2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜெனீவா: இலாப நட்டக் கணக்கு

Johnsan Bastiampillai   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹமட் பாதுஷா

நேற்று, ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. கொவிட்-19 நோய் பரவல் காரணமாக, வழக்கத்துக்கு மாறாக, இணைவழி மெய்நிகர் முறைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை விவகாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கும் எனத் தெரிகின்றது.

கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக, மனித உரிமைகள் பேரவையில் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருகின்ற தமிழர்கள் மீதான, உரிமைகள் மீறல்கள் தொடர்பாகவும் பொறுப்புக்கூறல் பற்றியும் பாரிய சிக்கல்களை, இலங்கை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது. 

அதேநேரம், இரண்டாவது சிறுபான்மை இனமான முஸ்லிம்கள், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் போது, அந்த ஜனாஸாக்களை  நல்லடக்கம் செய்வதற்கான உரிமை மறுக்கப்படுகின்ற விடயமும், ஜெனீவா அமர்வில், ஏதோவொரு விதத்தில், இலங்கைக்குத் தலையிடியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்நிலையிலேயே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்று இலங்கை வரவுள்ளார். நாடாளுமன்ற உரை இரத்துச் செய்யப்பட்ட சூழ்நிலையிலும், அவர் இலங்கை வருகின்றமை, பல்வேறு செய்திகளை உணர்த்தி நிற்கின்றது. 

இவ்வரசாங்கம், என்னதான் மூன்றிலிரெண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றினாலும் கூட, அரசியல், பொருளாதார நிலைமைகளில் பாரிய தேக்கநிலை ஏற்பட்டிருக்கின்றது. 

சமகாலத்தில், சிங்கள மக்களும் இந்த ஆட்சியின் போக்குத் தொடர்பில் விமர்சனங்களைக் கொண்டிருக்கின்றனர். அமைச்சர் டலஸ் அழகப்பெரும மட்டுமன்றி, ஆட்சியில் பங்காளர்களான சில அரசியல்வாதிகளும் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் கருத்துகளை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.  

இவ்வாறான நிலைக்குக் காரணம், நாம் அறிந்தவைதான். ஆனால், கொவிட்-19 நோய் பரவலே, நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலுக்கு, முழுமையான காரணம் என்ற தோற்றப்பாடு, ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அது உண்மையல்ல! மாறாக, கொவிட்-19 நோய் பரவலுக்கு அப்பாலான காரணங்களும் இதற்குப் பின்னால் உள்ளன.  

இந்தியா - சீனா அதிகாரப் போட்டி, இந்தியாவுக்கு நொந்து விடாமல் பாகிஸ்தானோடு உறவாட விளைகின்றமை, ஆளும் குடும்பத்துக்குள்  மனக்கசப்புகள், ஆளும் கட்சிக்குள் உருவாகிவரும் உள்ளக குழப்பங்கள், சிறுபான்மைச் சமூகங்கள் மீதான நெருக்குவாரங்கள் போன்ற பிரச்சினைகள், மேலெழுந்துள்ள சர்வதேச அழுத்தங்கள் ஆகியவற்றுக்குக் கொவிட்-19க்குள் பரிகாரம்தேட முயற்சிக்கப்படுகின்றது.  

தமிழர்கள் மீதான மனித உரிமைகள் மீறல்கள் விவகாரம், ஐ.நாவில் நீண்டகாலமாகவே விவாதிக்கப்பட்டு வருகின்றது. இலங்கை அரசாங்கம், இதைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதே தவிர, பொறுப்புக்கூறலுடன் செயற்பட்டு, இப்பிரச்சினைக்கு உள்ளகப் பொறிமுறையுடன் தீர்வுகாண்பதற்கு, குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுக்கவில்லை என்பதே, தமிழர்களும் சர்வதேசமும் முன்வைக்கின்ற குற்றச்சாட்டாகும். 

இந்நிலையில், தமிழர்கள் இம்முறை, ஜெனீவா கூட்டத்தொடரில், இலங்கையை ‘இறுக்குவதற்கான’ பல்வேறு நகர்வுகளைச் செய்திருக்கிறார்கள். இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், தம்மைப் ‘போக்குக் காட்டியே’ வருகின்றன என்பதை உணர்ந்துகொண்டுள்ள சர்வதேசமும், இம்முறை சற்றுக் கடுமையான நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது.  

இது இவ்வாறிருக்க, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ள கருத்து, அரசாங்கத்துக்கு இடியாய் இறங்கியுள்ளது.உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், கத்தோலிக்க சமூகத்துக்கு நியாயம் கிடைக்கவில்லையாயின், சர்வதேச நீதிமன்றத்தை நாடப் போவதாக, அவர் கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.  

இந்தத் தாக்குதல் தொடர்பாக, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதும், சஹ்ரான் குழுவினரை, இயக்கியவர்களையும் அதன் பின்னணியையும் கண்டறிய வேண்டும் என்பதும் முக்கியமானது. எனவே, இவ்விடயத்தில் பேராயர் கொண்டுள்ள அக்கறை பாராட்டுக்குரியதே. 

ஆனால், முன்னைய காலங்களில் பல சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும், அப்போதெல்லாம் அரசாங்கத்தின் மனம்கோணக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து முடிவுகளை எடுத்திருந்த பேராயர், இப்போது கடுமையான அறிவிப்பொன்றை விடுத்துள்ளதற்கு, விசேட காரணம் ஒன்று இருக்க வேண்டும். 

எவ்வாறாயினும், தமிழர்களும் முஸ்லிம்களும், தமது உரிமைகள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்ற காலப்பகுதியில், இப்போது கத்தோலிக்கர்களும் நியாயம் கேட்டு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்ற போக்கு, நிலைமைகளைச் சிக்கலாக்குவதற்கான நிகழ்தகவுகளை அதிகரித்திருக்கின்றது. ஆனால், அரசாங்கம் எதற்கும் மசியவில்லை. நிகழ்கால நெருக்கடிகளின் தீவிரத் தன்மையைக் குறைப்பதற்கான எந்தத் தணிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. 

குறிப்பாக, முஸ்லிம்களால் முன்வைக்கப்படும் ஜனாஸா நல்லடக்கக் கோரிக்கை, இன்று சர்வதேச விவகாரமாகும் நிலைக்கு இட்டுச் செல்லாமல், நல்லதொரு தீர்வை ஜெனீவா கூட்டத்தொடருக்கு முன்னரே வழங்கியிருக்கலாம். இம்ரான் கான், அதுபற்றிய அழுத்தத்தைக் கொடுப்பதற்கு முன்னர், முன்கூட்டியே தவிர்த்திருக்க முடியும். 

தமிழர்கள், ஏற்கெனவே சர்வதேசத்தை நாடிவிட்ட சூழலில், தமக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால், சர்வதேச நீதிமன்றுக்குச் செல்லப்போவதாக பேராயர் கூறியுள்ளார். ஆனால், ஜனாஸா விவகாரம் தொடர்பில், சர்வதேசத்தின் கவனம் குவிந்துள்ளபோதிலும், அதுபற்றியோ தாம் எதிர்கொள்ளும் இனவாத ஒடுக்குமுறை பற்றியோ, முஸ்லிம் சமூகம் தாமாகத் திட்டமிட்ட முறையில் ஐ.நாவுக்கு கொண்டு செல்லவில்லை. முஸ்லிம்கள், அரசாங்கத்தை இன்னும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற கோணத்திலேயே, இதை அரசாங்கம் நோக்க வேண்டும். 

ஆனால், அப்படி நோக்கியதாகத் தெரியவில்லை. அரசாங்கம் அப்படி நினைத்திருந்தால், கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்போரை, அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியிருக்கும்; இப்பிரச்சினையைத் தீர்க்க நினைத்திருக்கும். இதை, முஸ்லிம்களின் பலவீனம் எனத் தப்புக்கணக்குப் போட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. 

அதேபோல், தமிழர்களுக்குச் சார்பாக, இலங்கை மீது பிரயோகிக்கப்படும் சர்வதேச அழுத்தங்களைக் குறைப்பதற்கான வியூகங்களை, அரசாங்கம் வகுத்திருக்கலாம். கத்தோலிக்க சமூகத்தின் உணர்வுகள், பீறிட்டு வெளிக்கிளம்பாத முன்னெடுப்புகளைச் செய்திருக்கலாம்.

ஆயினும், அரசாங்கம் எந்த நகர்வையும் மேற்கொள்ளவில்லை. எல்லாப் பூசணிக்காய்களையும் சோற்றுப் பீங்கானுக்குள் மறைக்கவே முயல்கின்றது. இது ஒருவித இராஜதந்திர வறுமையாகவோ, அரசியல் வியூகமாகவோ இருக்கலாம். 

இலங்கையில், இனக் குழுமங்களை மையமாகக் கொண்ட நெருக்கடிகள், ஜெனீவா கூட்டத்தொடர் இடம்பெறும் காலப்பகுதியில், சூடுபிடித்திருக்கின்றனவே தவிர, அதற்கு முன்னரும் இவ்வாறான பிரச்சினைகள், குழப்பங்கள் இருக்கவே செய்தன.அத்துடன், மனித உரிமைகள் பேரவை அமர்வில், இடியுடன் மழை பெய்து விட்ட பிறகும், தூறல் நிற்கப் போவதும் இல்லை. 

நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள், உள்நாட்டில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்ததும், அதனோடு சம்பந்தப்பட்ட துணைக் காரணிகளுமே சர்வதேச தலையீடுகள், அழுத்தங்களுக்கு வழிகோலியது. மறுபுறத்தில், ஆட்சியாளர்களுக்கும்  சிங்கள மக்கள் மத்தியில், அரசியல் செய்வதற்கான ஒரு பிரசாரக் கருவியாக இவை இருந்தன. 

அந்தவகையில், ஜெனீவா என்ற இலாப நட்டக் கணக்கில், அரசாங்கம் வென்றாலும் தோல்வியுற்றாலும், அது அரசியல் ரீதியான இலாபமாகவே அமையும். அரசாங்கம் நிகழ்கால நெருக்கடிகளைக் கொதிநிலையில் வைத்திருக்கின்றமைக்கு, இதுவும் ஒரு காரணம் ஆகும்.  

எப்படியென்றால், ஜெனீவா கூட்டத் தொடரில், அரசாங்கத்துக்கு வெற்றி கிடைத்தால், அதை அரசாங்கம் இன்னுமொரு யுத்த வெற்றிபோல சந்தைப்படுத்தி, சிங்கள மக்களின் வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ளும். சிறியதொரு சறுக்கல் ஏற்பட்டாலும், நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்களைக் காப்பாற்றியதற்காகக் கிடைத்த பரிசு என்று அனுதாபம் தேடி, இன்னும் அதிகமான சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு  மனக்கணக்கு போட்டிருக்கலாம். 

வெளிநாட்டுத் தலையீடுகள், சர்வதேச செல்வாக்குடன் முன்வைக்கப்படும் அல்லது திணிக்கப்படும் தீர்வுகளை, அரசாங்கங்கள் மனதார ஏற்றுக் கொள்வதில்லை என்பதால், நிரந்தர அமைதி என்பது அபூர்வமாகவே சாத்தியப்படுகின்றது. எனவே, தமிழர்களும் முஸ்லிம்களும்  கத்தோலிக்கர்களும் சிங்கள மக்களும், தமக்கு உள்நாட்டில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை, உள்ளகமாகவே தீர்த்துக் கொள்ளவேண்டும் என்பது அடிப்படையானது. அதுவே நிரந்தர பரிகாரமாகவும் அமையும்.

ஆனால், உள்நாட்டுப் பொறிமுறையில் அது சாத்தியப்படாத போது, இனக் குழுமங்கள் சர்வதேசத்திடம் உதவி தேடி ஓடுவதைத் தவிர்க்க முடியாது. அதன்பிறகு, இவ் விவகாரங்களை யார் யாரெல்லாம் கையிலெடுக்கின்றார்கள்; அது வெவ்வேறு பரிமாணங்களையும் எடுக்கின்றது என்பதே உலக அனுபவமாகும். 

கணவன் - மனைவிக்கிடையிலான சிறிய மனக்கசப்பை, அந்த வீட்டுக்குள்ளேயே தீர்த்து வைக்க, வீட்டிலுள்ள பொறுப்பு வாய்ந்தவர்கள் முன்வர வேண்டும். அவ்வாறில்லாத பட்சத்தில், அடுத்த வீட்டார் உள்ளே வந்து விட்டால், அவ்விவகாரம் பூதாகரமாகி விடுவதுண்டு. அதுபோன்ற ஒருநிலைக்கே, இப்போது இலங்கையும் வந்து கொண்டிருக்கின்றமை நல்ல சகுணம் அல்ல.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .