2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சுயம் இழந்த ‘முஸ்லிம்’ அரசியல்

மொஹமட் பாதுஷா   / 2017 ஜூலை 23 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக அரசியலில் பெரும் அனுபவங்களைக் கொண்டிருக்கின்ற அதேநேரத்தில், இலங்கையின் அரசியலில் நெடுங்காலமாகச் செல்வாக்குடன் இருந்து வரும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாத கையறுநிலையிலேயே முஸ்லிம் சார்பு அரசியல் பயணித்துக் கொண்டிருக்கின்றது.   

தனித்துவ அரசியலைச் செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் முஸ்லிம் கட்சிகள், பெருந்தேசியக் கட்சிகளில் ‘நக்குண்டு நாவிழந்து’ போயிருக்கின்றன.   

ஐக்கிய தேசியக் கட்சியிலும் சுதந்திரக் கட்சியிலும் நேரடியாகச் சங்கமமாகி இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், தமது சமூகத்தின் குரலாக அன்றி, அந்தந்தக் கட்சிகளின் அழுக்குகளைக் கழுவிக் கொடுக்கும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள்.   
வெளிநாட்டுக்குச் செல்வதற்காகத் தனது பெயரை மாற்றுகின்ற நபர்கள் நம்மிடையே இருக்கின்றார்கள். முஸ்லிம் என்ற அடையாளத்தை, மறைத்து பெரிய பெரிய சிங்களக் கம்பனிகளில் தொழில்புரிபவர்களும் இருக்கின்றார்கள். விளையாட்டு அணிகளில் இடம்பிடிப்பதற்காக மத அடையாளத்தைப் புறக்கணித்தவர்களும் இல்லாமலில்லை.

கிட்டத்தட்ட இப்படித்தான் இன்று முஸ்லிம்களின் அரசியலும் ‘எதற்காகவோ’ சுயமிழந்து நிற்கின்றது.   

இவ்வளவு காலமாகத் தமக்கு ஒரு பிடியாக இருந்து வந்த எதிர்க்கட்சி அரசியலை முஸ்லிம்கள் இழந்திருக்கின்றார்கள். இன்றைய ஆட்சியில் எதிர்க்கட்சி ஆசனத்தில் ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் இல்லை. அதனால் ஆளும் தரப்பில் ஏதாவது தவறுகள் இடம்பெறும் போது, உயரிய சபையில் பேசுவதற்கும், எதிரணியை அதன்பால் வழிநடாத்துவதற்கும் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை வரலாற்றில் இம்முறை நாம் இழந்திருக்கின்றோம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளும்கட்சியிலேயே இருக்கின்றனர். இதில் கட்சித் தலைவர்களும் அமைச்சர்களும் அரை அமைச்சர்களும் உள்ளடக்கம். அப்போதும் குறிப்பிடத்தக்க பயன்கள் எதுவுமில்லை என்றுதான் கூற வேண்டியுள்ளது.   

225 பேரைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 21 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது என்பது மிகப் பெரும் பலமாகும். இன்று நாட்டில் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கியிருக்கின்ற எத்தனையோ தலையாய பிரச்சினைகளை ஒன்றிணைந்து தீர்த்து வைத்திருக்க முடியும்.   

அதை ஆட்சியாளர்கள் சீர்செய்யவில்லை என்றால், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சிக் கட்டமைப்பில் கடுமையான அதிர்வை உண்டு பண்ணவும் முடியும். ஆனால், தாம் அங்கம் வகிக்கும் பெருந்தேசியக் கட்சிகளின் வேலைத்திட்டங்களுக்கு மாறாகச் செயற்படக் கூடாது என்றும், முஸ்லிம் கட்சியைச் சேர்ந்த தமக்கு வரும் வரப்பிரசாதங்கள் தடைப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும் தனித்தனி வழிகளில் முஸ்லிம் எம்.பிக்கள் பயணிப்பதால் 21 எம்பிக்கள் என்ற கூட்டுப் பலத்தை பயன்படுத்த முடியவில்லை.   

இதை இன்னுமொரு வகையிலும் சொல்ல முடியும். அதாவது, எந்த அரசியல்வாதிக்கு எதைக் கொடுத்தால் அவர் அடங்கியிருப்பார் என்பதையும் எந்தக் கட்சித் தலைவரை எவ்விடத்தில் பிடித்தால் அவருடைய பிடி இறுகும் என்பதையும் பெருந்தேசியக் கட்சிகள் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றன.   

இதனால் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளால் கூட ஆட்சியாளர்களை ஆட்டுவிக்க முடியாதிருக்கின்றது. இது எந்தளவுக்கு என்றால், முஸ்லிம் எம்.பிக்கள் எல்லோரும் சேர்ந்து கூட, ஜனாதிபதியுடன் ஒரு சந்திப்பை மேற்கொள்ள நேரமொதுக்கிப் பெற முடியாத நிலையே காணப்படுகின்றது.   

அநேகமான மக்கள் பிரதிநிதிகளுக்குத் தமது பதவியின் தாற்பரியம் தெரிவதில்லை. தமக்கு மக்கள், வாக்குகள் ஊடாக அளித்த ஆணை என்பது, எதற்காக என்று அவர்கள் அறியாதவர்கள் போல நடிக்கின்றார்கள்.   

பல அரசியல்வாதிகள், கடந்த தேர்தலுக்கு செலவு செய்த பணத்தை உழைக்கும் காலஅவகாசமாகவே தமது பதவிக்காலத்தை கருதுகின்றனர். இன்னும் சிலர், தாம் மக்களுக்குச் செய்த சேவைக்காக அவர்கள் செய்த கைமாறுதானே இது என எண்ணுகின்றனர். சிலர் அடுத்த தேர்தலில் வெற்றியீட்டுவதற்கான முதலீட்டுக் களமாக இதை எண்ணுவதுண்டு. விரல்விட்டு எண்ணக்கூடிய அரசியல்வாதிகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு எனலாம்.   

பன்னெடுங்காலமாக முஸ்லிம்கள் சந்தித்த இழப்புகளுக்கான பரிகாரங்கள், அபிலாஷைகள், வேண்டுதல்கள் இன்னும் கிடப்பில் கிடக்கத்தக்கதாக நிகழ்காலத்தில் மேலும் அதிகமான நெருக்குவாரங்களைச் சந்தித்துள்ளனர்.   

இவற்றைத் தொகுத்து நோக்கினால், அரசமைப்பு மறுசீரமைப்பு, இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம், இனவாதத்தின் மேலாதிக்கம், வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அவர்களின் காணிப்பிரச்சினை, வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள், பறிபோன காணிகளைப் பெற்றுக் கொடுத்தல், சிங்களக் குடியேற்றங்கள், தொல்பொருள் வலயப் பிரகடனங்கள், சிவில் நிர்வாகப் புறமொதுக்கல்கள் மற்றும் வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் முஸ்லிம்களின் இருப்பு, அவர்களது தனித்துவத்தைக் காப்பாற்றல், கடும்போக்குச் சக்திகளின் நெருக்குவாரங்கள் எனப் பல பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.   

இவற்றுக்கெல்லாம் தீர்வு காண முயற்சிக்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றது.   

இவற்றுள் மிக முக்கியமானவை அரசமைப்புத் திருத்தமும் அதனூடான இனப்பிரச்சினைத் தீர்வும் அத்தோடு இனவாத சக்திகளின் மேலாதிக்கமும் எனலாம். இனவாத சக்திகளின் செயற்பாடுகளுக்குப் பின்னால், பெரும் அரசியல் போய்க் கொண்டிருக்கின்றது.  

 சியோனிசமும் இந்து மாசமுத்திரத்தில் உருவாகியிருக்கின்ற மதவாதமும் இலங்கையிலுள்ள பெருந்தேசிய வாதத்துடனும் பெரும்மதவாதத்துடனும் ஒரு நிகழ்ச்சி நிரலுக்காகத் திரைக்குப் பின்னால் ஒன்றிணைந்து செயற்படுவதைக் கூர்ந்து அவதானிப்போர் உணர்ந்து கொள்கின்றனர்.   

அமெரிக்கா, இஸ் ரேல், சீனா, இந்தியா ஆகிய நாடுகள் ஒரு தீவுக்கூட்டத்தில் அரசியல் செய்வது போல, இலங்கைத் தீவின் அரசியலில் செல்வாக்குச் செலுத்துகின்றன. அத்தோடு அரசியல், இராணுவ, இராஜதந்திர முதலீடுகளைச் செய்கின்றன.   

ஆனால், திரைக்குப் பின்னால் யார் எதைச் செய்தாலும் தெருவில் வந்து இனவாதம் பேசுவோரைக் கைது செய்து, அதற்குப் பின்னால் இருப்போரை ஏன் அரசாங்கம் கண்டுபிடிக்கவில்லை என்பதே முஸ்லிம்களின் மனதிலுள்ள கேள்வியாகும்.   

இந்தக் கேள்விக்குப் பதில் மிக சுலபமானது. அதாவது, சிங்களக் கடும்போக்கு வாக்காளர்களின் வாக்குகளை இழந்து விடக்கூடாது என்று சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் நினைப்பதே இதற்குக் காரணமாகும்.   

இருப்பினும், “இது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சதி” என்று ஆளும் கட்சி சொல்கின்ற கதையை சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்னும் ஒப்புவித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படியென்றால், ஆட்சி மாற்றச் சதிக்கு ஆளும்கட்சியே விரும்புகின்றதா என்ற கேள்விக்கு அவர்களிடம் பதிலில்லை.   

அரசமைப்பு மறுசீரமைப்பு மிக முக்கியமானதாகும். ஏனெனில், இந்த அரசமைப்பு மறுசீரமைப்பை அடிப்படையாகக் கொண்டே இனிவரும் காலத்தில், நாட்டின் ஆளுகைக்கு அவசியமான சட்டவலுவுள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.   

தேர்தல் முறைமை மீளாய்வு, உறுப்பினர் தெரிவு போன்ற பல விடயங்கள் இருந்த போதும், இதில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முக்கிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   

புதிய அரசமைப்பு எவ்வாறான மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதும், பௌத்த பீடங்களே எதிர்த்துள்ள நிலையில், அரசமைப்பைக் கொண்டு வருவது சாத்தியமா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. எவ்வாறாயினும், குறைந்தபட்சம் தற்போதிருக்கின்ற அரசமைப்பில் சிறுசிறு மாற்றங்களை மேற்கொண்டாவது, புதிய அரசமைப்பைக் கொண்டு வர வேண்டிய அழுத்தம் அரசாங்கத்துக்கு இருக்கின்றது என்பது வெள்ளிடை மலை.   

இலங்கையில் ஓர் அரசமைப்புக் கொண்டு வரப்படும் என்றால், அது சிங்கள மக்களை எவ்விதத்திலும் பாதிக்காது என்பது சிறுபிள்ளைக்குக் கூட தெரிந்த யதார்த்தமாகும்.   
மறுபுறத்தில், இந்த அரசமைப்பில் தமிழர்களுக்கு பாதிப்பு இல்லை என்ற தொனியில் தமிழர் அரசியலில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஒருவேளை அவ்வாறு பாதகநிலைமைகள் ஏதேனும் இருக்கும் என்று தமிழ்த் தேசியம் சிந்தித்தால், இந்நேரம் அதற்கெதிராகக் கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கும்.  

 எனவே, அவ்வாறு எதிர்ப்புக்காட்டல் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்பதே, உத்தேச அரசமைப்பு, தமிழர்களுக்குச் சாதகமானது என்பதை ஊகித்துக்கொள்ளப் போதுமானது.   
ஆனால், இலங்கையின் இரண்டாவது சிறுபான்மையினமான முஸ்லிம்கள் விடயத்தில் உத்தேச அரசமைப்பு எவ்விதமான பாதகமான ஏற்பாடுகளையும் உள்ளடக்கியிருக்கவில்லை என்ற உத்தரவாதத்தை யாரும் இதுவரை வழங்கவில்லை.   

அரசமைப்புத் தொடர்பான குழுக்களிலும் அங்கம் வகிக்கின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமோ, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனோ அரசமைப்பில் என்ன உள்ளடங்கியிருக்கின்றது என்றோ அதனால் முஸ்லிம்களுக்குப் பாதகமில்லை என்றோ கூறவில்லை. ஏனைய எம்.பிக்களும் இது தொடர்பான அக்கறையைப் போதுமானளவுக்கு வெளிப்படுத்தவில்லை.   

அரச உயர்மட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அரசமைப்பு மறுசீரமைப்புப் பணிகளைக் கூர்ந்து கவனித்து, மக்களுக்குச் சொல்ல வேண்டிய பொறுப்பும் அதில் பாதகங்கள் இருந்தால் அதற்கெதிராக இப்போதே குரல்கொடுக்க வேண்டிய, தார்மீகக் கடமையும் முஸ்லிம் கட்சித்தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கின்றது.   

உத்தேச அரசமைப்பானது நீண்டகாலம் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்துக்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கொண்டிருக்கும். அதன் அடிப்படையில் அதிகாரப் பகர்வு அல்லது பரவலாக்க அடிப்படையிலான தீர்வு வழங்கப்படும் வாய்ப்பிருக்கின்றது.   

எனவே, இதில் முஸ்லிம்களுக்குரிய பங்கு என்னவென்பதை உறுதிப்படுத்த வேண்டுமாயின், அரசமைப்பிலிருந்தே அது வழிநடாத்தப்பட வேண்டும். அதைவிடுத்து எல்லாம் கைமீறிப்போன பிறகு, “அதிகாரமில்லை” என்று தலையில் அடித்துக் கொள்வதில் பயனில்லை.   

இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பான சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்திருக்கும். இதுவும் மிக முக்கியமான விடயமாகும்.   

இனப்பிரச்சினைக்கான தீர்வுப்பொதி, இணைந்த வடக்கு, கிழக்கில் முன்வைக்கப்பட வேண்டும் என்றே தமிழ் அரசியல்வாதிகள் விரும்புகின்றனர். அதற்கான காய்களையும் நகர்த்தியுள்ளனர். இதில் அவர்கள் பக்கமுள்ள நியாயங்களைக் கொச்சைப்படுத்த முடியாது.   

ஆனால், வடக்கையும் கிழக்கையும் இணைக்கக் கூடாது என்றே முஸ்லிம் அரசியல்வாதிகள் சொல்லி வருகின்றனர். தமிழர்களின் நிலைப்பாட்டுக்கு எதிராக முஸ்லிம்கள் தமது நிலைப்பாட்டைப் பலமாக முன்வைத்ததன் விளைவாகவே முஸ்லிம்களின் ஆதரவைக் கோரி நிற்கும் நிலைமை, தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது எனலாம்.   

இருப்பினும், குறிப்பாக வடக்கு, கிழக்கில் பிறந்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் கிழக்கு முஸ்லிம் மக்களும் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றனர்.   

ஒருவேளை, எல்லாவற்றையும் மீறி இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்பட்டாலோ அல்லது பிரிந்திருக்கும் வடக்கு, கிழக்கில் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டாலோ அதில் முஸ்லிம்களுக்குரிய உப தீர்வு உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.   

அதாவது, இணைந்த வடக்கு, கிழக்கு உருவானால், அதில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாகாணமும் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணமும் உருவாகலாம். அல்லது நிலத்தொடர்பற்ற தமிழ்,முஸ்லிம் மாகாணங்கள் உருவாகலாம்.  

 கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கியதும் தென்கிழக்கை மையமாகக் கொண்டதுமான ஒரு முஸ்லிம் அதிகார அலகு தரப்படலாம். இது எதுவுமற்ற, குறுகலான தீர்வுகளை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அப்படியாயின், இப்போதிலிருந்தே முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசமைப்பு சீர்திருத்தத்தில் கவனம் செலுத்த வேண்டும்.   

தமிழர்களுக்கு, வடக்கு மாகாணம் எப்படியோ அதுபோலவே முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாணமும் ஆகும். எனவே, கிழக்கில் உள்ள அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.   

இதில் கிழக்குக்கு வெளியேயுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளையும் உள்ளீர்க்க வேண்டும். முஸ்லிம்கள் தனியொரு இனமாக, தேசியமாகத் திரள்வதற்கான அடிப்படையை உருவாக்க வேண்டும்.   

முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் பெரும்பான்மைக் கட்சிகளில் போட்டியிடுவதற்காகவும் பதவி பெறுவதற்காகவும் தமது சமூகத்தின் சுயத்தை இழந்து அரசியல் செய்யும் வங்குரோத்து தனத்துக்கு முடிவு கட்டவேண்டும்.   

ஒரு பொழுதுபோக்காக, பிச்சைக்காரனாக நடிக்கப்போய், வாழ்க்கை முழுவதும் கையேந்தும் அரசியலாக, முஸ்லிம் அரசியல் இருந்து விடக்கூடாது என்பதே மக்களின் வேண்டுதல்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X