2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கொள்கைகளை மறந்துவிட்டு அஷ்ரபை நினைத்தழுதல்

மொஹமட் பாதுஷா   / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


முஸ்லிம்களின் அரசியல் வழிகாட்டியாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகராகவும் இருந்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப், மரணிப்பதற்கு முதல்நாள் இரவு, அவரைச் சந்தித்த ஓர் அரசியல் பிரமுகரிடம்,“நாம் சமூகத்துக்கான அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றோம். இது வெறுமனே பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டமல்ல; இதில் நானும் நீங்களும் எமது போராளிகளும் ஷஹீதாக்கப் (கொல்லப்) படலாம். அந்த உணர்வுடனேயே நாம் இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். இந்தப் போராட்டத்தில் நாம் மரணிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்” என்று சொல்லியிருந்தார்.  

முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகாலப் போராளிகளிடம் ‘உயிரையும் தியாகம் செய்வோம்’ என்றும் ‘வேறு அரசியல் சக்திகளுக்கு அடிபணிய மாட்டோம்’ என்றும் சத்திய வாக்குறுதி பெற்றிருந்த அஷ்ரப், தன்னுடைய ஒவ்வொரு செயற்பாட்டின் போதும், இது சமூகத்துக்கான போராட்டம் என்பதை நினைவூட்டியும் நிரூபித்தும் வந்தார்.   

ஆனால், அஷ்ரபின் பின்வந்த முஸ்லிம் அரசியலிலும் அவருடைய அரசியல் வாரிசுகளிடையேயும் இந்தப் பண்பைக் காண முடியவில்லை. சமூகத்தையன்றி தமது சொந்த நன்மைகளை முன்னிறுத்திய போக்கையே காண முடிகின்றது.   

மர்ஹூம் அஷ்ரப் அடிக்கடி நினைவுகூரப்படுவதுண்டு. இவ்வருடமும், அவர் மரணித்த தினமான செப்டெம்பர் 16 ஆம் திகதி, அவரது அரசியல்வாரிசுகளும் மக்களும் அவரை நினைத்தழுதனர்.   

அஷ்ரபின் பிறந்த தினமான ஒக்டோபர் 23 இலும் நினைவு கொள்ளப்படுவார். தேர்தல் காலம் வருகின்றது என்பதால், இனிவரும் நாட்களில் அவர் அடிக்கொரு தடவை நினைவூட்டப்படுவார். எவ்வாறாயினும், தனித்துவ அடையாள அரசியலின் தந்தையான அஷ்ரபின் கொள்கைகள், கோட்பாடுகளை எல்லாம் மறந்துவிட்டு, அவரை நினைத்து அழுதுவடிக்கின்ற நபர்களாகவே அவருக்குப் பின்வந்த அரசியல்வாரிசுகள் இருப்பதைத் தெளிவாகக் காண முடிகின்றது.   

அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதல், அமெரிக்காவில் ஏற்படுத்திய அதிர்வுகளை விட, அஷ்ரபின் மரணம் அல்லது படுகொலை, இலங்கை முஸ்லிம் சமூகத்துக்குள் ஏற்படுத்திய அதிர்ச்சியும் அதிர்வும் அதிகமாகும்.   

இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாக கிழக்கு முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தங்களது தந்தையை, குடும்பத்தின் தலைவனை இழந்தது போன்ற வெற்றிடத்தை உணர்ந்தார்கள். ஏனென்றால் அவரது அரசியல் அப்பேர்ப்பட்டதாக இருந்தது.   

முஸ்லிம்களின் அரசியலை அஷ்ரபுக்கு முன்னரான அரசியல் என்றும், அவரது காலத்து அரசியல் என்றும், அதற்குப் பின்னரான அரசியல் போக்கு என்றும் தனித்தனியாக நோக்கலாம்.  

சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுடன் உறவு கொண்டாடிய பிறகு, தமிழர் அரசியலோடு பயணித்து, ஒருகட்டத்தில் முஸ்லிம்களுக்கான தனித்துவ அடையாள அரசியலை அஷ்ரப் உருவாக்கினார்.   

பெருந்தேசியக் கட்சிகளுடன் பெருமளவான முஸ்லிம் அரசியல்வாதிகள் உறவு கொண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில், வடக்கு, கிழக்கில் ஆயுத இயக்கங்கள் முன்கையெடுத்திருந்த வேளையில், முஸ்லிம்களுக்கு என்று தனியான ஓர் அரசியல் அடையாள இயக்கம் வேண்டும் என்பதை உணர்ந்து செயற்பட்டார்.   

அவரதும் அவருடன் அப்போதிருந்த சமூக சிந்தனையுள்ள அரசியல்வாதிகளினதும் பெரும் தியாகத்தால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி உருவாகியது. இதனால், கொழும்பில் மையம் கொண்டிருந்த முஸ்லிம்களின் தலைமைத்துவம் கிழக்கு நோக்கித் திருப்பப்பட்டது மட்டுமன்றி, முஸ்லிம்களின் அரசியல் பாதையிலும் பெரும் திருப்பம் ஏற்பட்ட ஒரு காலப்பகுதி என்று இதைக் குறிப்பிடலாம்.   

அக்காலத்தில் பெருந்தேசியக் கட்சிகளின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸும் முடிசூடா மன்னனாக அஷ்ரபும் இருந்தார்கள்.   

அஷ்ரபும் கூட தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் என்றோ, அவருடைய தீர்மானங்கள் எல்லாமே சரி என்றோ கூற முடியாது. ஆனால், அதுவரைக்குமான அரசியலில் மட்டுமன்றி, ஏன் இன்று வரைக்குமான அரசியலில் கூட, அவர் உயர்ந்த இடத்தில் வைத்து நோக்கப்படுகின்றார்.   

இன்றிருக்கின்ற அரசியலையும் அரசியல்வாதிகளையும் அளவிடுவதற்கான ஓர் அளவுகோலாக அஷ்ரப் நோக்கப்படுகின்றார். அவருடைய சேவைகளை அடிப்படையாகக் கொண்டே, இப்போதெல்லாம் அபிவிருத்தித் திட்டங்கள் மதிப்பிடப்படுகின்றன.   

உரிமை அரசியலையும் அபிவிருத்தி அரசியலையும் சமாந்திரமாக அவர் முன்கொண்டு சென்றது போல, வேறு எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் முன்னெடுத்ததில்லை.   

அஷ்ரப் என்ற தனிமனிதனின் சேவையையும் கம்பீரமான அரசியலையும் அதற்கு முன்பு பெருந்தேசியக் கட்சிகளோடு சேர்ந்தியங்கிய பெரும்பெரும் அரசியல்வாதிகள் யாரும் செய்தது இல்லை. இந்த முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இன்னும் இருபது வருடங்களில் எவ்வாறு இருக்கப் போகின்றது என்று ஐ.தே.க, சு.க சார்பு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைத்தார்களா என்பது கூட நிச்சயமில்லை.   

அன்றாடம் அரசாங்கத்தின் மேலிடத்திலிருந்து தமக்குக் கிடைக்கின்ற சலுகைகளை நம்பியே அவர்களது காலம் ஓடிக் கொண்டிருந்தது. முஸ்லிம் சமூகத்தின் விடுதலை, உரிமைகள், தனியடையாளம் பற்றிய அவர்களுடைய நிலைப்பாடுகள் எல்லாம் ஐ.தே.கட்சியின், சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடுகளாகவே இருந்தன.   

இதைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டவர் அஷ்ரப். மேட்டுக்குடிக் காரர்களால் ஆட்கொள்ளப்பட்டிருந்த முஸ்லிம் அரசியலை, ஒவ்வொரு கீழ்மட்ட முஸ்லிமின் வாசற்படிக்கும் கொண்டு சென்றார். முஸ்லிம்கள் என்போர் தனியோர் இனம் என்றும், அவர்களது பிரத்தியேகமான அபிலாஷைகளும் தேவைப்பாடுகளும் இருக்கின்றன என்பதையும் அடித்துச் சொன்னார். இவ்வழியாக முஸ்லிம் அரசியல், ஒரு கட்டமைப்பு ரீதியான மாற்றத்துக்கு உள்ளாகியது.   

ஆனால், அவரது மறைவுக்குப் பின்னர், அந்த அரசியல் மீண்டும், தனது பழைய இடத்துக்கே திரும்பிச் சென்றிருக்கின்றது என்றே கூற வேண்டும். அஷ்ரப், பௌதீக ரீதியாக மரணித்தது அல்லது கொலைசெய்யப்பட்டதற்கு மேலதிகமாக அவருடைய கொள்கைகளும் அவருடைய வழிகாட்டுதல்களும் சாகடிக்கப்பட்டிருக்கின்றன.   

தமக்குத் தேவை ஏற்படும் போது, அஷ்ரபின் சுவரொட்டிகளையும் அவரது கொள்கைகளையும் தூக்கிப் பிடிக்கின்ற அவருடைய வாரிசுகள், தேவை முடிந்ததும் அவற்றைத் தூக்கி மூலையில் போட்டுவிடுகின்றனர் என்பதே நிதர்சனம்.   

ஆக, தேர்தல் காலத்தில் அஷ்ரபுக்கும் கொள்கைகளுக்கும் உயிர் கொடுக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், அவரை நன்றாக விளம்பரப்படுத்தி, காரியம் முடிந்த பிறகு, மீண்டும் மறந்து விடுகின்றனர். இது அவருடைய வழிகாட்டுதல்களைக் கொலை செய்வதற்கு ஒப்பானது. எனவேதான், அஷ்ரப் ஒருமுறையல்ல பலமுறை, தினம்தினம் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்ற கருத்தோடு உடன்பட வேண்டியிருக்கின்றது.   
அவரோடு அரசியல் செய்த, அவரது அரசியல்வாரிசுகளான, அவருக்குப் பின் அவ்வழியில் பயணிக்கும் கிட்டத்தட்ட எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் சிறியதும் பெரியதுமாக இந்தப் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஏனைய முஸ்லிம் கட்சிகளும் அவரது வழியில் வந்த சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.   

அஷ்ரபின் கொள்கைக்கு முரணாக இன்றைய அரசியல்வாதிகள் செயற்படுவதை பரவலாக அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக, அஷ்ரப், மக்களுக்கான அரசியலில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டார். எழுத, வாசிக்கத் தெரியாத ஒரு விதவைத் தாயின் குரலுக்கும் செவி கொடுக்க அவர் தயாராக இருந்தார்.   

தமது முடிவுகளை மக்கள் மீது திணிக்காமல், மக்களின் தேவையறிந்து அதன்படி செயலாற்றினார். மதுபானம் பாவித்தல் போன்ற பல சமூக விரோத குற்றச்சாட்டுகள் தொடர்பில் கட்சிக்குள் ஒழுக்காற்று விசாரணையை நடத்தினார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.   

ஒருதடவை, ஏதாவது ஒரு பிரதேச சபைத் தேர்தலில் கட்சி தோல்வியுற்றால் எம்.பி பதவியை இராஜினாமாச் செய்வேன் என்று சொன்னார். பின்னர் அதன்படி செய்தார்.   

முஸ்லிம்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த சமகாலத்தில், தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம், பல நூற்றுக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு என்று பலவற்றைச் செய்தார். பெருந்தேசியக் கட்சிகளுடன் இணக்க அரசியல் செய்கின்றோம் என்பதற்காக, அவர்களது காலடியில் மண்டியிட்டுக் கிடக்கவில்லை. ஜனாதிபதியும் பிரதமரும் கோபித்துக் கொள்வார்கள் என்பதற்காக, பௌத்த இனவாதம் மேலெழுகின்ற போது ஊமை நாடகம் நடத்தியவரல்ல அஷ்ரப்.   

தமது ‘பைல்’களை கிளறிவிடுவார்கள் அல்லது வரப்பிரசாதங்களை குறைத்து விடுவார்கள் என்பதால், முஸ்லிம்களுக்கு பாதகமான சட்டமூலங்களுக்கும் கூட, கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுந்தவரும் அல்ல அவர். அதேபோன்று தேர்தலை மட்டும் இலக்காக வைத்து, பதவிகளைத் துறந்தவராகவும் அவரைக் குறிப்பிட முடியாது.  

இந்தப் பண்பை,அஷ்ரபுக்குப் பின்னரான முஸ்லிம் அரசியலில் காணக்கிடைப்பது அரிது. அவருடைய கொள்கையைப் பின்பற்றுவதாக பெருமையடித்துக் கொள்வோர், அதிலிருந்து விலகிச் செல்வதையே தொடர்ச்சியாக அவதானிக்க முடிகின்றது.   

மக்களுக்கான அரசியலில் இருந்து விலகி, தமது சொந்த இலாபங்களை முன்னிலைப்படுத்தியமை, முஸ்லிம்களின் உரிமை சார்ந்த அரசியலில் முழுமையான தவறிழைத்துள்ளமை, பணம் உழைக்கும் தொழிலாக அரசியலை மாற்றியுள்ளமை, பணம் படைத்தோரையும், சமூக அக்கறையில்லாத வியாபாரிகளையும் கட்சி அரசியலுக்குள் உள்வாங்கியுள்ளமை, பேரம் பேசும் அரசியலை சோரம் போகும் அரசியலாக மாற்றியுள்ளமை, பெருந்தேசியக் கட்சிகளைக் கண்டு அஞ்சுகின்றமை அல்லது நக்குண்டு நாவிழக்கின்றமை, போதைப் பொருள் மற்றும் தனிமனித பலவீனங்களைக் கொண்டோரை முக்கிய பதவிகளில் அமர்த்தியுள்ளமை, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை, வழங்கிய வாக்குறுதிகளை மீறியுள்ளமை, மக்களை மந்திரித்து விடப்பட்டவர்கள் போல வைத்திருக்கின்றமை, தொழில்வழங்க பணம்பெறுகின்றமை, பிழையான தீர்மானத்தையும் சரியென நிலைநாட்ட முற்படுகின்றமை என அஷ்ரபின் சித்தாந்தங்களுக்கு முரணான போக்குகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.   

இந்த வகையில், முஸ்லிம்களுக்கு பாதகமான சட்டமூலங்கள் மற்றும் திருத்தங்கள் தொடர்பில் அஷ்ரபின் கோட்பாடுகள் புறந்தள்ளப்பட்டுள்ள விடயத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது,மர்ஹூம் அஷ்ரப், சிங்களப் பெருந்தேசிய அரசியலில் இருந்தும் தமிழர் அரசியலில் இருந்தும் பல அனுபவங்களைப் பெற்றிருந்தார். அதன்படியே, தனிவழியில் பயணிக்கும் முடிவுக்கும் வந்திருந்தார்.   

முஸ்லிம்களுடைய அபிலாஷை, அவர்களுக்கான அரசியல் உரிமைகளுக்காக, கடைசித் தருணம் வரை அவரும் அவரோடு இருந்தவர்களும் போராடினர். முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாதத்தையும், இனவாதத்தையும், பெருந்தேசியவாதத்தையும் பகிரங்கமாகவே எதிர்த்தார்.   

தனது பதவியும் பட்டமும் போய்விடும் என்று கவலைப்படவும் இல்லை. வங்கிக் கணக்கின் கனதி குறைந்துவிடுமே என்று பின்வாங்கியதும் இல்லை. அதுமட்டுமன்றி, சிறுபான்மை முஸ்லிம்களுக்காகப் பேச வேண்டிய இடங்களில் உரத்துப் பேசினார். முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்களையும், ஒப்பந்தங்களையும் நேரிடையாகவே எதிர்த்தார்.   

எந்த வெளிச் சக்திகளின் அழுத்தங்களாலும் தனது சமூகத்தின் அரசியல் கௌரவத்தை விட்டுக் கொடுக்கவில்லை. ஆனால், அவருடைய வழிவந்தவர்கள், இந்தப் பண்புகளை எல்லாம் குழிதோண்டிப் புதைத்திருக்கின்றார்கள்.   

குறிப்பிட்டுச் சொல்வது என்றால், ‘திவிநெகும’ சட்டத்துக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் கிழக்கு மாகாண சபையில் ஆதரவளித்தனர். இதே மாகாண சபை, தெளிவாக விளங்கிக் கொள்ளாமல் 20ஆவது திருத்தத்துக்கும் சாதமாக வாக்களித்தது. மத்தியில், அரசமைப்பின் 18ஆவது திருத்தத்துக்கு, அஷ்ரப் வளர்த்த கட்சியின் அரசியல்வாதிகள் ஆதரவளித்தனர். 

மிக அண்மையில், முஸ்லிம்களுக்குப் பல பாதகங்களைக் கொண்டுள்ள உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாகக் கையை உயர்த்தியிருக்கின்றனர்.   

இந்நிலையில், இவற்றையெல்லாம் விஞ்சிவிடுமாப் போல், உருவாக்கப்படக் கூடும் என அனுமானிக்கப்படுகின்ற புதிய அரசமைப்புக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து விடுவார்களோ என்ற நியாயமான கேள்வி எழுகின்றது. அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில், ‘வடக்கு, கிழக்கு மாகாணங்களை தனியொரு மாகாணமாக அரசமைப்பு அங்கிகரிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ள வாசகம், மீண்டும் அரசமைப்பு ஊடாக, இரு மாகாணங்களையும் இணைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றது என்பதை அறிந்து கொள்ளப் போதுமானதாகும்.   

“வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது முஸ்லிம்களின் முதுகில் குத்தப்பட்ட அடிமைச்சாசனம்” என்று அஷ்ரப் சொன்னார். அவ்விணைப்பின் பின்னர், முஸ்லிம்கள் சந்தித்த இழப்புகள்தான் முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் விறுவிறுப்படைந்ததற்குக் காரணமாகும். எனவே, அஷ்ரபின் கொள்கைகளைக் பின்பற்றுவதாகக் கூறுவோர் இவ்விணைப்புக்கு இடம்தர முடியாது. அவ்வாறென்றால், அஷ்ரப் பின்னர் கூறியிருந்த முஸ்லிம் தனி (மாகாண) அலகு போன்ற அகன்ற நிலப்பரப்பிலான மாற்றுத் தீர்வொன்று முஸ்லிம்களுக்குக் கிட 

அஷ்ரபின் கொள்கைகளை மக்கள் கொண்டாடுகின்றனர். அவர்களது சேவைகளை சிலாகித்துப் பேசுகின்றனர். அவரது சிஷ்யர்கள் அவர் குறித்து பெருமை கொண்டாடுகின்றனர். ஆனால், அஷ்ரபின் வழியில் நடப்பதாகக் காட்டிக் கொள்ளும் ஒரு சில அரசியல்வாதிகள், அஷ்ரப்பைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதையே விரும்புவதில்லை என்பதும், அவரது பாணியில் செயற்படுபவர்களைப் புறமொதுக்கி வைப்பதும் வேறு கதை.   

இந்நிலையிலேயே, இம்முறை அஷ்ரபின் நினைவேந்தல் நிகழ்வு நிந்தவூர், பொத்துவில், மருதமுனை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. தனித்துவ அடையாள அரசியல் பாதையில் பயணிக்கின்ற அல்லது அவ்வாறு ஒரு மாயத் தோற்றத்தைக் காண்பிக்கின்ற முஸ்லிம் அரசியலிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் அஷ்ரபின் கொள்கைகள், வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்படாமையாலேயே, இத்தனை கட்சிகளும் தலைவர்களும் இருந்தும் அஷ்ரபின் வெற்றிடத்தை ஒரு துளியளவேனும் நிரப்ப முடியாமல் போயிருக்கின்றது.   

அஷ்ரபின் கொள்கைகள் மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு சூழலில், குறைந்தபட்சம் அவரைப் பற்றிப் பேசுவது நல்ல விடயமே. அந்த வகையில் நினைவுக் கூட்டங்கள் முக்கியமானவையும் கூட.   

ஆனால், நினைத்தழுது விட்டு, வாழாவிருந்தால் அது அவரைப் பின்பற்றியதாகக் கருதப்படமாட்டாது என்பதையும், தனித்துவ அடையாள அரசியலைச் சோரம் போகாததாகக் தூக்கிநிறுத்துவதன் ஊடாகவே, அஷ்ரபை, அவருடைய கனவை உயிர்ப்பிக்க முடியும் என்பதையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் நன்றாக நினைவில் வைத்திருக்க வேண்டும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .