2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கொரோனா வைரஸ் கதையாடல்-1: இன்னொரு பெருந்தொற்றைத் தவிர்க்க இயலுமா?

Johnsan Bastiampillai   / 2020 டிசெம்பர் 13 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ  

கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையிலான ஊசலாட்டத்தின் நடுவே, மனிதகுலம் முக்கியமான புள்ளியொன்றில் நிற்கின்றது.   

ஒருபுறம், கொவிட்-19 நோய்த் தொற்றுத் தொடங்கி, ஓராண்டாகி விட்டது. மறுபுறம், இந்தப் பெருந்தொற்றுக்கான தடுப்பு மருந்து, பரிசோதனைகளின் பின்னர், பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, இந்தப் பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பணியை, தடுப்பு மருந்தின் மீது போட்டுவிட்டு, உலகம் அப்பால் நகர்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. உலக நாடுகளின் தலைவர்கள், அமைப்புகள் அந்தத் தொனியிலேயே பேசிப் பரிகசித்துவிட்டு, அப்பால் நகர்வது நடக்கிறது.  

 ஆனால், நம் பிள்ளைகளின், பேரக்குழந்தைகளின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. இவை, பல சமயங்களில் அதிர்ச்சி தரும்; அச்சமடைய வைக்கும். முக்கியமாக,  மனிதகுலம் இன்னொரு பெருந்தொற்றைக் கையாளுவதற்குத் தயாராக இருக்கிறதா,  இன்னும் சரியாகச் சொல்வதானால், இன்னொரு பெருந்தொற்றை, எம்மால் தவிர்க்க இயலுமா?   

இந்தப் பெருந்தொற்றையே எம்மால் கட்டுப்படுத்தவோ, கையாளவோ இயலவில்லை. தொற்றுகளையோ அதன் மோசமான வடிவமாகிய பெருந்தொற்றுகளையோ, எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருந்ததில்லை.  

கடந்த 20 ஆண்டுகளில், ‘சார்ஸ்’, ‘மேர்ஸ்’, ‘ஏபோலா’, ‘சீகா’ போன்ற தொற்றுகளைக் கண்டிருக்கின்றோம். ‘ஏபோலா’ ஆபிரிக்காவை மய்யமாகக் கொண்டிருந்தது. ‘சார்ஸ்’ ஆசியாவை மய்யப்படுத்தியது. ‘சீகா வைரஸ்’ இலத்தீன் அமெரிக்காவை மய்யமாகக் கொண்டிருந்தது. இந்தத் தொற்று நோய்கள், மேற்குலகில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இதனால், தொற்றுகள் குறித்த அக்கறையும் ஆய்வும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்து வந்திருக்கின்றன.   

மனிதகுலத்தின் அலட்சியத்தையும் அவதானம் இன்மையையும் இந்தக் கொவிட்-19 நோய், வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது. அதேவேளை, இதை அரசாங்கங்கள் கையாண்ட விதம், மனிதர்களை விட இலாபமே முக்கியம் என்பதை, மக்களுக்கு மீண்டுமொருமுறை உரைத்தது.   

ஐக்கிய நாடுகள் சபையின் Intergovernmental Science-Policy Platform on Biodiversity and Ecosystem Services (IPBES) அமைப்பு, ‘நோய்த் தொற்றுச் சகாப்தத்தில் இருந்து தப்பித்தல்’ (Escaping the Era of Pandemics) என்று தலைப்பிட்டு, அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையை, உலகின் முக்கியமான 22 விஞ்ஞானிகள் இணைந்து எழுதியுள்ளார்கள். 108 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை, அச்சம் தருவதாய் உள்ள அதேவேளை, மனிதகுலத்தின் செயற்பாடுகள் குறித்த பல முக்கிய கேள்விகளையும் எழுப்புகிறது.  

இந்த அறிக்கை சுட்டுகிற சில முக்கியமான விடயமாக, உலகின் ஏற்படுகின்ற தொற்றுகள் அனைத்தும், இயற்கையில் உள்ள நுண்ணுயிர்களின் பல்வகைமையால் ஏற்படுகின்றன. இதில் 70% மான தொற்றுகளின் மூலங்கள் விலங்குகளாகும். விலங்குகளுடன் மனிதர்களுக்கு ஏற்படுகின்ற தொடர்புகள் மூலம், தொற்று நுண்ணுயிர்கள் மனிதர்களுக்குக் கடத்தப்படுகின்றன.   

உலகில் தற்போதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டாத 1.7 மில்லியன் வைரஸ்கள் இருக்கின்றன. இவை பாலூட்டிகளிலும் பறவைகளிலும் உயிர்வாழ்கின்றன. இதில் 450,000 - 850,000 வரையானவை, மனிதர்களுக்குப் பரவக்கூடியவை. இந்த வைரஸ் காவிகளில் பிரதானமானவை, மனிதர்களுடன் நெருங்கிய ஊடாட்டத்தில் உள்ளன.   

ஆண்டுதோறும் ஐந்துக்கும் மேற்பட்ட புதிய நோய்கள், மனிதர்களைத் தாக்குகின்றன. இவை ஒவ்வொன்றும், தொற்றாகவோ பெருந்தொற்றாகவோ மாறும் ஆபத்துடையவை. இதற்கான வாய்ப்புகளை மனிதகுலம்சார் (anthropogenic) மாற்றங்கள் அதிகரித்துள்ளன. தொற்றுகளுக்கு, விலங்குகளைப் பழிசொல்வது தவறானது. மனிதர்களின் செயல்களே, இந்தத் தொற்றுகள் ஏற்படுவதற்குக் காரணமாகின்றன. குறிப்பாக, மனிதனது செயல்கள், சுற்றுச்சூழலுக்கு விளைவித்த கேடு முதன்மையானது.   

நின்றுநிலைக்காத வகையில், இயற்கையைச் சுரண்டுவதானது, இயற்கையின் இயல்பான இருப்பையும் செயற்பாடுகளையும் பாதித்துள்ளன. குறிப்பாக, நிலப்பாவனை, விவசாய விரிவாக்கம், விலங்கு வர்த்தகம், செறிவாக வளர்க்கப்படும் கால்நடைகள் போன்ற ​நடவடிக்கைகளின் விளைவால், கிருமிக்காவி விலங்குகள், கால்நடைகளுடனும் மனிதர்களுடனும் உறவாட நேர்கிறது. இந்த மாற்றமே, அனைத்து வகையான தொற்றுகளுக்கும் காரணமாகி உள்ளது.   

காலநிலை மாற்றம் தொற்று உருவாக்கத்திலும் பரவுகையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை, ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறிப்பாக, மக்களின் இடம்பெயருகை, காட்டுவிலங்குகள் புதிய இடங்களுக்குப் போதல், புதிய விலங்குகளோடு சேர்ந்து வாழுதல் போன்ற விளைவுகளால், நோய்க்கிருமிகளின் பரம்பலுக்கும் கடத்தலுக்கும் வாய்ப்பாக அமைகின்றன.   

அதேபோலவே, உயிர்ப்பல்வகைமையின் இழப்பு, இயற்கையின் நிலஞ்சார் அமைப்புகளை நிலைமாற்றம் செய்கின்றது. இதன் விளைவால், சில உயிரினங்கள் மனிதருடன், மாற்றங்களை உள்வாங்கி வாழ இயல்பூக்கமடைகின்றன. இவை, தம்முள் நோய்க்கிருமிகளை வைத்திருந்து, மனிதர்களுக்குக் கடத்தவல்லன.  

இன்னொருபுறம் மனிதர்கள், கால்நடைகள், வனவிலங்குகள் ஆகியவற்றில் உள்ள நோய்க்கிருமிகள், உயிர்ப்பல்வகைமையைப் பாதித்து, மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்களும் நடக்கின்றன.   

1960ஆம் ஆண்டுமுதல், நோய்த்தொற்றுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சொல்கின்ற பிரதான செய்தி யாதெனில், 1960ஆம் ஆண்டு முதல், அறிக்கையிடப்பட்ட நோய்த்தொற்றுகளில் 30%க்குக் காரணம், நிலப்பயன்பாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் ஆகும். இவற்றில், காடழிப்பு, வனவிலங்குகள் வாழ்ந்த பகுதிகளில் மனிதக் குடியிருப்புகள், பயிர்கள், கால்நடை உற்பத்தியின் அபரிமிதமான அதிகரிப்பு, நகரமயமாதல் ஆகியவை பிரதானமானவை ஆகும்.  

நிலப்பயன்பாட்டில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், ஒரு தொடர்சங்கிலியாக அனைத்தையும் பாதிக்கின்றன. குறிப்பாக, நிலப்பயன்பாட்டு மாற்றம், காலநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாகிறது (காடழிப்பு, வெப்பம் அதிகரித்தல்). அதேபோல, உயிர்பல்வகைமையின் இழப்புக்கும் காரணமாகிறது.   

உயிர்ப்பல்வகைமையை அழித்து, அவ்விடங்களை அபகரிப்பதானது, தொற்றுகள் இலகுவில் மனிதர்களுக்குக் கடத்தப்படுவதற்கு, வாய்ப்புகளை அதிகரிப்பதோடு, தொற்றின் வீரியத்தையும் அதிகரிக்கின்றது.  

இதேபோல, வனவிலங்கு வர்த்தகம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். உலகில் உள்ள வனவிலங்குகளில் 24%மானவை, ஆண்டுதோறும் வர்த்தகம் செய்யப்படுகின்றன. அமெரிக்காவில் மட்டும், ஆண்டொன்றுக்கு சராசரியாக 20 மில்லியன் வனவிலங்குகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவை பெரும்பாலும், செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவதற்கானவை ஆகும். 2015ஆம் ஆண்டு மாதமொன்றுக்கு 2,000 கப்பல் பெட்டிகளில் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இப்போது மாதமொன்றுக்கு 13,000 கப்பல் பெட்டிகளாக அதிகரித்துள்ளது.  

இதேவேளை, காட்டுவிலங்குகளைப் பண்ணைகளில் வளர்க்கும் தன்மையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சீனாவில் இத்தொழிலில் 14 மில்லியன் மக்கள் ஈடுபட்டுள்ளார்கள். இவை உணவுக்காக மட்டுமன்றி, மருந்துகள், வாசனைத் திரவியங்கள், தோல் ஆகியவற்றுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இவ்வாறு, சட்டவிரோதமான வனவிலங்கு வர்த்தகமும் நோய்க்காவியில் பெரும்பங்காற்றுகிறது. ஆனால், இது பேசப்படும் பொருளல்ல.  

இதன் பின்னணியில், கொவிட்-19 நோய்க்கு, உலகம் எவ்வாறு முகங்கொடுக்கிறது என்று நோக்கினால், இப்போதுள்ள தொற்றுத்தடுப்புச் செயல்முறைகள், தொற்று ஏற்பட்ட பின்னர் அதைத் தடுப்பது தொடர்பானவை ஆகும். தோற்றுத் தடுப்பு முன்தயாரிப்புகளும் அம்முறையையே பின்பற்றுகின்றன. உதாரணமாக, நோய்த்தடுப்புக்கான மருந்துகளும் இன்ன பிற நடவடிக்கைகளும், இயற்கையையே தங்கள் தேவைகளுக்காகப் பயன்படுத்துகின்றன. எனவே, இது உயிர்ப்பல்வகைமையைப் பாதிக்கும்.   

இங்கு கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், இந்த நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கும் அவை பெருந்தொற்றாக மாறுவதற்கும் மனிதர்களே காரணம். இப்போது தேவைப்படுவது, தொற்றுக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான கொள்கைகளும் திட்டமிடலும் பொறுப்புணர்வும் செயலாற்றலும் ஆகும்.  

கடந்தகால அனுபவங்களில் இருந்து பாடங்கற்று, எதிர்காலம் குறித்துச் சிந்திக்காமல், இறந்தகாலம் பற்றிய கனவில் பலர் இருக்கிறார்கள். மனித மனம் விந்தையானது. ‘தொட்டில் பழக்கம், சுடுகாட்டு மட்டும்’ என்பார்கள். ஆனால், சுடுகாடு போவதற்கான வழியையே, மனிதகுலம் இலாபத்தின் பெயரால் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.   

இன்னொரு பெருந்தொற்றிலிருந்து எம்மைக் காக்க வேண்டுமாயின், நாம் அனைவரும் பங்களிக்க வேண்டும்; அரசுகளைப் பொறுப்பாக்க வேண்டும். பிளாஸ்டிக் பாவனையைக் குறைத்தல்; மீள்சுழற்சி செய்தல்; காடுகளைப் பாதுகாத்தல் போன்ற, சின்னச் சின்ன விடயங்களைச் செய்வோம். பெரிய விடயங்களைப் பூமிப்பந்து பார்த்துக் கொள்ளும்.இந்தப் பூவுலகையா எங்கள் பேரக்குழந்தைகளுக்குப் பரிசளிக்கப் போகிறோம் என்ற கேள்வியை, அடிக்கடி நாம் ஒவ்வொருவரும் கேட்டாக வேண்டும்.  

நவீன தொழில்நுட்பம், அறிவியல், முதலாளித்துவம், ஜனநாயகம் என எல்லாம் தோற்ற ஓரிடம் கொவிட்-19 ஆகும். மனிதனது பேராசையும் இலாபவெறியும் அதிகார ஆசையும் இன்னொரு பெருந்தொற்றில் இருந்து, எம்மைக் காப்பாற்றும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? 

(அடுத்த வாரம் தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X