2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொரோனா முகமூடிக்குள் கோழைத்தனம்

கே. சஞ்சயன்   / 2020 மார்ச் 27 , பி.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் கொரோனா பீதியில் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், மிருசுவில் படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு, மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்குப் பொதுமன்னிப்பு அளித்து, விடுதலை செய்திருக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ.   

ஜனாதிபதியிடம் இருந்து நேற்றுமுன்தினம் விடுக்கப்பட்ட உத்தரவை அடுத்து, சுனில் ரத்நாயக்க, வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து நேற்று (26) விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.   

கொரோனா பீதிக்கு மத்தியில், நாடு கலங்கிப் போயிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்த முடிவை எடுத்திருக்கிறார்.   

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது, “சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை, 48 மணி நேரத்தில் விடுதலை செய்வேன்” என்று கோட்டாபய வாக்குறுதி அளித்திருந்தார்.  

எனினும், அந்த வாக்குறுதியின்படி அவரால் செயற்பட முடியவில்லை. நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து கொண்டிருந்த, தீர்ப்புகள் அறிவிக்கப்படாத இராணுவத்தினரை அவரால் விடுவிக்க முடியவில்லை.   

அதேவேளை, மிருசுவிலில் எட்டு பொதுமக்களைப் படுகொலை செய்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த சுனில் ரத்நாயக்கவை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விடுவிக்கப் போகிறார் என்று, ஏற்கெனவே பலமுறை செய்திகள் வெளியாகின.  அவரை, ஜனாதிபதி கோட்டாபய, இரகசியமாக விடுவித்து விட்டார் என்று கூட, சில வாரங்களுக்கு முன்னர், ஊடகங்களில் பரபரப்பாகச் செய்திகள் வெளியிடப்பட்டன.   

மரணதண்டனைக் கைதியான சுனில் ரத்நாயக்கவை, பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யும் திட்டத்துக்கு, மனித உரிமை அமைப்புகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளும் அப்போது கடும் எதிர்ப்பை வெளியிட்டன.   

இந்த விவகாரம் குறித்து, ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பிய போது, நேரடியாக எந்தப் பதிலையும் கூறாமல் நழுவியிருந்தார். ‘புலி வருது, புலி வருது’ என்று ஏமாற்றியவரை, கடைசியில் புலி வந்த போது, காப்பாற்ற யாரும் இல்லாமல் இருந்த நிலை போலத்தான், சுனில் ரத்நாயக்க விடுவிக்கப்படவுள்ளார்; விடுவிக்கப்பட்டுள்ளார் என்று பொய்யான செய்திகளை வெளியிட்டு, ‘பூச்சாண்டி’ காட்டி விட்டு, ஒரேயடியாக அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.   

சுனில் ரத்நாயக்கவின் சிறைக் கதவுகளை, ஜனாதிபதி சந்தடியின்றித் திறந்து விட்ட பின்னர் தான், அநீதி, அநியாயம் என்று கண்டனங்கள் கிளம்பியிருக்கின்றன.   

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை மாத்திரமன்றி, ஆயுள் தண்டனைக் கைதிகளையும் ஏனைய தண்டனைக் கைதிகளையும் கூட, பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்வதற்கு, அரசமைப்பில் ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.   

இந்தச் சிறப்புரிமையைப் பயன்படுத்தியே, ஒரு படுகொலைக் குற்றவாளியான இராணுவ அதிகாரியைப் பொதுமன்னிப்பு அளித்து, விடுதலை செய்திருக்கிறார் ஜனாதிபதி.   

முன்னதாக, பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில், மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவைப் பொதுமன்னிப்பில் ஜனாதிபதி விடுவிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், கடைசியில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.   

அவரை விடுதலை செய்வது, ஆளும்கட்சியின் அரசியல் செல்வாக்குக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நிலை இருந்தது. ஆனால், சுனில் ரத்நாயக்கவின் விடுதலை, சிங்கள மக்கள் மத்தியில் ஆளும்கட்சிக்குச் செல்வாக்கைப் பெற்றுத் தரக் கூடியது. எனவேதான், ஜனாதிபதி,  இவரது விடுதலைக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுத்திருக்கிறார்.   

சிறைச்சாலைகளிலும் கொரோனா வைரஸ் பரவுகின்ற ஆபத்து உள்ளது. அநுராதபுர சிறையில், ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கிருந்த கைதிகள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதன்போது, அதிரடிப்படையினர் சுட்டதில், இரண்டு கைதிகள் கொல்லப்பட்டனர்; மேலும் சிலர் காயமடைந்தனர். இதுபோன்று, உலகின் பல நாடுகளில், சிறைகளில் அமைதியற்ற நிலை தோன்றி வருகிறது.   

இந்த நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், சிறிய குற்றங்களைச் செய்து தண்டனை விதிக்கப்பட்டவர்களையும் பிணைப் பணம் செலுத்த முடியாமல் சிறைகளில் இருப்பவர்களையும் விடுவிப்பதற்கான திட்டம் குறித்தே அரசாங்கத்தால் பரிசீலிக்கப்பட்டது.   

ஆனால், அவர்களை விடுதலை செய்வதை விட, ஒரு படுகொலைக் குற்றவாளிக்குப் பொதுமன்னிப்புக் கொடுத்து, விடுதலை செய்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். ஜனாதிபதியின் இந்த முடிவு ஆச்சரியத்துக்குரியதொன்று அல்ல.   

நாடு, அனர்த்த சூழ்நிலைக்கு முகம் கொடுத்திருக்கின்ற நிலையில், மக்களின் கவனம் முழுவதும் அதனை நோக்கியே திரும்பியிருக்கின்ற நிலையில், இந்தப் பொதுமன்னிப்பை அளித்திருப்பது தான், அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.   

இந்த விடுதலையின் மூலம், கொரோனாவைத் தடுப்பதில்,  கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதி கவனம் செலுத்துகிறாரா அல்லது, படுகொலைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்துகிறாரா என்ற கேள்வியையே எழுப்ப வைத்திருக்கிறது.   

பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்கள், ஒரு பக்கத்தில் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், நீதிமன்றத்தின் மூலம் அளிக்கப்பட்ட நீதியைக் கூடத் தடம் புரளச் செய்திருக்கிறது ஜனாதிபதியின் இந்த உத்தரவு.   

சுனில் ரத்நாயக்கவுக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளித்து விடுவித்திருப்பது, தமிழ் மக்கள் மத்தியிலும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மத்தியிலும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   

சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிரிவுக்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், பயங்கரமான குற்றங்களை இழைத்த படையினர், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலும் கூட, பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்படுவார்கள் என்ற கவலை தரும் செய்தி, இந்த விடுதலையின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அத்துடன், பாரிய தொற்றுநோய் அபாயமுள்ள சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, பயங்கரமான குற்றங்களை இழைத்தவர்கள் விடுவிக்கப்படுவது, கண்டனத்துக்குரியது என்றும் அவர், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.   

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்த முடிவை எடுப்பார் என்பது எதிர்பார்க்கப்பட்டது தான். ஏனென்றால், அவர் ஏற்கெனவே இதற்கான வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார். அதைவிட, போர்க்காலத்தில் நிகழ்ந்த மீறல்கள் எவையும், தண்டனைக்கு உரியவையல்ல என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவர் அவராவார்.

அவ்வாறான ஒருவர், ஜனாதிபதியாக இருக்கின்ற நிலையில், தனது சிறப்பு அதிகாரத்தைக் கொண்டு, எந்தளவுக்குப் படையினரைக் காப்பாற்ற முடியுமோ, அந்தளவுக்கு அவர்களைக் காப்பாற்றவே முயற்சிப்பார்.   

அவர், அதனை வெளிப்படையாகவும் சாதாரணமான ஒரு சூழலிலும் தான் முன்னெடுப்பார் என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், ‘வெளிப்படையாகச் செயற்படுபவர்’ என்று, வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போன்றவர்களால் கூடப் பாராட்டப்பட்டவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ.   

ஆனால், அவர் கொரானா முகமூடிக்குப் பின்னால் நின்று கொண்டு, இந்த விடுதலையைச் செய்திருப்பது, துணிச்சலை வெளிப்படுத்தவில்லை; கோழைத்தனமாகவே தெரிகிறது. 

 ஜனாதிபதியாக, கோட்டாபய பதவியேற்று நான்கு மாதங்களுக்கு மேலாகி விட்டது. முன்னதாக அவர், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த முடிவை எடுத்திருக்கலாம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் போன்ற சர்வதேச அழுத்தங்களைக் கவனத்தில் கொண்டு, அந்த முடிவை எடுப்பதற்குத் தள்ளிப் போட்டு வந்த ஜனாதிபதி, கொரோனா ஆபத்துச் சூழலுக்கு, நாடு முகம் கொடுத்துள்ள நிலையில் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.   

கொரோனா தொற்றுச் சூழலை, அரசாங்கம் திறமையாகக் கையாளுகிறது என்ற பாராட்டுதல்களுக்கு மத்தியில், இதுபோன்ற சின்னத்தனமான, அரசியல் இலாபம் தேடுகின்ற காரியங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.   

மாகாண சபைகள், நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் எல்லாமே முடங்கிப் போயுள்ள இந்தச் சூழ்நிலையில், இராணுவத்தை முன்னிலைப்படுத்தும் ஓர் ஆட்சி முறையை நோக்கியும், அவர் நாட்டைத் தள்ளிச் சென்று கொண்டிருக்கிறார்.

ஏற்கெனவே முன்னாள் படை அதிகாரிகளுக்கு, நிர்வாகத் துறையில் முக்கிய பதவிகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப்படைத் தளபதி மார்ஷல் ஒவ் த எயர்போர்ஸ் ரொஷான் குணதிலகவையும் நியமித்திருக்கிறார். ஆக மொத்தத்தில், இராணுவ பாணியிலான ஓர் ஆட்சி முறைக்குள், நாடு மெல்ல மெல்லத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.   

கொரோனா வைரஸ் தொற்று, ஒட்டுமொத்த உலகத்தையும் பீதிக்குள்ளாக்கி இருக்கின்ற நிலையில், உள்நாட்டு மக்களினதும் சர்வதேச கவனிப்பும் கண்காணிப்பும் அதன் மீது திரும்பியுள்ள சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, ஜனாதிபதி கோட்டாபய, இராணுவ நலன் சார்ந்த முடிவுகளையும் அரசியல் நலன்சார்ந்த முடிவுகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.   

கொரோனா விவகாரத்தைக் கையாளுவதில் திறமையாகச் செயற்படுகிறார் ஜனாதிபதி என்று பெற்றுக் கொள்ளும் நற்பெயர் கூட, இதுபோன்ற சின்னத்தனமான காரியங்களால், கெட்டுவிடும் சூழ்நிலையே காணப்படுகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .