2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கோரிக்கைகளை முன்கொண்டு செல்வதில் தலைமைகளின் சிந்தனை மாறுமா?

Editorial   / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க. அகரன்

சிறுபான்மை இனத்தின் உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் பெரும்பான்மை இனத்தால் அல்லது அது சார்ந்த அரசாங்கத்தால் நிறைவேற்றப்படாத நிலையிலும் மறுக்கட்ட நிலையிலும் போராட்ட வடிவங்கள் உருப்பெறுகின்றன.  

இந்த வகையிலேயே இலங்கைத்தீவில் பன்நெடுங்காலமாகத் தமிழர் என்ற சிறுபான்மை இனத்தின் தேவைகளும் நிறைவு காண் தன்மைக்கு இட்டுச்செல்லப்படாமையால் பல்வேறு வடிவங்களிலான போராட்டங்கள் நடந்தேறியிருந்தன. தற்போதும் நடந்தேறி வருகின்றது.  

இவ்வாறான நிலையில் சிறுபான்மையினரான மக்கள் சமூகத்துக்கு, தான் சார்ந்த அரசியல் தலைமைகளின் தேவைப்பாடுகள் அதிகமாகக் காணப்படும். ஆயினும், அந்த அரசியல் தலைமைகளின் கண்டுகொள்ளாமை அல்லது வினைதிறனற்ற செயற்பாடுகள், குறித்த சிறுபான்மை இனத்தின், அவர்கள் மீதான கோபத்தை உச்சமடையச்செய்யும்.   

இவ்வாறான நிகழ்வே, அண்மைய இலங்கை தமிழ் சமூகத்தின் அரசியலிலும் ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் அரசியல் களமானது காலத்துக்குக் காலம் வேறுபட்ட துறைகளில் சூடு பிடித்து வருவதானது ஜதார்த்தம். 

சுதந்திரத்துக்குப் பின்னர் தமிழர் தரப்புக் கோரிய எவ்வித நியாயபூர்வமான கோரிக்கைகளும் முழுமையாக அல்லது நிறைவுகாண் தன்மையுடன், ஆட்சியில் இருந்த அரசுகளினால் செயற்படுத்தப்பட்டுள்ளதா என்றால், அதன் விளைவு இன்றைய யதார்த்த அரசியல் நிலையிலிருந்து மாறுபட்டதாக இருக்கும்.   

இந்நிலையில் தற்போதைய தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் ஒருபுறம் விஸ்பரூபமெடுத்திருக்கும் நிலையில் அதற்கான ஆக்கபூர்வமான செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதா என்பதான கேள்விகள் நிறைந்திருக்கின்றன.  

அரசியல் கைதிகளின் போராட்டமானது காலத்துக்குக் காலம் இடம்பெற்று வந்திருந்தாலும் அவை எவ்வித தீர்வும் இன்றி தமிழ்த் தலைமைகளின் வாக்குறுதிகளை நம்பி கைவிடப்பட்டதாகவே உள்ளன. 

ஆனாலும், மீண்டும் மீண்டும் தமது விடுதலைக்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை, ஆட்சியாளர்கள் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையை நிலை நிறுத்தியவர்களாகவும் அதை விடுத்தால் வேறு வழியில்லை என்ற நிலையிலும் அரசியல் கைதிகள் அரசியல்வாதிகளின் பசப்பு வார்த்தைகளில் நம்பிக்கை கொள்ளவேண்டியவர்களாகவே காணப்படுகின்றனர்.   

அவர்களது சிறைவாழ்வும் அதனூடான தாக்கங்களும் அவர்கள் சார்ந்த குடும்பங்களின் பொருளாதார நிலைமைகளும் மீள் நினைவு படுத்தல்களை ஏற்படுத்தும் போது, அரசியல் கைதிகள் அரசாங்கத்தை நம்பவும் அதனூடாகத் தீர்வைப் பெற முயற்சிப்பதிலும் தவறேதும் இல்லை என்பதே உண்மை.  

ஆனாலும், அரசியல் கைதிகளின் இந்த பலவீனமான நிலைமையையே, தமிழ் தலைமைகளும் தமக்கான அரசியல் பலமாக கருதுவது வேதனைக்குரியது. 

பதவிகளும் அதிகாரங்களும் பெரும்பான்மை அரசாங்கத்தின் நலன் சார்ந்தே சிறுபான்மை இனங்களுக்கு வழங்கப்பட்டள்ள நிலையில், தாம் வகிக்கும் பதவிதான் மிகப்பெரும் சிம்மாசனமாகவும் அதில் இருந்து தம்மை அகற்ற முடியாது எனக் கற்பனை உலகில் மிதப்பதும், மணற்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியதாகவே இருக்கும்.  

ஏனெனில், தமிழ் மக்கள் மத்தியில் அவசரமானதும் அவசியமானதுமான பல விடயங்கள் தேங்கிக் கிடக்கும் இந்நிலையில், தமிழ் அரசியல் சார் சக்திகள் உள்ளூராட்சி மன்றத்துக்கான முனைப்புகளில் தமது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளன.  

குறிப்பாக, வவுனியா போன்ற பிரதேசங்களில் தமது ஆதரவை நாடி பிடித்துப் பார்ப்பதற்காக கூட்டங்களை வைக்கும் அளவுக்குத் தமிழ் அரசியல் கட்சிகள் ஆர்வம் செலுத்துகின்றன. 

அவ்வாறான கூட்டங்களிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடயங்களுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக ஆராயப்படுகின்றதா என்றால், அங்கு அவை நடப்பதாக இல்லை.   

அரசியல் கைதிகள் மூவரது உணவு தவிர்ப்புப் போராட்டமானது அநுராதபுரம் சிறையில் அபாயக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவர்கள் தற்போது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.   

எனினும், இது தொடர்பான அரசுடனான பேச்சுகளை அல்லது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டிய தமிழ் அரசியல் கட்சிகள் தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பால், புலனைச் செலுத்துவதானது அரசியல் கைதிகளின் விடயத்தில் ஆபத்து நிறைந்ததாகவே காணப்படும்.  

தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் நிலையில், வடக்கில் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தால், அரசியல் கைதிகளின் விடுதலைக்காகச் செய்யப்பட்டதா அல்லது அவர்களது போராட்டத்தை மக்கள் மத்தியில் இருந்து திருப்புவதற்காக மேற்கொள்ளப்பட்டதா என்ற பார்வையும் உள்ளது.  

ஏனெனில், போராட்ட முனைப்பென்பது பரவலாக்கப்பட வேண்டும் என்பதற்கப்பால் ஒரே நேரத்தில் ஹர்த்தாலை நடத்தி, போராட்ட முனைப்பை மழுங்கடிக்கச் செய்துள்ளது.   

புங்குடுதீவு மாணவியான வித்தியாவின் படுகொலைக்கு வடக்கு, கிழக்கு மற்றும் மலையகமெங்கும் எவ்வாறு உணர்வுபூர்வமாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு, அதற்கான தீர்வு கிடைக்க சிவில் செயற்பாட்டாளர்களும் மாணவ சமூகமும் வழிசமைத்ததோ அவ்வாறான நிலைமையொன்றைத் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் ஏற்படுத்துவதற்கு தமிழ் அரசியலாளர்களும் சிவில் செயற்பாட்டாளர்கள் எனத் தம்மை அடையாளம் காட்டுபவர்களும் விடவில்லை என்பதாகவே உள்ளது.   

ஏனெனில், ஹர்த்தால் நடத்துவதற்கு முன்பிருந்த உணர்வு ரீதியான செயன்முறை, கடையடைப்புப் போராட்டம் நடத்தியதன் பின்னர் மௌனித்து விட்டதான வடிவத்தையே காலச்சூழல் காட்டுகின்றது.  

அரசியல் கட்சிகளுக்கு அதன் நிலைபேறு தன்மைக்கான செயற்பாடுகள் முக்கியமானதாக இருந்தாலும் கூட, தமிழர்களின் வாழ்வியல் சூழலில் உள்ள அன்றைய பிரச்சினைகளைத் தீர்க்கவும் முன்னிற்க வேண்டும் என்பதை மறந்து விடமுடியாது.  

இதற்குமப்பால் தாம் சார்ந்த இனத்தின் பிரச்சினைகளை உள்ளடக்கிய சரியான ஆவணமொன்று, தமிழ்த் தலைமைகளிடம் இல்லாத நிலையில், அவை தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துகளை முன்னெடுத்துச் செல்வதற்கான புள்ளிவிவர ரீதியான ஆவணங்களையும் கொண்டிருக்கவில்லை.  

வடக்கு, கிழக்கு பகுதியில் இராணுவ வசமுள்ள தமிழர் காணிகள், காணாமல் போனோரின் விவரத்திரட்டு, அரசியல் கைதிகளின் முழுமையான விவரங்கள் போன்ற சரியான புள்ளிவிவரங்கள் எதுவும் இன்றிய நிலையிலேயே, தமிழ்த் தலைமைகளைப் பல தரப்பட்ட இராஜதந்திரிகள் சந்திக்கும்போது,    சரியான புள்ளிவிவரத்தை அவர்களுக்கு வழங்கக்கூடிய விதத்தில், ஆவணமொன்று தமிழ்த் தரப்பிடம் இல்லாமல், அரசாங்கம் சொல்லும் புள்ளிவிவரத்தையோ அல்லது எழுந்தமானமான விவரத்தையோ வெளியிடுவதானது பலவீனப்பட்ட அரசியலை வெளிப்படுத்துவதாக அமைந்துவிடுகின்றது.  

இவ்வாறான நிலையிலேயே, தற்போதைய அரசியல் கைதிகளின் விடயத்திலும் உத்வேகமுள்ள செயற்றிட்டங்களை முன்னெடுக்காமையினால் தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வு சிறைக்குள் சீரழியும் நிலையை எதிர்கொண்டுள்ளது.  

அரசியல் கைதிகளின் விடயம் என்பது நேற்று இன்று உருவானது அல்ல; அது தமிழர்களின் அஹிம்சை வழிப்போராட்டங்களின்போதே ஆரம்பிக்கப்பட்ட ஓர் அத்தியாயமாகவே உள்ளது. 

அப்போராட்டங்களின்போது, அரசியல் கைதிகளாக்கப்பட்டவர்கள் சமூக அமைதியின்மையைத் தோற்றுவித்தவர்கள் என்ற போர்வையில், கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.  

எனினும், ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரான, காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தால் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகள், பல்வேறு சித்திரவதைகளுக்கும் துன்புறுத்தலுல்களுக்கும் உள்ளாக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். இது சர்வதேச அமைப்புகள் ரீதியாக நிரூபிக்கப்பட்டவிடயமாகும்.   

இதற்கும் அப்பால் அரசியல் கைதிகளாக இருந்து, சிறைகளில் மரணங்களைச் சந்தித்தவர்களின் வரலாறும் 1983 இல் இருந்தே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. 

தங்கத்துரை, குட்டிமணி உட்பட அவர்களோடு கொல்லப்பட்டவர்களோடு ஆரம்பிக்கும் அரசியல் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சிறைப் படுகொலைகள், முன்னாள் போராளியும் அரசியல் கைதியுமான சதீஸின் மரணம் வரை நீண்டுள்ளது.  

இந்நிலையில், அரசியல் கைதிகளின் விடுதலை என்பது, ‘எட்டாக்கனி’ விடயமாகவே இன்றும் உள்ளது. இதற்குமப்பால் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது வெறுமனே அரசியல் பொழுதுபோக்குப் பேச்சாகவும் அரசியல் பகடைக்காயாவும் பயன்படுத்தப்படும் நிலையொன்று உருவாக்கப்பட்டு விட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.  

குறிப்பாக, ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் நாடாளுமன்றத் தேர்தல் காலத்திலும் அரசியல் கைதிகளின் விடுதலை, உரத்துப் பேசப்பட்ட விடயமாகக் காணப்பட்டபோதிலும், இவை தேர்தலின் பின்னர், மௌனிக்க வைக்கப்படும் விடயமாகவே காணப்படுகின்றது. இன்று அரசியல் கைதிகள் மூவர் உணவு தவிர்ப்பில் ஈடுபட காரணமாகியும் உள்ளது.  

இந்நிலையில் புதிய நீதி அமைச்சர், அரசியல் கைதிகள் எவரும் சிறைகளில் இல்லை என்றும் பயங்கரவாதச் செயற்பாட்டுடன் ஈடுபட்டவர்களே சிறைகளில் உள்ளார்கள் என்ற கருத்தை மீண்டும் முன்வைத்துள்ளார்.

எனவே, சிறைகளில் உள்ளவர்கள் அரசியல் கைதிகளா அல்லது பயங்கரவாத்துடன் தொடர்புடையவர்களா என்பதைக் கேட்டுத் தெளிவு பெறவேண்டிய நிலையில் அல்லது தெளிவு படுத்த வேண்டிய நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளனர்.  

சர்வதேச அரசியலில் தமிழ்த் தரப்புக் கொண்டு செல்லும் கருத்தியலை விட, அரசினால் முன்கொண்டு செல்லப்படும் கருத்தியல் பலம் பெற்றதாகக் காணப்படுகின்றது. இதற்கு வலுவுள்ள ஆவணங்களையும் ஆதாரங்களையும் அரசாங்கத் தரப்பு முன்வைப்பதே காரணமாகும்.  

எனவே, தவறுகள் திருத்தபடவேண்டும் என்பதை உணராத வரையில், தமிழர்களின் தீர்வு என்பதும் தரப்படாமலேயே போகும் என்பதை விளங்கி கொள்ள எவரும் முன்வரவில்லை.  
அரசியல் கைதிகள் தொடர்பான புள்ளிவிவரத்தோடு நாம் இல்லாது, இதுவரை காலமும் நாட்களை கடத்தியுள்ளோம் என்றால் எமக்கான பிரச்சினைகளுக்கான தீர்வை அல்லது எமது கோரிக்கைகளை எவ்வாறு பெறுவது என்பது கேள்விகள் நிறைந்தாகவே இருக்கும்.  

விடயதானங்கள் என்பது வெறும் வெற்றுக்கோஷங்களாக மாறியிருப்பது வேதனையான விடமாகவேயுள்ளது. வெறுமனே தேசியம் பேசும் அரசியலுக்கு அப்பால், தமிழர்களின் அன்றாட வாழ்வோடு புரையோடிப்போயுள்ள அரசியல் கைதிகளின் விடயம், ஆக்கபூர்வமானதாக அணுகப்படவேண்டும் என்பது உண்மை.  

குறிப்பாக, ஆறுக்கும் மேற்பட்ட சிறைகளில் அரசியல் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர், யுவதிகள் பலருக்கும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும், பொலிஸ் மற்றும் விசாரணை அதிகாரிகளின் நீதிமன்றப் பிரசன்னம் என்பது சீராக இன்மையாலும் சாட்சிகளின் வரவின்மையாலும் வழங்குகள் நாட்களைக் கடத்துவதாக அமைகின்றன.  

இவற்றுக்கும் அப்பால் வவுனியா சிறையில் 28.06.2012 அன்று அரசியல் கைதிகள் சிறைக்காவலர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்ததனால் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் பின்னர், அரசியல் கைதிகளின் விடுதலை என்பது, ‘எட்டாக் கனி’யாவும் ‘போடு தடி’யான விடயமாகவும் காணப்படுகிறது. இந்நிலையில், நல்லாட்சி அல்லது மைத்திரி ஆட்சி நல்ல முடிவை வழங்கும் என்ற தமிழர் தலைமைகளின் கருத்துகள் இன்று ஏமாற்றமளிப்பதாகவே உள்ளன.  

வெறுமனே ‘சீசன்’ வியாபாரிகளாக அரசியல் தலைமைகள் இல்லாது, அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆக்கபூர்வமாகச் செயற்படுகின்றதா அல்லது அதற்காக நீதி அமைச்சுடன் விடங்களைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்பது தொடர்பில், கரிசனை கொண்டுள்ளதா என்பதையும் மீட்டுப்பார்க்க வேண்டும்.  

இதற்குமப்பால், அரசியல் கைதிகளின் குடும்பங்களது வாழ்வாதார விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் நிறைந்துபோயுள்ளன. 
சுமார் 10 தொடர்க்கம் 15 வருடங்களுக்கும் மேலாகவும் சிறையில் வாழும் அரசியல் கைதிகளுக்கு விடுதலை என்ற சுவாசக்காற்று இன்று வரை எட்டாக்கனியாக உள்ள நிலையில் காணாமல்போனோர் எத்தனை பேர் சிறைகளில் வாழ்கின்றார்கள் என்பதிலும் அக்கறை செலுத்த வேண்டிய தருணத்தில் அரசியல் தலைமைகள் உள்ளன.  

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் காணாமல்போய் விட்டதாக எண்ணியிருந்தபோது, சுமார் 20 வருடங்களின் பின்னர், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சம்பவங்களும் காணாமல் போனவர்கள் வைத்தியசாலைகளிலேயே மரணித்த சம்பங்களும் இடம்பெற்றுள்ளன.  

 எனவே, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துவரும் இரகசிய முகாம்கள் உள்ளனவா? அங்கு பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா என்பதைக் காணாமல் போனோரின் உறவுகள் ஆராய்வதை விடுத்து, அவர்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தை அலங்கரிக்கும் தலைமைகள் ஆராய வேண்டும்.  

வெறுமனே கிளிநொச்சியில், ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம், இரகசிய முகாம்களில் உங்களின் பிள்ளைகள் இருந்தால், சென்று பாருங்கள் எனக் கூறிச் செல்வதானது, அவரின் அரசியல் செயற்பாட்டுக்குச் சாத்தியமானதாகவும் வலுச்சேர்ப்பதாகவும் இருந்தாலும் எந்தளவுக்கு, அது சாத்தியமான விடயம் என்பதைச் சாதாரண எந்த பிரதேச தமிழ் மகனாலும் உணர்ந்துகொள்ளமுடியும்.  

எனவே, தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக வாக்களித்து, உருவாக்கிய பிரதிநிதிகள் வெறுமனே பார்வையாளர்களாக இருக்க, மக்களே களத்தில் மீண்டும் மீண்டும் போராட்டங்களையும் அரசாங்கத்துக்கான அழுத்தங்களையும் வழங்கவேண்டுமாயின் மக்கள் பிரதிநிதிகள் எதற்கு என்ற கேள்வி மேலெழுவதில் நியாயமுள்ளது.

ஆகவே காற்றுள்ளபோதே துற்றிக்கொள்ள வேண்டும் என்ற முதுமொழிக்கு அமைவாக, தமிழ் அரசியல் தலைமைகள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையோடு காணாமல் போய் சிறையில் வாழ்பவர்கள் தொடர்பிலான விடயங்களை ஆராய்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காலாதி காலமாக ஏமாற்றப்பட்ட தமிழினத்தினது மீண்டும் ஒரு கோரிக்கையாக இருக்கும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .