2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிறிசேனவை நீக்குதல் பொருத்தமானதா?

Gopikrishna Kanagalingam   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய நடவடிக்கைகளுக்கு மத்தியில், பெருங்குற்றப் பிரேரணை அல்லது impeachment தொடர்பாக, பரவலாகக் கலந்துரையாடப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இப்படியான உரையாடல்கள், ஆச்சரியமளிப்பனவாக இல்லை. ஜனாதிபதி சிறிசேனவுக்கு, சந்தேகத்தின் பலனை வழங்கியவர்களைக் கூட, எதிரானவர்களாக மாற்றுமளவுக்கு, ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.  

ஆனால், ஜனாதிபதியை அவ்வாறு பதவி நீக்குவது, பொருத்தமானதா, சரியானதா என்ற கேள்விகளும் எழுவதைக் காணக்கூடியதாக உள்ளது. ஜனாதிபதி சிறிசேன மீதான விமர்சனங்களில் அத்தனை நியாயப்பாடுகள் இருந்தாலும், அவரைப் பதவி நீக்குவது, நாட்டைப் பொறுத்தவரையில் பொருத்தமாக அமையுமா என்ற கேள்வி, சிறிது ஆழமாக ஆராயப்பட வேண்டிய ஒரு கேள்வியாகும்.  

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, இனிமேல் தான் வரவிருக்கின்ற நிலைமையில், அரசமைப்பை ஜனாதிபதி மீறினாரா, இல்லையா என்பது, நீதிமன்றத்தின் தீர்ப்பை அடிப்படையாக வைத்துக் கூறமுடியாத ஒன்றாகத் தான் இருக்கிறது. ஆனால், சட்டத்தை ஆராய்ந்த நிபுணர்கள் அனைவரினதும் கருத்துப்படி, அரசமைப்பை, ஜனாதிபதி மீறியிருக்கிறார். ஒரு தடவையல்ல, ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் அவர் மீறியிருக்கிறார்.  
பெருங்குற்றப் பிரேரணையொன்றைச் சமர்ப்பிப்பது தொடர்பில், அரசமைப்பின் உறுப்புரை 38 (2)இல், விளக்கங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதில் முதலாவது காரணமே, “அரசமைப்பை வேண்டுமென்றே மீறிய குற்றம்” என்பது தான். அதேபோல், அதில் 4ஆவது விடமாக, “தனது பதவிக்குரிய அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்தமையை உள்ளடக்கிய துர்நடத்தைக்கான அல்லது ஊழலுக்கான குற்றம்” என்பது காணப்படுகிறது. எனவே, ஜனாதிபதியைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான விடயங்கள் பலமாக இருக்கின்றன.   

இவற்றுக்கு மேலதிகமாக, மனப் பலவீனம் என்பதுவும், ஒரு காரணமாக இருக்கிறது. அதைப் பற்றி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியின் அண்மைக்கால நடவடிக்கைகளும் கருத்துகளும், அவரின் திடத்தன்மை தொடர்பாக, உண்மையாகவே கேள்விகளை எழுப்புகின்ற போதிலும், “ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதற்கான மனப் பலத்தை மைத்திரிபால சிறிசேன கொண்டிருக்கவில்லை” என்ற முடிவு, எந்த உளவியலாளராலோ அல்லது வைத்தியராலோ வழங்கப்படுமென எதிர்பார்ப்பது கடினம். அத்தோடு, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள், மனப் பலத்தைக் காரணங்காட்டித் தப்பிக்க வழியேற்படுத்தவும் தேவையில்லை. எனவே, முன்னைய காரணங்களைப் பற்றி ஆராய்வதே அவசியமானது.  

அப்படியானால், எதற்காகத் தாமதிக்க வேண்டுமென்ற கேள்வி எழுகிறதா?  
ஜனாதிபதியைப் பதவியிலிருந்து விலக்க வேண்டுமாக இருந்தால், அது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் வழங்குகின்ற கடிதத்தில், மூன்றிலிரண்டு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட வேண்டும். இல்லாவிட்டால், ஆகக்குறைந்தது சாதாரண பெரும்பான்மையுடைய எண்ணிக்கையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு, அந்தக் குற்றச்சாட்டில் நியாயமிருக்கிறது என, சபாநாயகர் கருத வேண்டும்.  

நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள நிலைமையில், மூன்றிலிரண்டு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி சிறிசேனவுக்கு எதிராகத் திரும்புவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், சாதாரண பெரும்பான்மைக்கு வாய்ப்பிருக்கிறது. சபாநாயகர் கரு ஜயசூரியவும், அதற்கு ஆதரவளிக்க வைக்கப்படலாம். ஆனால், அதன் பின்னர், ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டு, 150 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு, அதற்குத் தேவைப்படும். மீண்டும், சாத்தியமே இல்லை என்ற நிலைமைக்கு, இந்தப் பிரேரணை வந்துவிட்டது.  

அதிசயமாக, அந்தப் பிரேரணைக்கு 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தாலும், அதன் பின்னர் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று, உயர்நீதிமன்றத்தால் அறிக்கையளிக்கப்படும். அந்த அறிக்கைக்கு, மீண்டும் 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும். எனவே, கடினமானது தான்.  

எனவே, இப்படியான சூழ்நிலையில், பெருங்குற்றப் பிரேரணையைக் கொண்டுவருதல் வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.  

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை ஒத்த செயற்பாடுகளை, ஜனாதிபதி சிறிசேன வெளிப்படுத்துகிறார் என, இப்பத்தியாளரால், சில வாரங்களுக்கு முன்னர் குறிப்பிடப்பட்டது. இதில், வெறும் தற்செயலாகவோ இல்லாவிட்டால் இருவரின் நடவடிக்கைகளின் விளைவாகவோ என்னவோ, ஜனாதிபதி ட்ரம்ப்பும், பெருங்குற்றப் பிரேரணையை எதிர்கொள்ளும் ஆபத்தைக் கொண்டிருக்கிறார். அந்த நாட்டின் பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றியுள்ள ஜனநாயகக் கட்சியினரும், பெருங்குற்றப் பிரேரணையைக் கொண்டுவந்து, ஜனாதிபதி ட்ரம்ப்பைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டுமா என்று ஆராய்ந்து வருகிறார்கள்.  

அங்கும், குறிப்பிட்ட ஒரு பிரிவினர், நீக்கியே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்க, இன்னும் சிலரோ, “இல்லையில்லை, அவசரப்படக்கூடாது” என்று, பொறுமைக்கான கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். எனவே, இரண்டு நாடுகளும், வெவ்வேறு மட்டத்திலான பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. ஆனால், ஐ.அமெரிக்காவின் பிரச்சினை, எங்களுக்கு முன்னர் ஆரம்பித்தது (பதவி விலக்க வேண்டுமென்ற கோரிக்கைகள், எங்களுக்கு முன்னரேயே எழுந்தன) என்ற அடிப்படையில், ஐ.அமெரிக்காவிடமிருந்து பாடத்தைப் பெறுவது அவசியமானது.  

இதில் முதலாவது பிரச்சினையாக, நடைமுறையை வைத்துப் பார்க்கும் போது, ஜனாதிபதி சிறிசேனவை நீக்குவதற்கான வாய்ப்புக் காணப்படவில்லை. போதுமான நாடாளுமன்ற ஆதரவு, அவ்வாறான முயற்சிக்குக் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே, எதற்காக அம்முயற்சியை எடுக்க வேண்டுமென்பது, முதலாவதும் முக்கியமானதுமான கேள்வி.  

அடுத்ததாக, பதவி நீக்குதலுக்கான பெருங்குற்றப் பிரேரணையென்பது, நீண்டகாலத்துக்கு இழுபட்டுச் செல்லக்கூடிய ஒன்று. பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கு ஆதரவு பெற்று, அதற்கான விவாதங்கள் இடம்பெற்று, உயர்நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற வேண்டும். அதன் பின்னர், அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து, வாக்கெடுப்பு இடம்பெற வேண்டும். இவை அனைத்தும், ஒரே நாளிலேயோ அல்லது ஒரே வாரத்திலேயோ நடந்து முடிந்துவிடப் போகின்ற விடயங்கள் கிடையாது. நாட்டின் அரசியல் நிலைமை, ஏற்கெனவே மோசமான நிலையில் இருக்கும் போது, இவ்வாறான முயற்சி தேவையானதா என்பது, அடுத்த கேள்வி. நாட்டின் பொருளாதாரம், ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்களைப் பற்றிக் கவலைப்படுவதற்கு யாருமில்லை என்ற நிலைமை தான் இருக்கிறது. இவற்றுக்கு மத்தியில், மீண்டும் மாதக் கணக்காக, அரசியல் குழப்பமொன்றை ஏற்படுத்துவது தேவையானது தானா?  

அதற்கடுத்து, ஜனாதிபதிக்கெதிரான இவ்வாறான பிரேரணை வெற்றியடையாவிட்டாலும் கூட, ஜனாதிபதிக்கான எதிர்ப்பை வெளிப்படுத்த இவற்றைப் பயன்படுத்த வேண்டுமென்ற வாதமும் இருக்கிறது. ஒரு வகையில், நியாயமான கருத்துத் தான். என்றாலும், அதன் பின்னர் என்ன நடக்கும் என்பதுவும் முக்கியமானதல்லவா? இலங்கையின் அரசியல் சூழல், “தேசப்பற்றாளர்”, “ஜனநாயகப் பற்றாளர்” என, தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்ளும் இரு பிரிவுகளாக, ஏற்கெனவே மாறியிருக்கிறது. இந்த இரண்டு பிரிவுகளும், தங்களுக்குள் மீண்டும் மோதிக் கொள்வதற்கான சூழலைத் தான், இது ஏற்படுத்தப் போகிறது.  

யதார்த்தங்களை மீறி, ஜனாதிபதியைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டார்கள் என்று வைத்துக்கொண்டாலும் கூட, அதன் பின்னர், பதவி நீக்கியவர்களுக்கு என்ன நடைபெறும் என்பதுவும் முக்கியமான கேள்வி. நாட்டில் தற்போது நிலவும் அரசியல் பிரச்சினையை, “உள்நாடு எதிர் வெளிநாடு”, “கிராமம் எதிர் மேட்டுக்குடி” என்ற வகையில் காட்டுவதில், ஜனாதிபதி சிறிசேன, ஓரளவுக்கு வெற்றிபெற்று விட்டார். எனவே, ஜனாதிபதி சிறிசேனவை நீக்கினாலும் கூட, “வெளிநாட்டின் ஆதரவுடன், கொழும்பிலுள்ள மேட்டுக்குடிகள், பொலன்னறுவையைச் சேர்ந்த கிராமத்தவரைப் பழிவாங்கிவிட்டார்கள்” என்ற பிரசாரம் தான் வலுப்பெற வாய்ப்பிருக்கிறது. இது, மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன போன்ற, சிங்கள - பௌத்த கடும்போக்குக் கொள்கையைப் பரப்ப முயலும் தரப்புகளுக்குத் தான் வாய்ப்பாக அமையும். அதேபோல், உண்மையான ஜனநாயக விருப்புடன் போராடிய தரப்புகள், பழிவாங்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.  

எனவே தான், இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்க்கும் போது, ஜனாதிபதித் தேர்தலுக்கு அதிகபட்சமாக 12 மாதங்கள் கூட இல்லாத சூழ்நிலையில், ஜனாதிபதி சிறிசேனவைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சியென்பது, நன்மைகளை விட, தீமைகளையே கொண்டுவந்து சேர்க்குமென்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, பதவி நீக்குவதில் கவனத்தைச் செலுத்துவதை விடுத்து, மாற்றுத் தலைமையொன்றை உருவாக்கவும், அந்த மாற்றுத் தலைமையை, மக்களிடத்தே கொண்டு சேர்க்கவும், ஜனநாயகத்தை விரும்பும் தரப்புகள் முயல்வது, பொருத்தமாக அமையும். அது தான், இலங்கைக்கும் பயன்தரக்கூடிய ஒரு விடயமாக இருக்கும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .