2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கேரளப் பெரு வெள்ளம்: தமிழக - கேரள உறவில் மீண்டும் தைத்த முள்

எம். காசிநாதன்   / 2018 ஓகஸ்ட் 27 , மு.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாறு காணாத கன மழை, கேரள மாநிலத்தை நிலைகுலைய வைத்து விட்டது.  

‘டிசெம்பர் பெருவெள்ளம்’ 2015இல் சென்னை மாநகரையும் புறநகர் சென்னையையும் திணறடித்தது போல், ‘ஓகஸ்ட் பெருவெள்ளம்’ அலை அலையான பாதிப்புகளை, கேரள மாநில மக்களுக்கு ஏற்படுத்தி விட்டது.  

சேதங்கள் குவியல் குவியல்களாகக் கிடக்கின்றன; மண்சரிவுகள் மலைகள் போல் குவிந்து கிடக்கின்றன. கட்டடங்கள் அப்படியே, பாய்ந்தோடும் வெள்ளத்தில் நகருவதைப் பார்க்க முடிந்தது.   

வெள்ளமும் வேதனையும் இணைபிரியாமல் தாக்குதல் நடத்தி, கேரள மக்கள், ஓணம் பண்டிகையை, நிம்மதியாகக் கொண்டாட முடியாத நிலைக்குள் தள்ளிவிட்டிருக்கிறது.  

உச்சநீதிமன்றத்தில் கேரள அரசின் தலைமை செயலாளர் அளித்துள்ள புள்ளிவிவரங்கள், ஆபத்தின் உச்சத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. 373 பேர் உயிழந்து இருக்கிறார்கள்; 32 பேரை காணவில்லை என்று அதிகார பூர்வமாகத் தெரிவித்திருக்கிறது.  

கேரள மாநிலம் 1924இல் இப்படியொரு மிக மோசமான வெள்ளத்தையும் பேரிடரையும் சந்தித்தது. ஆனால், 2018 மழை வெள்ளம் அதையெல்லாம் தாண்டி விட்டது.   

அம்மாநில முதலமைச்சர் கூறுவது போல், “நூறு வருடங்களில் காணாத ஒரு வெள்ளத்தைக் கேரளா சந்தித்துள்ளது”. உச்சநீதிமன்றத்தில் கொடுத்துள்ள அறிக்கையில், “கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில், 13 மாவட்டங்கள் வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ளன. மாநிலத்தில் உள்ள 1564 கிராமங்களில், 774 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன. அந்த மாநிலத்தின் 3.48 கோடி மக்களில், 54 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 12.5 இலட்சம் பேர் 3,941 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. சேதத்தின் மதிப்பு 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என்று கூறியிருக்கிறது.  

கேரளாவின் ‘நடுக்கத்தில்’ கைகொடுத்த இந்திய மாநிலங்கள், மனித நேயத்தின் அடையாளமாக இருந்துள்ளன. அண்டை மாநிலமான தமிழகத்திலிருந்துதான் பேருதவிகள் அம்மாநிலத்துக்குச் சென்றன.   

தமிழ்நாட்டு மக்கள், தங்களின் திராவிட குடும்பத்தினருக்கு நேர்ந்த ஆபத்தில் சம பங்குதாரர்களாக நிவாரணங்களை உதவி நின்றார்கள். அரசியல் கட்சியிலிருந்து, அரசாங்கம் வரை, எல்லோரும் தாராளமாக நிதியுதவி செய்தார்கள்.   

ஆனால், இவ்வளவு மனித நேய உதவிகளும் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்துள்ள ஒரு மனுவில் தகர்க்கப்பட்டு விட்டன.  

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து, அளவுக்கு அதிகமாகத் திடீரென்று தண்ணீர் திறந்து விட்டதுதான், வெள்ளச் சேதத்துக்குக் காரணம் என்று, தமிழ்நாட்டின் மீது அபாண்டமான பழியைச் சுமத்தியிருக்கிறது கேரள அரசு.   

இது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கேரள அரசாங்கத்தின் இந்த வாதத்தின் பின்னால், ஒரு திட்டம் இருக்கிறது என்பதுதான் தமிழ்நாட்டின் கணிப்பாக இருக்கிறது.   

அதனால்தான் இது பற்றிக் கருத்துக் கேட்ட போது, “முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தைக் குறைக்க, உள்நோக்கத்துடன் கேரள அரசு குற்றம் சாட்டுகிறது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.  

‘பேரிடரில் ஓர் அரசியல்’ என்று தமிழ்நாடு - கேரள உறவு, தண்ணீரில் மிதக்கும் நிலையைக் கேரள மாநில அரசு - குறிப்பாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது.  

அது என்ன முல்லைப் பெரியாறு நீர்மட்டம்? முல்லைப் பெரியாறின் நீர் மட்டத்தை, 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துவதற்குக் கேரளா ஏகப்பட்ட முட்டுக்கட்டை போட்டது. அம்மாநிலத்துக்குள் இருந்தாலும் தமிழகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில்தான் முல்லைப் பெரியாறு அணை இருக்கிறது. இந்த அணை பாதுகாப்பானதாக இல்லை என்று, பல வருடங்களாக கேரள அரசு வாதாடி வந்தது.   

ஆனால், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு நிபுணர் குழுவும் “அணை பாதுகாப்பாகவே இருக்கிறது” என்று திரும்பத் திரும்பக் கூறி வந்திருக்கிறது.   

இந்த நிபுணர் குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், 2014இல் “அணை பாதுகாப்பாக இருக்கிறது. ஆகவே 136 அடியிலிருந்து 142 அடியாக அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் அடிப்படையில் இந்தப் பெருவெள்ளத்தில் முல்லைப் பெரியாறின் அணை நீர் மட்டம் 142 அடி வரை உயர்ந்து விட்டது.   

இது கேரள அரசாங்கத்தின் கண்களை உறுத்தியது. அதனால் வெள்ளம் தொடங்கியவுடனேயே, அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன், “முல்லைப் பெரியாறு அணையின் கீழ் வாழும் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். ஆகவே, அணையின் நீர்மட்டத்தைக் குறையுங்கள்” என்று தமிழக முதலமைச்சருக்குக் கடிதம் எழுதினார்.  

ஆனால், தமிழக முதலமைச்சரோ, ஏற்கெனவே அணை பாதுகாப்பாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது என்றும், அந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும் பதிலளித்து விட்டார்.   

இந்தப் பதிலை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள கேரள அரசாங்கம், “கேரள வெள்ள சேதத்துக்கு, தமிழகம் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து, திடீரென்று தண்ணீரைத் திறந்து விட்டதுதான் காரணம்” என்று குற்றம் சாட்டியிருக்கிறது.   

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்து, அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு விட்டால், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக இருக்கிறது என்ற வாதத்தை ஏற்க வைத்து விடலாம் என்று, தந்திரமாகக் கேரளா செயல்படுவதாக, தமிழ்நாடு அரசாங்கம் பார்க்கிறது.  
ஆகவே, கேரள அரசாங்கத்துக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசாங்கத்துக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்தக் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் அமைந்து விட்டது.  

நீண்ட காலமாகவே, “முல்லைப் பெரியாறு அணைக்குப் பதில் புதிய அணை கட்டுகிறோம். அந்த அணை மூலம் தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் தருகிறோம்” என்று கேரள அரசாங்கம் பிடிவாதம் பிடித்து வருகிறது.   

ஏற்கெனவே உச்சநீதிமன்றமே இந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டது. மீண்டும் வெள்ளப் பாதிப்புகள் நடைபெற்றுள்ள இந்த நேரத்தில், ‘அணை பாதுகாப்பு’ பற்றி பிரச்சினை எழுப்பினால் தங்களுக்குச் சாதகமான சூழ்நிலை கிடைக்கும் என்று கேரள அரசாங்கம் விரும்புவதன் எண்ணமே உச்சநீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டில் எதிரொலிக்கிறது.   

ஆனால், உண்மை என்னவென்றால் “அணையின் நீர்மட்டம் 142 அடி இருப்பதிலும் தவறில்லை”, “அணையின் பாதுகாப்பும் ஸ்திரமாக இருக்கிறது”, “புதிய அணையும் கட்டத் தேவையில்லை” என்று அடுக்கடுக்கான உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்தும், மீண்டும் முல்லைப் பெரியாறு வழக்கைப் புதுப்பிக்க, கேரள அரசாங்கம், இந்த வெள்ளத்தை, இயற்கைப் பேரிடரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், இதனால் பிரச்சினைக்குள்ளாவது தமிழ்நாடு - கேரள உறவுதான் என்பதை ஏனோ கேரள அரசாங்கம் உணரத் தயங்குகிறது.   

தமிழ்நாடு மக்கள் அளித்த நிவாரண உதவிகளை, லொரி லொரிகளாக அனுப்பிய பொருட்களைப் பாராட்டி, அம்மாநிலத்திலிருந்து ‘வீடியோ உரைகள்’, யூ ட்யூப்களிலும் சமூக வலைத் தளங்களிலும் வெளிவந்து கொண்டிருக்கிறன.  

‘முல்லைப் பெரியாறு’ அணைப் பிரச்சினையில், முன்பு உராய்வுக்கு உள்ளான, தமிழக - கேரள மக்கள் உறவு, இந்தப் பெருவெள்ளத்தில் சீர்பட்டதாகக் கருத முடிந்தது. அந்த அளவுக்குக் கேரள மக்களின் பாதிப்பில், தமிழ்நாட்டு மக்கள் மிகவும் கரிசனையாக இருந்தார்கள். அந்தக் கரிசனையை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசாங்கம் தமிழகத்தின் மீது போட்டுள்ள, ‘புதிய பழி’ நல்லுறவை மீண்டும் உராய்வு வட்டத்துக்குள் தள்ளும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இது, இனி அரசியல் சதுரங்கத்தில் விதிகளின்படி நடைபெறாத, ஓர் அரசியல் விளையாட்டாகவே, வெள்ளப் பாதிப்பு மாறி விடும் பேராபத்து இருக்கிறது.  

கேரளாவில் உள்ள எதிர்க்கட்சிகள் எல்லாம், “அனைத்து அணைகளில் இருந்தும் தண்ணீரைத் திறந்து விட்டதால்தான் வெள்ளச் சேதம்” என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீது குற்றம் சாட்டியுள்ள நிலையில், “இல்லை, இல்லை. முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறந்து விட்டதால்தான் ஆபத்து” என்று தமிழ்நாட்டின் மீது திசை திருப்புகிறார் கேரள முதலமைச்சர்.   

ஆனால், ‘முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விடுங்கள்’ என்று கடிதம் எழுதியதே, கேரள முதலமைச்சர்தான் என்ற விடயத்தை மறந்து விட்டு, இப்படியொரு குற்றச்சாட்டை முன் வைத்து, தமிழக - கேரள மக்களின் உறவில், மீண்டும் ஒரு முள் தைத்துள்ளது.   

இரண்டு மாநிலங்களுக்கு இடையில், இந்த ‘முள்ளை’ எடுக்க இன்னும் எத்தனை வாதப் பிரதிவாதங்கள் நடக்கப் போகிறதோ என்பதுதான் இப்போது உருவாகியுள்ள புதிய கவலை.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .