2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சிங்கப்பூர் மாநாடும் எதிர்பார்ப்புகளும்

Editorial   / 2018 ஜூன் 25 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கும் இடையில், அண்மையில் நடந்து முடிந்துள்ள சிங்கப்பூர் சந்திப்பு, பலதரப்பினரின் கவனத்தை ஈர்த்திருந்தது. இப்பேச்சுவார்த்தை, ஐ.அமெரிக்க - வட கொரிய உறவுகளை மீளப்புதுப்பிக்கும் எதிர்பார்ப்புடனேயே மேற்கொள்ளப்பட்ட போதிலும், சந்திப்பில் முழுமையாக உடன்பாடு எட்டப்பட்டது எனச் சொல்லுமளவுக்கு, எதுவுமே இருந்திருக்கவில்லை.

உண்மையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வடகொரியத் தலைவர் கிம், வடகொரியாவுக்கான - UNGJIN கொள்கையை நடைமுறைப்படுத்தியிருந்தார்.  அது, வடகொரியாவின் அணுசக்தி இராணுவ அமைப்பு, சிவிலியன் பொருளாதாரத்தின் இணை அபிவிருத்தியை மையமாகக் கொண்டு, அதன் பிரகாரம் பேச்சுவார்த்தை நிகழ்ச்சிநிரலில் ஐ.அமெரிக்காவை உட்கார வைக்கும் ஒரு வழியாகும் என, ஏற்கனவே ஐ.அமெரிக்க செனட் அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

கிம்முக்கு, ஐ.அமெரிக்கா தொடர்பான வெற்றிக்கு தனது அரசாங்கத்தை நீண்ட காலம் நிலைத்து வைத்திருப்பதில் முக்கியமானது: சீன, ரஷ்யக் கூட்டமைப்பில் வடகொரியா இடம்பெறுவதற்கு, வடகொரியா தனது பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கை, சீன - ரஷ்ய சந்தைக்கு செலுத்துவதைத் தீர்க்கக்கூடிய ஓரே ஒரு வழி, முத்தரப்பு வியாபாரத்தை ஊக்குவித்தலாகும் எனும் அவசியத்தையும், வடகொரியா அரசாங்கம் உணர்ந்திருந்தது. இந்நிலையில், பழைய சீன - ரஷ்ய உறவு, வியாபார நிலுவைகளின் எவ்விதத் தொந்தரவுகளையும் மேற்கொள்ளாது, மூன்றாவது அணியுடன் இணங்கிச்செல்லும் இராஜதந்திர முனைப்பின் ஒரு பகுதியாகவே, வடகொரியா, ஐ.அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருந்தது.

இதற்கு, ஒபாமா நிர்வாகம், தென்கொரியாவுடன் கொண்டிருந்த நெருங்கிய இராணுவ வல்லமையும் ஒரு காரணமாக இருந்தது. ஹிலாரி கிளிண்டன், ஐ.அமெரிக்க இராஜாங்கச் செயலாளராக பதவியேற்றதுடன், ஐ.அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் ஒரு பாரம்பரிய இராஜதந்திர முறையைத் தாண்டிய ஒரு நுட்பமான முறைமையைக் கையாண்டிருந்தார். அதன்படி அவரது கொள்கை, வடகொரியாவையும் ரஷ்யாவையும், நீண்டகாலத்துக்கு சர்வதேச விவகாரங்களில் இருந்து ஒதுக்கிவைத்தல், தனிமைப்படுத்துதல் - அதன் மூலமாக, வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் எதிரான பலமானதோர் ஐரோப்பிய ஒன்றியம் - ஐ.அமெரிக்கா தலைமையிலான கூட்டணியை உருவாக்குதல் என்பதாகும். அந்நடவடிக்கை அக்காலகட்டத்தில், புதிய பனிப்போரை வெல்வதற்கான நடைமுறையாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

இந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஒபாமா நிர்வாகம், வலுவான இராணுவ மூலோபாய நடவடிக்கையை, தென்கொரியாவுடன் இணைந்து செயற்பட்டிருந்தது. அந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக கணிசமான அளவு ஐ.அமெரிக்க இராணுவம் தென்கொரிய, ஜப்பான் எல்லைப்பரப்புகளில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையானது, வடகொரியாவுக்கு தனது மூலோபாயத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவரவேண்டிய நெருக்கத்தைக் கொடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, 2011 இல் கிம் ஜொங் II-இன் மரணம், வடகொரியாவை, அதன் நிலைத்த தன்மையில் பேணுவதற்கு மேலதிக நெருக்கத்தைக் கொடுத்திருந்தது. அந்நிலையில் ஒரு நேர்மையான மற்றும் சாத்தியமற்ற ஆட்சி மாற்றத்துக்கான தேவைப்பாடுகள் இருந்தும், தென்கொரியாவும் ஐ.அமெரிக்காவும், அம்மாற்றத்துக்காக வெளிப்படையாகத் தலையிடவில்லை. அதன் பிரகாரமே, தற்போதைய தலைவர் தெரிவானதை தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், கிம் ஜொங்-உன் தலைமையிலான தேசிய இராணுவ ஆணையம், ஒரு நிலையான மறுமலர்ச்சி செயன்முறையைத் தொடங்கத் தயாராக இருப்பதாகக் கூறியது. அந்த நேரத்தில் ஆறு நாடுகள் உள்ளடங்கலான (சீனா, ரஷ்யா, தென்கொரியா, ஜப்பான் ஐ.அமெரிக்கா, வடகொரியா) பேச்சுவார்த்தைகளின் புதுப்பித்தல், வடகொரியாவுக்குச் சாத்தியமானதாக இருந்திருக்கும், ஆனால் அதனைத் தவிர்த்து, ஐ.அமெரிக்காவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையொன்றுக்குச் செல்வதையே, வடகொரியா மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக விரும்பியிருந்தது. இதன் பிரகாரமே, ஐ.அமெரிக்க - வடகொரியா பேச்சுவார்த்தை அண்மையில் சாத்தியமானதெனலாம்.

வடகொரியா, இந்நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் சாதித்தது என்னவெனில், முதலும் முக்கியமானதுமான ஐ.அமெரிக்க விரோதக் கொள்கையின் நிறுத்தம், இப்பேச்சுவார்ததை மூலம் சாத்தியமானது. இது, வடகொரியாவுக்கு எதிரான அரசியல், பொருளாதார, இராணுவப் பதற்றத்தைத் தவிர்க்கும் ஒரு நிலைப்பாடாகும் என்பதுடன், வடகொரியா அதன் பிராந்தியத்தில் இறையாண்மை மீதான முழு அதிகாரபூர்வ அங்கிகாரத்தையும், 1953 யுத்த நிறுத்தத்தை ஒரு சமாதான உடன்படிக்கைக்கு மாற்றாகவும் பெற முயல்வதற்கு இந்நிலை வெகுவாகவே உதவும் என வடகொரியா கணக்கிடுகின்றது. மேலும் இது, இறுதியாக அனைத்து பொருளாதாரத் தடைகளையும் முடிவுக்கு கொண்டுவரவும் உதவும் என வடகொரியா நம்புகின்றது.

ஐ.அமெரிக்காவைப் பொறுத்தவரை, வட, தென் கொரியாக்களுக்கு இடையேயான பாரம்பரிய பதற்றம் குறைக்கப்படுவது, பசுபிக்கில் இருந்து மத்தியதரைக்கடலின் எல்லைகள் தொடங்கி, தெற்கு பசிபிக், இந்திய பெருங்கடல் மற்றும் பாரசீக வளைகுடாவின் முழுப் பகுதியிலும் செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஐ.அமெரிக்க இராணுவத் தளங்களை நிறுவுவதில் அவசியமானதாகும். இது ஐ.அமெரிக்கா, மத்திய ஆசியப் பிராந்தியத்தில் மூலோபாயப் பங்காளராக உருவாக்கக்கூடிய நிலையை உருவாகும் என ஐ.அமெரிக்கா நம்புகின்றது. இச்செயற்பாடு, மத்திய ஆசியப் பிராந்தியத்தின் தெற்கில் - அதன் கடல் எல்லையில் -  சீனாவைப் பலவீனப்படுத்தக்கூடும் செயற்பாடாக அமையும் எனவும் ஐ.அமெரிக்கா நம்புகின்றது. ரஷ்யக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை, இது ரஷ்யாவின் கடல் எல்லைகளை வெகுவாகக் குறைக்கும். எனினும், ரஷ்யா இப்போதுள்ள நிலையில் ஐ.அமெரிக்காவை நேரடியாக ஆசியப் பிராந்தியத்தில் எதிர்ப்பதற்கு விரும்பவில்லை என்பதையும் ஐ.அமெரிக்கா உணர்ந்ததாகவே உள்ளது.

இவ்வாறான பூகோள-அரசியல், மூலோபாய நகர்வுகளின் மத்தியிலேயே குறித்த சந்திப்பு நடைபெற்றமை, இன்னும் கூர்மையாகக் கவனிக்கப்படவேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .