2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சிங்களவரும் தமிழரும் அரசியலும்

என்.கே. அஷோக்பரன்   / 2019 ஏப்ரல் 01 , பி.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 189)

இலங்கைத் ‘தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் என்ன’ என்ற இந்தத் தேடலுக்கான பதிலாக, ‘தேசியம், தாயகம், சுயநிர்ணயம்’ என்பவை, திம்புக் கோட்பாடுகளினூடாக முன்னிறுத்தப்பட்டன.  

ஆனால், ‘தேசியம்’, ‘தாயகம்’, ‘சுயநிர்ணயம்’ என்ற கோட்பாடுகள், மேலோட்டமாகப் புரிந்துகொள்ளப்பட முடியாதவை. அத்துடன் அவை, மிக ஆழமானதும் சிக்கலானவையும் ஆகும். அரசறிவியல் தத்துவார்த்த மற்றும் சட்டப் பார்வையில், பல்வேறுபட்ட சிந்தனைகளுக்கும் பொருள்கோடலுக்கும் உட்பட்டவை என்பதையும் கடந்த சில வாரத் தேடலில், நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.   

‘தேசியம், தாயகம், சுயநிர்ணயம்’ என்ற அரசியல் அபிலாஷைகளும் அந்த அபிலாஷைகளை அடையப் பெறுவதற்கான கோரிக்கைகளும் முயற்சிகளும் பிரயத்தனங்களும் புதுமையானவையோ, தவறானவையோ, அபத்தமானவையோ, அர்த்தமற்றவையோ அல்ல.  

‘மனிதன் ஓர் அரசியல் விலங்கு’ என்று கிரேக்க அறிஞர் அரிஸ்டொட்டிலின் ‘அரசியல்’ என்ற நூல் குறிப்பிடுகிறது. ஆகவே, அந்த அரசியல் விலங்கு, அரசியல் அபிலாஷைகளை அடையப் பெறுவதற்காக, எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பதை, உலக வரலாற்றை அறிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள். அதிலும், தான் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாக உணரும் ஒரு மக்கள் தொகுதி, அந்த அடக்குமுறையைத்  தகர்த்தெறிய, எத்தகைய எல்லைக்கும் செல்லும்.   

உலக வரலாற்றில் நடந்த விடுதலைப் போராட்டங்கள் அனைத்தும், இந்த உணர்வுக்குச் சான்று பகரும். இந்த மனிதத் தொகுதிகளின் சுதந்திர தாகத்தை, 1320இல் ஸ்கொட்லாந்தின் விடுதலைப் பிரகடனமான ‘ஆப்ரோத் பிரகடனம்’ பின்வருமாறு உரைக்கிறது: ‘எம்மில் ஒரு நூறு பேரேனும் உயிரோடு உள்ளவரை, நாம் எந்த நிலையிலும், ஆங்கிலேயரின் ஆட்சிக்குக் கீழ் கொண்டுவரப்பட மாட்டோம். உண்மை யாதெனில், நாம் புகழுக்காகவோ, செல்வத்துக்காகவோ, பெருமைக்காகவோ போராடவில்லை; நாம் சுதந்திரத்துக்காகப் போராடுகிறோம்; அதற்காக மட்டுமே போராடுகிறோம். எந்த நேர்மையான மனிதனும் தன்னுயிரை விட்டுக் கொடுப்பானேயன்றி, சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க மாட்டான்’. ஆகவே, தன்னுடைய சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாத்துக்கொள்ள, வரலாற்றுக் காலம் முதல், மனிதன் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவனாக இருந்தான்.   

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கான முதற்படி, இலங்கையின் இன முரண்பாடு, இனப்பிரச்சினையாகி, போராட்டமாகி, யுத்தமாகியதன் காரணத்தை, நாம் ஒதுக்கீடுகளின்றிப் புரிந்துகொள்ள வேண்டும்.   

இந்தத் தீவு, நாடு, அரசு, தேசம் பற்றி, இந்த நாட்டின் இரண்டு மக்கள் தொகுதிகளிடையே வித்தியாசமான புரிதல் இருப்பதை, அந்த யதார்த்தத்தை, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.   

இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்களவர்கள் (சிங்கள- பௌத்தர்கள்), இந்த நாடு பற்றிக் கொண்டுள்ள புரிதலுக்கும், தமிழர்கள், இந்த நாடு பற்றிக் கொண்டுள்ள புரிதலுக்கும் இடையில் வேறுபாடும், இடைவௌியும் இருக்கிறது. இந்த வேறுபாடும், இடைவௌியும்தான் இனப்பிரச்சினையின் அடிப்படை.  

இந்த இடைவௌியையும் வேறுபாட்டையும் பற்றி ஆராய முன்பதாக, இன்னோர் அடிப்படை விடயத்தை, நாம் தௌிவாக வரையறுத்துக் கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர்களின், ‘தேசியம், தாயகம், சுயநிர்ணயத்தை’ மறுப்போர், அடிப்படையில் ‘இலங்கைத் தமிழர்’ என்ற ஒரு மக்கள் தொகுதி அடையாளத்தை, கேள்விக்கு உட்படுத்துகிறார்கள்.   

ஆகவே, இது தொடர்பில் அடிப்படைத் தௌிவு மிக அவசியமானதாகும். ‘இலங்கைத் தமிழர்’ என்ற மக்கள் தொகுதி அடையாளம் பற்றி, ‘இலங்கைத் தமிழர் யார், எவர்?’ என்ற தன்னுடைய குறுநூலொன்றில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, இலங்கைத் தமிழரை, அரசியல் ஒருமைத் தன்மையுள்ள குழு என்று அடையாளம் காண்பதுடன், பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ‘இலங்கைத் தமிழர் என்ற எண்ணக்கருவுக்குள் காணப்பட்ட (இப்பொழுது பெரிதும் அருகிவிட்டதெனினும் ஓரளவு தொடர்ந்து) காணப்படுகின்ற, பன்முகப்பாட்டை, நன்கு உணர்ந்து கொள்ளல் அவசியமாகும். இலங்கைத் தமிழர் என்ற அரசியல் யதார்த்தம், புலப்படவேண்டுமெனில், இந்த அக வேறுபாடுகள் பற்றிய தெளிவும் புரிந்துணர்வும் அவசியமாகும். இலங்கை என்னும் புவியியல் அலகு, இந்திய உபகண்டத்தோடு ஒப்புநோக்கும்பொழுது, மிகச்சிறிய தீவாகும். எனினும், இதனுடைய புவியியல், வரலாறு ஆகியன காரணமாக, மிக அண்மைக்காலம் வரை, பிரதேச நிலைப்பட்ட ஒரு பன்முகப்பாடு நிலவி வந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளல் வேண்டும். அத்துடன், இலங்கைத் தமிழர் என்பது, ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களையே, பிரதானமாகக் கருதும் (கருதவேண்டும்) என்ற மனப்பாங்கை விடுத்து, பிரதேச வேறுபாடுகளை அங்கிகரித்து, பன்மைப்பாட்டுக்குள் ஒற்றுமை காணும் மனப்பாங்கை வளர்த்தல் வேண்டும்’ என்று அவர் உரைக்கிறார்.  

தன்னை ஒரு தனித்துவமான, அடையாளம் கொண்ட சமூகமாக, ஒருமைப்படுத்தப்பட்ட ஓர் அடையாளத்தின் கீழ், ஒன்று திரண்டுள்ள ஒரு மக்கள் தொகுதியை, வெறும் தொழில்நுட்பக் காரணங்களைச் சுட்டி, அந்த அடையாளத்தின் வலுவைக் கேள்விக்கு உட்படுத்த முடியாது.   

ஆகவே, ‘சிங்கள- பௌத்தம்’ என்பது, எவ்வாறு அரசியல், சமூக ரீதியில் ஒரு வலுவுள்ள மக்கள் தொகுதி அடையாளமோ, அதைப் போலவே, ‘இலங்கைத் தமிழர்’ என்பதும் அரசியல் சமூக ரீதியில், ஒரு வலுவுள்ள மக்கள் தொகுதிக்குரிய அடையாளம். இதை மறுப்பதில், எதுவித நியாயங்களும் இல்லை.   

ஆகவே, இலங்கை என்ற இந்தத் தீவில், குறைந்தபட்சம் ‘சிங்கள -பௌத்தம்’ மற்றும் ‘இலங்கை தமிழர்’ என்ற இரண்டு அரசியல், சமூக ரீதியில் கட்டமைந்த மக்கள் தொகுதிகள் இருக்கின்றன. இந்த இரண்டு மக்கள் தொகுதிகளும் இணக்கப்பாட்டுடனும் சமாதானத்துடனும் நட்புறவுடனும் அனுசரணையுடனும் இந்தத் தீவில் வாழவேண்டும் என்பதுதான், உயர் இலட்சிய நோக்காக இருக்க முடியும்.   

ஆனால், இந்த இரண்டு மக்கள் தொகுதிகளும் இந்தத் தீவின் அரசியல் ரீதியான கட்டமைவு பற்றிய வேறுபட்ட, சிலவேளைகளில் ஒன்றுக்கொன்று முரணான அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.   

1997ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி, ‘மாவீரர் தின’ உரையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:   

“சிங்களத் தேசம், இன்னும் மகாவம்ச மனவுலகில், அந்தப் புராணக் கருத்துலகில் புதைந்துபோய்க் கிடக்கிறது. இலங்கைத் தீவானது, தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும், சிங்கள இனத்துக்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைகதையில், சிங்கள மக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கிறார்கள். அடிமனதில் ஆழமாக உறைந்து, அசைவற்றதாக இறுகிப்போன இந்தப் புராணக் கருத்து நிலையிலிருந்து, சிங்களத் தேசம் விடுபடப் போவதில்லை. இந்தக் கருத்தியற் குருட்டுத்தனத்தால், இலங்கைத் தீவின் உண்மை வரலாற்றையும் அங்கு நிலவும் சமுதாய மெய்நிலைகளையும் சிங்கள மக்களாலும் அவர்களது அரசியல், மதத் தலைமைகளாலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இலங்கைத் தீவின் வடகிழக்கு மாநிலத்தைத் தாயகத் தேசமாகக் கொண்டு, தமிழீழ மக்கள் என்ற வரலாற்றுத் தொன்மைமிக்க ஓர் இனம் இருப்பதையும் அவர்கள் ஒரு தனித்துவத் தேசமாக வாழ்ந்து வருவதையும் அவர்களுக்கு அடிப்படையான அரசியல் உரிமைகள், சுதந்திரங்கள் உள்ளன என்பதையும் சிங்களவரால் புரிந்துகொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை. தமிழரது இருப்பு நிலைபற்றிய உண்மையைக் கிரகித்து, அவர்களது அரசியல் அபிலாஷைகளைப் புரிந்துகொள்ளச் சிங்களத்தேசம் மறுத்து வருவதாலேயே தமிழ்மக்களது தேசிய இனப்பிரச்சினை தீர்வின்றி, முடிவின்றிச் சிக்கலடைந்து இழுபட்டு வருகிறது. சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியல் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள - பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்துபோகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது. தென்னிலங்கை அரசியல் களத்தில், அதன் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. இப்படியான புறநிலையில், தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்குச் சிங்களத் தேசத்திலிருந்து ஒரு நீதியான, நியாயமான தீர்வு கிட்டுமென அன்றும் சரி, இன்றும் சரி, நாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.”  

2007ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி, தான் நிகழ்த்திய ‘மாவீரர் தின’ உரையில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “தமிழரின் தேசியப் பிரச்சினையை, நீதியான முறையில் சமாதான வழியில் தீர்த்துவைப்பதற்கான அரசியல் நேர்மையும் உறுதிப்பாடும் தென்னிலங்கையில் எந்த அரசியல் கட்சியிடமும் இல்லையென்பது, கடந்த 60 ஆண்டுகளில் தெட்டத்தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும், தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கிகரிக்கவும் தென்னிலங்கைக் கட்சிகள் தயாரில்லையென்பதும் இன்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என ஆளும்கட்சி அடம்பிடிப்பதும் தீர்வுத்திட்டமே வேண்டாம் என மஞ்சள், சிவப்புக் கட்சிகள் பிடிவாதமாக நிற்பதும், கடந்தகால நிலைப்பாடுகளிலிருந்து குத்துக்கரணம் அடித்து, அரசாங்கத்தின் போர் நடவடிக்கைக்கும் ஆதரவு, சமாதான முயற்சிகளுக்கும் ஆதரவு எனப் பிரதான எதிர்க்கட்சி எதையும் தெளிவாகக் கூறாது இழுவல் மொழியில் நழுவிக் கண்ணாம்பூச்சி விளையாடுவதும் இதனைத்தான் தெளிவுபடுத்துகின்றன. இதன்மூலம், சிங்கள அரசியல் கட்சிகள் அனைத்தும், அடிப்படையில் தமிழின விரோதப் பேரினவாதக் கட்சிகள் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான இனவாதக் கட்சிகளிடமிருந்து தீர்வை யாரும் எதிர்பார்த்தால், அது அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று”.  

ஒரு தசாப்தகால இடைவௌியில் நிகழ்த்தப்பட்ட இந்த இரு உரைகளிலும், இலங்கைத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை அடைவதிலும், இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதிலும் உள்ள முக்கிய சிக்கலொன்றைப் பறை சாற்றி நிற்கிறது.   

அதாவது, சிங்கள-பௌத்த மக்கள் தொகுதியின் அரசியல் அபிலாஷைகளும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கும் இடையிலான இடைவௌி, முரண்பாடுகள், ஏற்பிலாத்தன்மை என்பவை, சுருக்கமாகக் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளன. இந்த இடைவௌி, முரண்பாடுகள், ஏற்பிலாத்தன்மையால் விளைந்த இனப்பிரச்சினையானது, பெரும்பான்மை எண்ணிக்கைப் பலம் கொண்ட மக்கள் கூட்டம், தாராளவாத ஜனநாயக அரசியல் கட்டமைப்பைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததும், அதன் விளைவாகப் பெரும்பான்மை எண்ணிக்கை பலமற்றிருந்த மற்றைய மக்கள் ​தொகுதியானது அரசியல், சமூக அடக்குமுறைக்கு உள்ளானதும், அந்த அடக்குமுறைத் தளையைக் களைய, அந்த மக்கள் தொகுதி, அரசியல் ரீதியிலான பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொண்டதும், அது பலனளிக்காத போது ஆயுத வழியை நாடியதும், அந்த ஆயுதவழியும் தோற்கடிக்கப்பட்டதும் சுதந்திர இலங்கையின் இனப்பிரச்சினையின் வரலாற்றுச் சுருக்கமாகும்.  

 ஆனாலும் அன்றும், இன்றும் இந்தப் பிரச்சினையின் மூலம் மாறவில்லை. அப்படியானால், ஒன்றுக்கொன்று வித்தியாசமான, முரண்பட்ட, ஏற்பிலாத் தன்மையுடைய அரசியல் அபிலாஷைகளைக் கொண்ட இரண்டு மக்கள் தொகுதிகளிடையே மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவது எப்படி? அது சாத்தியமா? பிரிவினைதான் ஒரே வழியா?   

தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளை அடைந்துகொள்ள, பிரிவினையும் தனிநாடும்தான் ஒரே வழியா? இலங்கை என்ற ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் தமிழ் மக்களின் ‘தேசியம், தாயகம், சுயநிர்ணயம்’ என்பவை பூர்த்திசெய்யப்பட முடியுமா? என்ற கேள்விகளுக்கான பதில், இந்தத் தொடரின் தேடலைப் பூர்த்தி செய்வதாக அமையும்.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .