2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சட்டத்தரணி எனும் உத்தியோகம்

Johnsan Bastiampillai   / 2020 நவம்பர் 30 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.கே. அஷோக்பரன்  

“பிரபல்யமற்ற நிலைப்பாடுகள் சார்பாகவும் வாதாடுவதுதான், சட்டத்தரணிகளின் கடமை” - போல் க்ளெமெண்ட், ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் மன்றாடியார் நாயகம்.   

நேற்றைய தினம், சமூக ஊடகங்களில்  பரவலான ஒரு செய்தி, என் கண்களையும் எட்டியது. கொவிட்-19 பெருந்தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் உடலங்கள், எரிக்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து, முஸ்லிம் மக்களின் சார்பாக, அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் சில, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.   

கடந்தவாரம் இவை விசாரணைக்கு வந்தபோது, குறுக்கீடு செய்யும் மனுதாரர் ஒருவர் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, சுயதனிமைப்படுத்தலில் இருப்பதாக உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்த அவரது கனிஷ்ட சட்டத்தரணிகள், மனுமீதான விசாரணையை ஒத்திவைக்குமாறு உயர்நீதிமன்றைக் கேட்டுக்கொண்டனர். அதன்படி, குறித்த மனு, இன்றைய தினம் (30) வரை ஒத்திவைக்கப்பட்டது.   

ஆனால், இதற்குள் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தனவின் கனிஷ்ட சட்டத்தரணி ஒருவர் தொடர்பான சர்ச்சை ஒன்று, சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டிருந்தமை அதிர்ச்சிகரமானதாக இருந்தது. 

மனித உரிமை மீறல் மனுக்களில், மனுதாரர் சார்பாக மிகநீண்டகால அதியுயர் அனுபவம் கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி இக்ரம் மொஹமட் ஆஜராகும் அதேவேளை, அந்த மனுவில் கோரப்படும் விடயங்களை எதிர்க்கும், குறுக்கீடு செய்யும் மனுதாரர் சார்பாக ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவின் கனிஷ்ட சட்டத்தரணியாக, ஜனாதிபதி சட்டத்தரணி இக்ரம் மொஹமட்டின் மகனும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் மருமகனுமான சட்டத்தரணி கலாநிதி மில்ஹான் மொஹமட் ஆஜரானதாகக் குறிப்பிட்டு, இதை இனவிரோத செயலாகச் சித்திரிக்கும் பதிவுகள், சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படுவதைக் காணக்கிடைத்தது.   

சட்டதரணி எனும் உத்தியோகம் (profession) பற்றிய அடிப்படைப் புரிதல் இன்மையாலும், எல்லாவற்றையும் இனம் சார்ந்த ரீதியில் அணுகும் குறுஞ்சிந்தையாலும் ஏற்பட்ட விளைவு இது.  

சட்டத்தரணிகளின் மீதான, இத்தகைய அரசியல் விமர்சனம் எழுவது இது முதன்முறையல்ல. குறிப்பாக, அரசியலில் ஈடுபடும், அரசியல் தொடர்புள்ள சட்டத்தரணிகள் மீது, அவர்களது உத்தியோகம் சார்ந்து இத்தகைய விமர்சனங்கள் கடுமையாக முன்வைக்கப்பட்டு உள்ளன. மகாராணியாரின் சட்டத்தரணி ஜீ.ஜீ.பொன்னம்பலம், சட்டத்தரணி கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா என இந்தப் பட்டியல் நீண்டது.   

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை இன்றும் விமர்சிப்பவர்கள், “உங்கள் தாத்தா சிங்களவர்களுக்காக வழக்காடினாரே” என்று வீராப்பாகக் கேள்வி கேட்கிறார்கள். நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட போது, அவர் “தமிழ் மக்களுக்கு எதிரான தீர்ப்புகளை வழங்கியவர்” என்ற விமர்சனங்களையும் இதே கூட்டம்தான் முன்வைத்திருந்தது.  

இத்தகைய விமர்சனங்களுக்குப் பின்னால், இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இனரீதியான குறுகிய சிந்தனை. அதாவது, எதையும் இனத்தின் கண்கொண்டு மட்டும் பார்க்கும் தன்மை. மற்றையது, சட்டத்தரணி என்ற உத்தியோகம் பற்றிய தவறான புரிதல்.   

சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், சர்வதேச குடியியல், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை ஆகியவை, நியாயமான விசாரணையை மனித உரிமையாகப் பிரகடனம் செய்கின்றன. இலங்கை அரசமைப்பின் 13(3) சரத்தும் இதையே உறுதி செய்கிறது.  

 நியாயமான விசாரணையின் ஒரு முக்கிய அங்கம், சட்ட ஆலோசனையும்  பிரதிநிதித்துவத்துக்கான உரிமையும் ஆகும். தமது வழக்குத் தொடர்பில், தகுதி வாய்ந்த சட்ட ஆலோசனை பெறவும் தகுதிவாய்ந்த சட்டத்தரணியின் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கும் உள்ள உரிமை இது. 

இந்த உரிமை மீறப்பட்டால், அது நியாயமான விசாரணைக்கான உரிமையைப் பாதிக்கும் என்பதால்தான், உலகின் பலநாடுகளும், குற்றம் சாட்டப்பட்டவர்களால் சட்டத்தரணி ஒருவரது சேவையைப் பெற்றுக்கொள்ளும் வசதியில்லாத போது, அரச செலவில் சட்டத்தரணியை நியமிக்கும் முறை காணப்படுகிறது. அத்துடன், சட்ட உதவிக் கட்டமைப்புகளும் அரச செலவில் முன்னெடுக்கப்படுகின்றன.  

மறுபுறத்தில், பிரித்தானிய மரபில், சட்டத்தரணிகளின் குறிப்பாக, வழக்குரைஞர்களின் (barristers) சேவையானது, அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், ‘Cab Rank Rule’ என்ற மரபு பின்பற்றப்படுகிறது.   

அது என்ன ‘Cab Rank Rule’? பிரித்தானியாவில் வாடகைக்கார்கள் (Cabs) ஒரு வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போது, ஒரு பயணி வந்து, முதலாவதாக நிற்கும் வாடகைக்காரில் ஏறும் போது, அவரது பயணத்தை மறுக்காது ஏற்க வேண்டும், என்ற மரபு பின்பற்றப்பட்டது. அதேபோன்று, ஒரு வழக்குரைஞர், தனது சேவையை நாடி வரும் ஒருவரின் அடையாளம், வழக்கின் தன்மை, அவர் தனிப்பட்ட வகையில் சட்டத்தரணியின் சேவைக்கான கட்டணத்தைச் செலுத்துகிறாரா, உதவியைப் பெற்றுச் செலுத்துகிறாரா, குறித்த நபரின் தன்மைகள், குணம், நடத்தை, குற்றம் என்பவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாது, குறித்த வழக்குரைஞரின் உத்தியோகப் பிரிவின் தன்மை, அனுபவத்தில் குறித்த வழக்கைக் கையாளமுடியுமெனில் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று, பிரித்தானிய சட்ட தரநிர்ணய சபையின் கையேடு குறிப்பிடுகிறது.   

மக்களுக்குச் சேவையாற்றும் உத்தியோகம் என்ற அடிப்படையில் ‘Cab Rank Rule’ இன் முக்கியத்துவம் அணுகப்பட வேண்டியதாகிறது. 

ஒரு வைத்தியரின் கடமை, நோயைக் குணப்படுத்துதல். ஆகவே, ஒரு வைத்தியரிடம் சிகிச்சை பெறவந்த நபரின் இனம், மதம், குணம் என்பவற்றைக்கொண்டு ஒரு வைத்தியர், அவருக்குச் சிகிச்சை அளிக்க மறுக்க முடியாது; கூடாது. அவற்றைக் கடந்து, நோயைக் குணப்படுத்துவது மட்டுமே, அவரது உத்தியோகம்.   

அதுபோலவே, சட்டத்தரணிகளுக்கும் குறித்த நபரின் அடையாளம், தன்மை, குணநலன்கள் அவசியமற்றவை. சட்டத்தரணிகளின் முன் இருப்பது, ஒரு வழக்கு அல்லது சட்டப்பிரச்சினையாகும். தமது சேவையை நாடியவர்கள் நாடும் நீதிக்காக, தம் பணி ஆற்றுவதே சட்டத்தரணிகளின் உத்தியோகம் ஆகும்.   

இந்த இடத்தில், பலருக்கும் எழக்கூடிய ஒரு கேள்வி, ஒரு குற்றவாளிக்காக சட்டத்தரணி வாதிடலாமா என்பது ஆகும். இந்தக் கேள்வியைக் கேட்பவர்கள், ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். எமது குற்றவியல் சட்டத்தின் அடிப்படையே, குற்றமற்றவர் என்ற எடுகோள்தான். அதாவது, ஒருவர் குற்றவாளி எனச் சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்படும் வரை, அவர் குற்றமற்றவராகவே கருதப்படுவார். இது முக்கியம். 

வெறுமனே பொலிஸாரும் சட்ட மா அதிபரும், ஒருவர் மீது குற்றம் சாட்டியதும் அவரை, குற்றவாளியென்று எப்படி நாம் முடிவெடுத்துவிட முடியும்? இங்கு, எது குற்றம் என்பதை, சட்டமே தீர்மானிக்கின்ற போது, அந்தச் சட்டத்தின் படி, ஒருவரைக் குற்றவாளியெனச் சட்டத்தின் அடிப்படையில் சந்தேகத்துக்கு அகப்பால் நிரூபிக்கின்ற பொறுப்பானது குற்றம்சாட்டுபவரைச் சார்ந்தது.   

அதேவேளை, தன்னுடைய நியாயத்தைச் சொல்கிற உரிமை, குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் உண்டு. அதுதான் நியாயமான விசாரணை உரிமையின் தாற்பரியம். 

ஆகவே, வழக்கு அல்லது சட்டப் பிரச்சினை எனும் நோய் பீடித்துள்ள ஒரு நபருக்கு, அதிலிருந்து சட்டரீதியாக மீள உதவுவதுதான், சட்டத்தரணி எனும் உத்தியோகத்தின் தன்மை. அர்ஜூனன் கண்ணுக்கு, கிளியின் கண் மட்டும் எப்படித் தெரிகிறதோ, அதுபோல உத்தியோகம் என்ற அடிப்படையில், சட்டத்தரணிகளின் பார்வை சட்டப்பிரச்சினையில் மட்டுமே இருக்கும்.  

ஒரு சட்டப்பிரச்சினை தொடர்பில், பலருக்கும் வேறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கலாம். அதை வௌிப்படுத்தவும் தமது நிலைப்பாட்டை எடுத்துரைக்கவும் அவர்களுக்கு உரிமையுண்டு. அதை நீதிமன்றிலே செய்வதற்கு, சட்டத்தரணிகளின் சேவையை நாடும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. அந்த உரிமை இல்லாவிட்டால், அது கருத்துரிமை மீதான அடக்குமுறையாகவும் நியாயமான விசாரணை உரிமையின் மீறலாகவுமே அமையும்.   

சட்டங்களை, சட்டவாக்க சபை உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆக்குகிறார்கள். அனைத்துத் தரப்பின் வாதங்களையும் கேட்ட பின்னர், நீதிபதிகள் அந்தச் சட்டத்தைப்  பொருள்கோடல் செய்கிறார்கள். இங்கு, சட்டத்தரணிகளின் பணி, நீதிபதிகளுக்கு உதவுவதாகவே அமைகிறது. ஆகவே, தமது உத்தியோகத்தைச் செவ்வனே ஆற்றுபவர்களை, இனரீதியான பார்வை ஊடாகக் கொச்சைப்படுத்துதல், முறையானதோ, ஏற்புடையதோ அல்ல.   

இந்த இடத்தில், இன்னொரு விடயத்தைச் சுட்டிக்காட்டுதல் அவசியமானது. இலங்கையின் சட்டத்தரணிகள், இனம், மதம், சாதி ஆகியவை கடந்து, தமது கடமையை நிறைவேற்றி இருக்கிறார்கள். சிங்களவர்களுக்காக ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆஜரானார் என்று சொல்பவர்கள், தமிழர்கள், முஸ்லிம்களுக்காக கொல்வின் ஆர்.டீ.சில்வா ஆஜரானதை, வசதியாக மறந்துவிடுகிறார்கள்.   

தமிழர்களின் மனித உரிமை வழக்குகளில், எத்தனையோ சிங்கள வழக்கறிஞர்கள் தோன்றி, வாதிட்டு இருக்கிறார்கள்; மனித உரிமைகளைப் பாதுகாத்து இருக்கிறார்கள்; நீதியைப் பெற்றுக்கொடுத்து இருக்கிறார்கள். சிங்களவர்களுக்காக, எத்தனையோ தமிழ், முஸ்லிம் வழக்கறிஞர்கள் தோன்றி, வாதிட்டு இருக்கிறார்கள்; நீதியைப் பெற்றுக்கொடுத்து இருக்கிறார்கள்.   

ஆகவே, ஜனநாயக சமூகத்துக்கு அடிப்படையான ஓர் உரிமையைப் பாதுகாக்கும் உத்தியோகத்தை, இனம்சார் கண்கொண்டு மட்டும் பார்ப்பது தவறு. அவர்கள், தமது உத்தியோகக் கடமையை ஆற்றுகிறார்கள். அவ்வளவே!  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .