2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

சம்பந்தன், விக்னேஸ்வரன் இணைத்தலைமை காலத்தின் தேவை

Editorial   / 2018 டிசெம்பர் 11 , மு.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த முதலாம் திகதி சனிக்கிழமை, கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் காலை 11.50 மணிக்கு, யாழ். நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறிக் கொள்வதற்காக, சனத்திரள் கூடியிருந்தது. குறித்த நேரத்தில் ரயில் கிளம்பியது.   

எமது பயணம், இரண்டாம் வகுப்புப் பெட்டியில் தொடர்ந்தது. அதில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் தனது இரண்டு பாதுகாவலர்களுடன் பயணித்தார். எமக்கு அருகில் இருந்த, 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், விக்னேஸ்வரனுடன் கதைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அது போலவே, கதைத்தும் விட்டார்.   

விக்னேஸ்வரனுடன், அந்த நபர் என்ன கதைத்தார் என்பதை அறிய வேண்டும் என,  உள்ளூர விருப்பம் ஏற்பட்டது. “ஐயாவுடன் என்ன கதைத்தீர்கள்” என, அந்த நபரிடம்  கேட்டேன்.   

“நீங்கள் (விக்னேஸ்வரன்), சம்பந்தன் ஐயா இருவரும் இணைந்து, அரசியல் செய்ய வேண்டும். நாங்கள் (தமிழ் மக்கள்) உங்கள் இருவரையும் உயர்வாக மதிக்கின்றோம்; தொடர்ந்தும் மதிப்போம்; பிரிவு வேண்டாம்; ஒற்றுமை வேண்டும் எனக் கேட்டேன்” என்றார். 

அந்த நபர் கூறியது போலவே, ஈழத் தமிழ் மக்கள் அனைவருமே, இரு தலைவர்களும் ஒன்றாகப் பயணிக்க வேண்டும் என்றே மனதார விரும்புகின்றனர்.   

உண்மையில், சம்பந்தனும் விக்னேஸ்வரனும் பகைமை கொண்டு, ஒருவரை ஒருவர் பொதுவெளியில் தூற்றியது இல்லை. ஆனால், சில தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்களே, விக்னேஸ்வரனைக் கடிந்து வருகின்றனர்.   

கற்பனை எதிரிகளாக இவர்கள் இருவரையும், உருவகப்படுத்தி வைத்திருக்கின்றார்களோ எனவும் ஐயம் கொள்ள வைக்கின்றது. “அரசியல் அனுபவமற்ற, கொழும்பிலிருந்து இறக்குமதியான விக்னேஸ்வரன், கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழ் மக்களுக்கு என்னத்தைச் சாதித்தார்” எனக் கேள்விக் கணைகளை முன் வைத்து வருகின்றனர்.   

அவ்வாறெனில், பல ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்டவர்கள், என்னத்தைச் சாதித்தார்கள் என்ற வினாவுக்கான விடை தொக்கி நிற்கின்றது. இதேவேளை, 2013இல் விக்னேஸ்வரன் கொழும்பு இறக்குமதி என்றால், 2010இல் சுமந்திரனும் கொழும்பு இறக்குமதி அல்லவா?   

இது, ‘அவர் என்னத்தைச் செய்தார், இவர் என்னத்தைச் செய்தார்’ என்றும், ‘அவர் இறக்குமதி, இவர் ஏற்றுமதி’ என்றும் வீணாக வெட்டிப் பேச்சுப் பேசும் நேரம் அல்ல.   

மாறாக, இங்குள்ள அனைத்துப் பேதங்களைத் தூக்கிவீசி, குரோதங்களை வெட்டிப் புதைத்து, தமிழர்கள் என்ற ஒற்றைக் குடையின் கீழ், அணி திரளும் கைகோர்க்கும் நேரம் ஆகும். 

உறவுகளை அறுத்து எறிவதும், எதிர்த்துப் பேசுவதும் மிகவும் இலகுவானது. ஆனால், அவற்றை உண்மையாக ஒட்ட வைப்பதும் உறவாட வைப்பதும் ரொம்பவும் சிரமமானது.   

கொழும்பின், இன்றைய அர்த்தமற்ற அனர்த்தத்துக்குள் சிக்கி, கூட்டமைப்பு (முக்கியமாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்) ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக’ தனது நேரத்தையும் சக்தியையும் அறிவையையும் பயன்படுத்துவதால், என்ன அறுவடைகளைத் தமிழ் மக்களுக்கு பெற்றுத் தரப்போகின்றார் என்பது ஆராய வேண்டிய ஒன்றே.   

விரும்பியோ விரும்பாமலோ, தமிழர் அரசியல் அரங்கிலிருந்து அகற்ற முடியாத நபராக, விக்னேஸ்வரன் முதன்மை பெற்று விட்டார். தனிக்கட்சி தொடங்குவாரா, தொடங்க மாட்டாரா என்ற ஊகங்களுக்கு மத்தியில், தனிக்கட்சி தொடங்கி விட்டார்.   

நிதர்சனமாக, யதார்த்தமாகப் பார்க்கும்போது, சம்பந்தனும் விக்னேஸ்வரனும் ஒருவரை ஒருவர் வெட்டி ஓட (அரசியல் நடத்த) முடியாது. அவ்வாறு வெட்டி ஓடினால், அவர்களிலும் பார்க்க, தமிழ் மக்களுக்கே நட்டம் அதிகமாகும்.   

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் (2015) அடிப்படையிலேயே, 14 பேரைக் கொண்ட அணிக்குத் தற்போது, சம்பந்தன் தலைமை தாங்குகின்றார். பலத்துடன் இருப்பதாலேயே பேரம் பேசவும் வீரம் பேசவும் முடிகின்றது. அதற்குள் சோரம் போனவர்களும் இருக்கின்றார்கள்.   

சில மாதங்களுக்கு முன்னர், 16 ஆகக் காணப்பட்ட கூட்டமைப்பு அணியே, தற்போது 14ஆக ‘மெலிந்து’ விட்டது. சிலவேளைகளில், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றால், அது இன்னும் ‘மெலிந்து’ போவதற்கான அறிகுறிகள், பிரகாசமாகத் தெரிகின்றன. 2000 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், திருகோணமலையில் தமிழர்களது பிரதிநிதித்துவம் பறிபோனது. பிரிந்து நின்று எங்களுக்குள் மோதியதாலேயே அந்தப் பரிதாப நிலை ஏற்பட்டது.   

திருகோணமலையிலிருந்து நான்கு உறுப்பினர்கள் தெரிவாகின்றனர். இரண்டு முஸ்லிம் உறுப்பினர்கள், தமிழ் சிங்களம் ஆகிய இரு இனங்களிலும் தலா ஒவ்வோர் உறுப்பினர்கள். பல தசாப்தகால திட்டமிட்ட குடியேற்றங்களின் விளைவு இது.  

இலங்கையில் தமிழ் மக்களே, வாக்களிப்பு சதவீதத்தைக் குறைவாகப் பேணும், வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்த இனமாகும். பொதுவாக, பெரும்பான்மையினம்  மற்றும் முஸ்லிம் பகுதிகளில் வாக்களிப்பு சதவீதம் உயர்வாகவே பேணப்படுகிறது.   

இவ்வாறாக நிலைமைகள் உள்ள வேளையில், பல கட்சிகளாக, அணிகளாக உடைந்து, துண்டுபட்டுத் தமிழ்க் கட்சிகள் தேர்தலுக்குக் களம் இறங்கினால், திருகோணமலைத் தமிழ் மக்களுக்கு, 2000 ஆண்டு நிலைமை, மீண்டும் ஏற்படலாம். தமிழ் மக்களும், தமிழ்த் தலைமைகளின் ஒற்றுமையீனப் போக்கால் சலிப்புற்று, வாக்களிக்காது விட்டுவிடலாம்.   

இந்நிலைமைகளை ஏற்படுத்த, இன்று இவர்கள் நட்புப் பாராட்டும் பேரினவாதக் கட்சிகள் கடுமையாக உழைக்கலாம்/ உழைக்கின்றன. ஏனெனில், கொழும்பின் இரண்டு தேசியப் பேரினவாதக் கட்சிகளும் தமிழ் மக்களுக்கும் அவர்களது விடிவுக்கும் என்றும் எதிரானவை என்பதை, பல தடவைகள் உறுதிப்படுத்தியுள்ளன.  

ஒருவரது வளர்ச்சியும் விருத்தியும் மகிழ்ச்சியும் மற்றவருக்கு, மிக அவசியமாக இருக்கும் நிலையே அன்பு ஆகும். ஆகவே, தமிழ் மக்களில் அன்பு கொண்டு, சம்பந்தன் - விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் இணைய வேண்டும். சிறிய முயற்சிகளில் இருந்தே, பெரிய மாற்றம் நிகழ்கின்றது; திக்குத் திசை தெரியாது, கடும் இருளில் சிக்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு, சிறு மெழுகுதிரி வெளிச்சத்துக்குச் சமமானதே, இவர்கள் இருவரது ஒற்றுமை.    

இந்த இருவரது இணைவும், தமிழ் மக்களுக்கு இரட்டிப்புப் பலத்தைக் கொடுத்து விடும் என்பதால், இதை ஒரு போதும் பேரினவாதம் விரும்பாது. ஆனால், தமிழ் அரசியல்வாதிகள், இதற்கு வழி சமைக்க வேண்டும்; வலுக்கூட்ட வேண்டும்.   

இந்தக் கனவான்களின் கூட்டு, புதிய கனவான்களையும் கட்டாயம் கூட்டி வரும்.    

ஆயிரம் பிரச்சினைகள் எமக்குள் நிலவினாலும், உரிமைகளைப் போராடிப் பெறுவற்குப் பலமே முதலில் தேவை. எமது வலியை ஆற்றலாக மாற்றுவோம்; பின் ஆற்றலையும் அறிவையும் கொண்டு, முன் நோக்கிச் செல்வோம். இவர்கள் இருவரும் கை கோர்த்தால், கைகொடுக்கத் தயாராக உள்ளது தமிழ்ச் சமூகம்.  

இது இவ்வாறு நிற்க, இலங்கைத் திருநாட்டின் அரசியல் நிலைவரங்கள் எவருமே ஊகித்துக் கணிப்பிட முடியாத திசையில் தடம் புரண்டு பயணித்துக் கொண்டு இருக்கின்றது. 

நாட்டின் அரசியல் களம், ஒக்டோபர் 26ஆம் திகதி நிகழ்வை அடுத்து, எங்கேயோ சென்று கொண்டு இருக்கின்றது. எடுக்கப்படும் முடிவுகளை, முடிவுக்குக் கொண்டுவர முடியாமல், ‘கொழும்பு’ திணறிக் கொண்டிருகின்றது.   

அரசியல்வாதிகள் இது தொடர்பில் தொடர்ந்தும் கொதி நிலையில் காணப்பட்டாலும், சாதாரண பொது மக்கள், களைத்துப் போய் ஆறி விட்டார்கள். உண்மையில், மக்கள் வெறுப்படைந்து போயிருக்கிறார்கள். அன்றாடம் உழைத்து சீவியம் நடத்துபவர்கள், மூன்று நேர வேளை உண்ண வழியின்றி, உழைப்பின்றி கண்ணீர் வடிக்கிறார்கள்.    

இந்நிலையில், இனித் தமிழ் மக்கள் என்ன செய்வது? தமிழ்தலைமைகள் என்ன செய்யப்போகின்றார்கள்? என்பது விடை தெரியாத வினாக்கள் ஆகும். ஆட்சியைப் பிடிக்க அடிபடுகின்றவர்களில், யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பதில் எம்மவர்களுக்கிடையில் அடிபாடு நடக்கின்றது.   

தமிழ் மக்கள், ‘அடுத்த வேளைக் கஞ்சிக்கு உப்பு இல்லையே’ என்ற நிலையில் இருக்க, பெரும்பான்மையின ஆட்சியாளர்களோ, ‘கொண்டைக்குப் பூ இல்லையே’ என்ற தோரணையில், வேடிக்கை மனிதர்களாக இருக்கின்றார்கள். 

“ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடுகின்றோம்” எனச் சிங்கள அரசியல்வாதிகள் தற்போது கூறிக் கொள்கின்றார்கள். ஆனால், தமிழ் மக்களும் 70 ஆண்டுகளாக, அதே ஜனநாயகத்தைக் காப்பாற்றவே போராடினார்கள்/  போராடுகின்றார்கள்.   

சரி, அவர்கள் எப்படியாவது இருந்திட்டுப் போகட்டும் என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டாலும், தமிழ் மக்கள், இதையும் இதையொட்டி இனி நடக்கப் போகும் நிகழ்வுகளையும் எவ்வாறு வெற்றிகரமாகக் கையாளப் போகின்றோம்? 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .