2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2019 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டப்படி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்வி, இன்னமும் எழுப்பப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றது.

ஏனெனில், அவர் தமது அமெரிக்கப் பிரஜா உரிமையை இரத்துச் செய்து கொண்டாரா என்பது, இன்னமும் தெளிவாகவில்லை. 19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின்படி, வெளிநாட்டுக் குடியுரிமையுள்ள ஒருவர், இலங்கையில் தேர்தல்களில் போட்டியிட முடியாது.

ஆனால், அவ்வாறான ஒருவர் வேட்பு மனுத் தாக்கல் செய்து, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் நாளில், மற்றொரு வேட்பாளர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால்,  மிகக் குறுகிய காலத்தில் (மூன்று நாள்களில் எனச் சில சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்), தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர், அது தொடர்பான தீர்ப்பை வழங்க வேண்டும். வேட்பு மனுத் தாக்கல் செய்யும்போது, கோட்டா, தமது அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிட்டதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேர்தல்கள் ஆணைக்குழு, அது தொடர்பாக, மிக குறுகிய காலத்தில் ஆதாரங்களைத் தேடிக்கொள்ள முடியாவிட்டால், ஆணைக்குழு எந்த முடிவையும் எடுக்கலாம். 

சிலவேளை, கோட்டா அந்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்காதுவிட்டாலும், அவரது வேட்புமனுவை, ஆணைக்குழு ஏற்கவும் முடியும்; அதனை நிராகரிக்கவும் முடியும். தம்மிடம் எவரும் ஆதாரம் சமர்ப்பிக்கவில்லை என்பதற்காக, வேட்பு மனுவை ஏற்கவோ, நிராகரிக்கவோ ஆணைக்குழுவுக்கு முடியாது. அந்த நேரத்தில், தம்மிடம் இருக்கும் ஆதாரங்களின் நம்பகத் தன்மையைக் கருத்தில் கொண்டு, தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு முடிவை எடுக்கும். எவ்வாறாயினும், ஆணைக்குழுவின் முடிவு இறுதியானது. அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. 

ஆனால், அமெரிக்கப் பிரஜா உரிமையுடன் கோட்டா, தேர்தலில் வெற்றி பெற்றால், ‘அவர் தெரிவானது, சட்ட விரோதமானது’ என, மற்றொரு வேட்பாளர், உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனுவொன்றைத் தாக்கல் செய்து வழக்காடலாம். ஆனால் வழக்கு, எவ்வளவு காலம் இழுபட்டுப் போகுமோ தெரியாது. 1988ஆம் ஆண்டு, நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமதாஸவின் தந்தையான ரணசிங்க பிரேமதாஸ தெரிவான போது, அதனை எதிர்த்து, முன்னாள் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க, தேர்தல் மனுவொன்றைத் தாக்கல் செய்தார். அந்த வழக்கு, நான்காண்டுகளாக அதாவது, பிரேமதாஸவின் ஆறாண்டு கால பதவிக் காலத்தில், மூன்றில் இரண்டு பகுதி காலம் வரை இழுபட்டு நீடித்தது.

அந்த வழக்கு, தேர்தல் ஊழல்கள் தொடர்பானது. எனவே, நூற்றுக் கணக்கான சம்பவங்கள் தொடர்பாக, ஆயிரக்கணக்கான சாட்சிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். எனவே தான் அந்த வழக்கு, நான்காண்டுகளாக இழுபட்டுச் சென்றது. ஆனால், கோட்டாவின் அமெரிக்கப் பிரஜா உரிமை தொடர்பாக, தேர்தல் மனுத் தாக்கல் செய்யப்பட்டால், அவ்வளவு சாட்சிகள் தேவைப்பட மாட்டா; எனவே, அவ்வளவு காலம் வழக்கு நீடிக்காது. ஆனாலும், அதனை உறுதியாகக் கூற முடியாது. கோட்டா, தமது அமெரிக்கப் பிரஜா உரிமையை இரத்துச் செய்து கொண்டிருந்தால், அவரிடம், அது தொடர்பான ஆவணமொன்று, இருக்க வேண்டும். தம்மிடம், அவ்வாறானதோர் ஆவணம் இருப்பதாகக் கோட்டா கூறியிருக்கிறார். அவர், அதனை அவருக்கு எதிரான கட்சிகளிடம் காட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே, அக்கட்சிகளால் தற்போதைக்கு எதையும் செய்ய முடியாது. 

அமெரிக்கப் பிரஜா உரிமையைக் கைவிட்ட வெளிநாட்டவர்களது பெயர்ப் பட்டியலொன்றை, அமெரிக்க அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடுகிறது. மார்ச் மாதம் வெளியிடப்பட்ட பட்டியலில், கோட்டாவின் பெயர் இருக்கவில்லை. 

அது, ஜூன் மாதப் பட்டியலிலேயே இருக்கும் என, உதய கம்மன்பில போன்ற கோட்டாவின் ஆதரவாளர்கள் கூறினர். இப்போது, ஜூன் மாதப் பட்டியலிலும் அவரது பெயர் இல்லை. இதை மட்டும் வைத்து, அவர் பிரஜா உரிமையைக் கைவிடவில்லை எனக் கூற முடியாது எனக் கம்மன்பில இப்போது கூறுகிறார். கோட்டாவின் நெருங்கிய நண்பர்களுக்கே, என்ன நடக்கிறது என்பது தெரியாது என்பதையே இது காட்டுகிறது.

பொதுவாக, கோட்டா அமெரிக்கப் பிரஜா உரிமையைக் கைவிட்டாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, ஏனையவர்களுக்கு ஒரு வழியில்லாமல் இருக்கிறது. இந்த நிலையில், எதிர்காலத்தில் நடக்கக்கூடியவற்றை, இவ்வாறு பட்டியல் போடலாம். ஒன்றில், வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படும் நாளில், எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கப்படாமல், கோட்டாவின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படலாம்.

அல்லது, எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக, தாம் அமெரிக்கப் பிரஜா உரிமையைக் கைவிட்டதற்கான உரிய ஆதாரங்களைக் கோட்டா சமர்ப்பித்து, தேர்தல்கள் ஆணைக்குழு அதனை ஏற்றுக்கொண்டு, அவரது வேட்பு மனுவை ஏற்றுக் கொள்ளலாம். அல்லது, எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு, அதற்குப் பதிலாகக் கோட்டா, தாம் அமெரிக்கப் பிரஜா உரிமையைக் கைவிட்டதற்கான உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்காது, அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படலாம்.

சிலவேளை, எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு, அதற்குப் பதிலாகக் கோட்டா, தாம் அமெரிக்கப் பிரஜா உரிமையைக் கைவிட்டதற்கான உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்காவிட்டாலும், அவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படலாம்.

எதிர்ப்புக்கு மத்தியில், அவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் அவர் தேர்தலில் தோல்வியடையலாம். சிலவேளை, தேர்தலில் அவர் வெற்றி பெற்றாலும் அவர் தெரிவு செய்யப்பட்டதை எதிர்த்து, தேர்தல் மனுவொன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அவர் அதில் வெற்றி பெற்று, ஜனாதிபதியாகப் பதவியில் தொடரலாம்.

அல்லது, அவ்வாறானதொரு வழக்கில், அவர் தோல்வியடையலாம். அந்த நிலையில், அப்போது பதவியில் இருக்கும் பிரதமர், அரசமைப்பின் படி தற்காலிக ஜனாதிபதியாவார். ஆறு மாதங்களில், நாடாளுமன்றம் அந்தத் தற்காலிக ஜனாதிபதியின் பதவியை உறுதிப்படுத்தினால் அவர் ஜனாதிபதியாகப் பதவியில் தொடர்வார். நாடாளுமன்றம், அவரது ஜனாதிபதிப் பதவியை உறுதி செய்யாவிட்டால்,  புதிதாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும். 

ஜனாதிபதித் தேர்தல் அனேகமாக, நவம்பர் மாதத்தின் இறுதி இரண்டு வாரங்களிலேயே நடைபெறும். 

கோட்டா, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால், அவர் நிச்சயமாக, அடுத்த பெப்ரவரி மாதம், நாடாளுமன்றத்துக்கு நாலரை ஆண்டுகள் பூர்த்தியாகும் போது, நாடாளுமன்றத்தைக் கலைப்பார். அதற்கிடையில், அவருக்கெதிராகத் தேர்தல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டு, தீர்ப்பு வழங்கப்படும் சாத்தியக்கூறுகள் குறைவாகும்.அவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிக ஜனாதிபதியாகப் பதவியேற்பார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறுமுன், அவ்வாறானதொரு வழக்கில், கோட்டாவுக்கு எதிரான தீர்ப்பொன்று வழங்கப்பட்டாலும், காபந்து அரசாங்கத்தின் பிரதமர் என்ற வகையில், ரணிலே தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்.

பொதுஜன பெரமுன, அந்தப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், நாடாளுமன்றம் ரணிலின் தற்காலிக ஜனாதிபதிப் பதவியை உறுதிப்படுத்தாது. அப்போது, புதிதாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்.

கோட்டாவின் தெரிவுக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன், அடுத்த பொதுத் தேர்தல் நடைபெற்று, பொதுஜன பெரமுன   வெற்றி பெறலாம். அப்போது கோட்டாவின் தெரிவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு, அவருக்கு எதிராக அமைந்தால், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பிரதமர் ஒருவர் (அனேகமாக மஹிந்த ராஜபக்‌ஷ) தற்காலிகப் பிரதமராக நியமிக்கப்படுவார். பொதுஜன பெரமுனவுக்கு நாடாளுமன்றத்தில், பெரும்பான்மை பலம் இருப்பதால், மஹிந்தவின் அந்த ஜனாதிபதிப் பதவி உறுதிப்படுத்தப்படும்.
ஒருவர் இரண்டு முறைக்கு மேல் மக்களால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட முடியாது என்றே அரசமைப்புக் கூறுகிறது. இரண்டு முறைக்கு மேல், ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர், ஜனாதிபதித் தேர்தல் மூலமாகவன்றி, பிரதமராக இருந்து, வெற்றிடமாக இருக்கும் ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட முடியாது எனச் சட்டம் கூறவில்லை. எனவே, அந்த முறையில் மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக முடியும் எனவும் வாதிட முடியும். 

கோட்டா, தமது அமெரிக்கக் குடியுரிமையை நீக்கிக் கொள்ளாது, வேட்பு மனுத்தாக்கல் செய்து, தேர்தல்கள் ஆணைக்குழு அவரது வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டால், இவ்வாறு நடப்பதற்கே மிகக் கூடுதலான சாத்தியம் இருக்கிறது. 

அதாவது, கோட்டா அமெரிக்கப் பிரஜா உரிமையுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்தாலும், தேர்தல்கள் ஆணைக்குழு என்ற கடவையைத் தாண்டினால்த்தான், பின்னர் வரும் வழக்கில், எந்தத் தீர்ப்பு வந்தாலும், ராஜபக்‌ஷ ஒருவரே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, ஜனாதிபதியாக இருப்பார். ஏதோ ஒரு வகையில், மஹிந்த அவ்வாறு மீண்டும் ஜனாதிபதியானால் அவர் முன்னர் போலவே, பணத்தை வீசியோ, வேறு வகையிலோ மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்று, தாம் தொடர்ந்தும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடிய வகையில், மீண்டும் 18 ஆவது அரசமைப்பின் பிரமாணங்களை நிறைவேற்றிக் கொள்ளக்கூடும். 

மக்கள் விடுதலை முன்னணியின் தகுதியும் வாய்ப்புகளும்

பிரதான அரசியல் கட்சிகளில், இரண்டு கட்சிகள் ஏற்கெனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தமது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, மக்கள் விடுதலை முன்னணி என்பவையே அவ்விரு கட்சிகளாகும். 

பொதுஜன பெரமுன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் மஹிந்த ராஜபக்‌ஷவின் இளைய சகோதரருமான கோட்டாபய ராஜபக்‌ஷவையும் மக்கள் விடுதலை முன்னணி அதன் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவையும் தத்தமது வேட்பாளர்களாக அறிவித்துள்ளன. ஆளும், ஐக்கிய தேசியக் கட்சி இன்னமும் உத்தியோகபூர்வமாகத் தமது வேட்பாளரை அறிவிக்கவில்லை; அது தொடர்பாக முடிவெடுக்கவும் இல்லை.

ஆனாலும், அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சனிக்கிழமை (17) பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போது, தாமே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என, முதன் முறையாகப் பகிரங்கமாக அறிவித்தார். அவரைப் போட்டியில் நிறுத்த, கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் அவரைச் சுற்றியுள்ள சிலரும் விரும்பவில்லை என்பது தெரிந்ததே. எனினும் கட்சியில் பெரும்பாலான ஆதரவாளர்கள் சஜித்தை விரும்புவதாகவே தெரிகிறது.

மக்கள் விடுதலை முன்னணி, இதற்கு முன்னர் இரண்டு முறை ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது. 1982ஆம் ஆண்டு, அக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீர போட்டியிட்டார். ஆனால், அவரால் சுமார் 273,000 வாக்குகளையே பெற முடிந்தது. அதன் பின்னர், 1999ஆம் ஆண்டு, அக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் நந்தன குணதிலக்க போட்டியிட்டார். அவர் சுமார் 330,000 வாக்குகளைப் பெற்றார். குணதிலக்க தற்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் பாணந்துறை மேயராகக் கடமையாற்றுகிறார். 

மக்கள் விடுதலை முன்னணி, அரசாங்கத்துக்கு எதிராக, இரண்டு முறை ஆயுதம் ஏந்திக் கிளர்ச்சி நடத்திய கட்சியாகும். அந்தந்தக் காலத்தில், பதவியில் இருந்த அரசாங்கங்களே அக்கட்சியை, அந்த நிலைக்குத் தள்ளின. 1965ஆம் ஆண்டு, ஸ்தாபிக்கப்பட்ட அக்கட்சி, ஆரம்ப காலத்தில், இரகசியமாக அரசியலில் ஈடுபட்ட போதிலும், வன்செயல்களில் ஈடுபடவில்லை. ஆனால், அவர்களது இரகசியத் தன்மை காரணமாக, அவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. அதன் விளைவே, 1971ஆம் ஆண்டு நடைபெற்ற, அக்கட்சியின் முதலாவது கிளர்ச்சியாகும். 

அதன் காரணமாகச் சிறையில் அடைக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள், 1977ஆம் ஆண்டு, அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து, விடுதலை செய்யப்பட்டு, மீண்டும் பகிரங்கமாக அரசியலில் ஈடுபட்டனர். அதன் பின்னரே விஜேவீர, 1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.

1983ஆம் ஆண்டு, தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டின் பேரில், ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன, மக்கள் விடுதலை முன்னணியைத் தடை செய்தார். காரணமின்றியே, அத்தடை நீடிக்கப்பட்டு வந்ததால், 1986ஆம் ஆண்டளவில், அக் கட்சி, மீண்டும் ஆயுதம் ஏந்தியது. அதன் விளைவே, 1988-89 ஆண்டுகளில் இடம்பெற்ற இரண்டாவது கிளர்ச்சியாகும்.

1994ஆம் ஆண்டிலேயே, மக்கள் விடுதலை முன்னணி, மீண்டும் பகிரங்க அரசியலில் குதித்தது. அதன் பின்னர், அக்கட்சி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஆயுதப் போராட்டத்தை, அது பகிரங்கமாகவே நிராகரித்தது. 

கொள்கை என்ற அடிப்படையில் பார்த்தால், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில், மக்கள் விடுதலை முன்னணிக்கே, நாட்டை ஆளும் ஆகக் கூடுதலான தார்மிக உரிமை இருக்கிறது எனலாம். கடந்த 25 வருடங்களில், அக்கட்சி ஆயதம் ஏந்தவில்லை; அக்கால கட்டத்தில், அக்கட்சியே ஆளும் கட்சியினதும் எதிர்க் கட்சிகளினதும் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக, மிகப் பலமான குரலை எழுப்பியிருக்கிறது.

ஆரம்ப காலத்தில், மக்கள் விடுதலை முன்னணி, ஒரு வித இனவாதக் கொள்கையைக் கடைப்பிடித்தது. ஆனால், தற்போது அதிகாரப் பரவலாக்கலையும் ஏற்றுக் கொள்கிறது. அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போரின் இறுதிக்கட்டத்தில், தமிழ் மக்கள் எதிர்நோக்கிய அவல நிலையின் போது, அம்மக்களுக்காகக் குரல் கொடுக்கத் தவறியமைக்காக, பிற்காலத்தில் அக்கட்சி பகிரங்கமாகவே சுயவிமர்சனம் செய்தது. 

முஸ்லிம்களுக்கு எதிரான கடந்த கால பிரசாரங்களின் போதும் தாக்குதல்களின் போதும் முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுக்க, அக்கட்சி தயங்கவில்லை. ஊழலின்றி நிர்வாகம் செய்யலாம் என்பதை, அக்கட்சி இரண்டு முறை திஸ்ஸமகாராம பிரதேச சபையை நிர்வகித்துக் காட்டியது.

ஆனால் அக் கட்சியின் வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாகும். ஏனெனில்,  ஊழல்பேர்வழிகளாக இருப்பினும், வெற்றி வாய்ப்புள்ள கட்சிகளுக்கே மக்கள் வாக்களிக்கப் பழகிவிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .