2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சிறுபான்மையினர் தீண்டத்தகாதவர்களா?

Editorial   / 2020 ஜனவரி 02 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இலட்சுமணன் 

சுபீட்சத்தையும் அதற்கு ஆணிவேரான இனஒற்றுமையையும் இலங்கைத் தீவில் கடைப்பிடிக்க, யாரும்  தயாராக இல்லை. 

பேரினவாதிகளின் ஆதிக்கத்தின்  அடிமைகளாக, சிறுபான்மையினர் இத்தீவில் வாழவேண்டும் என்ற இனவாத சிந்தனை, மேலும் வீரியத்துடன் பரவத் தொடங்கியுள்ளது.

அதன் எதிரொலியே, 2020 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சுதந்திர தினத்தில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சரின் கருத்தும் அதையொட்டிய பௌத்தத் துறவிகளின் கருத்துகளும் ஆகும். இன்றைய அரசியல் சூழலில், இந்தக் கருத்துகள், மற்றுமொரு பூகம்பமாக வெடித்துள்ளன.

உண்மையில், இலங்கையின் அரசமைப்பையும் அதை ஒட்டிய திருத்தச் சட்டங்களையும் பற்றிய அறிவில்லாதவர்கள், இனசௌயன்யத்தையும் புரிந்துணர்வுகளையும் பாதிக்கும் கருத்துகளை, சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் முரணாகத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

உண்மையில், இலங்கையின் அரசமைப்பில், தேசிய கீதம் தொடர்பான பல விடயங்கள் தௌிவாக முன்மொழியப்பட்டுள்ளன. அந்தவகையில், இலங்கையில் முதலாவது அரசமைப்பாகக் கருதப்படும் சோல்பரி அரசமைப்பில் தேசிய கீதம் தொடர்பான எத்தகைய விடயங்களும் குறிப்பிடப் படாத போதும் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், நான்காம் திகதி நடைபெற்ற சுதந்திர தினத்தின் போது, இலங்கையின் தேசிய கீதம், சிங்களத்திலும் தமிழிலும் பாடப் பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. 

அன்று, இந்நாட்டின் தேசிய கீதமாக   ஒலித்த பாடல், சில திருத்தங்களுடன் 1959ஆம் ஆண்டு, இலங்கை அரசாங்கத்தால் தேசிய கீதமாக உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 

1952ஆம் ஆண்டு சுதந்திர தின வைபவத்தின்போது, தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ்த் தேசிய கீதம் அதிக அளவில் பாடப்பட்டது. இந்த பின்புலத்தில், 1972 ஆம் ஆண்டு இரண்டாவது அரசமைப்பு உருவாக்கப்பட்டபோது, அரசமைப்பில் தேசிய கீதம் தொடர்பான விடயங்கள் முன்வைக்கப்படவில்லை. மூன்றாவது அரசமைப்பு உருவாக்கப்பட்டபோது, இலங்கையின் தேசிய கீதம் சட்ட அங்கிகாரம் பெற்றது. இந்த வகையில், தற்போது நடைமுறையில் உள்ள மேற்படி அரசமைப்பின் ஏழாம் சரத்து, தேசிய கீதம் தொடர்பாகப் பின்வருமாறு பரிந்துரைக்கின்றது. ‘இலங்கைக் குடியரசின் தேசிய கீதம், ஸ்ரீ லங்கா மாதா என்று இருக்க வேண்டும். இதற்கான சொற்களும் இசையும் அட்டவணை மூன்றில் குறிப்பிட்டுள்ளவாறு அமைய வேண்டும்’ என வலியுறுத்துகிறது. 1978ஆம் ஆண்டு அரசமைப்பின் தமிழ் பிரிவில் சரத்து ஏழில், தமிழ் வரிவடிவத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு, பின்வருமாறு வரையறுக்கின்றது. ‘இலங்கைக் குடியரசின் தேசிய கீதம், ஸ்ரீ லங்கா தாயே என இருக்க வேண்டும். அதில் வரையறுக்கப்பட்டுள்ள சொற்கள் மற்றும் இசை, அட்டவணை மூன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் இருத்தல் வேண்டும்’.

இந்த வகையில், ‘ஸ்ரீ லங்கா’ என்பது, தமிழில் இலங்கை எனக் குறிப்பிடப்படுகின்றது. அரசமைப்பின் பிரகாரம், தேசிய கீதம் தமிழில் ‘ஸ்ரீ லங்கா தாயே’ என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
சிங்களத்தில் இது, ஸ்ரீ லங்கா மாதா என அமைகிறது. தேசிய கீதத்தின் மூன்றாவது அட்டவணை, ‘ஸ்ரீ லங்கா தாயே’ என ஆரம்பமாகிறது. இது, இலங்கை சுதந்திரமடைந்த காலகட்டத்தில் இருந்த சிந்தனையையும் நோக்கத்தையும் கொண்டதாக அமைந்துள்ளது.

 மேலும், இலங்கை அரசமைப்பின் 13ஆவது, 16ஆவது சத்துகளும் இவை தொடர்பாகப் பிரஸ்தாபிக்கின்றன. ஆயினும், இலங்கைச் சிறுபான்மையினர் தொடர்பான உரிமைகள் விடயத்தில், சிங்களப் பேரினவாத அரசாங்கம் சுதந்திரத்தை அண்டிய காலப்பகுதியில் நடந்துகொண்ட முறைகளும், தற்போது நடந்து கொள்ளும் முறைகளுமே தமிழ் மக்களின் தேசிய உரிமை தொடர்பான விடுதலை வேட்கைக்கு அத்திவாரம் இட்டது. இந்தப் பேரினவாத மேலாதிக்க சிந்தனைகளும் செயற்பாடுகளும் 80 களின் பின், எழுச்சிபெற்ற அஹிம்சை வழியைப் பின்தள்ளி, அதி தீரத்துடன்  வெடிப்புற்றது.

போராட்டங்கள், அழிவுகள், இழப்புகள், தியாகங்கள் எனச் சொல்லொணாத் துயரை, இத்தீவில் சகல இனங்களும் சந்தித்தன. ஆயினும், ஆயுதப்போரின் மௌனிப்பும் அதன் பின்னரான இனத்துவ நல்லெண்ண முயற்சிகளும் இலங்கைச் சிறுபான்மை மக்களை ஐக்கியப்பட வைக்க முனைந்தன. அந்த முயற்சியை, 2016இல் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டது.  இருந்தபோதும், அடிப்படைவாதச் சிங்களப் பேரினவாதிகள், இத்தீர்மானத்துக்குச் சவால் விடும் நோக்கில், 2016 ஆம் ஆண்டில் எஸ்.சி.எஸ்.ஆர் 67 /2016 இலக்க அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்தனர்.  இதை உயர்நீதிமன்றம் நிராகரித்தது; தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது . 

இவ்வாறானதொரு சூழலில், இன்று மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பேரினவாத சிந்தனை பெரும் ஆதிக்க தேசியவாதமாகத் தலைதூக்கி உள்ளது. இத்தகைய போக்கு, இத்தீவுக்கு ஆபத்தானது எனவும் இலங்கையில் வாழும் இனங்களின் ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் சீரழித்து, தேசத்தைச் சுபீட்சம் நிறைந்த ஒன்றாகக் கட்டியெழுப்பும்  சிந்தனைக்குச் சாவு மணி அடிக்கும் ஒன்றானது என, பலமுனைகளில் இருந்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. 

இத்தகைய போக்குகளின் எதிரொலிதான், உள்நாட்டு அலுவல்கள்  அமைச்சரினதும் பௌத்த துறவிகளினதும் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற கொக்கரிப்புகள் ஆகும் . 

இவ்வாறான நிலையில், ஏட்டிக்குப் போட்டியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன், “உள்நாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு,  இலங்கையின் அரசமைப்புத் தெரியாது” என்று கடிந்து கொண்டமை ஆகும்.

இத்தகைய சூழலில், இலங்கையின் அரசமைப்புக் கூறியுள்ள விடயங்களைக் கருத்தில் கொள்ளாது, சட்டத்தைத் தமக்குரிய முறையில் கையிலெடுக்கும், சட்டத்துக்கு முரணான போக்குகள், இன்றைய காலகட்டத்தை, மிகவும் சிக்கல் நிறைந்ததும் ஆபத்துகள் நிறைந்ததுமான ஒரு சூழலுக்குள் இட்டுச் செல்கிறது. 

இலங்கையில் தமிழினம், எந்த முழுமையானதும் சுதந்திரமானதுமான உரிமைகளுக்காகப் போராடியதோ, மிச்சம்மீதமிருந்த அந்த உரிமைகளும் முழுமையாக வழித்தெடுத்துக் கபளீகரம் செய்யப்படும், மிக மோசமான சூழ்நிலை வலிந்து உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இலங்கையில் சகல இனங்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்; தாய் நாட்டைச் சுபீட்சம் நிறைந்த ஒன்றாக மாற்ற வேண்டும்; அதற்காக அர்ப்பணிப்புடன் கருமம் ஆற்ற வேண்டும் என்ற நியாயமான சிந்தனைகள் தோற்கடிக்கப்பட்டு, முளையிலேயே நாசம் செய்து, அழித்துவிடக்கூடிய ஆபத்துகள் காணப்படுகின்றன. 

சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற கருத்து, கட்டாயமாக்கப்பட்டு, தமிழ்மொழி மறுக்கப்பட்டால், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் சிறுபான்மை இனங்கள், தங்கள் தாய் மொழியில், தங்கள் தாய் நாட்டுக்கு அகவணக்கம் செய்வது தடை செய்யப்படுவது போலாகி விடும்.

புரியாத சிங்களத்தில், தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள், தாய்நாட்டுக்கு அகவணக்கம் செலுத்தத் தயாராக இல்லை என்பதை, சிங்களத் தேசியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். 

எனவே, தேசிய கீதம் தமிழில் பாட முடியாவிட்டால், தேசியக் கொடியும் சிறுபான்மை சமூகத்தால் ஏற்ற முடியாத சூழல் உருவாகும். ஏனெனில், சிங்களத்தில் தேசிய கீதம் பாட வேண்டுமெனின், ஏன் அதை ஒரு சிங்கள இனத்தைச் சேர்ந்தவரே வந்து ஏற்றட்டும் என்ற நிலையில், சிறுபான்மையினர் உள்ளனர்.

இத்தீவில், சிங்களப் பேரினவாதத் தீண்டாமை வாதம் உருவாகுவதற்கு, அடிப்படையாக, தேசிய கீத விவகாரம் வந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. உலகில் மூடநம்பிக்கைகளும் ஜனநாயக விரோத செயற்பாடுகளும் மிகுந்த நாடாக, இலங்கையை அடையாளப்படுத்தும் கைங்கரியத்திலேயே, இந்தச் சிங்கள பெருந்தேசியவாதிகளின் முயற்சி நோக்கப்படுகிறது.

உலகில் பெல்ஜியம், சுவிஸ் போன்ற பல்வேறு நாடுகளிலும், பலமொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது, அம்மக்கள் ஒற்றுமையுடனும் சுபீட்சத்துடனும் வாழ்கிறார்கள். 

ஆனால், இந்த அழகிய சிறு தீவில், சிங்கள இனவாத வழிபாடுகள், அமைதியை அழித்து, உலகின் முரண்பாடுகள் மிகுந்த நாடாக இலங்கையை அடையாளப்படுத்த கங்கணம் கட்டி நிற்கின்றன. 

இந்த நிலைமைகள் தொடருமாக இருந்தால், எதிர்வரும் சுதந்திர தின நிகழ்வுகள், சிறுபான்மைச் சமூகங்களின்  கரி நாளாக வரலாற்றில் அனுஷ்டிக்கப்படும். 

இலங்கைத் தீவை மீண்டும் சாம்பல் மேடாக்குவதா, அழகிய சொர்க்கபுரியாக்குவதா? என்பதைச் சுதந்திர தின தேசிய கீதம் உறுதிசெய்யட்டும் . 

ஆட்சியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள், அவர்களது சிந்தனையில் மாற்றம் வருமா, ‘கொண்டதே கொள்கை’ என இறுமாப்புடன் இருக்கப் போகிறார்களா?

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X