2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சர்ச்சைகளுக்கு மத்தியில் ஐ.நா அமர்வு

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  ஜனகன் முத்துக்குமார்

அண்மைக்கால புதிய உலக ஒழுங்குமுறை என சித்திரிக்கப்படும் பனிப்போருக்குப் பிந்திய காலத்தில், மனிதாபிமானம் என்பது மிகவும் துச்சமாகவே மதிக்கப்படுவதாக தெரிகின்றது. சிரியாவாகட்டும் அல்லது யேமனாகட்டும், ஆப்கானிஸ்தான், லிபியா, ஈராக், மியான்மர், பலஸ்தீனம், காஷ்மிர், வடக்கு ஆபிரிக்கா அல்லது எந்தப் பிராந்தியத்தை எடுத்துக்கொண்டாலும், அங்கு இனம், மதம், தேசியவாதம் உட்பட பல்வேறு வேறுபாடுகள் காரணமாக உருவாகும் போர், அல்லது ஆயுத நிலைமைகள், கடந்த இரண்டு தசாப்தங்களாக சுமார் 2 மில்லியன் மக்கள் கொல்லப்படவும், 6 மில்லியன் மக்கள் தங்கள் நாட்டிலேயே அகதிகளாக அல்லது வேறு நாடுகளுக்கு இடம்பெயர்வதற்கும் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். மறுபுறத்தில் ஈரான், துருக்கி, வட கொரியா, உக்ரைன், தென்சீனக் கடல் எல்லைகளில், தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், பதற்றங்கள் தணியாதவாறே உள்ளன. இவை, புவிசார் அரசியலை மோசமடையச் செய்வதுடன், உலகப் பாதுகாப்புத் தொடர்பில் நிலையற்றதொரு தன்மையையே ஏற்படுத்தியுள்ளன எனலாம். இவ்வாறு ஒரு குழப்பமான உலக அரங்கின் ஒழுங்கிலேயே, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73ஆவது அமர்வு, அண்மையில் நடைபெற்றிருந்தது.

இந்திய - பாகிஸ்தான் தொடர் விவகாரத்தைப் பொறுத்தவரை, பாகிஸ்தானிய வெளிநாட்டு அமைச்சர் முக்தூம் ஷா மஹ்மூத் ஹுசைன் குரேஷி, பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தான் உறைவிடம் அளிக்கிறது என, இந்தியா கூறியதை மறுதலித்து, மாறாக இந்தியாவே பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்திய அரசாங்கம், காஷ்மிரில் பயங்கரவாதத்துக்குத் தீனிபோடுவதாகவும், அதன் ஒரு பகுதியாகவே பாகிஸ்தான் - இந்திய சமாதானப் பேச்சுவார்த்தையை “சாட்டுப்போக்கானதொரு” காரணத்தைக் கூறி, இந்தியா தவிர்த்ததெனவும் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், குரேஷி, உலகிலேயே மிகவும் பெரிதான பயங்கரவாதத்துக்கு எதிரான போரை பாகிஸ்தானே நடாத்தியிருந்ததாகவும், பாகிஸ்தானே அதிக இழப்புகளைச் சந்தித்த நாடு எனவும் கூறியிருந்தார். பாகிஸ்தானை, கடும்போக்காளராக இந்தியா சித்தரிப்பதை நிறுத்த வேண்டும் எனவும், அதன் ஓர் எடுத்துக்காட்டே, அண்மையில் நாட்டின் பிரதமராக இம்ரான் கான் தெரிவுசெய்யப்பட்டமை பார்க்கப்படவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

அதேவேளை, கூட்டத்தில் உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான், தொடர்ச்சியாகவே இராணுவமயப்படுத்தப்பட்ட ஜனநாயக நாடு எனவும், அது தொடர்ச்சியாகவே இந்தியாவுக்கு எதிராக நேரடியாகவும், பயங்கரவாதக் குழுக்களை ஊக்குவிப்பதன் மூலமும் தாக்குதல் நடாத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். அவர் தனதுரையில், “காஷ்மிர்” எனப் பெயரைக் குறிப்பிடாமல், “சர்ச்சைக்குரிய பகுதியில்”, பயங்கரவாதத்துக்குப் பாகிஸ்தான் ஆதரவளிப்பதாக, தொடர்ச்சியாகவே தனது உரையில் குறிப்புகளைக் காட்டியிருந்ததுடன், பாகிஸ்தான் - இந்திய எல்லைப் பகுதியில், அத்துமீறித் தாக்குதல் நடாத்தியமையே, இந்தியா குறித்த பேச்சுவார்த்தையில் இருந்து விலகக் காரணமாக அமைந்தது என குறிப்பிட்டதுடன், பாகிஸ்தானே உலக பயங்கரவாதியாக ஒசாமா பின்லேடனை, தனது நாட்டில் அடைக்கலம் கொடுத்து வைத்திருந்தது எனவும் குற்றஞ்சாட்டியிருந்தமை, தொடர்ச்சியாக இந்திய - பாகிஸ்தான் முறுகல் நிலை தொடரும் என்பதைத் தெளிவுறுத்தியது.

ஈரான் விவகாரத்தை பொறுத்தவரை, பஹ்ரைனின் ஷேக் காலித் பின் அஹ்மத் அல்-கலீஃபா தனது உரையில், ஈரான், அண்டை நாடுகளின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையீடு செய்வதாகவும், அந்நாடுகளின் அரசாங்கங்களைக் கவிழ்ப்பது, எதிர்க் குழுக்களுக்கு ஆயுதங்களையும் மூலோபாய உதவிகளை வழங்குகின்றது எனவும் குற்றஞ்சாட்டியிருந்தார். அதே குற்றச்சாட்டை, தனது உரையிலும் எழுப்பிய ஐக்கிய அரபு அமீரக வெளிவிவகார அமைச்சர், ஈரானின் வெளியுறவுக்கொள்கை, யேமன், மொரோக்கோ அரசாங்கங்களைக் கவிழ்த்தலை அடிப்படையாகக் கொண்டுள்ளது எனக் கூறியிருந்தார்.

ஈரான் மீது தொடர்ச்சியாகவே அணுவாயுத உற்பத்தி தொடர்பாகக் குற்றஞ்சாட்டிவரும் இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் அணுசக்தி ஒப்பந்தம், ‘பொய்யான ஒப்பந்தம்’ என விமர்சித்ததுடன், அணுவாயுத உற்பத்தியை மேற்கொள்வதற்கான இரசாயனங்களை, தெஹ்ரான் தனது கட்டுப்பாட்டில் மூடி மறைத்துள்ளது எனவும் குற்றஞ்சாட்டினார். குறித்த இந்நிலை, இஸ்‌ரேலின் எதிர்கால இருப்பை அச்சுறுத்துவதாகவும், அதன் காரணமாக இஸ்‌ரேல் தனது பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படும்படி ஈரான் செயற்பட்டால், அதற்கெதிரான ஒருமுனைப் போரை தொடங்கவும் தயங்காது எனவும் எச்சரித்திருந்தார்.

ஈரானின் ஜனாதிபதி, தனதுரையில் மேற்கூறிய அனைத்தையும் மறுத்ததுடன், ஐ.அமெரிக்கா, குறித்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியமை, ஐ.அமெரிக்காவை சர்வதேசத்தில் தனிமைப்படுத்திவிட்டது எனவும், ஐ.அமெரிக்கா, குறித்த உடன்படிக்கையில் மீண்டும் பங்காளியாகுதல், எல்லோருக்கும் நன்மை பயக்கும் விடயமாக இருக்கும் என குறிப்பிட்டிருந்ததோடு, ஈரானுக்கு எதிராக ஐ.அமெரிக்கா கொண்டுவந்துள்ள பொருளாதாரத் தடைகள், “பொருளாதாரப் பயங்கரவாதம்” எனக் குறிப்பிட்டமையும் நோக்கத்தக்கது.

வடகொரியாவைப் பொறுத்தவரை, அதன் வெளியுறவு அமைச்சர் றி யோங் ஹோ, கொரியத் தீபகற்பத்தில் அண்மையில் ஏற்பட்ட சமாதான நடவடிக்கைகளுக்குச் சர்வதேசம் வழங்கிய உதவியைப் பாராட்டியிருந்தார். எவ்வாறாயினும், வடகொரியா ஒரு போதும் ஒருதலைப்பட்சமாக குறித்த சமாதான உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தாது எனவும், ஐ.அமெரிக்க - வடகொரியா இடையேயான சிங்கப்பூர் ஒப்பந்தத்தை ஐக்கிய நாடுகள் நடைமுறைப்படுத்துவதற்கு, எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் பட்சத்திலேயே, வடகொரியா தனது ஏவுகணைகள் தொடர்பான உற்பத்திகளைத் தவிர்க்கும் எனவும் கூறியிருந்தார். இதே கருத்தை ஆமோதித்திருந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ், வடகொரியாவின் படிப்படியான ஆயுதக் குறைப்பை நன்னோக்கமாகக் கருதி, வடகொரியாவுக்கு எதிராக சர்வதேசம் மேற்கொண்டிருந்த பொருளாதாரத் தடைகளை நிறுத்தவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

சிரிய விவகாரங்களைப் பொறுத்தவரை, சிரிய துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வலிசும் அல் மூலேம், மேற்கத்தேய நாடுகள் சிரியாவில் மேற்கொண்ட தாக்குதல்கள், யுத்தக் குற்றங்களாகும் எனக் குறிப்பிட்டதுடன், சிரிய உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசக் குறுக்கீடுகள் அறவே அகற்றப்படவேண்டும் எனவும், குறித்த குறிக்கீடுகளே, கடந்த 7 வருடகால “பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்துக்கு” காரணமாக இருந்தன எனவும் குற்றஞ்சாட்டினார்.

இவ்விவகாரங்களைத் தவிரவும், ரோகிஞ்சா இனப்படுகொலை, ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கக் கொள்கைகள், ஐ.அமெரிக்கத் தேர்தலில் சீனா தலையீடு செய்கின்றது என ஐ.அமெரிக்க ஜனாதிபதி குற்றஞ்சாட்டியமைக்கு எதிரான சீனாவின் கண்டனங்கள், இஸ்‌ரேல் - பலஸ்தீனம் தொடர்பில் பல தலைவர்கள் முன்வைத்த இரண்டு தேசங்கள் என்ற தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் விவாதிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .