ந்து விமர்சித்துவரும், தீவிர தமிழ்த் தேசியவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் இடமிருந்தும் வருவதைக் காணலாம்.   

மறுபுறத்தில், இந்த அரசாங்கத்தைக் காப்பாற்றாவிட்டால், அது ராஜபக்‌ஷ குழாமுக்குச் சாதகமானதாகவே அமையும் என்றும், ஆகவே ‘பெரிய பிசாசை விட, குட்டிப்பிசாசு பரவாயில்லை’ என்ற அடிப்படையிலேனும் இந்த ஆட்சியைக் காப்பாற்றிவிட வேண்டும்; ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த நிலைப்பாட்டில், தவறில்லை என்ற கருத்து வௌிப்படுவதையும் காணலாம்.  

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நிலைமைதான் மிகவும் தர்மசங்கடத்துக்கு உட்பட்டதாக இருக்கிறது. பெரிய பிசாசு வராமலிருக்கத்தான் நாம் குட்டிப்பிசாசை ஆதரிக்கிறோம் என்று அவர்களால் நேரடியாகச் சொல்ல முடியாது.   

ஏனென்றால், தீபாவளிக்கும், பொங்கலுக்கும் தீர்வு வரும்; இப்ப வரும், நாளை வரும் என்று தமிழ் மக்களுக்குப் போலி நம்பிக்கையை கடந்த ஐந்தாண்டுகளாக, அவர்கள் ஊட்டி வந்திருக்கிறார்கள். தாங்கள், ‘தேவதை’ என்று வர்ணித்த ஒரு விடயத்தைக் குட்டிப் பிசாசு என்று வர்ணிப்பது, தமது பொய்மையை அல்லது இயலாமையை வௌிப்படுத்திவிடும் என்பதை அவர்கள் நன்கே அறிந்திருக்கிறார்கள்.   

ஆகவே, இம்முறை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையிலிருந்து,க அரசாங்கத்தைக் காப்பாற்றியதை நியாயப்படுத்த, அவர்களுக்கு வேறு நியாயமொன்றேனும் கற்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், அவர்களுக்குக் கிடைத்துள்ள நியாயம்தான், கல்முனை வடக்குப் பிரதேச செயலகம்.  

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தருமான செல்வம் அடைக்கலநாதன், “தேர்தல் காலங்களில், தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை” என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். இது உண்மை! இந்த உண்மையை அவர் ஒத்துக்கொண்டார் என்பதை விட, ஒத்துக்கொண்டாக வேண்டிய சூழமைவு கட்டாயம் இருக்கிறது.   

தாம் தொடர்ந்து ஆதரித்துவரும் இந்த ‘நல்லாட்சி’ அரசாங்கத்தால், தாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக்கொண்டு வருகிறோம் என்பதை, எந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் மறுக்க முடியாது. ஆனால், இதனைத் தொடர்ந்து அவர் சொன்ன விடயம்தான் பரிசீலிக்கப்பட வேண்டியதொன்றாக இருக்கிறது. “கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு, தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்போம்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.   

இந்தக் கருத்தை இருவேறு நிலைகளில் ஆராய எத்தனிக்கிறேன். முதலாவதாக, கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, தமிழ் மக்களின் அபிலாஷைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அடையப் பெறுதல் என்ற கருத்தானது, தமிழ்த் தேசிய அரசியல் என்பது, ஒரேயடியாகத் தீர்வொன்றைப் பெறும் எண்ணப்பாட்டிலிருந்து, படிப்படியாகத் தமது அபிலாஷைகளை அடைந்துகொள்ளும் ‘incrementalism’ எனும் பாதைக்கு மாறியிருக்கிறது என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.   

இது, தமிழ்த் தேசிய அரசியலில் முக்கிய மாற்றம் என்றே கருத வேண்டும். எல்லா மாற்றங்களும் பெரும் ஆரவாரங்களோடும், வௌிப்படையான அறிவிப்போடும் வருவதில்லை. தமிழ்த் தேசிய அரசியலில், அதன் பிரதான அரசியல் சக்தி, தன்னுடைய அரசியல் பாதையை இன்று மாற்றியிருக்கிறது என்பதும், அது சூசகமான முறையில் இடம்பெற்றிருக்கிறது என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.  

பேச்சுத் தமிழில், “வளர்த்தால் ஹிப்பி; அடித்தால் மொட்டை” என்றொரு வாக்கியம் உண்டு. அதுபோல, ‘கிடைத்தால் சமஷ்டி; இல்லையென்றால் வேறொன்றும் வேண்டாம்’ என்று, குறித்த தீர்வை, ஒரே இரவில் அடையப் பெறுவதற்குப் பதிலாக, தமது அரசியல் அபிலாஷைகளை, இறுதி இலக்காகக் கொண்டு, அதனை நோக்கிப் படிப்படியாக நகர்தலை ‘incrementalism’ சுட்டிக்காட்டி நிற்கிறது. தொடர்ந்து செய்யும் சின்னச் சின்ன மாற்றங்களூடாக, இறுதிவிளைவான பெரும் மாற்றத்தை அடைந்து கொள்ளுதலை ‘incrementalism’ குறித்து நிற்கிறது.   

ஆனால், இங்கு கேள்வி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தான் சுயமாக எண்ணி இந்த அணுகுமுறை மாற்றத்தைச் சுவீகரித்துக்கொண்டதா, அல்லது, சந்தர்ப்ப சூழல் சார்ந்து அது எடுத்துக்கொண்ட முடிவு, அணுகுமுறை மாற்றமொன்று ஏற்பட்டுள்ளதைப் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறதா என்பதுதான்.   

இந்த ஐயம் ஏற்பட, முக்கியமான காரணங்களிலொன்று, இரு வாரங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாட்டில் உரையாற்றிய இராஜவரோதயம் சம்பந்தன், “உள்ளக சுயநிர்ணய உரிமையுடன், நிரந்தரமாகப் பாதுகாப்புடன் தமிழர்கள் வாழ வேண்டும். தந்தை செல்வா கட்சியை ஆரம்பித்து, ஏறத்தாழ 70 வருடங்கள் ஆகிவிட்டன. அந்தப் பாதையில் நாங்கள் நீண்டதூரம் பயணித்திருக்கின்றோம். சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றோம். இன்னும் இறுதியானதும், உறுதியுமான முடிவு ஏற்படவில்லை. இந்த நாட்டில், இரண்டாம் தரப் பிரஜைகளாக, அடிமைகளாக வாழ வேண்டிய அவசியமில்லை. தற்போது வடக்கு மாகாணத்தில், பல குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள சனத்தொகை விகிதாசாரத்தை மாற்றி அமைக்கக்கூடிய வகையில், பல்வேறு வழிகளில் பல கருமங்கள் நடைபெற்று வருகின்றன. இதனாலேயே, அதிகாரப் பகிர்வைத் தமிழ் மக்களுக்கு வழங்காமல், இருக்கின்றார்கள் போல எமக்குத் தெரிகின்றது. இவைகள் பாரதூரமான விடயங்கள்; இவற்றை அனுமதிக்க முடியாது. இவற்றுக்கு மிக விரைவில் முடிவு காணுவோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் பல கருமங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர், புதிய அரசாங்கத்தின் கீழ், புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதென்று தீர்மானிக்கப்பட்டு, அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், நாடாளுமன்றம் ஓர் அரசியல் சாசன சபையாக மாற்றி அமைக்கப்பட்டு, பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் ஆயுதம் ஏந்தியவர்கள், எமக்காகப் பேச முடியாத சூழ்நிலையில், இன்று அவற்றைப் பயன்படுத்தி தாமதப்படுத்துவதற்கான சூழ்நிலை காணப்படுகின்றது. ஆயுதம் ஏந்திப் போராடினால் தான், அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆக்கபூர்வமான கருமங்களைப் பேணுவீர்கள் என்றால், ஆயுத பலம் இல்லாவிடின் அதைக் கைவிடுவோம் என நீங்கள் இருப்பீர்களானால், அது ஒரு தவறான நிலைப்பாடாகும். அவ்வாறான ஒரு நிலைப்பாட்டைச் சிந்திக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதை நாங்கள் பரிசீலிப்போம்” என்று பேசியிருந்தார்.   

மீண்டும் ஆயுதம் எடுப்பதைப் பரிசீலிப்போம் என்று அவர் சொன்னது, பகட்டாரவாரப் பேச்சாகக் கருதினாலும், அது தமிழ்த் தேசிய அரசியலின் மய்யவோட்டம் இன்னும் அதன் ஆரம்பக் காலப் போக்கிலிருந்து மாறவில்லை என்பதையே, நாம் உணரக்கூடியதான இருக்கிறது. இந்தப் பேச்சு ‘incrementalism’ அடிப்படையிலான அணுகுமுறையுடன் ஒத்துப் போகக்கூடியதொன்றல்ல.   

ஆகவேதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உண்மையிலேயே படிப்படியாகத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்ளும் அணுகுமுறையை ஏற்றுக்கொண்டுள்ளதா, அல்லது எழுந்திருக்கும் சந்தர்ப்ப சூழலைச் சமாளிக்க, சந்தர்ப்பவாதக் கருத்தொன்றை முன்வைக்கிறதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.  

கிழக்கு மாகாணத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், கல்முனை வடக்கு தனித்த நிர்வாகம் என்பது மிகவும் முக்கியமானதொன்றாக மாறியிருக்கிறது. இதன் சரி, பிழை தொடர்பான வாதங்கள் எவ்வாறு இருப்பினும், வடமாகாணத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக, தமக்கேயுரிய சில முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றன என்பதைக் கிழக்கு மாகாணத் தமிழர்களும் அவர்களது தலைமைகளும் தொடர்ந்தும் குறிப்பிட்டு வந்திருக்கிறார்கள்,   
அத்தோடு, வடக்கு மய்யத் தமிழ்த் தலைமைகள், தம்மை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகின்றன என்ற ஆதங்கமும் கிழக்கு மாகாணத் தமிழ் மக்களிடம் இருப்பதை மறுக்க முடியாது. இந்தப் பின்புலத்தில்தான், கல்முனை வடக்கு தனித்த பிரதேச செயலகம் அல்லது, தனித்த நிர்வாகம் என்பதை நோக்க வேண்டும்.   

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் காப்பாற்றியது, கல்முனை வடக்கு தனித்த பிரதேச செயலகம் என்ற தமது கோரிக்கையை அடைந்து கொள்ளவே என்று, தமது நிலைப்பாட்டை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நியாயப்படுத்துவதை நாம் அவதானிக்கலாம். இதனைப் பெருஞ்சாணக்கியத்தனமான நகர்வு என்று கூட, கூட்டமைப்பின் சில தலைமைகள் வியாக்கியானப்படுத்துவதையும் அவதானிக்கலாம்.   

ஆனால், இந்தக் கல்முனை வடக்கு தனித்த பிரதேச செயலகம் என்பது, தமிழர்களினதோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதோ வெற்றியல்ல. மாறாக, இது ‘சிங்கள-பௌத்த’ அரசியலின் வெற்றி. இந்த யதார்த்தத்தைத் தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஆரம்பிக்கப்பட முஸ்தீபுகள் நடந்த வேளையில்தான், கன்னியாவில் பிள்ளையார் கோவில் அஸ்திவாரம் உடைக்கப்பட்டது. வடக்கில் புதியதொரு பௌத்த விகாரை இராணுவத்தால் திறந்து வைக்கப்பட்டது.   

ஆகவே, தமிழ் மக்களின் விருப்பத்தை இங்கு அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மாறாக, பெரும் பிரித்தாளும் தந்திரமொன்றுக்குத் தமிழ் மக்கள் இரையாகிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் இருநிலைகளில் இந்தப் பிரித்தாளும் தந்திரம் கொண்டு நகர்த்தப்படுவதை நாம் அவதானிக்கலாம்.   

முதலாவதாக, இந்தநாட்டின் சிறுபான்மையினரைப் பிரித்துவைத்தல். ஏற்கெனவே, தமிழ்-முஸ்லிம் மக்களிடையே உள்ள சில கசப்புணர்வுகளை, முரண்பாடுகளைப் பேரினவாதம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த விளைகிறது.   

கல்முனை வடக்கு தனித்த பிரதேச செயலகத்துக்கு சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் முகங்களான ரத்தன தேரரும், ஞானசார தேரரும் ஆதரவளித்ததன் பின்னணியை, நாம் ஐயக் கண்கொண்டு பார்க்க வேண்டாமா?   

இது, சிங்கள-பௌத்த நாடு என்று சூளுரைப்பவர்கள், தமிழர்கள் கேட்கும் கல்முனை வடக்கு தனித்த பிரதேச செயலகத்தை ஆதரிப்பது ஏன்? அதன் உள்நோக்கம் என்ன? சிங்கள-பௌத்த பேரினவாதம் ஒரு காலத்தில், இதே பிரித்தாளும் தந்திரத்தைத் தமிழர்களுக்கு எதிராக, முஸ்லிம்கள் மீது பயன்படுத்தியது வரலாற்று உண்மை.   

ஆகவே, எமக்குத் தேவையானது கிடைக்கிறது என்பதை விட, அதனைக் கொடுப்பவன், எமக்கு அதனை ஏன் கொடுக்கிறான் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பசிக்குப் பாண் கிடைக்கிறது என்பதற்காக, விசம் தடவிய பாணை உட்கொள்ளக் கூடாது.  

மறுபுறத்தில், நாம் கேட்கவேண்டிய இன்னொரு கேள்வி, கல்முனை வடக்கு தனித்த பிரதேச செயலகத்தை வழங்கத் தயாரான இந்த அரசாங்கம், இதனை சிங்கள-பௌத்த பேரினவாத சக்திகள் எதிர்த்திருந்தால் வழங்க முன்வந்திருக்குமா என்பதுதான். ரத்தன தேரரும், சுமங்கல தேரரும், ஞானசார தேரரும் கல்முனை வடக்கு தனித்த பிரதேச செயலகத்தைக் கடுமையாக எதிர்த்திருந்தால், இந்த அரசாங்கம் இதனைச் செய்யத் துணிந்திருக்காது என்பதுதான் யதார்த்தம்.   

ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ரணில் அரசாங்கத்தை காப்பாற்ற, கல்முனை வடக்கு தனித்த பிரதேச செயலகம் என்ற பெரும் பேரத்தைப் பேசித்தான் செய்தது என்பது, கேட்பதற்கு நல்ல கதையாக இருந்தாலும், அது அத்தனை பெரியதோர் அடைவு அல்ல.   

தனது அரசாங்கத்தைப் பலமுறை காப்பாற்றிய விசுவாசமிகு சேவகர்களுக்கு, கல்முனை வடக்கு தனித்த பிரதேச செயலகம் என்பது மிகச்சிறியதொரு வெகுமதிதான்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .