2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சட்டமும் ஆட்சியாளர்களின் விருப்பமும்

Johnsan Bastiampillai   / 2021 மே 05 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்   

ஜனாதிபதி ஆணைக் குழு ஒன்றிடமிருந்து எதிர்பார்க்க முடியாத ஒரு பரிந்துரையை, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழு பரிந்துரைத்துள்ளது.  

ஊழல் மோசடி குற்றச்சாட்டின் பேரில், சிலருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை இரத்துச் செய்து, வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்த பொலிஸ் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தப் பரிந்துரையாகும்.  

அந்த வழக்குகள், கடந்த அரசாங்கத்தின் காலத்தில், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் போன்றவர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டவை ஆகும். அவை, அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டவை என, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன் அடிப்படையிலேயே, அந்த வழக்குகளை இரத்துச் செய்ய வேண்டும் என, ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.  

இந்தப் பரிந்துரைகளை அமலாக்குவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, கடந்த ஏப்ரல் ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார். ஆனால், இந்தப் பரிந்துரைகளை எதிர்க்கட்சிகளும் சட்டத்தரணிகள் சங்கமும் சமூக ஆர்வலர்களும், கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.   

இந்தப் பரிந்துரைகள், சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானவை என்றும் நீதித்துறையில் தலையிடுவதாக அவை அமையும் என்றும் கூறி, இந்தப் பிரேரணையை முன்னெடுத்துச் செல்ல வேண்டாம் என, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பிரதமரிடம் கேட்டுள்ளது.  

நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குகளை, நாடாளுமன்றத்தின் பிரேரணை ஒன்றின் மூலம் இரத்துச் செய்ய முடியுமாக இருந்தால், நீதிமன்றங்கள் எதற்கு என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கேள்வி எழுப்பினார்.   

நியூயோர்க் நகரைத் தளமாகக் கொண்ட ‘ஹியூமன் ரைட்ஸ் வொட்ச்’ நிறுவனம், சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்களும், இந்த ஆணைக்குழுவின் அறிக்கையையும் அதன் பரிந்துரைகளை அமலாக்குவதற்கான பிரேரணையையும் கண்டித்துள்ளன.   

ஆணைக்குழுவால் இரத்துச் செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில வழக்குகள், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் 2021ஆம் ஆண்டு அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டு, சர்வதேச கவனத்தை ஈர்த்தவையாகும். எனவே, இந்தப் பரிந்துரைகளும் பிரேரணையும் சர்வதேச ரீதியில் அரசாங்கத்துக்கு மேலும் பாதிப்பையே ஏற்படுத்தும்.   

தமது சகாக்களின் வழக்குகளில் இருந்து, அவர்களைப் பாதுகாத்துக் கொள்வது தான் அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தால், அவ்வழக்குகள் மூலமாகவே அவர்களை விடுவித்துக் கொள்ளலாம். தற்போதைய ஆட்சியாளர்களின் சகாக்களுக்கு எதிராக, கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகள், இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.   

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கு, வடக்கு, கிழக்கு வீடமைப்புக்காகவென ஒதுக்கப்பட்ட பணத்தை மோசடி செய்ததாக ‘ராடா’ என்ற நிறுவனத்தின் தலைவராக இருந்த டிரான் அலஸூக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு போன்ற பல வழக்குகளை, சட்ட மா அதிபர் வாபஸ் பெற்றதன் மூலமும், ஏனைய வாதங்களை முன்வைத்தும் தள்ளுபடி செய்துகொள்ள இந்த அரசாங்கத்துக்கு முடிந்துள்ளது.   

இவ்வாறு அரசியல் பலத்தைக் கொண்டு, பொலிஸாரைத் தமக்கு வேண்டியவாறு வழி நடத்தி, வழக்குகளைத் தமக்குச் சாதகமாக முடிவுக்குக் கொண்டு வருவதும் அநாகரிகமான செயல்தான். ஆனால், அவை குறைந்த பட்சம் நீதிமன்ற முடிவுகளாகத் தென்படுகின்றன.   

அதேபோல், ஆணைக்குழுவால் இரத்துச் செய்ய வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள வழக்குகளையும் நீதிமன்றத்திலேயே முடிவுக்கு கொண்டு வரலாமே! ஆனால், இந்த ஆணைக்குழு வழக்குகளை இரத்துச் செய்யுமாறு பரிந்துரை செய்துள்ளமை, வேடிக்கையாகவே தெரிகிறது.   

சட்டம் தெரியாத சாதாரண மக்களுக்கும் விளங்கும் இது போன்ற பல சம்பவங்கள், இலங்கை வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. 1970, 80களில் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவின் காலத்திலேயே இ​து போன்ற வேடிக்கைகள் ஆரம்பமாகின. எதிர்க்கட்சியிலிருந்து ஆளும்கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாவலாம் என்றும், ஆனால், ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்குத் தாவ முடியாது என்றும் ஒரு சட்டத்தைக் கொண்டு வரவும் ஜே.ஆர் முயன்றார்.   

இது எவ்வளவு கேவலமானது என்பது, சிறு பிள்ளைகளுக்கும் விளங்கும். ஆனால், அரசியலில் நாகரிகமோ வெட்கமோ இல்லை என்பதைப் பறைசாற்றுவதைப் போல, அவர் அந்த முயற்சியை மேற்கொண்டார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக, இறுதியில் அம்முயற்சியை அவர் கைவிட்டார்.   

இதேபோன்ற வெட்கக்கோடானதும் அதேவேளை சுவாரஸ்யமானதுமான ஒரு சம்பவம், 1981ஆம் ஆண்டு இடம்பெற்றது. 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், அப்போதிருந்த கலவானைத் தொகுதியிலிருந்து ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் அபேரத்ன பிலபிட்டிய தெரிவானார். அவரது தெரிவை எதிர்த்து, கொம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சரத் முத்தெட்டுவேகம வழக்குத் தாக்கல் செய்தார். வழக்கில், பிலபிட்டிய தோல்வியுறும் நிலையே காணப்பட்டது.  

இந்த நிலையில், ஜே.ஆரின் ஆலோசனைப் படி, பிலபிட்டிய மூன்று மாதங்களாக நாடாளுமன்றத்துக்கு வருகை தராமல் இருந்தார். அதன்படி, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகியது. அதற்கிடையே, 1978ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பின் கீழ், விகிதாசாரத் தேர்தல் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. எனவே, கலவானைத் தொகுதிக்கு பழைய தேர்தல் முறையில் இடைத் தேர்தல் நடத்துவதா அல்லது புதிய முறைப்பபடி வெற்றிடத்தை நிரப்புவதா என்ற கேள்வி எழுந்தது.   

புதிய முறையின்படி, பதவியிழந்தவருக்கு அடுத்தபடியாக வாக்குப் பெற்றவரை நியமிக்க, ஐ.தே.கவுக்கு மாவட்ட வேட்பாளர் பட்டியல் ஒன்று அப்போது இருக்கவும் இல்லை. ஆனால், ஜே.ஆர் தமது விருப்பப்படி, அதே பிலபிட்டியவை கலவானை தொகுதிக்கு மீண்டும் நியமித்தார்.   

அதனை அடுத்து, சரத் முத்தெட்டுவேகமவின் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. தேர்தலில், பிலபிட்டிய முறைகேடாகத் தெரிவு செய்யப்பட்டார் என்பதே தீர்ப்பாகியது. அதன்படி, பிலபிட்டிய நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற வேண்டும். ஆனால், பிலபிட்டிய, தாம் தேர்தலில் வெற்றி பெற்ற பிலபிட்டிய அல்ல; பின்னர் நிமிக்கப்பட்ட பிலபிட்டிய என வாதாடினார். அதனை சபாநாயகர் பாக்கீர் மாக்காரும் ஏற்றுக் கொண்டார்.   

ஆனால், தேர்தல் வழக்கின் தீர்ப்பின் படி, தேர்தல் ஆணையாளர் கலவான தொகுதிக்கு இடைத் தேர்தலையும் நடத்தினார். அதில் சரத் முத்தெட்டுவேகம வெற்றி பெற்றார். இப்போது கலவானை தொகுதிக்கு இரண்டு எம்பிக்கள். ஒருவர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முத்தெட்டுவேகம. மற்றவர், புதிய முறையில் நியமிக்கப்பட்ட பிலபிட்டிய. ஆனால், சட்டப்படி ஒருவர் தான் இருக்க முடியும்.   

எனவே, கலவானை தொகுதிக்கு இரண்டு எம்.பிக்கள் இருக்கும் வகையில் அரசியலமைப்பைத் திருத்த ஜே. ஆர் முயன்றார். அரசியலமைப்புத் திருத்த மூன்றாவது வரைவு என்ற அந்தச் சட்டமூலம், உயர் நீதிமன்றத்துக்குச் சென்ற போது, நீதிமன்றம் அதனை நிராகரித்தது.   

இறுதியில், 1981 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி, பிலபிட்டிய இராஜினாமாச் செய்தார். முத்தெட்டுவேகம கலவானை எம்.பியானார். ஆனால், இதுவும் வரலாற்றில கறைபடிந்த ஒரு சம்பவமாகும்.  

இதேபோல், அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நடைபெற்ற மற்றொரு கேவலமான சம்பவம், 1982 ஆம் ஆண்டு நடைபெற்றது. 1977ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜெயவர்தனவின் ஆட்சி, 1982ஆம் ஆண்டில் முடிவுக்கு வரவிருந்தது. அப்போது அவருக்கு நாடாளுமன்றத்தில் 168 ஆசனங்களில் 140 ஆசனங்கள் இருந்தன. அதாவது, ஆறில் ஐந்து பெரும்பான்மை இருந்தது.   

அடுத்த தேர்தல், விகிதாசாரத் தேர்தல் முறையில் நடைபெறுவதாலும், தமது ஆட்சி 1977 இல் போல, செல்வாக்கானாது அல்ல என்பதாலும், தொடர்ந்தும் ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலத்தை வைத்திருக்க ஜே.ஆர் ஒரு வழியைத் தேடினார்.  

அதன்படி, 1982ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய பொதுத்தேர்தலை, பொதுஜன வாக்கெடுப்பொன்றின் மூலம், 1989ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்க அவர் தீர்மானித்தார். பின்னர், ஒரு பொதுத் தேர்தலுக்குச் செலவாகும் பணத்தைச் செலவழித்து, வாக்கெடுப்பை நடத்தி தேர்தலை ஒத்தி வைத்தார்.   

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, சட்டத்தை மீறித்  தமக்கு வேண்டியவர்களை உயர் நீதிமன்றத்துக்கு நியமித்தமை மற்றொரு சம்பவமாகும். 2001ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தின் படி, அரசியலமைப்புச் சபை மூலமாகவே நீதியரசர்கள் நியமிக்கப்பட வேண்டும்.   

மஹிந்தவின் காலத்தில் ஒரு கட்டத்தில், அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைந்தது. அப்போது உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்களுக்கான சில வெற்றிடங்கள் இருந்தன. முறைப்படி சபைக்கு ஏனைய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டாலும் மஹிந்த, ஜனாதிபதியின் பிரதிநிதியை நியமிக்கவில்லை. எனவே, சபையின் சம்மதம் இல்லாமல், புதிய நீதியரசர்களை நியமிக்கவும் முடியாது. அவ்வாறு சபையின் நடவடிக்கைகளை முடக்கிய ஜனாதிபதி மஹிந்த, சபை வெற்றிடங்களை நிரப்பும் வரை காத்திருக்க முடியாது என்று கூறி, தமக்கு வேண்டியவர்களை நீதியரசர்களாக நியமித்தார்.  

அவ்வாறான, மேலும் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கையின் அரசியல் வரலாறானது, இவ்வாறான கறைபடிந்த ஒன்றாகும். “சட்டமென்பது, ஆட்சி செய்யும் வகுப்பின் விருப்பமே” என கார்ல் மார்க்ஸ் கூறியது பிழையல்ல.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .