2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

செயற்கை அனர்த்தங்களுக்கு தீர்வு?

Editorial   / 2019 ஜனவரி 03 , மு.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இலட்சுமணன்   

2019இல் இருந்தாவது, ஒற்றுமையாக எமது உரிமைகளை பெறுவதற்கும், பிரதேசம் அபிவிருத்தி அடைவதற்கும், நலிவுற்ற எமது மக்களுக்குச் சமூகப்பணி செய்வதற்கும் உறுதியேற்போமாக என்ற விதமான கருத்துகள், சிந்தனைகள் மக்கள் மத்தியில் முனைப்புப் பெற்றும் முக்கியத்துவம் பெற்றும் வருகின்றன. 

இலங்கையைப் பொறுத்த வரையில், வருடத்தின் இறுதிப்பகுதி அனர்த்தங்களின் அவலங்களை நினைவுகூர்வதான காலம் என்றாகிவிட்டது. 2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26இல் ஏற்பட்ட, சுனாமி அனர்த்தமானது மிக கொடூரமான அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. 

நமது நாட்டில் சுனாமி ஏற்படுவதற்கு முன்னர், அனர்த்தம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாட்டுக்கென, பிரதானமான ஏற்பாடு ஒன்றும் இருந்திருக்கவில்லை. அதன் பின்னர், உலகம் தழுவிய ரீதியில்,  அனர்த்தங்களைத் தடுக்கும், அழிவுகளைக் குறைக்கும் வகையிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டன. இதன் ஒரு படி நிலையாக, மார்ச் நான்காம் திகதி, தேசிய பாதுகாப்புக் குழுவால், தேசிய பாதுகாப்பு தினம் நினைவு கூரப்படுகிறது.

இப்போது, இதற்கு மேலதிகமாக எதிர்காலத்தில் ஏற்படுகின்ற அனர்த்தங்கள் தொடர்பாக, நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக, முன்னெச்சரிக்கை நடடிவக்கைகள் எடுப்பதுடன், எம்மை மறுபரிசீலனையும் செய்து கொள்ள வேண்டும்.

ஆனாலும், சுனாமி, வெள்ளம், சூறாவளி, வரட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களைத் தாண்டி, மனிதர்களால் ஏற்படுத்தப்படுகின்ற அனர்த்தங்களான இயற்கைவளங்களைச் சுரண்டுதல், காடழிப்பு போன்ற இன்னோரன்ன நடவடிக்கைகளால்,  உலகத்தையே புரட்டிப்போடும் நிலைமை உருவாகி வருகின்றன.

இந்த இடத்தில்தான், மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்கு ஆயத்தமாக வேண்டியவர்களாக நாம் அனைவரும் இருக்கின்றோம். 

இவ்வாறு, பல்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கும் அவலநிலைக்குட்பட்டவர்களாக, மனிதர்கள் மாறுவதற்கு என்ன காரணம் என்று, யாரும் சிந்திப்பதாயில்லை என்பதைக் கவலையுடன் நினைவுகூர வேண்டும்.

அந்த அடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குரிய ஆயத்தங்களை முன்னெடுக்க வேண்டியவர்களாக அனைவரும் மாறும் நிலை, ஏற்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறிதான்.

போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மகஜர்கள் கையளிப்புகளால் எவ்வாறான முன்னேற்றகரமான தீர்வுகள் கிடைக்கின்றன என்றால், ‘எதுவும் இல்லை’ அல்லது ‘ஓரளவுதான்’ எனப் பதில் கிடைக்கின்ற காலத்தில்தான், நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

கடந்த காலங்களில் மாத்திரமல்ல, இப்போதும், எதிர்காலத்திலும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்ற, இருக்கப்போகின்ற மணல் அகழ்வுக்கு எதிராகப் பல போராட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றிருக்கின்றன.

2018ஆம் ஆண்டின் இறுதி நாளன்று (31) மணல் அகழ்வைக் கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டம், போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ராணமடுப் பகுதியில் நடைபெற்றிருந்தது.

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் எல்லைக் கிராமமான போரதீவுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ராணமடு, பூச்சிக்கூடு, மூங்கிலாறு பகுதிகளில்  தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெறுவதைக்  கண்டித்தும் அதை உடனடியாகத் தடுத்து நிறுத்தக்கோரியும் அப்பகுதி விவசாயிகளாலும் பிரதேச மக்களாலும் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.

டிப்பர்கள், ட்ரெக்டர்கள் மூலம் வேறு பிரதேசங்களைச் சேர்ந்த சிலர், பூச்சிக் கூடு, மூங்கிலாற்றில் மண் அகழ்ந்து, அந்த மண்ணை,  ராணமடுப் பகுதியில் களஞ்சியப்படுத்தி வைத்து, வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டக்கார்களின் கோரிக்கையாக இருந்தது. 

பெருமளவில் மண்அகழ்வு இடம்பெறுவதால் மூங்கிலாற்றுக்கு அருகில் இருக்கும் நெல்வயல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயத்துக்கு நீர்பாய்ச்சும் அணைக்கட்டு உடைப்பெடுத்து, நீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதைக் கருத்தில் கொண்டு, மணல் அகழ்வைத்தடுத்து, அதற்கான அனுமதிகளையும் அதிகாரிகள் தடைசெய்யவேண்டும் என்ற கோரிக்கை பொதுவாக மக்கள் மத்தியில் வலுத்து வருகிறது. 

ஆனால், ராணமடு ஓர் அடையாளம் மாத்திரமே. பலபிரதேசங்களில் வளங்கள் சுரண்டப்படுவதும் வீணடிக்கப்படுவதும் வழமையான நடவடிக்கையாக அல்லது மக்களுக்குப் பழக்கப்பட்டுவிட்ட சமூக விரோத செயலாக மாறியிருக்கிறது. இதை, இவ்வாறே தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. 

ஆனால், அதேநேரத்தில் மணல்அகழ்வைப் பொறுத்தவரையில், ஆறுகளிலும் ஆற்றுப்படுக்கைகளிலும் மணல் சேர்வது வழமையானது; அதை அகற்றியாக வேண்டும் என்பது முக்கியமானது. இங்கிருந்துதான் அளவுக்கு மிஞ்சிய அகழ்வும் வளச்சுரண்டலும் ஆரம்பமாகிறது. பல்வேறு பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது.   

மணல் அகழ்வு முக்கியமானதொரு வியாபாரமாக இருக்கின்ற அதே வேளையில் போட்டி, பொறாமை சார் சிக்கல்களையும் உருவாக்குகிறது. 

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில், தமது தேவைக்கு மணலைப்பெற, அதிக விலை கொடுக்கவேண்டியுள்ளதே என்பதுடன், அதற்காகப் பல சிரமங்களை அனுபவிக்க வேண்டி இருக்கிறதே என்பது மக்களிடம் உள்ள குமுறலாக இருக்கிறது. 

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கரையோரங்களை அதிகம் கொண்டவை. கரையோரங்களில் ஒதுக்கப்படும் ஆற்று மணலை அகழ்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், ஒழுங்குபடுத்தல்கள், கட்டுப்பாடுகள் இன்றி, அளவுக்கு மிஞ்சி கொண்டு செல்லப்படுவதாலேயே குழப்பம் ஏற்படுகிறது.

உள்ளூரில் இருக்கின்ற மக்களின் வேண்டுகோள்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றன. வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அதுவும் பெரியளவில் வியாபாரத்தில் ஈடுபடும் முதலாளிகளுக்கு, மணல் அள்ளுவதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுதால்த்தான் அளவுக்கு அதிகமாக மணல் அகழ்வு செய்யப்படுகிறது. இதனால்த்தான் அதிகம் பிரச்சினைகள் உருவாகின்றன. 

ஒழுங்குபடுத்தப்படாத மண் அகழ்வைத் தடுக்குமாறு, மட்டக்களப்பு மாவட்டத்தில் பல தடவைகள் போராட்டங்கள் நடத்தப்பட்டாலும்,  அதிகாரிகளிடம் முறையிட்டாலும் அவை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளன. அதிகாரிகளைப் பொறுத்தமட்டில்,   மேல் இடங்களில் இருந்து கிடைக்கின்ற கட்டளைகளையும் அறிவுறுத்தல்களையும் நடைமுறைப்படுத்தும் நபர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். 

எந்த ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டாலும், அதற்குள் இருக்கும் இருக்கும் அரசியலை யாரும் விளங்கிக் கொள்வதில்லை. அந்த அரசியலை அனுசரிக்கத் தெரிந்தாலேயொழிய, யாரும் நிலைத்திருக்க முடியாது என்பது யதார்த்தம். இதேபோலத்தான் மணல் அகழ்வு, காடழிப்பு, மற்றைய வளச்சுரண்டல் என்பவையெல்லாம் நடைபெறுகின்றன.

புவிச் சரிதவியல் மற்றும் கனிய வளங்கள் பணியகத்தால் வழங்கப்படும் மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திர விடயத்தில், சுற்றாடல் பிரிவு, பிரதேச செயலகம், சில இடங்களில் வனபரிபாலனத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் எனப் பல அரச நிறுவனங்கள் சம்பந்தப்படுகின்றன. இந்த இடத்தில், தமது பிரதேசத்தைச் சீரழிப்பதற்கு முயற்சிப்பவர் யார் என்ற, மக்களின் கேள்விக்குப் பதில் கிடைக்கவே மாட்டாது.

பிரதேச சபை, பிரதேச செயலகம், மாவட்ட அபிவிருத்திக்குழு என அனைத்து ஆலோசனைக் கூட்டங்களிலும் மணல் அகழ்வுப்பிரச்சினை, காடழிப்புப் பிரச்சினை  போன்றவை பேசப்படாத நாளே கிடையாது. 

பல பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் மணல் அகழ்வுக்கான அனுமதிப்பதத்திரம் நிறுத்தப்படுகிறது என்று பேசப்பட்டாலும், அது நடைமுறைப்படுத்தப்பட்டதா என்றால் மிகக்குறைவே.
மணல் அகழ்வு நடைபெறும் பிரதேசங்கள் அனேகமாகப் பின்தங்கிய பிரதேசங்களாகவே இருக்கின்றன. மணல் ஏற்றி வரும் வீதிகள் கூட, மக்கள்  பயன்படுத்த முடியாத அளவுக்குச் சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கின்றன. 

எப்போதுமே வீதிகள் சேறும் சக்தியுமாக இருத்தல், போக்குவரத்துச் செய்யமுடியாதளவுக்கு வீதிகள் சேதமடைதல், மணல் அகழக் கூடாத இடத்தில், அதிகளவில் அகழ்வதால் ஆறுகள் அகலமாதல், பெருக்கெடுத்தல், வெள்ளத்தால் கிராமங்கள் பாதிக்கப்படுதல் எனத் தொடரும் அனர்த்தங்கள் மணல் அகழ்வென்ற, மனிதர்களின் பேராசையும் சுயநலமும் கூடிய நடவடிக்கைகளாலேயே உருவாகின்றன.
மனதளவில் திருந்தாதவர்களாக மணல் அகழ்பவர்களும், அவர்களுடைய முதலாளிகளும் இருக்கின்ற வேளையில் அவர்களுக்கான தீர்வுகளை யார் முன்வைப்பது? 

நாட்டின் சொத்து அனைவருக்கும் சொந்தம் என்றாலும், அதை அடுத்தவருக்கும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பயன்படுத்த வேண்டும். ‘எனக்கு அதிகாரம் இருக்கிறது; அதைப் பயன்படுத்துவதற்கான வசதிகள் இருக்கின்றன’ என்பதற்காக எடுக்கப்படும் திட்டமிடப்படாத செயற்பாட்டுக்கு, முடிவு கட்டப்படாத வரையில் எந்தவொரு சிறந்த தீர்வும் கிடைக்காது.வடக்கு, கிழக்கில் யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னரே, இவ்வாறான இயற்கையை அழிக்கும் அதன் சமநிலைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 

மக்களது தெளிவான செயற்பாடுகள் மூலம், அநீதிகளுக்கு எதிரான போராட்டங்களின் கடுமை ஊடாகவே, தீர்வுகளுக்கு முயற்சிகளைச் செய்தாக வேண்டும். பிரச்சினை எழுந்ததும், சிறிது காலம் மணல் அகழ்வுக்கான அனுமதிகள் வழங்குவதை நிறுத்துவதும் பின்னர், மீண்டும் மணல் அகழ்வுகளைத் தொடர்வதும் நிரந்தரத் தீர்புக்கான எது எவ்வாறிருந்தாலும், இலங்கை அரசாங்கத்தின் தலை அதிகாரத்திலிருந்து அடிமட்டம் வரையில் இருக்கின்ற ஆதிக்கத்தின் அழுத்தங்களுக்கு அடி பணியாமல், இதயசுத்தியுடன் செயற்படுவதற்கான சுதந்திரம் இல்லாத வரையில் தீர்வைக்காணவே முடியாதென்பதுதான் வெளிப்படை.

அந்தவகையில் மனிதர்களால் உருவாகும், உருவாக்கப்படும் அனர்த்தங்களுக்கான ஏதுக்கள் இல்லாமல் ஒழிக்கப்படும் வரையில் அனர்த்தங்களையும் குறைத்துக் கொள்ளவே முடியாது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .