2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கொள்கை இல்லாத தேர்தல் கூட்டணிகள்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான ஆயத்தங்கள் அரசியல் கட்சிகளாலும் தேர்தல் திணைக்களத்தாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சிறிய, பெரிய மற்றும் இனரீதியான சகல அரசியல் கட்சிகளும் ஒருவித அச்ச உணர்வோடு, செயற்படுவதாகவே தெரிகிறது.   

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில், மக்கள் விடுதலை முன்னணி மட்டுமே, தமது சொந்தப் பலத்தின் மீது நம்பிக்கை வைத்து, தேர்தல் களத்தில் இறங்கத் தயாராக இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.  

 ஏனைய சகல கட்சிகளும், கூட்டணிகளை அமைக்க அரசியல் கூட்டாளிகளைத் தேடித் திரிவதையும், சிலர் அந்தக் கட்சியின் பின்னாலும் இந்தக் கட்சியின் பின்னாலும் அலைவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.  

அரசியல் கட்சிகளின் இந்தப் பதற்றத்தின் காரணமாக, சாதாரண உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது காட்டும் அக்கறையைப் போலன்றி, நாடாளுமன்றத் தேர்தலின்போது காட்டும் அக்கறையைச் சில கட்சித் தலைவர்கள், இந்தத் தேர்தலுக்குக் காட்டுகிறார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், இதற்கு முன்னர் இவ்வளவு முக்கியத்துவம் பெறவில்லை.  

நாட்டிலுள்ள தற்போதைய அரசியல் நிலைமையே இந்த நிலைக்குக் காரணமாகும். ஒருபுறத்தில், நாட்டில் தனிக்கட்சியொன்றின் நிலையான ஆட்சி இல்லை. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த ராஜபக்ஷ அணிக்கும் மைத்திரிபால சிறிசேன அணிக்கும் இடையே பலத்த அதிகாரப் போட்டியொன்று நிலவுகிறது.   

மறுபுறத்தில், அரசாங்கத்துக்குள் மைத்திரி அணிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில், பலத்த பனிப்போரொன்று நிலவுகிறது.   

எனவே, இம்மூன்று பிரிவினரும்  தத்தமது பலத்தைக் காட்டவும் மற்ற இரு பிரிவினரையும் மட்டம் தட்டவும், பெரும் முயற்சி எடுத்துவரும் காலகட்டம் இது. ஒருபுறம் அவர்களுக்குள் ஒருவித அச்ச உணர்வு நிலவுகிறது. மறுபுறம், இந்த அச்ச உணர்வு காரணமாகவே, ஏதாவது செய்து, தாம் முதலிடத்துக்கு வரவேண்டும் என்று துடிக்கிறார்கள். இந்தத் தேர்தலுக்கு முக்கியத்துவம் கிடைக்க, இது ஒரு காரணமாகும்.  

இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், பல உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், இரண்டு வருடங்களுக்கு முன்னரே நடைபெறவிருந்தவை. ஏனையவை கடந்த வருடம் நடைபெறவிருந்தவை. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் காரணமாக, மேலும் பல தொழில்நுட்ப விடயங்கள், பூர்த்தி செய்யப்பட வேண்டியிருந்தன.   

அதனால், தேர்தல்கள் தாமதமாகின. அத்தோடு, முன்னாள் அரசாங்கத்தினதும் இந்த அரசாங்கத்தினதும் சில அரசியல்வாதிகளின் சில கபட நடவடிக்கைகள் காரணமாகவும் அவை தாமதமாகின.   

அந்தத் தாமதத்தின் போது, அவ்வப்போது எதிர்க்கட்சியில் இருந்தவர்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பெறுமதியைப் பற்றி, வெகுவாகக் கருத்து வெளியிட்டு வந்தனர்.   
ஆனால் உண்மையிலேயே, மக்கள் பிரதிநிதிகள் சபைகளில், மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் குறைந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் சபை, உள்ளூராட்சி சபையாகும். வருடத்துக்கு ஒரு முறை வீட்டு வரிப்பணத்தைச் செலுத்த மட்டுமே மக்கள் அவற்றுக்குச் செல்கிறார்கள்.   

அதற்குப் புறம்பாக, வாழ்க்கையில் ஒரு முறை அல்லது இரண்டுமுறைகள் காணியொன்றை விலைக்கு வாங்கினால், அதற்கான முத்திரை வரியைச் செலுத்த, அங்கு செல்வார்கள்.   

கிராமிய வீதிகள், வீதி விளக்குகள் ஆகியவற்றைப் பராமரிப்பதும், பிரதேசத்தில் குப்பைகளை அகற்றுவதும் உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பாக இருந்தாலும் அம்மன்றங்கள் அப்பணிகளைப் பொறுப்புணர்ச்சியுடன் செய்வதில்லை.  

 இவ்வாறு இருக்க, இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க, தேர்தல்கள் தாமதமாகியமையும் ஒரு காரணமாகும்.  

தேர்தல் தாமதத்தின் காரணமாக, ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையே பலத்த விவாதங்கள் இடம்பெற்றன. அதனால் தேர்தல்கள் ஊடகங்களில் பேசுபொருளாக மாறின.   

எனவே இத்தேர்தல்கள், தமது எதிர்காலத்தின் திசையை நிர்ணயிக்கும் தேர்தல்களாக மாறிவிடும் என, அரசியல் கட்சித் தலைவர்கள் நினைக்கும் அளவுக்கு, அவை முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவ்வாறு நினைக்கிறார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி என்ற கட்சியின் தேர்தல் அணிக்குத் தலைமை தாங்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவ்வாறு நினைக்கிறார்.   
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் அவ்வாறு நினைக்கிறார்கள் என்றே தெரிகிறது.  

வழமையாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் போன்ற உள்ளூர் தேர்தல்களின்போது, மத்திய அரசாங்கத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு இருக்கும் கட்சியே வெற்றி பெறும்.   

ஆனால், இந்தச் சூத்திரம் இம்முறை தேர்தல்களுக்குப் பொருந்துமா என்பது சந்தேகமே. இந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக, இந்தத் தேர்தல்களின் முடிவுகள் 2020 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களின் முடிவுகளையும் நிர்ணயிக்கும் எனச் சகல பிரதான கட்சிகளின் தலைவர்களும் நினைக்கிறார்கள்.  

எந்தக் கட்சிக்கு, நாட்டில் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பதை, ஊகிக்க முடியாத நிலைமையே காணக்கூடியதாக இருக்கிறது. எந்தக் கட்சியின் பக்கமும் அலை வீசவில்லை. இந்த நிலையின் காரணமாகவே, அரசியல் கட்சித் தலைவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.   

அதனால், பிரதேச மட்டத்தில் இந்தத் தேர்தல்கள் நடைபெற்றாலும் மைத்திரிக்கும் மஹிந்தவுக்கும் இடையிலான போராட்டமாகவும் மஹிந்தவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான போராட்டமாகவும் வடக்கில் சம்பந்தனுக்கும் சுரேஷுக்கும் இடையிலான போராட்டமாகவும் மலையகத்தில் தொண்டமானுக்கும் திகாம்பரத்துக்கும் இடையிலான போராட்டமாகவும் கிழக்கில் ஹக்கீமுக்கும் ரிஷாத்துக்கும் இடையிலான போராட்டமாகவும் நிலைமை மாறியிருக்கிறது.  

ஐக்கியத்துக்காக மைத்திரி - மஹிந்த அணிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்திருந்தால், நாட்டின் நிலைமை முற்றாக மாறியிருக்கும்.   
ஆனால், அப்பேச்சுவார்த்தைகள் அரசியல் யதார்த்தத்துக்கு முரணாக இருந்ததால், அவற்றின் தோல்வி முன்னரே நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இரு தலைவர்களினதும் கைகளைப் பலப்படுத்துவதே பேச்சுவார்த்தைகளின் நோக்கமெனக் கூறப்பட்டாலும், இருவரில் எவரும் மற்றவரது கை பலமடைவதை விரும்பவில்லை.   

அதனால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை காரணமாக, கூட்டணிகளுக்கான பேச்சுகள் ஆரம்பமாகின. தம்மோடு 20 அரசியல் கட்சிகள் இணைந்திருப்பதாக மஹிந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கூறுகிறது.  

 ஆனால், 20 நிரந்தர உறுப்பினர்கள் உள்ள, 10 அரசியல் கட்சிகளையாவது தேடிக் கொள்வது கடினமாக இருக்கும் நிலையில், எவ்வாறான கட்சிகளைப் பொதுஜன முன்னணி சேர்த்துக் கொண்டுள்ளது என்பதை ஊகிக்க முடிகிறது.   

இந்தக் கூட்டமைப்பில் தினேஷ் குணவர்தனவின் தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, தற்போது உட்கட்சி சண்டையில் சிக்கிக் கொண்டிருக்கும் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெல உருமய, திஸ்ஸ வித்தாரணவின் தலைமையிலான லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் வாசுதேவ நாணயக்காரவின் புதிய இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகளும் இருக்கின்றன.  

 இவற்றுக்கு எந்தளவு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்த விடயம். இவற்றுக்குத் தனியே போட்டியிட்டு ஒரு நாடாளுமன்றத் தொகுதியேனும் வெற்றி பெற முடியாது. அதேவேளை, இவை மஹிந்த அணியோடு எப்போதோ சேர்ந்துவிட்ட கட்சிகள்.   
ஐ.தே.கவுக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் தலைமையிலான ஜாதிக ஹெல உருமய, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு முன்னணி ஆகிய கட்சிகள் ஆதரவு வழங்குகின்றன.   

இந்தக் கட்சிகளுக்கு ஓரளவுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. ஆயினும், இக்கட்சிகளும் ஐ.தே.கவின் பழைய நண்பர்களே. 

ஐ.தே.கவும் புதிதாக எந்தக் கட்சியினதும் ஆதரவை வென்றதாக இல்லை.  
முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் முற்போக்கு முன்னணியும் தமது கோட்டைகளில் அதாவது மு.கா கிழக்கிலும் த.மு.மு மலையகத்திலும் தத்தமது சின்னத்தின் கீழும், ஏனைய பிரதேசங்களில் ஐ.தே.க சின்னத்திலும் போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளன.  

நாட்டின் பிரதான மூன்று தலைவர்களில் ஜனாதிபதி மைத்திரிபாலவின் அணிக்கே குறைந்தளவு துணைக் கட்சிகள் இருக்கின்றன. தற்போதைய நிலையில், முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் டக்ளஸ் தேவாநந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுமே சிலவேளை மைத்திரி அணியில் சேரலாம் எனக் கூற முடிகிறது. இவ்விரண்டு கட்சிகளும் அவற்றின் வரலாற்றில் எப்போதும் ஆளும் கட்சியுடன் கூட்டுச் சேரவே விரும்பியுள்ளன.  

கட்சியாக இல்லாவிட்டாலும் தனி நபர்களாக விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் மூன்று தலைவர்களும் மஹிந்த அணியிலுள்ள தினேஷ் குணவர்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணியின் பெண் எம்.பி ஒருவரும் இந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து ஸ்ரீ ல.சு.கவில் இணைந்து கொண்டனர்.   

விமலின் கட்சியின் உபதலைவர் வீரகுமார திஸாநாயக்க, தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க மற்றும் முன்னாள் எம்.பி ஜயந்த விஜேசேகர ஆகியோரே அவ்வாறு ஜனாதிபதியுடன் இணைந்த விமலின் சகாக்களாவர்.  

கடந்த தேர்தல்களின் போது, இருந்ததைப் போலல்லாது இம்முறை வித்தியாசமான ஒருநிலைமை வடக்கில் காணப்படுகிறது. 1972 ஆம் ஆண்டு, தமிழர் கூட்டணி அமைக்கப்பட்டது முதல் தமிழரசுக் கட்சி தலைமையிலான கூட்டணிகளுக்கு எதிராக வேறு கூட்டணிகள் போட்டியிடவில்லை. ஆனால், இம்முறை அவ்வாறானதோர் கூட்டணி உருவாகியிருக்கிறது.   

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கடந்த மாதம் விலகிய பின், அதன் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்து புதிய கூட்டணி அமைக்கப் போவதாக அறிவித்தார்.   

ஆனால், அவ்வாறு கூட்டணி அமைப்பதற்காகப் பிரேமசந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரியை அணுகியபோது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தின் கீழ், தாம் போட்டியிட விரும்பவில்லை எனக் கூறி, பொன்னம்பலம் ஒதுங்கிக் கொண்டார்.  

மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில், இடஒதுக்கீடு தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்கும் (டெலோ) இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, இனித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு கூட்டு சேர்வதில்லை என, டெலோத் தலைவர்கள் அறிவித்தனர்.   

ஆனால், பின்னர் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பயனாக, டெலோ மீண்டும் கூட்டமைப்பில் சேர்ந்து கொண்டது.  
தமிழீழ விடுதலை புலிகளின் தேவைக்கு அமையவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. கூட்டமைப்பு அமைக்கப்படும் போது, தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரிலேயே இயங்கியது. டெலோவும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியும் புளோட்டும் கூட்டமைப்பில் இருந்த ஏனைய கட்சிகளாகும்.   

பின்னர், கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி புலிகளுடன் முரண்பட்டுக் கொண்டு, கூட்டணியின் பெயரையும் அதிலிருந்த சிலரையும் எடுத்துக் கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார். எனவே, கூட்டணியின் பெரும்பான்மையினர் தமிழரசுக் கட்சியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் செயற்பட ஆரம்பித்தனர்.  

இப்போது வடக்கில், இரண்டு தமிழ்க் கூட்டணிகள் களத்தில் இருக்கின்றன. ஒன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். அதில், கூட்டமைப்பின் ஆரம்பக் கட்சிகளில் மூன்று கட்சிகள் இப்பொழுதும் இருக்கின்றன. அவை, இலங்கைத் தமிழரசுக் கட்சி, டெலோ மற்றும் புளோட் ஆகியவைகளாகும்.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஆரம்பத்தில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி தற்போது கூட்டமைப்பில் இருந்து வெளியேறி, தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. அதுதான் களத்தில் இருக்கும் இரண்டாவது கூட்டணியாகும். 

இந்த இரண்டு கூட்டணிகளில், தமிழரசுக் கட்சி மற்றும் டெலோ தவிர்ந்த ஏனைய கட்சிகளின் தலைவர்கள், கடந்த தேர்தல்களில் தோல்வி கண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

இவற்றுக்கு புறம்பாக டக்ளஸ் தேவாநந்தாவின் தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தாம் போட்டியிடப் போவது தனித்தா, கூட்டுச் சேர்ந்தா என்பதை இன்னமும் வெளியிடவில்லை.   

ஐ.தே.க, ஸ்ரீ ல.சு.க மற்றும் மக்கள் விடுதலை முன்னணி போன்ற தேசிய கட்சிகளும் இம்முறையும் வடக்கில் போட்டியிடக் கூடும். ஆனால், அவற்றினால் அங்கு எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்திவிட முடியாது.   

கிழக்கில் மு.காவிலிருந்து அதன் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூதும் பொதுச் செயலாளர் ஹசன் அலியும் சில மாதங்களுக்கு முன்னர் பிரிந்து சென்றனர். பின்னர், அவர்கள் தூய முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் கட்சியொன்றை அமைக்கப் போவதாகச் செய்திகள் கூறின.  

 ஆனால், இப்போது அவர்கள் ஐக்கிய சமாதானக் கட்சி என்ற பெயரிலேயே செயற்படுகிறார்கள். அந்தக் கட்சியும் ரிஷாத் பதியுதீனின் மக்கள் காங்கிரஸும் இணைந்து புதிய கூட்டணியொன்றை ஆரம்பித்திருக்கிறார்கள்.   

இவ்வாறுதான் தேர்தலுக்காகக் கட்சிகள், அணிகளை அமைத்துக் கொண்டு இருக்கின்றன. எதிர்வரும் நாட்களிலும் மேலும் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அனேகமாகத் தனி நபர்களாகப் பலர், இந்தக் கட்சியிலிருந்து அந்தக் கட்சிக்கும் அந்தக் கட்சியிலிருந்து இந்தக் கட்சிக்கும் தாவலாம்.   

மொத்தத்தில் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் தேர்தல் கூட்டணிகளைப் பார்க்கும் போது, அவற்றுக்குக் கொள்கை அடிப்படை என்ற எதுவுமே இல்லை என்பதுதான் பொதுவான அடையாளமாக இருக்கிறது. வாசுதேவ நாணயக்கார போன்ற அதிகாரப் பரவலாக்கலை வலியுறுத்துவோர் மஹிந்தவின் தலைமையில் எவ்வாறு கூட்டுச் சேரலாம்?  

 ஐ.தே.க பலம் பெறும் வகையில் விமல் வீரவன்ச செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டி அவரது கட்சியிலிருந்து பிரிந்தவர்கள், ஐ.தே.கவுடன் அரசாங்கத்தை நடத்தும் மைத்திரிபாலவுடன் எவ்வாறு கூட்டுச் சேரலாம்?  

கொள்கை வித்தியாசம் எனக் கூறி, இரண்டு கட்சிகளை அமைத்துக் கொண்டு இருக்கும் ஹக்கீமும் ரிஷாத்தும் ஐ.தே.கவின் கீழ் ஒரே அணியில் எவ்வாறு இருக்கலாம்? மு.காவை எதிர்ப்பதைத் தவிர, ஐக்கிய சமாதான முன்னணிக்கும் மக்கள் காங்கிரஸுக்கும் இடையே ஏதாவது கொள்கை அடிப்படை உண்டா?   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தம்மோடு இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னம் இப்போது பொன்னம்பலத்துக்கு ஏன் பிடிக்கவில்லை? கொள்கை காரணமாகத்தான் ஈ.பி.ஆர்.எல்.எப் கூட்டமைப்பிலிருந்து பிரிந்தது என்றால் வெறும் ஆசனப் பங்கீட்டுப் பிரச்சினைக்காகக் கூட்டமைப்பிலிருந்து விலக முற்பட்ட டெலோவை அக்கட்சி எவ்வாறு தம்மோடு இணைத்துக் கொள்ள முன்வந்தது? என்ன கொள்கை அடிப்படையில் டெலோ, தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமையிலான கூட்டணியில் சேர முயற்சித்தது?  

இவ்வாறு சகல கட்சிகளிடமும் இப்போது கொள்கை என்ற அடிப்படையில் மேலும் பல கேள்விகளை கேட்கலாம். அவர்கள் என்ன தான் பதில்களை வழங்கினாலும் இந்த விடயத்தில் எவருக்கும் கொள்கை எதுவும் இல்லை என்பதே உண்மை.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .