2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

கொரோனாவுக்கு அரசியல் சிகிச்சை

Johnsan Bastiampillai   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

புதிய மருந்துகளைக் கண்டு பிடிப்பதில், இலங்கைக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் இடையே, பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன.  அபிவிருத்தியடைந்த நாடுகள், பல மாதங்களாக ஆய்வுகூடப் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், களப் பரீட்சைகளிலும் ஈடுபட்டதன் பின்னரே, மருந்துகளைப் பொதுமக்கள் பாவனைக்கு அனுமதிக்கின்றன.

இலங்கையில், புதிய மருந்துகள் முதலில் பொதுமக்கள் பாவனைக்கு விடப்பட்ட பின்னரே, ஆய்வுகூடப் பரிசோதனைக்கு விடப்படுகின்றன. இது, அரசாங்கம் எந்தளவு கவலைக்குரிய நிலைமையில் இருக்கிறது என்பதையே காட்டுகிறது.

அமெரிக்காவில் ‘பைஸர்’ என்ற பல்தேசிய மருந்துக் கம்பனி, ஜெர்மனியில் ‘பயோஎன்டெக்’ எனும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து, கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்துவதற்காகத் தயாரித்த தடுப்பூசி, பல மாதங்களாக ஆய்வுகூடங்களில் பரிசோதிக்கப்பட்டு, பின்னர், சுயவிருப்பத்தில் பேரில் பரிசோதனைக்கு முன்வந்த 44,000 பேருக்கு மருந்தைச் செலுத்தி, பல வாரங்களாக அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை அவதானித்த பின்னரே, அமெரிக்க உணவு மற்றும் மருந்து பரிபாலன சபையின் அனுமதி கிடைத்துள்ளது. 

ஆனால், இலங்கையிலோ வேறு விதமாகவே நிலைமை இருக்கிறது. கேகாலை, ஹெட்டிமுல்லை என்னும் இடத்தைச் சேர்ந்த தம்மிக்க பண்டார என்பவர், கொவிட்-19 நோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாகச் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. உடனே, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆரச்சி, ஊடகங்களுடன் ஹெட்டிமுல்லைக்குச் சென்று, தொலைக்காட்சி கமெராக்கள் முன்னால், அந்த மருந்தைப் பருகினார். சில நாள்களுக்குப் பின்னர் பண்டார, 5,000 பேரைத் தமது இல்லத்துக்கு அழைத்து, தாம் தயாரித்த மருந்தை, இலவசமாக அந்த மக்களுக்கு விநியோகித்தார். 

அதன் பின்னர், அந்த மருந்தைப் பரிசோதிப்பதற்காக பேராசிரியர் சேனக்க பிலபிட்டியவின் தலைமையில் நிபுணர் குழுவொன்றை, சுகாதார அமைச்சர் நியமித்தார். மருந்தைப் பருகி, அதற்குப் பிரசாரத்தை வழங்கிவிட்டு, பரிசோதனை செய்வதானது, மாட்டுக்கு முன்னால் வண்டியைப் பூட்டி ஓட்டுவதற்குச் சமமாகும். 

தமது மருந்தை, வத்துபிட்டிவலயில் உள்ள கொவிட்-19 நோய் சிகிச்சை நிலையத்தில் நோயாளர்களுக்கு வழங்கியதாகவும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவின் பிரகாரம், அவர்களின் உடலிலிருந்து வைரஸ் அழிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பண்டார தெரிவித்திருந்தார். 

ஆனால், அந்த மருத்துவமனையில் அவ்வாறான எந்தவொரு பரிசோதனையும் உத்தியோகபூர்வமாக நடத்தப்படவில்லை என, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஞாயிற்றுக்கிழமை (13) தெரிவித்திருந்தது.

பண்டாரவின் மருந்தை, அரச உணவு அதிகார சபையோ மருந்து அதிகார சபையோ அங்கிகரிக்கவில்லை என, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். 

இவ்வாறிருக்க, தம்மிக்க பண்டார, தமது மருந்தை பாரிய அளவில் உற்பத்தி செய்வதற்காக, கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச, ஓர் இயந்திரத்தையும் வழங்கி இருக்கிறார். பண்டார உள்ளிட்ட பலர், முகக் கவசம் எதுவுமின்றி, அந்த இயந்திரத்தைச் சூழ இருந்து, மருந்து தயாரிப்பதையும் தொலைக்காட்சி மூலம் காணக்கூடியதாக இருந்தது.

ஆனால், ஆயுர்வேத திணைக்களம், பண்டாரவின் மருந்தை, மருந்தாகவன்றி உணவாக மட்டும் அங்கிகரித்துள்ளதாக, மற்றொரு செய்தியில் கூறப்பட்டது. 

இதற்கிடையே, மற்றொருவர் தொலைக் காட்சி முன் தோன்றி, தாமும் சுதேச மருத்துவர் என்றும், தாமும் கொவிட்-19 நோய்க்கு மருந்தொன்றைக் கண்டுபிடித்து உள்ளதாகவும் அது, இராவணன் காலத்து மருத்துவ முறைமையின் அடிப்படையில் தயாரித்ததாகவும், தாம் அந்த மருந்தை உட்கொண்டதால், கொவிட்-19 நோயாளர் ஒருவருடன், ஒரே கட்டிலில் உறங்கி, அம்மருந்தின் தரத்தை நிரூபிக்கவும் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார். 

இவ்வாறான ‘மருத்துவர்’களைப் பற்றியும் அவர்களின் மருந்துகளைப் பற்றியும் பெரும்பாலானோர் சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றனர். குறிப்பாக, தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தம்மிக்க பண்டாரவை, பலர் ஏளனம் செய்கின்றனர். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அவர் முன்னர், மேசன் தொழில் செய்தவர் என்றும் பின்னர், காளி கோவிலை அமைத்துக் கொண்டு, மந்திர வேலைகளைச் செய்தார் என்றும் கூறுகின்றனர்.

ஆனால், தம்மிக்க பண்டாரவோ,“ இந்த மருந்தைத் தெய்வீக அருளின் மூலம் தயாரித்தேன்” எனக் கூறுகிறார். இவர் பாரம்பரிய மருத்துவரும் அல்ல; சுதேச மருத்துவக் கல்லூரி ஒன்றில் படித்தவரும் அல்ல. 

இவர் ஒரு மருத்துவர் என்றால், அந்த அறிவை எங்கிருந்து பெற்றார் என்பது, தெளிவற்றதாக இருக்கிறது. ஆனால், அரச சார்பு ஊடகங்களும் அமைச்சர்களும் முண்டியடித்துக் கொண்டு, அவருக்கு உதவுவதாகத் தெரிகிறது. ஏதோ, பண்டார தயாரித்த மருந்து, கொவிட்-19 நோயாளர்களைக் குணப்படுத்தியமை, விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட விடயம் போல், அரச சார்பு ஊடகங்கள் வர்ணித்தன.

எவ்வாறாயினும், தம்மிக்க பண்டாரவை ஒரு திருடனாக, இப்போதே முடிவு செய்வது நியாயமில்லை. ஏனெனில், அவரது மருந்து போலியானது என்பதற்கோ, அதனால் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கோ, எவ்வித ஆதாரமும் இல்லை. அதேபோல், அந்த மருந்து கொவிட்-19 நோயைத் தடுப்பதாகவோ குணப்படுத்துவதாகவோ, விஞ்ஞானபூர்வ ஆதாரங்களும் இல்லை. 

கொவிட்-19 நோயின் மரண வீதம், உலகெங்கும் ஐந்து சதவீதத்துக்குக் குறைவாகவே இருக்கிறது. பெரும்பாலான நாடுகளில் இது, இரண்டு அல்லது, மூன்று சதவீதமாகவே உள்ளது. இலங்கையில், ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. எனவே, இலங்கையில் குறிப்பிட்ட ஒரு மருந்தைப் பாவித்தவர்களில், 99 சதவீதமானோர் பிழைத்துக் கொண்டாலும், அது சிறந்த மருந்து எனக் கூறவும் முடியாது.  

ஆயுர்வேதம் போன்ற இந்திய, சுதேச மருத்துவமானது, விஞ்ஞானபூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் வளர்ந்தவையல்ல. அவை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட, மருத்துவ முறைமைகளாகும். இவற்றின் நன்மை தீமைகளையும் அனுபவ வாயிலாகவே, அறிய வேண்டியுள்ளது. எனினும், அண்மைக் காலமாக, சுதேச மருத்துவ கல்லூரிகளில் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே, கொவிட்-19 நோய்க்கும் சுதேச மருந்துகள் கண்டுபிடிக்கப்பட முடியாது என்ற முடிவுக்கு வர முடியாது. எனினும், மனிதனால் மனிதனுக்கு வேகமாகப் பரவும் இந்நோய்க்கு, சிகிச்சை அளிப்பதாக இருந்தால், அதற்கான மருந்து அல்லது, தடுப்பூசி சந்தேகத்துக்கு இடமின்றி, பயனுள்ளது என்று நிரூபிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், மக்கள் அதை நம்பி மென்மேலும் நோய்க்கு இரையாகலாம்.  

சில ஆபிரிக்க நாடுகளிலும் இந்தியாவிலும், கொவிட்-19 நோய்க்கு, சுதேச மருந்துகளைக் கண்டுபிடித்துள்ளதாக, இதற்கு முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால், அவை எதிர்பார்க்கப்பட்ட பயன் தரவில்லை என்றும் தெரிய வந்தன. கடந்த ஏப்ரல் மாதத்தில், மடகஸ்கர் நாட்டு ஜனாதிபதி அன்ட்றி ரஜோலினா, ‘கொவிட் ஓர்கனிக்ஸ்’ (CVO) என்ற பெயரில், ஒரு மருந்தை விநியோகிக்கும் பணியை, மிக ஆரவாரத்துடன் ஆரம்பித்தார். அது, 20 நோயாளர்களுக்கு வழங்கப்பட்டு, நல்ல பயன் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

அந்நாட்டிலுள்ள Malagasy Institute of Applied Research (MIAR) என்ற நிறுவனமே, அந்த மருந்தைத் தயாரித்து இருந்தது. தம்மிக்க பண்டார செய்ததைப் போல், அந்நிறுவனம் ஆயிரக் கணக்கான மக்களுக்கு, அதை விநியோகித்தது. வெளிநாடுகளுக்கும் அம்மருந்து அனுப்பப்பட்டது. ஆயினும், கொவிட்-19 நோய் பரவலைத் தடுக்க, அதனால் முடியாமல் போய்விட்டதாக, ஓகஸ்ட் மாதம் பி.பி.சி தெரிவித்தது.

இந்தியாவிலும், அரச ஆதரவுடன் சில சுதேச மருந்துகளைப் பிரபல்யப்படுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டது. ஆயுர்வேதத்தைப் பயன்படுத்திக் கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்தும் பணியை ஆரம்பிக்குமாறு, அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன், ஒக்டோபர் மாதம் பரிந்துரையொன்றை வெளியிட்டு இருந்தார். எனினும், இந்திய மருத்துவர் சங்கம் இதை எதிர்த்தது. பெறுபேறுகள் நிரூபிக்கப்பட்டாத மருந்துகளைச் சிபார்சு செய்வது, தேசத்துக்கும் மக்களுக்கும் செய்யும் மோசடியாகும் என, அச்சங்கம் தெரிவித்தது.

இலங்கையில் அரசாங்கம், கொவிட்-19 நோயின் நெருக்கடியை எதிர் கொள்ள முடியாது தவிக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக அடையாளம் காணும் நோயாளர்களின் எண்ணிக்கையைப் பார்க்கிலும், குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. நோயாளர்களை அடையாளம் காண்பது என்பது, தேவையான அளவை விட குறைந்த எண்ணிக்கையில் பரிசோதனை செய்வதன் மூலமே என்பதால், சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் உண்மையான எண்ணிக்கை, மேலும் அதிகமாக இருக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் அபிப்பிராயமாகும்.

இந்த நிலையிலேயே, அமைச்சர்கள் தமக்கு ஆதரவான ஊடகங்களுடன் கைகோர்த்துக் கொண்டு, பெறுபேறுகள் நிரூபிக்கப்படாத மருந்துகளின் பின்னால் ஓடுகிறார்கள். மக்களை, ஏதாவது ஓர் எதிர்பார்ப்பில் வைக்க வேண்டும் என்பதே, அவர்களது நோக்கமாக இருக்கிறது போலும்!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X