2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சலசலப்புகள்

மொஹமட் பாதுஷா   / 2018 ஜனவரி 19 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியதும், அரசியலில் நாகரிகத்தை காண்பது குறைவடைந்து செல்வது ஒருபுறமிருக்க, அரசியல் கட்சிகளும் அதன் ஆதரவாளர்களும் மற்றைய தரப்பினருக்கு எதிராகத் தமது உரிமைகள், சுதந்திரம், அரசியல் நலன் என்பவற்றை முன்னிறுத்தி, உணர்ச்சிபூர்வமாகச் செயற்பட முனைகின்றனர்.   

இந்தக் காரணங்கள் யாவும் ஒன்றுசேர்ந்து, முஸ்லிம் அரசியல் களத்தை, தேவையற்ற விளைவுகளுக்கும் சட்டக் கெடுபிடிகளுக்கும் இட்டுச் செல்கின்றதோ என்ற அச்ச உணர்வு மேலோங்குகிறது.   

அரசியல் பற்றியும் அரசியல்வாதிகள் எப்பேற்பட்டவர்கள் என்பது பற்றியும், முஸ்லிம் சமூகம், சரியாக உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவாக, அரசியலுக்காகப் பெருமளவானவற்றை இன்னும் இழந்து கொண்டிருக்கின்றார்கள்.   

அரசியலுக்காக எதுவும் செய்யலாம் என்ற எண்ணமும், எதைப் பேசினாலும் மக்கள் நம்பி விடுவார்கள் என்ற நம்பிக்கையும் எந்த வாக்குறுதியைக் கொடுத்தும் ஏமாற்றலாம் என்ற அரசியல்வாதிகளின் அசட்டு துணிச்சலும், முஸ்லிம் அரசியல் பெருவெளியில், மக்களிடையே ஒருவித விரக்தி உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது.   

ஆனால், வரலாற்றில் நெடுங்காலமாகக் கூர்ப்படையாத கரப்பான் பூச்சியைப் போல, எதுவித மாற்றங்களும் முன்னேற்றங்களும் இன்றி, சமூகத்துக்குள் இம்முறையும் முஸ்லிம் அரசியல்வாதிகள், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.   

வழக்கமான பொய் மூட்டைகள், ஏமாற்று வித்தைகள், வாக்குறுதிகள், முன்னுக்குப் பின் முரணான வாக்குறுதிகள், மூளைக்கும் வாய்க்கும் சம்பந்தமில்லாத பேச்சுகள் என, முஸ்லிம் கட்சிகள் தமது பழைய பல்லவியையே புதிய இசையில் பாடவந்திருக்கின்றன.   

மக்களை முட்டாள்களாகவும் ஏமாளிகளாகவும் என்ன சொன்னாலும் வாக்குப் போடுபவர்கள் என்றும் எண்ணிக் கொண்டு, முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள், வேறுவிதமான களநிலைவரங்களைத் தோற்றுவிக்க ஊக்கசக்தியாக அமைந்து கொண்டிருக்கின்றன.   

பொதுவாக, முஸ்லிம் அரசியல் கட்சிகளின் சமுதாய நலன்சாராத அரசியலால், மக்கள் வெகுவாக மனம் வெறுத்துப் போயிருக்கின்றார்கள் என்பதை முதலில் சம்பந்தப்பட்டோர் விளங்கிக் கொள்ள வேண்டும்.   

தாம் வாக்களித்த அரசியல்வாதி அல்லது கட்சி, இனிமேல் சரிப்பட்டு வரமாட்டாது என்று தெரிந்து கொண்ட பெருமளவிலான மக்கள், தமது வாக்குகளின் ஊடாக, மாற்றத்தை உண்டு பண்ணும் சாத்தியம், இம்முறை ஏற்பட்டிருக்கின்றது.   

மேலும் கணிசமானோர், என்ன பிரளயம் நடந்தாலும், தமது ஆஸ்தான அரசியல்வாதிகளுக்கு இம்முறையும் பாவமன்னிப்பு வழங்கி, வாக்களிக்கக் காத்திருக்கின்றனர்.   

இத்தேர்தலில் இதரசொற்பளவானோர், கட்சிகளையோ கட்சித் தலைமைகளையோ கருத்திலெடுக்காமல், குறித்த வட்டாரத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் ஆளுமையைப் பொறுத்து வாக்களிக்கும் முடிவில் இருக்கிறார்கள்.  

 ஆனால், இன்னும் ஒரு மக்கள் கூட்டம், தமக்குப் பிடிக்காத அரசியல்வாதிக்குத் தம்முடைய எதிர்ப்பைப் பகிரங்கமாகவே காட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதையும், அந்தக் குறித்த அரசியல்வாதியின் அல்லது கட்சியின் எதிராளிக் கட்சிகள் இதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதையும் காணமுடிகின்றது.   

இன்றிருக்கின்ற கிழக்கு அரசியலை முன்னிறுத்தி, இவ்விடயத்தை நோக்க முடியும். அந்தவகையில், கடந்த சில நாட்களாக கிழக்கில் இருந்து வருகின்ற, அதிலும் குறிப்பாக, முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மூன்று தேர்தல் தொகுதிகளைக் கொண்டுள்ள அம்பாறை மாவட்டத்தில் இருந்து, வெளியாகின்ற செய்திகள், ஒரு சிலருக்கு உள்ளூறச் சந்தோஷமாகவும் குஷியாகவும் இருக்கலாம். அது அவர்களது, பார்வைக் கோணத்தில் நியாயமானதும் கூட.   

ஆனால்,பல்லின நாடொன்றில் முஸ்லிம் அரசியல் கலாசாரம், அதன் நாகரிகப் போக்கு பற்றியெல்லாம் சிந்திக்கின்றவர்களுக்கு, அவ்வகையான பேரானந்தம் ஒன்று ஏற்பட்டதாகக் குறிப்பிட முடியாது.  

உதாரணமாக, ஒரு முஸ்லிம் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம், அக்கரைப்பற்றில் இடம்பெற்றபோது கூச்சலிடப்பட்டது. இவ்வாறு கூச்சலிட்ட ஒருவரைக் கட்சி ஆதரவாளர்கள் சிலர் தாக்கியுள்ளனர்.   

பிறகு, அக்கட்சியின் கூட்டம், பாலமுனையில் நடைபெற்ற போது, அங்கிருக்கும் மாற்றுக் கட்சிக்காரர்களுக்கும் இக்கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுச் சிலர் காயமடைந்தனர்.   

அதேநாள், மேற்படி கட்சியின் தலைவர், சாய்ந்தமருது ஊடாக, மருதமுனை நோக்கிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன், அவ்வழியால் சென்ற அதேகட்சியின் முக்கியஸ்தரின் வாகனம் தாக்கப்பட்டிருக்கின்றது. இப்படிக் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும், கூச்சலும் குழப்பமும் சலசலப்பும் நிறைந்திருக்கின்றது.   

முஸ்லிம் மக்களை ஏமாற்றுகின்ற, எல்லா அரசியல்வாதிகளுக்கும் நன்றாக உறைக்கும்படி ஒரு செய்தியைச் சொல்ல வேண்டியிருக்கின்றது என்பதையும், பாடம் படிப்பிக்க வேண்டியுள்ளது என்பதையும் மறுக்கவியலாது.   

எந்நாளும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது என்பதையும் காலவினோதங்கள் நிகழ்கின்ற போது, நிலைமைகள் தலைகீழாக மாறலாம் என்பதையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் உணர்ந்து கொள்வதற்கு இந்த எதிர்ப்புக் காட்டல்கள் போதுமானவை.   

ஆனால், பாடம்படிப்பிக்க எத்தனையோ வழிகள் இருக்கத்தக்கதாக, வன்முறையை ஓர் ஆயுதமாக எடுப்பது குறித்து, முஸ்லிம் மக்களும் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும் ஒன்றுக்கு நூறுமுறை சிந்திக்க வேண்டியிருக்கின்றது.   

இன்று ஒரு கட்சிக்கு அல்லது இரண்டோர் அரசியல்வாதிகளுக்கு இது நடக்கலாம். ஆனால், நாளையோ அல்லது அடுத்த வருடமோ மற்றைய அரசியல்வாதிகளும் கட்சிகளும் கூட இதுபோன்றதோர் இக்கட்டான நிலையைச் சந்திக்க நேரிடலாம் என்ற அடிப்படையில், சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.   

முஸ்லிம் அரசியல் வழித்தடத்தில், ஒரு சிறிய மாற்றம் ஏற்படும் சாத்தியமிருப்பதைக் கிழக்கு அரசியல் இப்போது சாடைமாடையாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.   

ஆயிரம் மெழுகுதிரிகள் பற்றி புகழ்பாடிக் கொண்டு, ஒரு விளக்கையேனும் ஏற்றிவைக்காமல் இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளை, மக்கள் மீள்வாசிப்புக்கு உட்படுத்தி வருகின்றார்கள் என்பதற்கு, இது ஒரு நல்ல அத்தாட்சி என்றும் கூறலாம்.   

இருப்பினும், சிங்களப் பெரும்பான்மையுடன் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு மத்தியில் வாழ்கின்ற முஸ்லிம்கள், தங்களது சமூக, அரசியல் தோற்றப்பாடு (இமேஜ்) இதனால் எவ்வாறு பாதிக்கப்படும் என்பது குறித்து சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றார்கள்.   

அரசியல் செயற்பாட்டுத் தளத்தில் செயற்பட்டுக் கொண்டிருப்போர், அளவுகடந்த உற்சாகத்தாலும் ஆத்திரத்தாலும் செய்கின்ற காரியங்கள், நீண்டகால அடிப்படையில் ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும்.   மிகமுக்கியமாக, தார்மீகம் - ஜனநாயகம் - சட்டம் ஒழுங்கு ஆகியவற்றுக்கிடையில் இருக்கின்ற தொடர்புகளையும் வேறுபாடுகளையும் சரியாக அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.   

ஒருவருக்கு இருக்கின்ற நியாயங்கள், இன்னுமொருவருக்கு நியாயமாக இருக்க வேண்டியதில்லை என்பதையும், எல்லாக் காரணங்களும் எல்லா வேளைகளையும் நியாயங்களாக அமைந்துவிட மாட்டாது என்பதையும் முஸ்லிம் சமூகம் இனியும் புரிந்துகொள்ளாமல் இருக்க முடியாது.   

மக்களின் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டு, இன்னும் தங்களது தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல் இருக்கின்ற அரசியல்வாதிகளுக்கு, சில விடயங்களை உணர்த்த வேண்டியிருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால், அதற்காக முஸ்லிம்கள் வன்முறையைக் கையிலெடுப்பதுடன், ஜனநாயகத்தைக் கேள்விக்குட்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது ஆரோக்கியமானதல்ல.   

சட்டத்தை அமுலாக்கும் தரப்பினர் முஸ்லிம்கள் கெடுபிடிகளைப் பிரயோகிப்பதற்கும் அதனூடாக நாம் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கும் இவ்வகைச் செயற்பாடுகள் காரணமாகி விடக் கூடும்.   
கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தல்களின்போது, அரசியல் கட்சிகளுக்கு இடையில் மட்டுமன்றி, உள்ளூரில் பல குடும்பங்களுக்கு இடையிலும் ஏற்பட்ட மனக் கசப்புகளும் இழப்புகளும் இன்றைய அரசியல் செயற்பாட்டாளர்களுக்குப் பாடமாக அமைய வேண்டும்.   

2000ஆம் ஆண்டு ஆரம்பத்தில், அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நடைபெற்ற, பிரதான முஸ்லிம் கட்சியின் கூட்டத்தைக் குழப்ப முயன்றார்கள் என்ற சாட்டில், அவர்கள் மீது நடாத்தப்பட்ட இறப்பர்குண்டு துப்பாக்கிப் பிரயோகத்தில், பலர் காயமடைந்ததுடன் இன்றுவரை பலர், உடம்புக்குள் தோட்டாத் துகள்களுடன் இருக்கின்றனர்.   

பின்னர், வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு வரும்வழியில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கட்சியொன்றின் ஆதரவாளர் உயிரிழந்தார்.  

அரசியல் வன்முறையாளர்களிடம் இருந்து பாதுகாப்புப் பெறும் தோரணையில், கிழக்கிலுள்ள ஒரு பள்ளிவாலுக்குள் கூடிய பொதுமக்கள் மீது, பாதுகாப்புத் தரப்பினர் கண்ணீர்ப்புகைக் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர்; பலர் கைது செய்யப்பட்டனர். பல வருடங்களாக இந்த வழக்கு இடம்பெற்றது.   

இவ்வாறு, ஒவ்வோர் ஊரிலும் ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன. அரசியல் கட்சிகளுக்குப் பின்னால் போனதால் கை, கால் இழந்தவர்கள், குடும்பத்தினருடன் முரண்பட்டவர்கள் என்று ஏகப்பட்ட கசப்பான அனுபவங்கள், நமக்கு முன்னே இருக்கின்ற போது, நாம் இன்னும் சிறுபிள்ளைகள் போல நடந்து கொள்ள முடியாது.   

முஸ்லிம் அரசியல் செயற்பாடுகளை, ஏனைய சமூகங்களும் சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை எப்போதும் மறந்து விடக்கூடாது.  

இந்நிலையில், குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு அல்லது அரசியல்வாதிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்ற தோரணையில் கூச்சல் போடுதல், கூட்டத்தைக் குழப்புதல், மல்லுக்கு நிற்றல், சலசலப்பை ஏற்படுத்துதல் என்பன, அரசியலில் சாதரணமான, வாடிக்கையான நிகழ்வுகள்தான். ஆனால், அதன் பின்விளைவுகளைச் சிந்தித்துப் பக்குவமாகச் செயலாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.   

இவ்வாறான நிலைமைகளின் போது, காயம் முதற்கொண்டு, உயிரிழப்புகள் வரை பலவற்றை நாம் சந்திக்க நேரிடலாம். “எமது அரசியல் பிரசாரத்தை குழப்புகின்றார்கள்” என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்து, இரண்டு வேட்பாளர்களையும் இருபது ஆதரவாளர்களையும் சிறையிலடைத்தால், தேர்தல் காரியங்களை யார் மேற்கொள்வது என்பது பற்றிச் சிந்திக்காது செயலாற்ற முடியாது.   

அதேபோன்று, சிங்கள மற்றும் தமிழ்ச் சமூகங்கள், முஸ்லிம்களின் அரசியல் போக்கை உன்னிப்பாக நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.   

மிக முக்கியமாக, “யாரும் எங்கள் ஊருக்குள் வர முடியாது; தேர்தல் பிரசாரத்தை நடாத்த விடமாட்டோம்” என்று சொல்லிக் கொண்டு, எதிர்ப்புக்காட்டல்களை முஸ்லிம்கள் மேற்கொள்ளும் போது, பாதுகாப்புத் தரப்பினர் எல்லா நேரத்திலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்க முடியாது என்பதையும் நாமறிவோம்.   

கடந்த காலத்தில், சிலவேளை துப்பாக்கியின் துணைகொண்டு, சட்டம் நிலைநாட்டப்பட்டதையும் நாம் மறந்து விடவில்லை.   

ஆனால், குறிப்பாக கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள், எதனால் உருவாகியிருக்கின்றன, இதனது தோற்றுவாய் என்ன என்பதையும், இதன் விளைவு என்னவாக இருக்கக் கூடும் என்பதையும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள, இந்தச் சலசலப்புகளில் நிறையவே மறைமுகச் செய்தி இருக்கின்றது.   

தலைவர்களைத் தலையில் வைத்துக் கொண்டாடிய சமூகம், இந்தளவுக்கு வெறுப்படைந்து வருகின்றது என்றால், அது வெறுமனே எதிர்க்கட்சிகளின் சதி என்று மட்டும் காரணம் கற்பிக்க முடியாது. அதற்கு, அடிப்படைக்காரணம் தாங்கள் விட்ட தவறு என்பதை, முஸ்லிம் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.   

எது எப்படியிருந்தாலும், அரசியல்வாதிகள் போல, பொறுப்பற்ற தனமாக முஸ்லிம் மக்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் நடந்து கொள்ள இயலாது என்பதையே இங்கு அழுத்தமாக உரைக்க விரும்புகின்றோம்.   

இது சுதந்திரமுள்ள ஜனநாயக நாடு. எந்த அரசியல்வாதிக்கும் எங்கு செல்வதற்கும் தமது அரசியல் நிலைப்பாடுகளைப் பேசுவதற்கும் உரிமையிருக்கின்றது.   

அதேபோல, அந்த அரசியல்வாதிகளின் நிலைப்பாடுகளை ஏற்கவும் மறுக்கவும் வாக்காளப் பெருமக்களுக்கு அதிகாரம் உள்ளது. இதில் சண்டை போடுவதற்கும் குழப்பம் விளைவிப்பதற்கும் ஒன்றுமில்லை   
எனவே, இவ்விடயத்தில் முஸ்லிம்கள் மிகவும் பக்குவமாகவும் நாகரிகமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

தமது மனங்களில் இருக்கின்ற அதிருப்தியை வெளிப்படுத்துதல் என்ற தோரணையில், ஜனநாயகத்தையும் சட்டம் ஒழுங்கையும் தர்மசங்கடத்துக்குள் சிக்கவைக்கின்ற செயற்பாடுகளை, எந்தக் கட்சியின் ஆதரவாளர்களும் மேற்கொள்வதில் இருந்து தவிர்த்துக் கொள்வது இன்றைய காலகட்டத்தில் அவசியமாக இருக்கின்றது.   

இது தேர்தல் காலம். எனவே, எந்த அரசியல்வாதி வேண்டுமென்றாலும் வரட்டும்; என்ன வேண்டுமென்றாலும் பேசட்டும்; உங்களுக்கு விருப்பமிருந்தால் கேளுங்கள்; இல்லாவிட்டால் அங்கிருந்து அகன்று விடுங்கள். அவருடைய தேர்தல் பிரசாரத்தைக் கடந்தகால அனுபவத்தினூடு நோக்குங்கள். 

அந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது உங்களுக்குச் சரி என்று தோன்றினால் வாக்களியுங்கள். இல்லாவிட்டால், மாற்றுத் தெரிவை மேற்கொள்ளுங்கள்.   

எதற்காகவும் ஆத்திரப்படத் தேவையில்லை. மாறாக, ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியின் போக்கு, எந்த ஊரைச் சேர்ந்த முஸ்லிம்களுக்காவது பிடிக்கவில்லை என்றால், அந்தக் கூட்டத்துக்குச் செல்லாமல் தவிர்த்து விடுவதற்கு முடியும். ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற ஜனநாயக உரிமையையும், சட்ட ஏற்பாடுகளையும் மனதில் கொண்டு, அவரது கருத்துகளுக்கு மாற்றுக் கட்சிக்காரர்கள் தமது மேடையிலேயே பதிலளிக்கலாம்.   

மிக முக்கியமாக, வாக்காளர்களைத் தம்வசப்படுத்தி, வாக்கு எனும் மிகப் பலம்பொருந்திய ஆயுதத்தின் மூலம், பொருத்தமற்ற அரசியல்வாதிகளுக்குப் பாடம்புகட்ட வாய்ப்பிருக்கின்ற போது, சண்டை சச்சரவுகளும் கூச்சல் குழப்பங்களும் அநாவசியமானவை.   

இது முஸ்லிம் அரசியல் பற்றிய ஒட்டுமொத்தத் தோற்றப்பாட்டை, மிக மோசமாகக் காண்பிக்க காரணமாகிவிடும். ஆற அமர்ந்திருந்து, ஆழமாகச் சிந்தித்தால், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் எல்லாம் புரியும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .